March 10, 2014

விவேகானந்தரைப் புரிந்துகொள்வது எப்படி?

விவேகானந்தரை நான் நேரடியாக வாசிப்பது இதுவே முதல்முறை. அமியா பி. சென் எடிட் செய்து தொகுத்திருக்கும் The Indispensable Vivekananda : : An Anthology for our times என்னைப் போன்ற புதியவர்களுக்கு விவேகானந்தரின் படைப்புகளை ஓரளவுக்கு நன்றாக அறிமுகம் செய்து வைக்கிறது. குறிப்பாக, விவேகானந்தரை அவர் வாழ்ந்த காலகட்டத்தில் பொருத்தி அறிமுகம் செய்யும் முதல் பகுதி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ‘நான்கு பாகங்களில், 4500 பக்கங்களில் விவேகானந்தரின் சிந்தனைகள் பரவிக்கிடக்கின்றன. அவற்றில் இருந்து சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து அளிப்பது மிகுந்த சிரமமளிக்கக்கூடிய ஒரு செயல்’ என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார் அமியா சென்.

விவேகானந்தரின் உரைகள் மற்றும் எழுத்துகளின் பெரும்பகுதி மதம் மற்றும் தத்துவம் பற்றியவை. இந்தப் புத்தகத்தில் ஐந்து பகுதிகளில் விவேகானந்தரின் உரைகளையும் எழுத்துகளையும் இவர் பிரித்து அளித்திருக்கிறார். முதலிரண்டு சமூகம், வரலாறு தொடர்புடையவை. மற்ற மூன்று மதத்தின் நோக்கம், பகவத் கீதை, வேதாந்தம், யோகம் பற்றியவை.

விவேகானந்தரை வரையறை செய்வது சிக்கலான விஷயம் என்பதை முன்னுரையில் இருந்து தெரிந்துகொள்ளமுடிகிறது. சிலர் விவேகானந்தரை ஒரு தேசியவாதியாக, தேச பக்தராகக் காண்கின்றனர். மேலும் சிலர் அவரை இந்து மதத்தில் மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தவராகக் காண்கின்றனர்.  இன்னும் சிலருக்கு விவேகானந்தர் அரசியல் நோக்குடன் செயல்பட்ட ஒரு தலைவராகத் திகழ்கிறார். ஆனால் இவ்வாறு அவரைப் பார்ப்பது தவறு என்று கூறும் சிலர், விவேகானந்தரை அரசியல் வட்டத்துக்குள் கொண்டுவருவது சரியல்ல, அவர் அடிப்படையில் ஒரு சமயப் பரப்பாளர் மட்டுமே என்று வாதிடுகின்றனர்.

மற்றபடி ஆசிரியர் சுட்டிக்காட்டுவதைப் போல், உலகளவில் இந்து மதம் குறித்த ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியவர்களில் விவேகானந்தர் முதன்மையானவராகக் கருதப்படுகிறார். இந்தியா குறித்தும் இந்தியர்கள் குறித்தும் மேற்கத்திய உலகம் கொண்டிருந்த (தவறான) அபிப்பிராயங்களைத் தன்னால் மாற்றமுடியும் என்று அவர் நம்பியிருக்கிறார். தனது அயல்நாட்டுப் பயணங்கள்மூலம் இதனைச் சாத்தியப்படுத்தவும் அவர் முயன்றிருக்கிறார்.

இந்து என்னும் பதத்தை அவர் கலாசாரம் என்னும் பிரிவின்கீழ் வேண்டுமென்றே கொண்டு வந்து பயன்படுத்தினார் என்றும் இந்துயிசம் என்பதைவிட இந்து என்னும் அடையாளத்துடனே அவர் தன்னை இணைத்துக்கொண்டார் என்றும் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

நரேந்திரநாத் தத்தா என்னும் இயர்பெயர் கொண்ட விவேகானந்தர் ஓரளவுக்குப் பொருளாதாரச் செல்வாக்கு மிக்க காயஸ்த் பின்னணியைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை பிஸ்வநாத் தத்தா வழக்கறிஞராக இருந்திருக்கிறார். தன் தந்தையிடம் இருந்தே பிறருக்கு உதவிகள் செய்யும் பண்பை வளர்த்துக்கொண்டதாக விவேகானந்தர் சொல்கிறார். தனது தாயிடம் இருந்து ஆன்மிக விருப்பத்தைப் பெற்றிருக்கிறார். கடவுளை நீங்கள் நேரில் பார்த்திருக்கிறீர்களா என்று பலரிடம் தொடக்கக்காலத்தில் விவேகானந்தர் கேட்டு வந்தாராம். ஆம், பார்த்திருக்கிறேன் என்று ராமகிருஷ்ண பரமஹம்ஸர் மட்டுமே திட்டவட்டமாகப் பதிலளித்திருக்கிறார்.

இந்து மதத்தின் பழமையே அதன் பலமாகவும் பலவீனமாகவும் இருந்ததை விவேகானந்தர் நன்கு உணர்ந்திருக்கிறார். அதே சமயம் அதன் பழமையைச் சுட்டிக்காட்டி நிராகரிப்பவர்களோடு விவேகானந்தர் முரண்படுகிறார். மதம் தேவையற்றது என்றோ பயனற்றது என்றோ சொல்வதில் பொருளில்லை. எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம் மதம்தான் என்று சுட்டிக்காட்டுவதும்கூட ஏற்கத்தக்கதல்ல. நம் காலத்துக்குப் பொருத்தமானதாக மதத்தை மாற்ற என்ன செய்யவேண்டும் என்றுதான் நாம் பார்க்கவேண்டும் என்கிறார் விவேகானந்தர்.

சகோதர்களே, சகோதரிகளே என்று தொடங்கி அமெரிக்காவில் அவர் ஆற்றிய உரை பிரசித்திப் பெற்றது. ஆனால் அமெரிக்கா அவரைச் சலிப்படையச் செய்தது. 15 மார்ச் 1894 அன்று டெட்ராய்ட்டில் இருந்து விவேகானந்தர் எழுதுகிறார். ‘சொற்பொழிகள் உள்ளிட்ட முட்டாள்தனமான விஷயங்கள் என்னைச் சலிப்படையச் செய்கின்றன. நூற்றுக்கணக்கான மனித மிருகங்களுடன் ஒன்றுகலந்து உறவாடுவது தொந்தரவாக இருக்கிறது. நிச்சயம் இங்கிருப்பதில் எனக்கு விருப்பமேயில்லை.’

விவேகானந்தரைக் கண்டு சலிப்படைந்த இந்தியர்கள் பலரும் அப்போதே இருந்திருக்கிறார்கள். ஒரு சூத்திரராக இருந்து இந்து மதத்தை அவர் பிரதிநிதித்துவப்படுத்தியதால் ஏற்பட்ட சலிப்பு இது என்கிறார் ஆசிரியர். இன்னொரு பக்கம், விவேகானந்தரின் மறுமலர்ச்சி சிந்தனைகள் சம்பிரதாயங்களில் தோய்ந்து கிடந்த பழமை விரும்பிகளை அவரிடம் இருந்து பிரித்து வைத்தது. இதனை விவேகானந்தரும் உணர்ந்திருந்தார்.

விவேகானந்தரைப் பொருத்தவரை இந்து என்பவர் யார்? உயர்ந்த விழுமியங்களை யார் கடைபிடிக்கிறாரோ அவரே இந்து. அவ்வாறு கடைபிடிக்கும் ஒருவர் பிறப்பால் முஸ்லிமாக இருந்தாலும் விவேகானந்தரை அவரை ஓர் இந்துவாகவே ஏற்கிறார். படித்த சன்னி முஸ்லிம்களை இந்துக்களிடம் இருந்து வேறுபடுத்திப் பார்க்கமுடியாது என்றொருமுறை அவர் சொல்லியிருக்கிறார். அந்த வகையில், அக்பர் ஒரு முகலாய சக்கரவர்த்தி மட்டுமல்ல அவரைப் பொருத்தவரை ஓர் இந்துவும்கூட.

இதையே இன்னமும் நீட்டித்து, எல்லா மதங்களும் அடிப்படையில் ஒன்றே, எல்லா நம்பிக்கைகளும் ஒன்றே என்று விவேகானந்தரால் அனைத்து மதப் பிரிவுகளையும் ஒன்றாக்கிப் பார்க்க இயலவில்லை. இந்தியாவை அவர் இந்து இந்தியாவாகவே காண்கிறார். கிறிஸ்தவத்தைப் பற்றிய அவருடைய பார்வையைப் பார்க்கும்போது இது விளங்குகிறது. ‘பைபிளாக இருந்தாலும் சரி, வேறு புனித நூல்களாக இருந்தாலும் சரி. வேதங்களோடு ஒத்துப்போகும்வரை அவை யாவும் நல்லவையே. ஒருவேளை ஒத்துப்போக மறுத்தால் அவற்றை ஏற்கமுடியாது.’

சாதிகளின் தோற்றத்துக்கும் இருப்புக்கும் நிச்சயம் ஒரு நியாயம் இருந்தாகவேண்டும் என்று அவர் நினைத்தார். இல்லாவிட்டால் அவை எதற்காக நீடித்திருக்கின்றன? ஆனால் சாதிகளின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட கொடுமைகளை நியாயப்படுத்த அவர் தயாராகயில்லை. தீண்டாமையையும் கீழ்ச்சாதியினரை மேல்சாதியினர் கொடூரமான முறையில் நடத்துவதையும் எதிர்த்தார். அதற்கு அறம் மட்டுமல்ல காரணம். இந்துக்களில் ஒரு பிரிவினரை தகாத முறையில் நடத்தினால் ‘அவர்களை கிறிஸ்தவமும் இஸ்லாமும் வென்றெடுத்துவிடும்.’

விவேகானந்தர் கடுமையான முறையில் பிராமணர்களைச் சாடியிருக்கிறார். பிராமணீயத்தையும்கூட அவர் வெளிப்படையாகப் பலமுறை எதிர்த்திருக்கிறார். மக்கள்மீது ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கும் சாதுக்களையும் சந்நியாசிகளையும் தாக்கியிருக்கிறார். கல்விமீது அவருக்கு அசாத்திய நம்பிக்கை இருந்திருக்கிறது. இந்தியாவைப் பீடித்திருக்கும் இருளைக் கல்வி அகற்றும் என்பது அவர் நம்பிக்கை.

பிரிட்டிஷ்காரர்கள் நம்மை நாகரிகமற்றவர்கள் என்று அழைப்பதாலேயே நாம் அவ்வாறு ஆகிவிட மாட்டோம், அவர்களுடைய வார்த்தைகளுக்கு நாம் முக்கியத்துவம் தரத் தேவையில்லை என்கிறார் விவேகானந்தர். அதே சமயம், மேற்கத்திய நாகரிகத்தையும் அதன் மதிப்பீடுகளையும் அவர் முற்றாக புறக்கணிக்கவும் இல்லை. இந்தியாவைத் தொடர்ச்சியாக மேற்கத்திய நாடுகளுடன் அவர் ஒப்பிட்டு வந்திருக்கிறார்.

பெண்கள் குறித்த அவர் பார்வை பிற்போக்கானதாகவே இருந்தது. மேற்கத்திய நாடுகளில் உள்ள பெண்களையும் இந்தியப் பெண்களையும் ஒருமுறை அவர் ஒப்பிடுகிறார். மேற்கத்திய பெண் ஒருவர் தனக்கான கணவனைத் தானே தேடிக்கொள்கிறார் என்பதை விவேகானந்தர் சங்கடத்துடன் பதிவு செய்கிறார். இந்தியாவில் அத்தகைய நிலை இன்னும் ஏற்பட்டுவிடவில்லை என்பதில் அவருக்கு திருப்தி. எதற்காக ஒரு பெண் தன் மணவாழ்க்கையைத் தானே தீர்மானிக்கவேண்டும்? சமூகம் அல்லவா அதனைச் செய்யவேண்டும் என்று அவர் கேள்வி எழுப்புகிறார். திருமணம் முடிந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் ஒரு பெண் தன் குழந்தையைச்  சமூகத்துக்குத்தான் அளிக்கிறாள். எனவே, அந்தப் பெண்ணின் தனிப்பட்ட மகிழ்ச்சியைவிட சமூக நலன்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. எனவே, ஒரு பெண் யாரைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதை சமூகம் முடிவு செய்வதுதான் சரியானது.  தனக்கு மணமாகவில்லை என்றபோதும் தனக்கு வாய்க்கும் மனைவி எப்படி இருக்கவேண்டும் என்பதை விவேகானந்தர் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். என்னுடைய தாய், தந்தை இருவரும் எனக்கு முக்கியமானவர்கள். என் மனைவியும் அவ்வாறே அவர்களைக் கருதவேண்டும் என்று விரும்புவேன். எனில், ஓர் ஆண் தன் மனைவியின் பெற்றோரை எப்படிக் கருதவேண்டும்?

ஓர் ஆண் தன் மனைவியை எப்படித் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதற்கு விவோகானந்தர் ஏதேனும் யோசனைகள் வைத்திருந்தாரா என்று தெரியவில்லை. ஓரிடத்தில் இதுபற்றி சுருக்கமாகப் பேசுகிறார். கணவனை இழந்த பெண், திருமணம் ஆகாத பெண். இந்த இருவரில் ஒருவரைத் துணையாக ஏற்கவேண்டுமெனில், திருமணம் ஆகாத பெண்ணையே ஓர் ஆண் தேர்வு செய்யவேண்டும் என்று விவேகானந்தர் சிபாரிசு செய்கிறார். ஏனெனில், கணவனை இழந்த பெண் திருமண வாழ்வை ஏற்கெனவே கண்டுவிட்டார், அவருக்கு இன்னொரு வாய்ப்பைக் கொடுப்பதற்குப் பதில், மணமாகாத ஒரு பெண்ணைத் தேர்வு செய்வதுதான் சரி என்பது அவர் வாதம்.

இந்து மதத்தின் தீமைகளையும் பிராமணீயத்தின் தீமைகளையும் களைந்துவிடமுடியும் என்பதே விவேகானந்தரின் நம்பிக்கை. பிசகுகளை நீக்கி இந்து மதத்தைப் புனிதப்படுத்திவிடமுடியும் என்று அவர் நம்பியிருக்கிறார். மதம் தவிர்க்கமுடியாதது என்பதே அவருடைய தீர்மானமான கருத்து. தவிர்க்கவியலாதபடி, இந்தியப் பாரம்பரியம், இந்திய கலாசாரம் ஆகியவற்றை அவர் இந்து பாரம்பரியமாக, இந்து கலாசாரமாகவே கண்டிருக்கிறார். இந்தியர்களைப் பற்றி அவர் வந்தடைந்த முடிவுகள் அனைத்தும் இந்துக்களை வைத்து அவர் வந்தடைந்த முடிவுகளாகவே இருக்கின்றன. இந்திய மனம்  முதலில் மதம் சார்ந்ததாக இருக்கிறது. பிறகுதான் மற்ற விஷயங்கள் என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்.

பிராமணர்களையும் பிராமணீயத்தையும் கடுமையாக விமரிசித்தாலும், அறிவின் இருப்பிடமாக பிராமணர்கள் திகழ்ந்ததை அவர் ஒப்புக்கொள்கிறார். இன்னும் சொல்லப்போனால் பிராமணர்கள்மீது அவர் முன்வைக்கும் கூர்மையான விமரிசனங்களில் ஒன்று, அவர்கள் தங்களுக்குக் கிடைத்த அறிவை சமூகத்தில் உள்ள பிறருக்குப் பகிர்ந்துகொடுக்கவில்லை என்பதுதான். ஒருவேளை அவர்கள் இதனைச் செய்திருந்தால் இந்தியாவை முஸ்லிம்கள் கைப்பற்றியிருக்கமாட்டார்கள், பிரிட்டனும்கூட கைப்பற்றியிருக்காது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இந்தியா அடிமைப்பட்டதற்குக் காரணம் பிராமணர்களே.

இந்த ஒரு புத்தகத்தை மட்டும் வைத்துக்கொண்டு விவோகானந்தரைப் பற்றிய துல்லியமான ஒரு சித்திரத்தை ஒருவர் பெற்றுவிடமுடியாது என்பது உண்மை.  ஆனால், சில முக்கிய துறைகளில் அவருடைய சிந்தனைகள் எப்படி அமைந்திருந்தன என்பதை ஒரு தீற்றலாகவேனும் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவும் என்றே தோன்றுகிறது. ஆர்வமுள்ளவர்கள் மேலதிகம் தேடிப் படித்துக்கொள்ளலாம்.

வலது, இடது பேதமின்றி பலர் விவேகானந்தரை ஏன் தங்கள் பக்கம் இழுத்துக்கொள்ள விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. தங்களுக்குத் தோதான வாசகங்களை மட்டும் பிய்த்துப் போட்டு அவர் என் பக்கம் என்று ஒருவரால் சொந்தம் கொண்டாட முடியும் என்றே தோன்றுகிறது. மற்றபடி தனிப்பட்ட முறையில் விவோகானந்தர் என்னைக் கவரவில்லை. இன்னும் விரிவாகக் கற்கவேண்டும் என்னும் ஆர்வத்தையும் தூண்டவில்லை.

ஆனால் இந்தப் புத்தகத்தின் வடிவமைப்பு நிச்சயம் ஆர்வத்தைத் தூண்டுகிறது. இந்திய அளவில் அம்பேத்கர், நேரு, பகத் சிங், பெரியார், காந்தி, தாகூர், திலகர், லாலா லஜபதி ராய் என்று பலரையும் இத்தகைய புத்தகங்கள்மூலம் தமிழில் அறிமுகம் செய்வது உபயோகமாக இருக்கும்.ஆங்கிலத்தில் இருப்பதைப் போல் தமிழில் anthologies இல்லை என்பது மிகப் பெரிய குறை.

The Indispensable Vivekananda : An Anthology for our times, Editor : Amiya P. Sen, Permanent Black, Pages 242

3 comments:

வாக்கீசர் said...

He is clear in his view.He wants to make clear about sanata dharma for our people.He started from Us because that time also our people thought what ever comes from west it is superior.Before he goes to us he said same in india to all,but very few interested in.When he preached in Us all dailys written about him and his speech.
Before comment about his points regarding women understand the time and society in India. What he
expressed thats very relevant to
our Society that time.

வாக்கீசர் said...

He is clear in his view.He wants to make clear about sanata dharma for our people.He started from Us because that time also our people thought what ever comes from west it is superior.Before he goes to us he said same in india to all,but very few interested in.When he preached in Us all dailys written about him and his speech.
Before comment about his points regarding women understand the time and society in India. What he
expressed thats very relevant to
our Society that time.

Anonymous said...

விவேகானந்தரின் முழுத் தொகுப்பும் கிடைக்கிறது.தமிழிலும் அவ்ரைப் பற்றி எழுதப்பட்டுள்ளது.4500 பக்கம் படித்து அவரைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் ஏன் இது போன்ற நூல்களை பரிந்துரைக்கிறீர்கள்.விவேகானந்தர் செயல்களை,எழுத்துக்களை அவர் வாழ்ந்த காலத்தின் பிண்ணனியில் புரிந்து கொள்ளுங்கள்.