March 28, 2014

இஸ்லாமியர்களைப் புரிந்துகொள்வது எப்படி?

உங்களுக்கு உண்மையிலேயே இஸ்லாமியர்கள்மீது அக்கறையும் அன்பும் இருந்தால் சில விஷயங்களை நீங்கள் தவிர்க்கவேண்டும். சிறுபான்மையினர் என்பதால் மட்டுமே இஸ்லாமியர்களின் அனைத்து தவறுகளையும் அனைத்து பிற்போக்குத்தனங்களையும் நீங்கள் இனி ஆதரிக்கத் தேவையில்லை.  அவர்களைக் கண்டு பரிதாபப்படத் தேவையில்லை. பாதிக்கப்பட்டவர்களாகவும், ஆபத்தில் இருப்பவர்களாகவும், பலியாடுகளாகவும் அவர்களை எப்போதும் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அவர்கள் அதனை இனியும் விரும்பப்போவதில்லை.

பத்திரிகையாளர் ஹசன் சுரூர் சந்தித்த இஸ்லாமிய இளம் பெண்களும்  ஆண்களும் உற்சாகமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் சுயகழிவிரக்கம் இல்லை. எங்களில் பலர் பொருளாதாரத்திலும் கல்வியறிவிலும் பின்தங்கியிருப்பதற்குக் காரணம் நாங்களும்தான் என்று மனம் திறந்து ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் சுதந்தரமாக இருக்க விரும்புகிறார்கள். நன்றாகப் படிக்கவும் நல்ல வேலையில் அமரவும் நன்றாக ஆடையணிந்துகொள்ளவும் நன்றாக வாழ்வை ரசித்து வாழவும் விரும்புகிறார்கள். நல்ல வீடுகளில் வசிக்கவும் நல்ல காற்றைச் சுவாசிக்கவும் நல்ல நண்பர்களைப் பெறவும் கனவு காண்கிறார்கள்.

தனது India's Muslim Spring : Why is Nobody Talking about it? புத்தகத்துக்காக ஓர் இளம் பெண்ணைப் பேட்டியெடுக்கும்போது ஹசன் சுரூரால் வியக்காமல் இருக்கமுடியவில்லை. 'மன்னிக்கவும், புர்கா அணிந்த ஒரு பெண்ணைச் சந்திப்பேன் என்றுதான் நினைத்தேன். உங்களை எதிர்பார்க்கவில்லை.' ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்த அந்தப் பெண் 'வாட் நான்சென்ஸ்?' என்று சொல்லி சிரிக்கிறார்.

முல்லாக்களின் பிடியில் சிக்கியிருக்க அவர்களுக்கு விருப்பமில்லை. ஃபத்வாக்களில் அவர்களுக்கு நம்பிக்கையில்லை. நீ முதலில் இந்தியனா அல்லது முஸ்லிமா என்னும் கேள்வி அவர்களைக் குழப்புகிறது. ஓர் இளைஞன் தெளிவாகவே சொல்கிறான். 'எனது நாடு இந்தியா. எனது மதம் இஸ்லாம்.'

பலரும் நினைப்பது போல் அரேபியாவையோ பாகிஸ்தானையோ அவர்கள் தங்கள் தாய்நாடாக நினைத்துக்கொள்வதில்லை. இந்தியாவை அவர்கள் ஓர் அந்நிய நாடாகக் கருதவில்லை. ஆம், இந்துக்கள் இங்கே பெரும்பான்மையினர், அதனாலென்ன என்கிறார்கள். இது எங்கள் நாடும்கூட என்கின்றனர். பலரும் நினைப்பதைப் போல் அல்லாமல் பாகிஸ்தானை அவர்கள் ஒரு தோல்வியடைந்த புராஜெக்டாக நினைக்கிறார்கள். எந்தவோர் இஸ்லாமிய நாட்டில் வாழ்வதைக் காட்டிலும் இந்தியாவில் வாழ்வதையே அவர்கள் விரும்புகின்றனர்.

முஸ்லிம்களில் நாத்திகர்கள் இருக்கிறார்கள். மிதவாதிகள் இருக்கிறார்கள். தீவிர நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள். என் நம்பிக்கை எனக்கு, உனது நம்பிக்கை உனக்கு என்று நாசூக்காக ஒதுங்கிச்செல்பவர்கள் இருக்கிறார்கள். ஷரியத் சட்டத்தை மட்டுமே மதிப்பவர்கள் இருக்கிறார்கள். காமன் சிவில் கோட் வரவேண்டும் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். மதகுருக்களின் பிடியில் இருப்பவர்கள், இல்லாதவர்கள் இருவரும் இருக்கிறார்கள். இதுநாள்வரை நாம் மதத்துக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து வந்திருக்கிறோம், இனியும் அதையே தொடர்வதில் பொருளில்லை என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள். இந்து பெரும்பான்மையினர் நமக்கு ஓர் அச்சுறுத்தல் என்று குரல் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள்.

அதே சமயம், இஸ்லாமியர்களின் வாழ்க்கை அப்படியே அடியோடு மாறிவிட்டது என்றும் சொல்வதற்கில்லை. ஹசன் சுரூர் சந்தித்ததைப் போன்ற டாப்ஸ் அணிந்த பெண்களுக்கு மத்தியில் இன்னமும் புர்காவைக் கெட்டியாகப் பிடித்து வைத்துக்கொண்டிருக்கும் பெண்களும் இருக்கவே செய்கிறார்கள். ஷா பானுவின் வழக்கைக் கையில் எடுத்துக்கொண்டு தேவையில்லாமல் குழப்பங்கள் ஏற்படுத்திய முல்லாக்களை இன்றைய இளம்பெண்கள் கூர்மையாக விமரிசிக்கிறார்கள். இந்த வழக்கு எங்களை பல ஆண்டுகள் பின்னுக்கு இழுத்துச் சென்றுவிட்டன என்கிறார்கள். மற்றொரு பக்கம், ஷரியத்தைவிட்டால் வேறு நாதியில்லை என்று சொல்பவர்களும் நீடிக்கிறார்கள்.

இன்னமும் முஸ்லிம்களுக்குச் சுலபத்தில் வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை. ஒரே வேலைக்கு சம தகுதி கொண்ட ஓர் இந்துவும் முஸ்லிமும் விண்ணப்பித்தால் காரணங்கள் எதுவுமின்றி அந்த முஸ்லிமின் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. தாடி வைத்தவர்கள் இன்னமும் சந்தேகத்துடன்தான் பார்க்கப்படுகிறார்கள். முன்னெச்சரிக்கையுடன் தடுப்புக் காவலில் வைக்கப்படுபவர்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம். சிறையில் உள்ளவர்களில் முஸ்லிம்கள் அதிகம்.

இன்னமும் ஏழைமை அவர்களை வாட்டி வதைக்கிறது. சேரிகளிலும் நடைபாதைகளிலும் வசிப்பவர்களில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையே அதிகம். பிற்போக்குத்தனத்தையும் மூடநம்பிக்கைகளையும் இன்னமும் அவர்கள் விட்டொழிக்கவில்லை.

ஆனால் இந்த நிலைமையை மாற்றமுடியும் என்று இன்றைய முஸ்லிம் சமூகம் நம்புகிறது என்கிறார் ஹசன் சரூர். இந்தப் பிரச்னைகளைக் கடந்து செல்லும் துணிச்சல் இன்றைய இஸ்லாமியப் பெண்களிடம் உள்ளது என்கிறார் அவர். அனைத்து குறைபாடுகளையும் போதாமைகளையும் மீறி அவர்களிடையே சத்தமில்லாமல் ஒரு பெரும் மாறுதல் -- ஏன், ஒரு பெரும் எழுச்சியே -- ஏற்பட்டுள்ளது என்கிறார் இவர். இந்தப் புதிய தலைமுறை முஸ்லிம்கள் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கிறார்கள் எனவே அவர்களை நான் நம்புகிறேன் என்கிறார்.

ஹசன் சரூர் ஒரு மூத்த பத்திரிகையாளர். வகுப்புவாதம் குறித்தும் இஸ்லாமியச் சமூகம் குறித்தும் எழுதி வருபவர். தி இந்துவுக்காக லண்டனில் இருந்தபடி அங்குள்ள அரசியல், சமூக நிகழ்வுகளை தொடர்ச்சியாக எழுதி வந்திருக்கிறார். டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்த சுரூர், தி ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையில் தன் எழுத்துப் பணியைத் தொடங்கினார். 

இது ஓர் ஆய்வு நூல் அல்ல. அடிக்குறிப்புகள், அட்டவணைகள் எதுவும் இல்லை. அதனாலேயே கைக்குட்டையைக் காட்டிலும் எடை குறைவானதாக உள்ளது.முழுக்க முழுக்க அவருடைய பார்வையில் subjective ஆக புத்தகம் விரிவடைவதால் இதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு எந்தவொரு தீர்மானமான முடிவுக்கும் வந்துவிடமுடியாதுதான். அதே சமயம், இஸ்லாமிய சமூகத்தினரின், குறிப்பாக புதிய தலைமையினரின் இன்றைய சிந்தனை போக்கு எப்படியுள்ளது என்பதை உணர இது மிகவும் உபயோகமாக இருக்கும்.

இவர் காட்டும் சித்திரம் உண்மையென்றால், நம் கண்முன்னே ஓர் அசாதாரணமான பெரு மாற்றம் இஸ்லாமியர்களிடம் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.  இதனை நாம் அங்கீகரிக்கவும் மனம் திறந்து பாராட்டவும் முன்வரவேண்டும்.

ஹசன் சுரூரின் இந்தப் புத்தகத்தைக் கீழ்வருபவர்கள் ஏற்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
  • இஸ்லாமிய அடிப்படைவாதிகள் : முஸ்லிம்கள் விழிப்புணர்வு பெறுவதும் அடுத்தடுத்த கட்டங்களுக்குத் தாவிச்செல்வதும் இவர்களை நேரடியாகப் பாதிக்கும். காரணம் இவர்களுடைய அதிகார பீடம் முஸ்லிம்களின் பிற்போக்குத்தனத்தின்மீதே கட்டமைக்கப்பட்டுள்ளது.  முஸ்லிம்கள் அறிவு பலம் பெறுவது இவர்களைப் பலவீனப்படுத்தும்.
  • இந்து அடிப்படைவாதிகள் : மேற்கூறிய அதே காரணங்கள்.
இந்தப் புத்தகத்தில் இருந்து சில பகுதிகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.

0

India's Muslim Spring : Why is Nobody Talking About it?
Hasan Suroor
Rupa
200 Pages, Rs.395

1 comment:

Anonymous said...

தமிழில் கொண்டுவாருங்கள்!

சரவணன்