September 15, 2014

புதிய தொழிலாளி : ஓர் அறிமுகம்

உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்! என்னும் முழக்கத்துடன் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் (பு.ஜ.தொ.மு) புதிய மாத இதழ் 'புதிய தொழிலாளி' இன்று வெளிவந்துள்ளது.  புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் வரிசையில் மற்றொரு மார்க்சிய லெனினிய அரசியல் ஏடு. பிரத்தியேகமாகத் தொழிலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பதினாறு பக்க இதழ் எளிய மொழியில் தொழிற்சங்க நடவடிக்கைகள், போராட்டங்கள் பற்றிய  செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்பதூர் அருகே அமைந்துள்ள GSH (Gestamp Sungwoo Hitech) என்னும் தென்கொரிய பன்னாட்டு நிறுவனத்தின் உரிமை மறுப்பு நடவடிக்கைகளை எதிர்த்து தொழிலாளர்கள் திரண்டு நடத்திய போராட்டத்தையும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற பதைபதைக்க வைக்கும் நிகழ்வுகளையும் படித்துப் பாருங்கள். ஏன் புஜதொமு போன்ற ஓர் இயக்கமும் ஏன் இப்படியொரு இதழும் நமக்கெல்லாம் தேவை என்பது புரிய வரும்.
  • ஒரு தொழிலாளிக்கு அவருடைய பணி சார்ந்து என்னென்ன உரிமைகள் உள்ளன?
  • ஒரு நிறுவனம் தன்னிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விரோதமாகச் செயல்படும்போது அவர்கள் அதனை எப்படி எதிர்கொள்ளவேண்டும்?
  • அனுமதிக்கப்பட வேலை நேரம் போக அதிகம் வேலை செய்யச் சொல்லி நிர்வாகம் நிர்பந்தித்தால் என்ன செய்வது? ஊதிய உயர்வு தர மறுத்தால், பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் எப்படிச் சமாளிப்பது?
  • பலம் வாய்ந்த ஒரு நிறுவனத்தைச் சாமானியத் தொழிலாளர்களால் எதிர்கொண்டு வெல்லமுடியுமா?
  • சாதி, மதம், அரசியல் சார்பு என்று பலவாறாகப் பிரிந்திருக்கும் தொழிலாளர்களால் ஒரே அணியாகத் திரளமுடியுமா? ஒரே குறிக்கோளோடு போராடமுடியுமா? ஆம் எனில் எப்படி? 
  • தொழிற்சங்கம் எப்படிச் செயல்படுகிறது? அதன் நோக்கம் என்ன?
  • வஞ்சிக்கப்படும் தொழிலாளர்கள் சட்ட உதவியும் ஆலோசனையும் பெறுவது சாத்தியமா?
ஒவ்வொரு தொழிலாளருக்கும் தோன்றும் இத்தகைய கேள்விகளை புதிய தொழிலாளி எதிர்கொண்டு விடையளிக்கும் என்றும் அவர்களுக்குப் பக்கபலமாக இருந்து, அரவணைத்து, அணி திரட்டி ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்ளும் என்றும் நம்புகிறேன்.

தொழிற்சங்கப் போராட்ட அனுபவங்கள்; போராட்டங்களில் கலந்துகொண்ட தொழிலாளர்களின் அனுபவங்கள்; இவற்றிலிருந்து திரட்டப்பட்ட படிப்பினைகள் ஆகியவற்றை இந்தப் புதிய இதழ் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன்.

புதிய தொழிலாளி ஆசிரியர் குழுவுக்கு வாழ்த்துகள்!

0
இதழ் பெறுவதற்கு : அ. முகுந்தன், 110, 2வது மாடி, மாநகராட்சி வணிக வளாகம், 63, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை 24. தொடர்புக்கு : 94448 34519. மின்னஞ்சல் : puthiyathozhilali@gmail.com

No comments: