January 29, 2014

சிவப்பு அபாயம்


கம்யூனிசம் ஒரு மாபெரும் சக்தியாக எழுச்சியடைந்துவிடும், நம்மை அடியோடு புரட்டிப்போட்டுவிடும் என்னும் அச்சத்தின் விளைவாக அமெரிக்கா உருவாக்கியதுதான் 'சிவப்பு அபாயம்'. 1917 ரஷ்யப் புரட்சியைத் தொடர்ந்து இடதுசாரிகள்மீது உருவான அமெரிக்காவின் பீதி பனிப்போர் காலத்தில் உச்சத்தைத் தொட்டது. சோவியத் யூனியன் சிதறுண்டதற்குப் பிறகும், மக்கள் சீனக் குடியரசு அதிகாரபூர்வமாகவே 'சிவப்பைத்' துறந்துவிட்ட பிறகும்கூட அமெரிக்கா முழுமுற்றாக சிவப்பு அபாயத்தைக் கைவிடவில்லை. மாறாக, இதை ஒரு கொள்கையாகவே வளர்த்தெடுத்தது. இன்றளவும் இடதுசாரிகள் அமெரிக்காவைப் பொருத்தவரை அபாயகரமானவர்கள்தாம்.

அராஜகவாதிகள், இடதுசாரிகள், இடது சார்பு கொண்டவர்கள், சமூக ஜனநாயகவாதிகள், சாகசவாதிகள் என்றெல்லாம் பாகுபடுத்திப் பார்க்கும் அளவுக்கு நிதானமோ மனப் பக்குவமோ இல்லாத காரணத்தால் அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள், விமரிசிப்பவர்கள்  அனைவரையும் அமெரிக்கா இடதுசாரிகளாகவும், சிவப்பு அபாயமாகவும் பார்த்தது. அரசுக் கருவிகளையும் மறைமுக வழிமுறைகளையும் பயன்படுத்தி மாபெரும் witch hunting நடவடிக்கைகளை அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளத் தொடங்கியது.

இந்தத் தொடர் 1917 தொடங்கி பனிப்போர் வரையிலான காலகட்டத்தை ஆராய்கிறது.
  • ரஷ்யப் புரட்சி அமெரிக்காவில் ஏற்படுத்திய தாக்கம்.
  • அமெரிக்காவில் இடதுசாரிகளின் தோற்றமும் எழுச்சியும்.
  • இடதுசாரிகளைக் கண்டு அமெரிக்கா அஞ்சிய பின்னணி; இந்த அச்சம் அரசு கொள்கையாகப் பரிணாமம் அடைந்த வரலாறு.
  • 'சிவப்பு அபாயத்துக்கு' எதிராக அமெரிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள்.
  • இடது சார்பு கொண்டவர்கள் அமெரிக்க அரசியல் களத்திலும் சித்தாந்தத் தளத்திலும் கொண்டுவந்த மாற்றங்கள்.
வசதி கருதி இப்போதைக்கு இதற்கு ஒரு புத்தக வடிவம் அளிக்காமல்  சில விஷயங்களை மட்டும் தொடர்ச்சியாகப் பதிவு செய்துகொண்டு வரலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன். இடது சாய்வு அரசு உலகில் எங்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்னும் அச்சத்தில் ஆசியா, ஐரோப்பா, லத்தின்  அமெரிக்கா என்று எல்லைதாண்டியும் அமெரிக்கா இடதுசாரிகளுக்கு எதிராகப் போரிட்டது. ஆனால் இந்தத் தொடரின் மையம், அமெரிக்க இடதுசாரிகளுக்கு எதிரான அமெரிக்க அரசின் நடவடிக்கைகள் மட்டுமே.

'சிவப்பு அபாயம் : இடதுசாரிகளுக்கு எதிராக அமெரிக்கா' என்பதுதான் இந்தப் பகுதியின் தலைப்பாக இருக்கவேண்டும். இருந்தும் சுருக்கமாக, இப்போதைக்கு சிவப்பு அபாயம் என்றே இதனை அழைப்போம்.

2 comments:

Anonymous said...

"சிவப்பு அபாயம்" செத்த பாம்பை பார்த்து ஏப்பா பயப்படுறிங்கன்னு கேட்கறிங்க... அப்படித்தானே.

sosunandhan said...

உலகை மாற்றிய புரட்சியாளர்களுக்கு பின்பு,புரட்சியை கண்டு மிரண்ட அமெரிக்காவைப்பற்றி எழுத முனைந்ததற்கு வாழ்த்துக்கள்.ஜான் ரீட் எழுதிய ”உலகைக்குலுக்கிய பத்து நாட்கள்” உங்கள் முயற்சிக்கு வழிகாட்டும்.மிரண்ட அமெரிக்கா,இன்றும் மிரண்டு கொண்டிருப்பதையும் அதற்காக ஒவ்வொரு நாட்டிலும் கோடிக்கணக்கான டாலர்களை வீணடிப்பதையும்,ஆயிரக்கணக்கான இடது சாரிகளை கொன்று குவிப்பதையும்,அதை சிஐஏ-வில் பணியாற்றி நிறைவேற்றிய அதிகாரிகளே அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தையும் பயன்படுத்துங்கள்.தொடர் மிகுந்த வரவேற்பைப்பெறும்.