May 3, 2014

வரலாறும் கற்பனையும்

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு படித்த முதல் நாவல், கென் ஃபோலேத் (Ken Follett) எழுதிய Winter of the World. மொத்தம் மூன்று பாகங்களைக் கொண்ட trilogy வரிசையில் இது இரண்டாவது. முதல் நாவல் முதல் உலகப் போர் பற்றியது. அதை இன்னமும் படிக்கவில்லை. இரண்டாவது நாவலான விண்டர், இரண்டாம் உலகப் போர் பற்றியது. பனிப் போர் பற்றிய மூன்றாவது நாவலை கென் ஃபோலேத் எழுதிக்கொண்டிருக்கிறார். மின் புத்தக வடிவில் நான் படித்த முதல் நாவலும் இதுவே.

ஹிட்லர், ஸ்டாலின், சர்ச்சில், ஃபிராங்கோ, ரூஸ்வெல்ட் என்று பல நிஜ மனிதர்களுடன் கற்பனை மனிதர்களும் இந்நாவலில் இடம்பெறுகிறார்கள்.  அவர்களுடன் உறையாடவும் செய்கிறார்கள். ரீச்ஸ்டாக் தீப்பற்றி எரிவதையும் ஹிட்லர் அதைப் பார்வையிடுவதையும் ஓர் இளைஞன் அருகில் இருந்து கவனிக்கிறான். ஒருபால் உறவில் ஆர்வம் கொண்ட ஒரு வசதியான ஹோட்டல் உரிமையாளர் நாஜிகளால் கைது செய்யப்படுகிறார். அவர்மீது வெறிநாய்கள் ஏவிவிடப்படுகின்றன. அவரை மிரட்டி அவரிடம் இருந்து எழுதிப் பெற்று அந்த ஹோட்டலை ஒரு நாஜி வீரன் கைப்பற்றிக்கொள்கிறான்.

ஒரு முற்போக்கு ஜெர்மன் பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் தன் மகளை ஒரு நாள் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்கிறாள். பொழுது போகாமல் அந்தச் சிறுமி அம்மாவின் டைப்ரைட்டரோடு விளையாடிக்கொண்டிருக்கிறாள். மிஷின் பழுதடைந்துவிடுகிறது. ஐயோ அம்மா திட்டுவாளே என்று அவள் அஞ்சும்போதே நாஜிப் படை உள்ளே நுழைந்து டைப்ரைட்டரைப் பிடுங்கி மாடியில் இருந்து வீசுகிறது. அதெப்படி ஃப்யூரரை விமரிசித்து எழுதலாம்? போர் தொடங்கிய சில ஆண்டுகளில் இந்தச் சிறுமி ஒரு நர்ஸாக மாறுகிறாள். நாஜிகளின் ரகசிய மருத்துவமனை ஒன்றைக் கண்டுபிடிக்கிறாள். பொருளாதார மேம்பாட்டுக்கு எந்த வகையிலும் பயன்படாத உடல் ஊனமுற்ற குழந்தைகள் இங்கு கொல்லப்படுவதைக் கண்டு அதிர்கிறாள்.

ஹிட்லரை அகற்றுவதற்காக சோவியத் யூனியனுக்கு இவள் உதவுகிறாள். 1945ல் செம்படைகள் பெர்லினைக் கைப்பற்றுகின்றன. இனி வாழ்க்கை மாறிவிடும் என்று அவள் கனவு காணும்போது செம்படை வீரர்கள் சிலர் இவளைப் பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். ஒரு படையிடம் இருந்து தப்பி இன்னொன்றிடம் ஜெர்மனி சிக்கிக்கொண்டுவிட்டதோ என்று அஞ்சுகிறாள். பலாத்காரம் செய்தவர்களின் குழந்தையைப் பெற்றெடுக்கத்தான் வேண்டுமா என்று யோசிக்கிறாள். அவமானத்தின் சின்னமாக அல்லவா அந்தக் குழந்தை வளரும் என்று தயங்குகிறாள். பிறகு புதிய நம்பிக்கையுடன் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள்.

ஆனால் அப்போதும் உலகம் மாறிவிடவில்லை. அந்தக் குழந்தைகள் அமைதியான உலகில் வாழப்போவதில்லை. ஒரு போரின் முடிவு இன்னொரு போரின் தொடக்கமாக மாறிப்போனது. முதல் உலகப் போரின் முடிவில் இரண்டாம் உலகப் போர் பிறந்ததைப் போல் இரண்டாம் உலகப் போரின் முடிவில் பனிப்போர் முளைவிட்டுப் பிறக்கிறது.

நாவலில் இடம்பெறும் ஏராளமான கதைகள் மற்றும் கிளைக் கதைகளில் ஒன்றுதான் மேலே விவரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், ஜெர்மனி, சோவியத் யூனியன் என்று பல நாடுகளைச் சேர்ந்த பல மனிதர்களை இந்த நாவல் படம் பிடிக்கிறது. திரைப்படம் எடுப்பதற்கு வாகான நாவல். விமானி, போர் வீரன், நர்ஸ், அரசியல்வாதி, விஞ்ஞானி, உளவாளி, ஆம்புலன்ஸ் டிரைவர் என்று போரோடு தொடர்புடைய, போரால் உருமாற்றப்பட்ட பலரும் இதில் இடம்பெறுகிறார்கள்.

புதினமல்லாத ஒரு புத்தகத்துக்கு தேவைப்படும் உழைப்பையும் ஆய்வையும் இந்த நாவலுக்கும் ஆசிரியர் செலவிட்டிருப்பதைப் பார்க்கமுடிகிறது. நிஜ வரலாற்றுப் பின்னணியை எடுத்துக்கொண்டு அதில் கற்பனை மனிதர்களை உலவவிட்டிருக்கிறார். சாமானிய மக்கள் போரால் எப்படிச் சீரழிக்கப்படுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். ஒரு சிலர் எடுக்கும் ராணுவ அரசியல் முடிவுகள் எப்படி மக்களின் வாழ்வைப் புரட்டிப்போடுகின்றன என்பதை விவரிக்கிறார்.

யூத வதை முகாம்கள், சித்திரவதைகள் பற்றிய காட்சிகள் குறைவாக உள்ளன. பர்ல் துறைமுகத் தாக்குதல் பிற பகுதிகளைக் காட்டிலும் விலாவரியாக இடம்பெற்றுள்ளது. ஸ்டாலின் கிட்டத்தட்ட இன்னொரு ஹிட்லராக இதில் மாற்றப்பட்டிருக்கிறார். (கென் ஃபோலேத் ஓர் இடதுசாரி என்று எங்கோ படித்த நினைவு!). வரலாறு மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஜெர்மனி ஏன் போரைத் தொடங்கியது? அல்லது, ஜெர்மனிதான் தொடங்கியதா? நாஜிக்களின் எழுச்சிக்குக் காரணம் என்ன? போரை முடிவுக்குக் கொண்டு வந்ததில் சோவியத் யூனியனின் பங்களிப்பு என்ன? அமெரிக்காவின் பாத்திரத்தை எப்படி மதிப்பிடுவது? ஜப்பான்மீது அமெரிக்கா அணுகுண்டு வீச வேண்டியதன் அவசியம் என்ன? இரண்டாம் உலகப் போர் உலகளவில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தின? இந்தக் கேள்விகளுக்கு விடை தேடும்போது இரண்டாம் உலகப் போர் பற்றிய வரலாறு நாம் இதுவரை அறிந்து வைத்துள்ள பாப்புலர் வடிவத்துக்கு முற்றிலும் முரணாக புதிதாக உருபெறுவதை நம்மால் உணரமுடியும்.

வரலாற்றைப் புரிந்துகொள்வதற்குத் தேவை சரியான விடைகள் அல்ல. சரியான கேள்விகள். இந்தப் புத்தகம் அத்தகைய கேள்விகளை எழுப்பும் என்று எதிர்பார்க்கமுடியாதுதான். வரலாற்று நூல்களே தடம் மாறும்போது ஒரு வரலாற்று நாவலில் இருந்து இதையெல்லாம் எதிர்பார்ப்பது வீண்தான். ஆனால் இந்தக் குறைகளையெல்லாம்மீறி இதனை என்னால் முழுக்க வாசிக்கமுடிந்ததற்குக் காரணம் பரபரப்பான நடையில் விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள்தாம். அந்த ஒரு காரணத்துக்காகவே, முதல் உலகப் போர் பற்றிய முந்தைய புத்தகத்தையும்கூட வாசிப்பேன் என்றுதான் நினைக்கிறேன்.

ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்ளவேண்டும். சுவாரஸ்யான முறையில் இப்படி எழுதும்போது கதையோடும் கற்பனையோடும் சேர்த்து கொஞ்சமாகவேனும் வரலாற்றைச் சிலருக்குக் கடத்திச்செல்வது சாத்தியப்படுகிறது. அந்த ஒரு காரணத்துக்காகவே இதைச் சிபாரிசு செய்யலாம்.

1 comment:

Anonymous said...

I have read both muthalam ulaga por and Irandam ulaga por written by you. Both are simple to understand the history behind in the wars. I appreciated your work. After I have read the books, I felt like you projected Stalin as a hero. This is entirely my view.I have recently read about the ukrain's history. Stalin's policies on ukrain made me to think that he was an another Hitler at that time. You also mentioned in your book about stalin that many people said that stalin was an another hitler. What is your opinion about stalin?