December 17, 2014

கிராமப்புற இந்தியாவை ஆவணப்படுத்தும் முயற்சி

பி. சாய்நாத் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இன்று மாலை கலந்துகொண்டேன். கிராமப்புற மக்களின் வாழ்வை ஓர் இணையத்தளத்தில் (People's Archive of Rural India - PARI) ஆவணப்படுத்தும் தனது விரிவான திட்டத்தை அறிமுகப்படுத்தி உரையாற்றினார் சாய்நாத். பாரி என்னும் இந்த இணையத்தளம் வரும் 20ம் தேதி முதல் இயங்கத் தொடங்கும்.

ஆடியோ, வீடியோ, எழுத்துகள் மூன்றையும் பயன்படுத்தி ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கை முறையை பதிவு செய்வதுதான் சாய்நாத்தின் திட்டம். இந்தியாவின் பெரும்பகுதி கிராமப்புறமாக இருந்தபோதும் நாம் வாசிக்கும் செய்தித்தாள்களும் பத்திரிகைகளும் அதனைக் கண்டுகொள்வதில்லை என்பதால் இந்த முயற்சியைத் தொடங்கினேன் என்றார் பி. சாய்நாத்.

கிட்டத்தட்ட விக்கிபீடியா போன்ற இந்தத் தளத்துக்கான படைப்புகளை யார் வேண்டுமானாலும் அனுப்பிவைக்கலாம். தகுந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு இணைக்கப்படும். லாபநோக்கற்ற முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தத் தளம் தி கவுண்டர் மீடியா டிரஸ்ட் என்னும் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட அலுவலகம் புது டெல்லியில் இருக்கிறது. பணிகள் மும்பையில் இருந்து மேற்கொள்ளப்படும்.

'83.3 கோடி மக்களும், 780 வழக்கு மொழிகளும், பல்வகைக் கலாசாரங்களும், பல்வேறு தரப்பட்ட தொழில்களும் நிறைந்த நாடு இது. ஒரே வலைத்தளத்தில் இவை எல்லாவற்றையும் ஒன்றுதிரட்ட பாரி முனைகிறது.'  என்கிறது அறிமுகக் குறிப்பு. 'கிராமப்புற இந்தியாவை முழுவதுமாகப் படம் பிடித்துவிட முடியாது என்றாலும், மாபெரும் உண்மைகளின் சிறு சிறு பகுதிகளை பாரி உள்ளடக்கியிருக்கிறது. மிகப் பெரிய அளவிலான பொதுமக்களின் ஒத்துழைப்பு கிடைத்துவிட்டால், பாரி தன் பணிகளின் வீச்சை மேலும் விரிவடையச் செய்துவிட முடியும்.'

பி. சாய்நாத் தி இந்துவில் எழுதிய பெரும்பாலான கட்டுரைகள் ஏழைகளையும் விவசாயிகளையும் கிராமப்புறப் பெண்களையும் மையப்படுத்தியே அமைந்திருந்தன. இந்தியாவின் இருள் படர்ந்த பகுதிகளில் கள ஆய்வு நடத்தி பல்வேறு பின்னணியைச் சேர்ந்த மக்களுடன் உரையாடி அவர்களுடைய வாழ்வையும் போராட்டத்தையும் நேரடியாகப் பதிவு செய்தவர் சாய்நாத். அவருடைய நீண்டகால பத்திரிகைத் துறை அனுபவம் இந்தத் தளத்தைச் செழுமைப்படுத்தும் என்று நம்பலாம். சாய்நாத்தின் பல உரைகள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன. அவருடைய புகழ்பெற்ற புத்தகம், Everyone Loves a Good Drought.

பாரி வெற்றி பெற வாழ்த்துகள்.

தொடர்பு கொள்ள : contact@ruralindiaonline.org

1 comment:

Anonymous said...

சாய்நாத் தாராளமயத்தை (இது மிகவும் அரைகுறையாக செய்யப்படும் நிலையில்) கண்ணை மூடிக்கொண்டு தாக்குவது அபத்தமாக இருக்கும் என்றாலும் அவர் கட்டுரைகள் பலவற்றை சுட்டிக்காட்டுவதும் உண்மைதான். பழைய தி இந்து கட்டுரை ஒன்றில் ஒரு ஆந்திர கிராமத்து விழாவில் 5 ரூபாய் கொடுத்துவிட்டு மேடையில் ஆடல் அழகிகளுடன் யார் வேண்டுமானாலும் ஆடிக்கொள்ளலாம் என அறிவிக்க, தலித் இளைஞர்கள் பணம் கொடுத்து ஆடும் வாய்ப்பு கேட்டவுடன் கலவரம் ஏற்பட்டது பற்றி விவரிக்கும் கட்டுரை சுவாரசியமாக இருக்கும். அந்த தலித் இளைஞர்கள் சிரித்துக்கொண்டே 'இது ஒரு முட்டாள்தனமான விவகாரம்,' என்று அவரிடம் விவரிப்பார்கள்.
சரவணன்