April 1, 2014

முஸ்லிம்கள் : பாபர் முதல் பாகிஸ்தான் வரை

இந்திய முஸ்லிம்கள் குறித்து பொதுவாக நிலவிவரும் சில தவறான கருத்தாக்கங்களை எடுத்துக்கொண்டு தனது புத்தகத்தில் ஆராய்கிறார் ஹசன் சுரூர்.

முஸ்லிம்கள் ஒரே பிரிவினரா?

முஸ்லிம்களுக்கு நாடு அல்ல, மதமே பிரதான அடையாளம் என்று சொல்லப்படுவது உண்மையல்ல. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மதம் அவர்களை ஒரு குழுவாக ஒன்றிணைக்கிறது என்னும் பார்வையும் தவறு. தென்னிந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் வட இந்தியாவில் உள்ள முஸ்லிம்களோடு எந்தவித தொடர்பையும் உறவையும் வைத்துக்கொள்ளவில்லை. மாறாக, தென்னிந்திய இந்துக்களுடன்தான் அவர்கள் நெருக்கமாக இருக்கிறார்கள்.

ஆக இந்திய முஸ்லிம்கள் என்றொரு குழுவேகூட இல்லை என்று ஆகிவிடுகிறது. வர்க்கம், கல்வி, தொழில் என்று முஸ்லிம்களுக்கு இடையிலும்கூட பல பிரிவுகள் உள்ளன. தென் இந்தியா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் வட இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களைவிட லிபரலாகவும், கற்றவர்களாகவும் இருக்கின்றனர் என்கிறார் சுரூர்.

இவை போக, ஷியா, சுன்னி என்னும்  இரு பெரும் பிரிவுகள் இஸ்லாத்தில் உள்ளன. இருவருமே முஸ்லிம்கள்தான் என்றாலும் வழிபாட்டு முறை, சடங்குகள் என்று பல வேறுபாடுகள் இவர்களுக்கிடையில் உள்ளன. ஒப்பீட்டளவில் ஷியாக்கள் லிபரல்களாகவும் கற்றவர்களாகவும் நல்ல சமூகநிலையிலும் உள்ளனர். இந்த இரு பெரும் பிரிவுகளுக்குள் பல உட்பிரிவுகள் உள்ளன.

மதம், கலாசாரம், நம்பிக்கை, சமூக நிலை என்று இப்படிப் பல வேறுபாடுகள் இருக்கும்பொழுது முஸ்லிம் என்று மொத்தமாக அவர்களைப் பொட்டலம் கட்டி ஒன்றைத் தன்மை கொண்டவர்களாக முஸ்லிம்களை முன்னிறுத்துவது பெரும் தவறு என்கிறார் சுரூர். சிலருடைய தவறுகளை, சிலருடைய குறைகளை "முஸ்லிம்களின்" தவறுகளாக, "முஸ்லிம்களின்" குறைகளாகப் பொதுப்படுத்தி காட்டும் பிழையான அணுகுமுறைக்கே இப்படிப்பட்ட பார்வைகள் இட்டுச்செல்லும்.

பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களிடமோ வங்கதேசத்தில் உள்ள முஸ்லிம்களிடமோ அல்லது இந்தோனேஷியாவில் உள்ள முஸ்லிம்களிடமோ இந்திய முஸ்லிம்கள் உணர்வுபூர்வமான உறவுகள் வைத்துக்கொண்டிருக்கவில்லை. ஒரே பொட்டலமாக அவர்களைச் சித்தரிக்க முயற்சி செய்பவர்கள் மூவர். 1) முஸ்லிம்களைத் தன் பிடிக்குள் வைத்திருக்க விரும்பும் முல்லாக்கள். 2) முஸ்லிம்கள் பற்றிய பொதுவான (அதிலும் தவறான) ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி ஆதாயம் அடையத் துடிக்கும் இந்து அடிப்படைவாதிகள். 3) ஒரே பிரிவாக, ஒரே வாக்கு வங்கியாக முஸ்லிம்களைக் கருதும் அரசியல்வாதிகள்.

முஸ்லிம்கள் பாபரின் வழித்தோன்றல்களா?

முஸ்லிம்களை இந்தியர்களாக ஏற்கும் மனநிலை இன்னமும்கூட பலரிடம் இல்லை. குறிப்பாக இந்து அடிப்படைவாதிகளுக்கு. உனக்கு இங்கே வசிக்கச் சிரமமாக இருந்தால் உன்னுடைய அரேபியாவுக்கோ பாகிஸ்தானுக்கோ தாராளமாகச் சென்றுவிடலாமே என்று பலர் வெளிப்படையாகச் சொல்வதை இன்றும் பார்க்கிறோம்.

பாபரின் வருகைக்குப் பிறகே இந்தியாவில் முஸ்லிம்கள் குடியேறத் தொடங்கினார்கள் என்று சிலர் நினைக்கின்றனர். இந்தியாவுடனான முஸ்லிம்களின் உறவு கிபி 7ம் நூற்றாண்டு முதலே நீடிக்கிறது. முதலில் இந்தியாவில் குடியேறிய முஸ்லிம்கள் படை வீரர்கள் அல்லர். இந்தியாவை ஆக்கிரமிப்பதற்காக அவர்கள் வரவில்லை. தங்கள் மதத்தைக் கத்தி முனையிலோ அல்லது அமைதி வழியிலோ பரப்புவதற்காகவும் அவர்கள் வரவில்லை. வர்த்தகமே அவர்கள் நோக்கம். 19ம் நூற்றாண்டு பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்களின் (ஹென்ரி எலியட், ஜான் டாசன்) கூற்றுப்படி கிபி 630 வாக்கில் முதல்முறையாக முஸ்லிம்களை ஏற்றிவந்த கப்பல்கள்  இந்தியக் கடற்பகுதியில் காணப்பட்டன.

பாபர் அல்லது பிற முகலாய மன்னர்களோடு தொடர்புபடுத்தி முஸ்லிம்களை ஆக்கிரமிப்பாளர்களாகச் சித்தரிக்கும் போக்கு வரலாற்றுக்கு முரணானது; தெளிவான உள்நோக்கங்கள் கொண்டது.

இந்திய முஸ்லிம்களும் பாகிஸ்தான் முஸ்லிம்களும்

மனத்தளவில் ஒவ்வொரு இந்திய முஸ்லிமும் பாகிஸ்தானைத் தனது தாய் நாடாகக் கருதுவதாகப் பலர் நினைக்கின்றனர். அவ்வாறு சில முஸ்லிம்கள் முன்பு கருதியது உண்மைதான் என்கிறார் ஹசன் சுரூர். பிரிவினைக்குப் பிறகு வசதி படைத்த முஸ்லிம்கள் இந்தியாவைவிட்டு வெளியேறி பாகிஸ்தானில் குடியேறினர். புதிய தேசம் அங்கு கட்டமைக்கப்படவிருந்த நிலையில் பல்வேறு தொழில் பின்னணி கொண்டவர்களுக்கான தேவை அங்கிருந்தது. அதை இவர்கள் பயன்படுத்திக்கொண்டனர்.

பாகிஸ்தான் செல்லும் ஆசையிருந்தும் பணம் இல்லாததால் செல்லமுடியாத பலரும் இருக்கவே செய்தனர். இந்தியாவில் இருந்து சென்று குடியேறி பிறகு கனவு கலைந்து உண்மை புரிந்து மீண்டும் இந்தியாவுக்கே திரும்பிய முஸ்லிம்களின் எண்ணிக்கையும் கணிசமானதுதான். இந்தத் தலைமுறையினர் யாரும் இப்போது இல்லை.

பல இந்திய முஸ்லிம்களுக்கு ஹசன் சுரூரைப் போலவே பாகிஸ்தானில் உறவினர் இருந்தனர். எனவே அவர்களுக்கு பாகிஸ்தானுடன் உணர்வுபூர்வமான தொடர்பு இருந்தது. தலைமுறை மாற்றத்துக்குப் பிறகு உறவுகள் தொலைந்துபோன நிலையில் பாகிஸ்தானுடனான உறவு முற்றிலும் அவர்களுக்கு அறுபட்டுவிட்டது.

பாகிஸ்தான் என்பதே மேல்தட்டு முஸ்லிம்களின் உருவாக்கம்தான் என்கிறார் ஹசன் சுரூர். அவர்களுடைய அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காகவே அத்தேசம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் இருந்த பிற முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான்மீது இருந்த ஏக்கம் வெகு விரைவில் மறைந்துவிட்டது. ஹசன் சரூர் சந்தித்த முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் என்பது தோற்றுப்போன ஒரு நாடு. எனவே பாகிஸ்தானோடு இந்திய முஸலிம்களைத் தொடர்புபடுத்தி பேசுவது தவறானது என்கிறார் ஹசன் சுரூர்.

முதல் பகுதி : இஸ்லாமியர்களைப் புரிந்துகொள்வது எப்படி?

No comments: