January 28, 2015

ஒரு தென் ஆப்பிரிக்க எழுத்தாளரின் கதை

சமீபத்தில் நடந்துமுடிந்த தி இந்து இலக்கிய விழாவில் (லிட் ஃபார் லைஃப்) டேமன் கால்கட் (Damon Galgut) என்னும் தென் ஆப்பிரிக்க எழுத்தாளரிடம் பிரத்தியேகமாக உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. ராஜ்தீப் சர்தேசாய், சிவபெருமான் புகழ் அமிஷ், சேத்தன் பகத் போன்றவர்களைப்  போட்டிப்போட்டுக்கொண்டு மொய்த்து,  கையெழுத்து வாங்கித் தீர்த்த பெரும்கூட்டம், அழுக்கு ஜீன்ஸ், காலர் அற்ற டிஷர்ட் அணிந்திருந்த, கூச்சத்துடன் ஒதுங்கி, ஒதுங்கி நின்ற அந்தத் தென் ஆப்பிரிக்கரைக் கண்டுகொள்ளாதது ஆச்சரியமூட்டவில்லை.

'பேசுவது சங்கடமாகவே இருக்கிறது. தனிமையில் அமர்ந்து எழுதுவதுதான் சுகமானது. ஒரு எழுத்தாளர் இப்படி இருப்பதுதானே இயல்பானதும்கூட?' என்று புன்னகைத்தார் கால்கட். ஆனால் அமர்வுகளின்போது தன் கருத்துகளை ஆணித்தரமாகவே அவர் எடுத்து வைத்தார். இந்தியா தனக்கு இன்னொரு வீடு என்றார். பலமுறை தொடர்ச்சியாக இந்தியா வந்து சென்றிருக்கிறார். கோவாவில் நீண்ட காலம்  தங்கியிருக்கிறார். 'சென்னையைப் பலமுறை கடந்து சென்றிருக்கிறேன். ஆனால் இவ்வளவு நேரம் இங்கே செலவிடுவது இதுவே முதல் முறை' என்றார்.

வாசிப்பின்மீது ஆர்வம் மட்டுமல்ல, நம்பிக்கையும் கொண்டிருக்கிறார் கால்கட். 'நாவல் வாசிப்பது உங்களை மேம்படுத்தும். புத்தகம் படிக்கும் ஒருவருக்கும் புத்தகம் படிக்காத ஒருவருக்கும் இடையிலான வேறுபாட்டை நீங்கள் சுலபமாகக் கண்டறிந்துவிடலாம். வாசிக்கும் பழக்கம் ஒருவருடைய குணாதிசயங்களை மாற்றியமைக்கிறது, அல்லது தீர்மானிக்கிறது என்று நினைக்கிறேன்.'

நாவல் மட்டும்தானா? அரசியலோ வரலாறோ வாசித்தால் ஒருவர் மாறமாட்டாரா? 'புதினத்தின் தாக்கமும் புதினமல்லாத எழுத்து வகையின் தாக்கமும் ஒன்றல்ல. கற்பனையின் ஆற்றல் தனித்தன்மை கொண்டது.  அது உங்களை விரிவுபடுத்தும். உங்களை யோசிக்க வைக்கும்.  உங்கள் பண்புகளை மாற்றும் தன்மை அதற்கு உண்டு. ஒருவகையில் உங்களை அது பிசைந்து உருவாக்குகிறது என்றுகூடச் சொல்லலாம். வரலாறோ அரசியலோ இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று எனக்குத் தோன்றவில்லை.'

ஓர் உதாரணத்தையும் சொன்னார். 'நெல்சன் மண்டேலாவுக்கும் ஜார்ஜ் புஷ்ஷுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை நீங்கள் யோசித்துப் பார்க்கலாம். மண்டேலாவுக்குப் படிக்கும் வழக்கம் இருந்தது. ஜார்ஜ் புஷ் ஏதேனும் படித்திருக்கிறாரா என்ன?'

பிறகு மண்டேலா பற்றிப் பேச்சு திரும்பியது. ஆட்சியில் அமர்வதற்கு முன்னால் மண்டேலா சாதித்ததையும் பொறுப்பேற்ற பிறகு அவரால் ஏன் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்யமுடியாமல் போனது என்பது பற்றியும் சிறிது நேரம் விவாதித்தோம். ட்ரூத் அண்ட் ரிகன்ஸைலேஷன் கமிஷன் எங்கே சறுக்கியது, ஏன் மண்டேலாவால் நீடித்த மாற்றத்தை ஏற்படுத்தமுடியவில்லை என்பதைப் பற்றிய விவாதங்கள் இப்போதும் அங்கே நடைபெற்றுவருகிறது என்றார். 'தென் ஆப்பிரிக்க இளைஞர்கள் இன்று மண்டேலாவைக் கடவுளாகக் காண்பதில்லை. அவருடைய குறைபாடுகளைக் குறிப்பிட்டுப் பேசுகிறார்கள், அவர் இன்னமும் நிறைய செய்திருக்கவேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.'

பெருமாள் முருகன் எதைப் பற்றி எழுதினார், ஏன் அவரை எதிர்க்கிறார்கள் என்றார். 'ஒரு நாவலை எதற்காகத்  தடை செய்யவேண்டும் என்று கோருகிறார்கள்? ஒரு கற்பனைப் படைப்பை எதற்காகத் தடை செய்யச் சொல்கிறார்கள்? இதை என்னால் ஏற்கவே முடியாது.'

சினுவா ஆச்சிபி, கூகி வா தியாங்கோ போன்றவர்களின் படைப்புகள் தமிழ் வாசகர்களுக்குப் பரிச்சயமானவை என்று நான் சொன்னபோது ஆச்சரியமடைந்தார்.தென் ஆப்பிரிக்காவில் இடதுசாரி சிந்தனைகள் வளர்ச்சி பெற்று வருவதாகச் சொன்னார். குறிப்பாக, படித்த இளைஞர்கள் மத்தியில் மார்க்சியம் பிரபலமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

ஈ.எம். ஃபோஸ்டர் மீது தனக்கு ஈர்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார். புதினம்தான் அவருடைய எழுத்துகளின் மையம் என்றபோதும் அரசியலும் வரலாறும் விரிவாகவே வாசித்திருக்கிறார் என்பதைக் கண்டுகொண்டேன். தீர்மானமான அரசியல் பார்வையும் அவரிடம் இருந்தது.

டேமன் காமட் எழுதிய In a Strange Room என்னும் நாவல் 2010ம் ஆண்டுக்கான புக்கர் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. நாவல், சிறுகதைகள், நாடகம் என்று அவருடைய பல புத்தகங்கள் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன.

வீட்டுக்கு வந்து நிதானமாக விக்கிபீடியாவில் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. ஆறு வயதானபோது அவருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடுமையாகப் பாதிக்கப்பட்டுப் பல ஆண்டுகளை மருத்துவமனையில் கழித்திருக்கிறார். அப்போது அவருக்குப் பல கதைகள் படித்துக் காட்டப்பட்டிருக்கின்றன. கேட்கக் கேட்க ஆர்வம் அதிகரித்திருக்கிறது. நோயும் வலியும் மறந்துவிட புதிய கற்பனை உலகுக்குள் நுழைந்திருக்கிறார். இன்றுவரை அவர் எழுதிக்கொண்டிருப்பதற்குக் காரணம் தொடக்ககால மருத்துவனை வாழ்க்கையும் புற்றுநோயும் தீராத அந்த வலியும்தான். தான் ஓர் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை அவர் வெளிப்படையாகவே சொல்லி வந்திருக்கிறார் என்பதையும் தெரிந்துகொண்டேன்.

துண்டுத் துண்டாக அவர் பகிர்ந்துகொண்ட கருத்துகள் அனைத்தும் இப்போது ஒன்று சேர்ந்து ஒரு சித்திரத்தை அளிப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது.

No comments: