August 12, 2014

இலங்கையின் கதை


மந்த் சுப்ரமணியம் எழுதிய This Divided Island வெளியீட்டு விழா நேற்று எக்ஸ்பிரஸ் அவென்யூவில் உள்ள ஸ்டார் மார்க்ஸ் புத்தக விற்பனை  அரங்கில் நடைபெற்றது.  புத்தகத்தை வெளியிட்டு நூலாசிரியருடன் கலந்துரையாடியவர் டாக்டர் நவீன் ஜெயகுமார் என்பவர்.

முதல் சில அத்தியாயங்களை மட்டுமே இதுவரை படித்திருக்கிறேன் என்பதால் இப்போதே இந்தப் புத்தகம் பற்றி எதுவும் சொல்லமுடியவில்லை. சுருக்கமாக அறிமுகம் செய்யவேண்டுமானால் இது ஒரு பயண நூல் வடிவில் காட்சியளிக்கும் சமகால வரலாற்றுச் சித்திரம். போருக்குப் பிந்தைய இலங்கையின் சமூக வாழ்க்கையைப் பதிவு செய்யும் நோக்கில் பல தரப்பட்ட மக்களிடம் பேசி தன் அனுபவங்களின் துணையுடன் இந்தப் புத்தகத்தை சமந்த் சுப்ரமணியம் உருவாக்கியிருக்கிறார். இந்த வகை புத்தகங்களின் பலம், பலவீனம் இரண்டும் இதிலும் இருக்கும் என்று நம்பலாம்.

உலக வரைபடத்தில் இலங்கை எங்கிருக்கிறது என்று ஆச்சரியப்பட்டுத் தேடும் அமெரிக்க வாசகர்கள் தொடங்கி உள்ளூர் செய்திபோல் அப்போதைக்கு அப்போதே போர் நிகழ்வுகளைத் தெரிந்துகொண்டு துடிதுடித்தத் தமிழக வாசகர்கள் வரை அனைவருக்காகவும் பொதுவாக எழுதப்பட்ட புத்தகம் இது. எல்லாளன், மகாவம்சம், பூமாலை நடவடிக்கை, பிரேமதாசா ஒப்பந்தம், ராகவன், கருணா ஆகிய பெயர்களை முதல்முறையாகக் கேள்விப்படுபவர்களும் இந்தப் புத்தகத்தை வாசிக்கக்கூடும் என்பதால் அனைவரையும், அனைத்தையும் சற்றே விரிவாகத் அடிப்படையிலிருந்து அறிமுகப்படுத்தியாகவேண்டிய அவசியம் நூலாசிரியருக்கு இருப்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. 

நடந்துமுடிந்த போருக்கும் தொடரும் சீரழிவுக்கும் விடுதலைப் புலிகள், இலங்கை அரசாங்கம் இரண்டுமே காரணம் என்பதே சமந்த் சுப்ரமணியம் வந்தடைந்துள்ள முடிவு என்பது அவருடைய உரையாடல்மூலம் தெரிய வந்தது. தமிழர்கள், பௌத்தர்கள், முஸ்லிம்கள், சிங்களர்கள் என்று பலரையும் சந்தித்து அவர்கள் தரப்பு வாதத்தை எனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளேன் என்றார். பௌத்தம், இஸ்லாம், இந்து மதம், கிறிஸ்தவம் என்று அனைத்து மதங்களையும் சார்ந்த வலதுசாரி அடிப்படைவாதிகள் ஒன்றுபோலவே சிந்திக்கிறார்கள்  என்றார். சகோதர இயக்கங்களை அழித்தது தொடங்கி மசூதிக்குள் புகுந்து இஸ்லாமியர்களைக் கொன்றொழித்தது வரையிலான புலிகளின் நடவடிக்கைகளை அவர் சந்தித்த தமிழர்கள் சிலருமேகூடக் கண்டித்திருக்கிறார்கள். சிங்கள இனவெறியின் கோரமுகத்தைப் பலர் உருக்கத்துடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.


ய்வுபெற்ற ராணுவ மேஜர் சி.என். ஆனந்த் என்பவரைச் சந்தித்தேன். இலங்கை சென்ற இந்திய அமைதிப் படையில் இவரும் இருந்திருக்கிறார். அப்படியானால் உங்களிடம் நிறைய பேசவேண்டுமே என்று சொன்னதும், இதோ என் அனுபவங்கள் என்று சொல்லி அச்சிட்ட இரண்டரை பக்கத் தாளைக் கொடுத்தார். இலங்கை வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும்  இன்றுவரை சர்ச்சைக்குரியதாக நீடிக்கும் ஒரு காலகட்டத்தை நினைவுகூற இரண்டரை பக்கங்கள்தானா? பிறகு நேரில் பேசுவோம் என்று சொன்னார். வீட்டுக்கு வந்து படித்துப் பார்த்தேன். கிட்டத்தட்ட இரண்டு பக்கங்கள் இலங்கை யானைகள் பற்றி விரிவாகவும் கானகம் பற்றி பொதுவாகவும் எழுதியிருந்தார். நிச்சயம் இன்னொருமுறை அவரைச் சந்திக்கவேண்டும்.

என் மகன் கிருஷ்ணாவும் ஒரு எழுத்தாளர்தான் என்றபடி அவருடைய புத்தகத்தைத் தேடியயெடுத்துக் கொண்டுவந்தார். Unreal Elections by C.S. Krishna,Karthik Laxman. அன்ரியல் டைம்ஸ் என்னும் பெயரில் இவர் வெளியிடும் ட்வீட்டுகள் பிரபலமானவை.

விடுதலைப் புலிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டேன். தயக்கமேயில்லாமல் பதிலளித்தார்.  'எனக்கு அவர்கள்மீது எப்போதுமே அனுதாபம் உண்டு.'

மந்த் சுப்ரமணியத்தின் This Divided Island புத்தகத்தின் தமிழாக்கம் கிழக்கு பதிப்பக வெளியீடாக வரவிருக்கிறது.

நூல் வெளியீட்டு நிகழ்ச்சி, கலந்துரையாடல், கேள்வி பதில் பகுதி ஆகியவற்றின் ஒலி வடிவம். (நன்றி : சத்யநாராயணன்)

1 comment:

Anonymous said...

must see this video

http://www.jeyamohan.in/?p=61011