April 7, 2014

முஸ்லிம்கள் பிற்போக்கானவர்களா?

இரு தேசக் கொள்கையை முன்வைத்து ஒரு சித்தாந்த வடிவமைப்பு முன்பு உருவாக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தான் உருவான பிறகு அதன் இடத்தை வேறு எந்தச் சித்தாந்தமும் இங்குள்ள இந்திய முஸ்லிம்களைப் பற்றிக்கொள்ளவில்லை என்கிறார் ஹசன் சுரூர். அவர்களை வழிநடத்த அறிவார்ந்த தலைமை உருவாகவில்லை. சுதந்தரம், முன்னேற்றம், சமூக நீதி ஆகிய தளங்களில் நின்று போராடவும் குரல் கொடுக்கவும் ஒரு காத்திரமான தலைமை இல்லை. (இன்றுவரை இந்த இடம் கிட்டத்தட்ட நிரப்பப்படாமல்தான் இருக்கிறது). இந்த வெற்றிடத்தை முல்லாக்கள் கைப்பற்றிக்கொண்டதன் விளைவாகவே அடிப்படைவாதம் இஸ்லாமிய சமூகத்தில் உருவானது.

இந்துத்துவ அடிப்படைவாதத்தைத் தாவிச்சென்று ஏற்றுக்கொண்ட சில இந்துக்களைப் போல் சில முஸ்லிம்களும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தைத் தழுவிக்கொண்டனர் என்கிறார் ஹசன் சுரூர். தாங்கள் அடுத்த கட்டத்துக்குச் செல்ல இது உதவும் என்று அவர்கள் நம்பினர். 1982ல் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவந்த இர்ஃபான் ஹபீப் இத்தகைய எதிர்ப்புகளுக்கு ஆளானார். தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி என்னும் ஹபீபின் முடிவை எதிர்த்து முஸ்லிம்கள் அனைவரையும் இணைத்துக்கொள்ளும்படி சில அடிப்படைவாத முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இவர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்த இர்ஃபான் ஹபீப் தாக்கப்பட்டார்.

இத்தகைய அடிப்படைவாதப் போக்கை அரசு நினைத்தால் மாற்றலாம் என்கிறார் சுரூர். அதற்கு உதாரணமாக அவர் குறிப்பிடுவது வி.பி. சிங் அரசின் முயற்சிகளை. மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று பொதுத்துறை நிறுவனங்களில் முஸ்லிம்கள் உள்ளிட்ட பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார். இது அடிப்படைவாத மனோபாவத்தில் இருந்தும் ஏழைமையில் இருந்தும் பல முஸ்லிம்களை மீட்டெடுத்தது.

ஒரு பக்கம் அடிப்படைவாத முல்லாக்கள். இன்னொரு பக்கம் நாத்திக இடதுசாரிகள். இந்த இருவருக்கும் இடையில்தான் பெரும்பாலான முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்கிறார் ஹசன் சுரூர். முல்லாக்கள் இஸ்லாமியர்களைத் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்கிறார்கள். இடதுசாரிகளால் பெரும்பான்மை முஸ்லிம்களுடன் உரையாட முடியவில்லை என்பதால் அந்நியப்பட்டு போகிறார்கள். ஒரு லிபரல் முஸ்லிம் நாத்திகவாதியாகத்தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை என்கிறார் ஹசன் சுரூர். (இவர் ஒரு நாத்திகவாதி).

இன்றைய முஸ்லிம்கள் பலர் லிபரல்களாக இருக்கவே விரும்புவதாக சுரூரிடம் சொல்லியிருக்கின்றனர். மத நம்பிக்கைகளைத் தனிப்பட்ட விருப்பங்களாக மட்டுமே கொண்டிருக்கவும் அவர்கள் விரும்புகின்றனர். தங்கள் பெற்றோரும் அவர்களுடைய பெற்றோரும் சந்தித்த அடையாளச் சிக்கல்களை அவர்கள் இன்று கொண்டிருக்கவில்லை. பாகிஸ்தான் என்பது அவர்களில் பலருக்கு மற்றொரு நாடு மட்டுமே. பிரிவினை என்பது இந்திய வரலாற்றின் ஒரு பகுதி மட்டுமே. இந்நிகழ்வுகளுடன் அவர்களுக்கு எந்தவித உணர்வுபூர்வமான பிணைப்பும் இல்லை. எங்களுக்குத் தனிக்கவனம் வேண்டாம், சிறப்பு சலுகைகள் வேண்டாம் என்கின்றனர் இவர்கள். இவர்களை நெருங்குவது இன்றைய முல்லாக்களுக்குக் கடினமானதாக இருக்கிறது.

இதில் இன்னொரு முரண்பாடும் இருக்கிறது என்கிறார் ஹசன் சுரூர். பழைய கதைகள் எதுவும் தெரியாததால் இவர்கள் தயக்கமின்றி தங்கள் மத அடையாளங்களை வெளிப்படுத்துகிறார்கள். மசூதிகளுக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. புர்கா இன்னமும் இருக்கிறது.  குறிப்பிட்ட நேரங்களில் நமாஸ் செய்கிறார்கள். தாடி வளர்க்கிறார்கள். ஆனால் இந்த அடையாளங்களை அவர்கள் மத அடிப்படைவாத நோக்கில் அல்லாமல் சுதந்தரமாக வெளிப்படுத்துகிறார்கள்.

முஸ்லிம்களைப் பழமைவாதிகளாகவும் கடந்த காலங்களில் மட்டுமே வலுவாகக் காலூன்றி நிற்பவர்களாகவும் பலர் சித்திரிக்கிறார்கள். புதிய கண்ணோட்டங்களை அவர்களால் ஏற்கமுடியாது, ஒரு லிபரலாக என்றுமே அவர்களால் மாறமுடியாது என்பது அவர்கள் நம்பிக்கை. ஆனால் இன்றைய முஸ்லிம்கள் பலர் இந்த நம்பிக்கைகளை உடைத்தெறிய ஆர்வமாக இருக்கிறார்கள்.

உங்களுக்கு என்ன தேவை என்று முஸ்லிம்களிடம் கேட்டால், நாங்கள் இயல்பாக இருக்க விரும்புகிறோம் என்பதே அவர்களுடைய பதிலாக இருக்கும் என்கிறார் ஹசன் சுரூர். நீ ஒரு முஸ்லிம், நீ ஒரு முஸ்லிம் என்று ஓயாமல் அவர்களுக்கு யாரேனும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு முஸ்லிம் என்பதாலேயே அவரைப் பற்றிய ஒரு முன்முடிவை யாரேனும் எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். கலவரம் எங்கேனும் நடந்ததாகக் கேள்விப்பட்டால் உடனே நான் என் வீட்டுக்கு ஓடிவந்துவிடுவேன் என்கிறார் ஹசன் சுரூர் சந்தித்த ஒரு முஸ்லிம். இல்லாவிட்டால், சந்தேகப்பட்டு என்னையும் பிடித்துச்சென்றுவிடுவார்கள் என்பதே அவருடைய அச்சம்.

'நான் இந்துக்களை விமரிசித்தால் முஸ்லிம்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். முஸ்லிம்களின் குறைகளைச் சுட்டிக்காடடினால் இந்துக்கள் மகிழ்கிறார்கள். ஆனால் அவர்கள்மீதே விமரிசனம் திரும்பும்போது இருவருமே என்னைக் கண்டு சீறுகிறார்கள்' என்கிறார் ஹசன் சுரூர். நான் இந்துக்களிடம் விலை போய்விட்டதாக முஸ்லிம்கள் சொல்கிறார்கள். என்ன இருந்தாலும் உன் முஸ்லிம் புத்தியைக் காட்டிவிட்டாய் என்கிறார்கள் இந்துக்கள்.

பிரிவினைக்குப் பிறகான இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான விரோதம் மறையவில்லை. இடதுசாரிகளைத் தவிர பிற கட்சிகள் அனைத்துமே இந்து முஸ்லிம் இடைவெளியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதிலேயே குறியாக இருக்கின்றன என்கிறார் சுரூர். பெரும்பான்மை இந்துக்கள் பற்றிய முஸ்லிம்களின் அச்சங்களை ஊதிப் பெரிதாக்கி ஆதாயம் தேடிக்கொள்கிறது காங்கிரஸ். பாஜக, சிவ சேனா போன்ற வலதுசாரி கட்சிகள் முஸ்லிம்களை ஓர் அச்சுறுத்தலாக மட்டுமே காட்டி இந்து வாக்குகளைக் கவர முயற்சி செய்கின்றன.

முஸ்லிம்கள் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பின்தங்கியிருப்பதற்குக் காரணம் அவர்களேதான் என்று சுலபமாகச் சொல்லிவிடலாம். அதில் அவர்களுடைய பங்கும் இருக்கிறது என்பதும் உண்மைதான். ஆனால் 170 மில்லியன் முஸ்லிம் குடிமக்கள் பின்தங்கியிருக்கும்போது அவர்களைப் புறக்கணித்துவிட்டு இந்தியாவை மட்டும் முன்னேற்றப் பாதையில் இழுத்துச் சென்றுவிடலாம் என்று நினைப்பது பிழையானது என்கிறார் ஹசன் சுரூர். முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கு என்ன செய்யவேண்டும் என்று சச்சார் கமிட்டி தெளிவான பரிந்துரைகளை அளித்தபிறகும் அவை செயல்படுத்தப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

முஸ்லிம்கள் பின்தங்கியிருப்பதற்கு இஸ்லாத்தில் உள்ள பிற்பாக்குத்தனங்கள், பெண்கள் பற்றிய அவர்களுடைய பார்வை, கருத்து சுதந்தரத்துக்கு உள்ள தடை ஆகியவையும் காரணம். இவற்றை பயன்படுத்தியே முல்லாக்கள் தங்கள் அதிகாரத்தைக் கட்டமைத்துக்கொள்கிறார்கள். இவர்களுடைய பிடியில் சிக்கிக்கொள்வதை முஸ்லிம்கள் தவிர்க்கவேண்டும் என்கிறார் சுரூர். இன்றைய தலைமுறையினர் பலர் முல்லாக்களின் அதிகாரத்தைத் துணிச்சலாகக் கேள்விக்கு உட்படுத்துவதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

பல்வேறு குறைபாடுகள் இருந்தாலும் இன்றைய முஸ்லிம்களில் பலர் மாற்றத்தை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள் என்று உறுதிபடுத்துகிறார் ஹசன் சுரூர். அதற்கு நான்கு காரணங்களை அவர் முன்வைக்கிறார்.

  1. கருத்துரிமை, பேச்சுரிமை ஆகியவற்றை அவர்கள் மதிக்கிறார்கள். சல்மான் ருஷ்டியின் புத்தகத்தைத் தடை செய்வது அன்று சுலபமாக இருந்தது. அதற்கு அன்றைய முஸ்லிம்கள் பெருமளவில் ஆதரவு அளித்தனர். இன்றும் முஸ்லிம்கள் சாத்தானின் வேதத்தைப் புறக்கணிக்கிறார்கள், ருஷ்டிமீதான அவர்களுடைய கோபமும்கூட குறையவில்லை என்றபோதும் ருஷ்டியின் தலையைக் கேட்கும் அளவுக்கு அவர்கள் தீவிரதத்தன்மையுடன் இல்லை. எம்.எஃப். ஹுசேனுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்பதை அவர்கள் ஏற்கத் தயாராகயில்லை. இன்னொசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் படத்தை பாகிஸ்தானிய முஸ்லிம்கள் எதிர்த்ததைப் போல் இந்திய முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை. பெரும்பாலான இந்திய முஸ்லிம்களை அதைப் பொருட்படுத்தக்கூட இல்லை. சில அமைப்புகளே அடையாள எதிர்ப்பிலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டன.
  2. தமக்கு என்ன தேவை என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது. மதமே பிரதான தேவை, மத நம்பிக்கைகளைக் காப்பதே பிரதான பணி என்று அவர்கள் இனியும் கருதுவதில்லை. முஸ்லிம்கள் பலருக்கு கல்வியில்லை, வேலையில்லை, அரசியல் களத்தில் பிரதிநிதித்துவம் இல்லை என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். இவையே முதன்மையான தேவைகள் என்றும் அவற்றை அடைவதே உடனடியான நோக்கம் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
  3. பெண்கள் பற்றிய பார்வை. இன்னொரு ஷா பானு நம் சமூகத்தில் தோன்றக்கூடாது என்பதில் இன்றைய முஸ்லிம்கள் தெளிவுடன் இருக்கிறார்கள். முஸ்லிம் பெண்களிடையிலும் அவர்களுடைய உரிமைகள் குறித்த விழிப்புணர்வு இருக்கிறது. புர்காவை அவர்கள்மீது திணிப்பது இன்று கடினம். அவ்வாறு திணிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள் என்றாலும் அவர்களுடைய எண்ணிக்கை குறைந்து வருகிறது. நான் ஒரு முஸ்லிம், இது என் அடையாளம் என்று அறிவித்து புர்காவைத் தேர்ந்தெடுக்கிறார்கள் சிலர். தங்களை வெளிப்படுத்திக்கொள்ள அவர்கள் இன்று அஞ்சுவதில்லை. ஆடைகள் தொடங்கி வேலை வாய்ப்பு, திருமணம் என்று பலவற்றை அவர்கள் சுதந்தரமாகத் தேர்வு செய்கிறார்கள்.
  4. பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் திறன். நமது எதிர்காலம் எப்படி அமையவேண்டும் என்பது பற்றிய பார்வை அவர்களிடம் இருக்கிறது. கடந்த காலத் தவறுகளுக்கு அவர்கள் பொறுப்பேற்றுக்கொள்கிறார்கள். லட்சியத்தை நிறைவேற்றுவதற்கு தயாராக இருக்கிறார்கள்.
(ஹசன் சுரூரின் புத்தகம் குறித்த முந்தைய பதிவுகளின் தொடர்ச்சி இது).

No comments: