September 26, 2014

ஓர் அறியப்படாத இந்தியரின் இங்கிலாந்து பயணம்

நீரத் சவுத்ரி மிகச் சரியாகத் தன்னை ’ஓர் அறியப்படாத இந்தியர்’ என்றே அழைத்துக்கொண்டார். அதே பெயரைத் தலைப்பாக வைத்து அவர் 1951ல் எழுதிய சுயசரிதை (An Autobiography of an Unknown Indian) பரவலான கவனத்தையும் தீவிர எதிர்ப்பையும் ஒருசேர ஈர்த்தது. இதன் தொடர்ச்சியாக இன்னொரு நூலையும் (Thy Hand, Great Anarch!) 1981ல் அவர் வெளியிட்டார். நான் முதலில் வாசித்தது அவருடைய அதிகம் அறியப்படாத புத்தகமான A Passage to England. 1955ம் ஆண்டு லண்டன் பிபிசி நீரத் சவுத்ரியை வரவேற்று, எட்டு வாரங்கள் தங்க வைத்து, உரைகள் ஆற்றுமாறு கேட்டுக்கொண்டது. நீரத் சவுத்ரி தனது அனுபவங்களைத் தொகுத்து இந்தப் புத்தகத்தைக் கொண்டுவந்தார்.

பிறந்தது வங்காளத்தில் என்றாலும் மனத்தளவில் நீரத் சவுத்ரி ஒரு லண்டன்வாசி. இங்கிலாந்துமீது மட்டுமல்ல இங்கிலாந்தின் காலனியாதிக்கத்தின்மீதும் அவருக்கு மரியாதை இருந்தது. அந்த மரியாதை இந்தப் புத்தகத்திலும் பக்கத்துக்குப் பக்கம் பிரதிபலிக்கிறது. ஒரு ஏஞ்சலைப் போல் எழுதுகிறார் என்று தி கார்டியன் வியந்து பாராட்டியிருந்தாலும் இப்போது வாசிக்கும்போது சவுத்ரியின் நடையை அந்த அளவுக்கு ரசிக்கமுடியுமா என்று தெரியவில்லை. ஒருவேளை நடையை ரசிக்கமுடிந்தாலும் உள்ளடக்கத்தை ரசிப்பது சாத்தியமா?

இங்கிலாந்தில் ஒரு நலன்புரி அரசு இயங்கி வருகிறது என்று கேள்விப்பட்டிருந்தாலும் அதெல்லாம் வெறுமனே மிகைப்படுத்தப்பட்ட பிரசாரம் என்றுதான் நீரத் சவுத்ரி நினைத்திருந்தாராம். ஆனால் அங்கு சென்றபிறகுதான் இதெல்லாம் பிரசாரம் அல்ல, நூற்றுக்கு நூறு உண்மை என்பதை உணர்ந்திருக்கிறார். பொதுவாக இரு வழிகளில் நலன்புரி அரசு இயங்கும் என்கிறார் சவுத்ரி. ஒன்று, மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கு அரசே முன்வந்து உதவிகள் புரியும் அமைப்பு. இரண்டாவது அரசின் உதவியை நாடாமல் மக்களே தங்கள் வாழ்நிலையைத் தாங்களே உயர்த்திக்கொள்ளும் அமைப்பு. இங்கிலாந்தில் இந்த இரு அமைப்பு முறைகளும் வெற்றிகரமாக இயங்கிவருகின்றன என்று பூரித்து எழுதுகிறார் நீரத் சவுத்ரி.

நீரத் சவுத்ரி இங்கிலாந்து கிளம்பப்போகிறார் என்று தெரிந்ததுமே அவருடைய இந்திய நண்பர் ஒருவர் அறிவுறுத்தி அனுப்பியிருக்கிறார் : ’இங்கிலாந்திலும் சேரிப்பகுதிகள் உள்ளன, அவற்றையும் சென்று பாருங்கள். அப்போதாவது உங்கள் ஆங்கில மோகம் தெளிவடைகிறதா என்று பார்ப்போம்’. ஆனால் பாவம், அந்த நண்பரின் திட்டம் ஒரே பத்தியில் தோல்வியடைந்துவிட்டது. பிர்மிங்ஹாம், பிரிஸ்டால் என்று சில சேரிப்பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டிருக்கிறார் சவுத்ரி. ஆச்சரியம்! சேரியா அது? இந்தியாவில் ஒரு செழிப்பான பகுதியில் உள்ள ஒரு செல்வந்தரின் மாளிகையைக் காட்டிலும் மேலான ஓர் இருப்பிடத்தில் அல்லவா பிரிட்டிஷ் தொழிலாளர்கள் வசித்துவருகிறார்கள்? புது டெல்லி சொகுசு மாளிகைகளைக் காட்டிலும் சொகுசான குடியிருப்புகளை அல்லவா இங்கிலாந்து அதன் தொழிலாளர்களுக்காக உருவாக்கிக் கொடுத்திருக்கிறது?

அப்படியே கொல்கத்தா, டெல்லி சேரிப்பகுதிகள் நீரத் சவுத்ரியின் கண்முன் விரிகின்றன. இந்திய அழுக்கும் அசிங்கமும் அவரை இம்சிக்கின்றன. ஒருமுறை ரயிலில் சென்றுகொண்டிருந்தபோது நாற்றமடிக்கும் போர்வையால் (மட்டும்) தன் உடலை மறைத்துக்கொண்டு ஒரு கிராமத்து மனிதன் வந்து தன் பக்கத்தில் அமர்ந்ததை நினைத்துப் பார்க்கிறார். நினைக்கும்போதே ட்யூலிப் மலர்களின் வாசனையை மீறி நாசித் துவாரங்களில் இந்திய ஏழைமையின் வாசம் நிறைந்து இம்சிக்கிறது. இங்கிலாந்து கால்நடைகளைக் காட்டிலும் கீழான நிலையில்தான் இந்தியக் கிராமப்புற கைவினைக் கலைஞர்களும் விவசாயிகளும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்பதை அவர் உணர்கிறார். பேருந்துகளிலும் பொதுவிடங்களிலும் அநாகரிகமாக நடந்துகொள்ளும் இந்தியர்களை, அசுத்தமாக வலம் வரும் இந்தியர்களை, சகலவிதமான வியாதிகளையும் சுமந்துகொண்டு வாழும் இந்தியர்களை அவர் தன் மனக்கண்ணில் தரிசிக்கிறார். பிறகு, இருக்கவே இருக்கிறார்கள் அதிர்ஷ்டம் கெட்ட தொழுநோயாளிகள்! இவர்கள் இல்லாத இடமே இல்லையா? மெய் வருத்தத்துடன் நீரத் சவுத்ரி கலங்குகிறார். எப்படி என்று கவனியுங்கள். ஒவ்வொரு நாளும் இப்படிப்பட்ட மனிதர்களைக் காணும்படி, அவர்களோடு சேர்ந்து வாழும்படி நிர்பந்திக்கப்பட்ட இந்த வாழ்க்கையை எப்படி அழைப்பேன்? இப்படி தினம் தினம் வாழ்ந்தால் எனக்கு மனோ வியாதி வந்துவிடாதா?

ஆனால் இங்கிலாந்து? பொதுவிடங்களில் அலங்கோலமாக யாரும் காட்சியளிப்பதில்லை. முகஞ்சுளிக்க வைக்கும் நாற்றம் இல்லை. இந்தியாவில் பஞ்சாப் குழந்தைகளைத் தவிர எல்லா மாநிலக் குழந்தைகளும் வறுமையில் வாடுகின்றன (ஆம், இது நீரத் சவுத்ரியின் குறிப்புதான்). ஆனால் இங்கிலாந்தில் ஒரே ஒரு குழந்தையிடம்கூட ஏழைமையின் நிழல்கூடக் காணப்படவில்லை. அப்படியா, மருந்துக்கு ஒரு குழந்தைகூடவா அங்கே அழுக்காகயில்லை என்று நீங்கள் கேட்பதாகயிருந்தால் அல்லது சந்தேகப்படுவதாக இருந்தால் இதோ உங்களுக்காக ஒரு நேர்மையான குறிப்பு. பிர்மிங்ஹாமில் ஓரிடத்தில் குறைவான உடைகளை அணிந்திருந்த, காலில் செருப்பில்லாத ஒரு குழந்தையை சவுத்ரி கண்டிருக்கிறார். திரும்பித் திரும்பி அந்தக் குழந்தையைப் பார்த்தபடியே நடை பயின்றிருக்கிறார். ஏன் என்னை இந்த மனிதர் இப்படிப் பார்க்கிறார் என்று புரியாமல் அந்தக் குழந்தை அவரைப் பார்த்து சிரித்திருக்கிறது. இது மட்டுமே அவர் கண்ட உச்சபட்ச இங்கிலாந்து குழந்தையின் ஏழைமை.

இங்கிலாந்தின் பளபளப்பைப் பார்த்து இந்தியர்கள் ஒரு தவறான முடிவுக்கு வந்துவிட வாய்ப்பிருக்கிறது. எல்லா இடங்களிலும் உள்ளதைப்போல் இங்கும் சிலர் நல்ல நிலையில் இருக்கின்றனர் போலும் என்று அவர்கள் நினைக்கக்கூடும். ஆனால் உண்மையில் இங்கிலாந்தில் கிட்டத்தட்ட தேவை என்பதே மறைந்து, ஏழை, பணக்காரன் வேறுபாடு இன்றி மக்கள் அனைவரும் சம வளம் பெற்று வாழ்கின்றனர் என்கிறார் நீரத் சவுத்ரி.

இங்கிலாந்தின் மொழி, இங்கிலாந்தின் அரசியல் (அதில் அவருக்குச் சில அபிப்பிராய பேதங்கள் உள்ளனவாம்), இங்கிலாந்தின் வரலாறு, இங்கிலாந்தின் கட்டடக்கலை, இங்கிலாந்தின் ஷேக்ஸ்பியர், இங்கிலாந்தின் சுத்தம், சுகாதாரம், பண்பாடு இத்யாதி இத்யாதி அனைத்தும் நீரத் சவுத்ரியை மீளா மயக்கத்தில் தள்ளிவிடுகின்றன. அந்த மயக்கத்தில் இருந்து அவர் இறுதிவரை விடுபடவேயில்லை. எட்டு வார இங்கிலாந்து பயணத்தை வைத்து எது குறித்தும் ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்துவிடமுடியாதுதான் என்றாலும்... என்று தொடங்கிதான் நீரத் சவுத்ரி ஒவ்வொரு தீர்மானமான முடிவையும் எடுத்துவைக்கிறார். இந்த முடிவு ஒவ்வொன்றிலும் அந்த மயக்கத்தின் சாயல் தென்படுகிறது. தன் வாழ்நாளின் இறுதிவரை (நூறு சொச்ச வயதை நெருங்கியபோதும் அவர் எழுதிக்கொண்டுதான் இருந்தார்!) அவர் இந்த மயக்கத்திலிருந்த விடுபடவேயில்லை.

0

1 comment:

Anonymous said...

வெள்ளைர்களிடம் அவருக்கு இருந்த ஒரே கோபம் அவர்கள் இந்தியாவைவிட்டு ஏன் போனார்கள் என்பதே! இங்கிலாந்து பயணம் மட்டுமின்றி தம் வாழ்வின் பிற்பகுதியை அங்குதான் வாழ்ந்து மனறந்தார். அங்கே வாழ்ந்தபோதும் அவர்களே கைவிட்டுவிட்ட கோட்டு, சூட்டு, தொப்பி, டை என்ற பழையகால உடை மரபுகளைத் தீவிரமாகப் பின்பற்றிய கிறுக்கராக இருந்தார். அங்கே இந்தத் தலைமுறையில் பழைய மரபுகள், பழக்கவழக்கங்கள் மறைந்துவருகின்றன என்ற மனக்குறை அவருக்கு இருந்தது.

நிராத் சௌத்ரி சிலாகிக்கப்பட்ட காலம் முடிந்துவிட்டது. இனிவரும் தலைமுறையில் அவர் அருங்காட்ணியத்தில் வைக்கப்ட்டுள்ள ஒரு ஃபாஸிலலுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் மட்டுமே கொடுப்பார்களே (அதாவது இப்படியும் சிலர் வாழ்ந்தார்கள்; அவர்களுக்கு உதாரணம் நிராத்) தவிர யாரும் படித்து ரசிக்கப்போவதில்லை.

சரவணன்