March 3, 2015

நல்லவர் இயேசு கயவன் கிறிஸ்து

இயேசு நாதர் என்றொருவர் வாழ்ந்தாரா? உண்மையிலேயே போதனைகள் செய்தாரா? அற்புதங்கள் நிகழ்த்தினாரா? நோயுற்றவர்களைக் குணமாக்கினாரா? பாவங்களை மன்னித்தருளினாரா? அரசுக்கு எதிராகக் கலகக்குரல் எழுப்பினாரா? அவர் மனித குமாரனா அல்லது தேவ குமாரனா? அவருடைய வாழ்வை சாதாரணமானதா, அசாதாரணமானதா? இயேசு நாதரை ஒரு புனிதராகவும் மனிதராகவும் சித்தரித்து இதுவரை எழுதப்பட்டுள்ள புத்தகங்களின் எண்ணிக்கை பிரமிக்கத்தக்கவை. நாவல், வரலாற்று ஆய்வுகள் தொடங்கி மத விளக்கங்கள், தத்துவார்த்த விவாதங்கள் என்று பல தளங்களில் இயேசு நாதரின் வாழ்வும் போதனைகளும் பல மொழிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்போதும் பல புதிய புத்தகங்கள் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன.

பிலிப் புல்மேன் எழுதிய The Good Man Jesus and the Scoundrel Christ ஓர் அழகான கற்பனை கதை. மயக்கும் மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த நாவல் முதல் பார்வைக்கு குழந்தைகள் புத்தகம் போலவே தோற்றமளிக்க வல்லது. பைபிள் கதைகள் சில இதில் இடம்பெற்றுள்ளன. இயேசு நாதரின் பல வாழ்க்கைச் சம்பவங்கள் அப்படியே இடம்பெற்றுள்ளன. ஜோசப், மேரி, பிலாத்து, பீட்டர் என்று பல கதாபாத்திரங்கள் அப்படியே இடம்பெறுகின்றன. இயேசுவின் பல போதனைகளும்கூட கிட்டத்தட்ட அப்படியேதான் இதிலும் இடம்பெறுகின்றன. இருந்தாலும் பல அடிப்படை மாற்றங்களை பிலிப் புல்மேன் தன் நாவலில் நிகழ்த்தியுள்ளார். புதிய கோணங்களில் இயேசுவையும் அவர் சூழலையும் கற்பனை செய்திருக்கிறார். அழகிய நடையில் அவர் விவரித்துச் செல்லும் இயேசுவின் புதிய வாழ்க்கையை வாசிக்கும்போது இது ஏன் உண்மையாக இருந்திருக்கக்கூடாது என்னும் கேள்வி தோன்றுவதைத் தவிர்க்கமுடியவில்லை. இந்த மயக்கத்தை ஏற்படுத்தியதுதான் இந்த நாவலின் பெரும் பெற்றி.

*

கன்னி மேரிக்கு பெத்லஹேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. முதல் குழந்தை திடகாத்திரமாக,  நல்ல உடல் நலத்துடன் காணப்படுகிறது. அதற்கு இயேசு என்று பெயர் வைக்கிறார்கள். இரண்டாவது குழந்தை பூஞ்சையாக இருக்கிறது. அதற்கு வீட்டில் அழைக்க ஒரு பெயரும் பொதுவாக அழைக்க கிறிஸ்து என்னும் பெயரையும் வைக்கிறார்கள். ஒரு குழந்தை ஜோசப்புக்கு; இன்னொன்று எனக்கு என்று நினைத்துக்கொள்கிறார் மேரி. கிறிஸ்துவைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டு செல்லமாக வளர்க்கிறார். வலுவான இயேசுவுக்கு இந்த அளவுக்கு நேசம் தேவையில்லை அல்லவா?

இரு குழந்தைகளுமே இறை நம்பிக்கையுடன் வளர்கிறார்கள் என்றாலும் அவர்களிடம் ஓர் அடிப்படை வித்தியாசம் உண்டு. கிறிஸ்துவுக்கு மறை நூல்கள் கற்பதிலும் மத அறிஞர்களிடம், பாதிரியார்களிடம் உரையாடி அறிவை வளர்த்துக்கொள்வதிலும் ஆர்வம் அதிகம். இயேசுவிடம் இயல்பாகவே நல்ல சிந்தனை வளம் இருந்தது. மறை நூல்களிடம் அல்லாது மனிதர்களிடம் இருந்தும் உலகத்திடம் இருந்தும் கானகத்திடம் இருந்தும் அவர் கற்கத் தொடங்குகிறார்.

ஒரு கட்டத்தில் இயல்பாகவே இயேசு தன் குடும்பத்தைவிட்டுப் பிரிந்துவிடுகிறார். ஒரு வட்டத்துக்குள் அவரால் அடைந்து கிடக்கமுடியவில்லை. உலகிலுள்ள அனைவருமே என் தந்தை, தாய், சகோதரன்தான். தனிப்பட்ட உறவு எனக்கில்லை என்று அறிவித்துவிடுகிறார். தனக்குத் தெரிந்த உண்மைகளை, தனக்குக் கிடைத்த ஞானத்தை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்துடன் அவர் ஊர், ஊராகச் சுற்றித் திரிகிறார். அவர் பின்னால் ஒரு கூட்டம் திரளத் தொடங்குகிறது.

அவர் மட்டுமல்ல, அவரைப் போல் பலரும் அப்போது இப்படித்தான் உபதேசங்கள் நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். தங்களை இறைவனின் புதல்வர்கள் அல்லது தூதுர்கள் என்றுதான் இவர்கள் அத்தனை பேருமே அழைத்துக்கொண்டார்கள். இவர்களில் சிலருக்கு மட்டுமே ஓரளவுக்கு மக்கள் வரவேற்பு இருந்தது. இயேசு அவர்களில் ஒருவர்.

ஆனால் கிறிஸ்துவிடம் ஒரு விரிவான, புத்திசாலித்தனமான  திட்டம் இருந்தது.  இப்போதுள்ள சூழலில் மக்களின் அன்பையும் ஆதரவையும் திரட்டவேண்டுமானால் உபதேசங்கள் செய்தால் மட்டும் போதாது. சில அற்புதங்களையும் நிகழ்த்திக் காட்டவேண்டும். சில அசாத்தியமான சித்து வேலைகளைச் செய்து அவர்களை வசப்படுத்தவேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு உண்மையான, முழுமையான நம்பிக்கை ஏற்படும். இந்த நம்பிக்கையை ஒழுங்குபடுத்தித் திரட்டி எடுப்பதே நல்லது.

இதை இயேசுவிடமும் சொல்லிப் பார்த்தார் கிறிஸ்து. ஆனால் அவர் கேட்கவில்லை. எனக்கு அதிசயங்களில் நம்பிக்கை இல்லை; இறைவனின் ராஜ்ஜியம் இதோ இங்கே விரைவில் வந்துவிடத்தான் போகிறது. இது அவர் உலகம். அவர் படைத்தது. அவர் பார்த்துக்கொள்வார். என்னால் நீ நினைப்பதைப் போல் எந்தவொரு நிறுவனத்தையும் உருவாக்கமுடியாது. அதிசயம், சித்து வேலைகள் செய்து மக்களைக் கவரவேண்டிய அவசியமில்லை. உண்மையின்மீது மட்டுமே எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இன்னொருமுறை இப்படியெல்லாம் பேசிக்கொண்டு என்னிடம் வராதே, போய்விடு.

கிறிஸ்துவுக்கு இயேசுமீது கோபம் இல்லை; ஆனால் நிறைய வருத்தம் இருந்தது. அந்தச் சமயம் பார்த்து ஓர் அந்நியர் கிறிஸ்துவைத் தொடர்பு கொள்கிறார். கவலைப்படாதே, உன்னைப் போலவே எனக்கும் உன் சகோதரனைப் பார்க்க வேதனையாகத்தான் இருக்கிறது. ஆனால் நீ நினைத்தால் இதை மாற்றமுடியும். இயேசுவின் பெயருக்கு நீங்கா புகழைக் கொண்டுவந்து சேர்க்கமுடியும். அவர் உருவாக்கிய வெறுமையை உன்னால் இட்டு நிரப்ப முடியும். நீ மட்டும் என்னிடம் இணைந்துவிட்டால், நான் சொல்படி கேட்டு நடந்தால் இந்த மக்களை வென்றெடுக்கமுடியும். கிறிஸ்து அந்த அந்நியருடன் இணைகிறார். இத்தனைக்கும் அவர் ஊர், பெயர் எதுவும் கிறிஸ்துவுக்குத் தெரியாது. அவர் மனிதரா, தேவதூதனா, சாத்தானா என்றுகூடத் தெரியாது.

இதற்கிடையில் இயேசு பிரசங்கங்கள் நிகழ்த்தத் தொடங்குகிறார்.மலையிலும் கானகத்திலும் தெருவிலும் அவர் மக்களிடம் பேசுகிறார். நன்மை, தீமை என்றால் என்ன? இறைவனை அடைவது எப்படி? மனிதநேயம் என்றால் என்ன? நேசம் என்றால் என்ன? பாவம் என்றால் என்ன? பாவத்தைப் போக்கமுடியுமா? ஒரு பாவியால் இறைவனை நெருங்கமுடியுமா? இறைவன் யாரை நேசிப்பார், பணக்காரர்களையா ஏழைகளையா? ஆரோக்கியமானவர்களையா நோயுற்றவர்களையா? சொர்க்கத்தின் கதவுகள் யாருக்குத் திறக்கும்?

கிறிஸ்து இயேசுவை நிழல்போல் பின்தொடர்ந்து செல்கிறார். இயேசுவின் வார்த்தைகளைக் குறிப்புகள் எடுத்து அதை விரிவாகப் பதிவு செய்யத் தொடங்குகிறார். இயேசுவின் கதைகள், பிரசங்கங்கள் அனைத்தும் கிறிஸ்துவுக்கு உகந்தவையாக இருந்தன என்று சொல்லமுடியாது. சிலவற்றோடு அவரால் உடன்பட முடியவில்லை. சிலவற்றை அவரால் புரிந்துகொள்ளமுடியவில்லை. சிலவற்றை அவர் வெறுக்கவும் செய்தார்.

பிறகு யோசிக்கிறார். ஒரு வரலாற்று ஆசிரியராக இயேசுவின் போதனைகளை அப்படியே நகலெடுப்பதற்குப் பதிலாக அவற்றில் சில திருத்தங்களைச் செய்தால் என்ன? சில கசப்பான கதைகளை நீக்கிவிட்டு, சில இணக்கமற்ற உண்மைகளை ஒதுக்கிவிட்டு, ஒத்துப்போகமுடியாத விஷயங்களை அகற்றிவிட்டு சில நகாசு வேலைகள் செய்தால் இந்தப் போதனைகள் மேலதிக ஒளியுடன் பிரகாசிக்கும் அல்லவா?

கடவுளின் ராஜ்ஜியம் இதோ இந்த உலகில் அமையப்போகிறது என்று அறைகூவல் விடுக்கிறார் இயேசு. ஆனால் அப்படியெல்லாம் நடக்கப்போவதில்லை என்று கிறிஸ்துவிடம் ரகசியமாகச் சொல்கிறார் அந்நியர். உன் சகோதரன் கண்டபடி பேசிக்கொண்டிருக்கிறான். மிகக் கடினமான விஷயங்களை மக்களிடம் இருந்து அவன் எதிர்பார்க்கிறான். மக்களைப் புனிதர்களாக மாற்ற அவன் முயற்சிக்கிறான். இது நடைமுறையில் சாத்தியமில்லை. கடவுளின் ராஜ்ஜியத்தை அடையும் தகுதி இந்த மக்களுக்கு இல்லை. மக்களுக்கு கடவுள் தேவையில்லை. கடவுளின் நிழல் போதும். உண்மையின் நிழல் போதும். ராஜ்ஜியம் தேவையில்லை; ராஜ்ஜியத்தை நினைவுபடுத்தும் ஒரு சிறு அமைப்பு போதும். அந்த அமைப்புதான் தேவாலயம். இதை நாம் வலுப்படுத்தவேண்டும். பாதிரியார்களை உருவாக்கி, இயேசுவின் போதனைகளைப் புதுப்பொலிவுடன் மீளுருவாக்கம் செய்யவேண்டும். என் அன்பான கிறிஸ்துவே, இந்தப் பணியை நீதான் செய்யவேண்டும்.

இயேசுவுக்காக எதையும் செய்ய சித்தமாகயிருக்கிறேன். தேவைப்பட்டால் என் குருதியைச் சிந்தவும் உயிரைத் துறக்கவும்கூடத் தயார் என்று பதிலளிக்கிறார் கிறிஸ்து.

இப்போது இயேசுவிடம் மாற்றங்கள் தெரிகின்றன. இறைவனின் ராஜ்ஜியம் இங்கே அமையப்போவதில்லை என்பது அவருக்குத் தெரிந்துவிடுகிறது. இறைவன் பதிலளிக்கப்போவதில்லை என்பதும் தெரிந்துவிடுகிறது. தன் சகோதரன் சொன்னது சரிதான் என்பதை அவர் உணர்கிறார். மாய வேலைகளுக்கும் சித்து காரியங்களுக்கும்தான் இங்கே மதிப்பு இருக்கிறது. உண்மைக்கு மதிப்பில்லை. உண்மை யாரையும் கவர்வதில்லை. இதை உணர்ந்தும் கடவுள் அமைதியாக இருக்கிறார். பதிலளிக்கமுடியாமல் இருக்கிறார். எதையும் கண்டுகொள்ளாத, எதையும் மாற்ற விரும்பாத ஒரு கடவுளால் யாருக்கு என்ன பலன்? இத்தனை காலம் அவரை நாம் நம்பியிருந்தது வீணாகிவிட்டதா? என் சகோதரன் கிறிஸ்துவும் வேறு சிலரும் சொல்வதைப்போல் மக்களுக்கு மதம் என்னும் அமைப்புதான் தேவைப்படுகிறதா, கடவுள் இல்லையா?

அதே சமயம் இயேசுவால் மதத்தையும் தேவாலயத்தையும் பாதிரிமார்களையும் ஏற்கமுடியவில்லை. அவர் அனைத்திடம் இருந்தும் விலகிச்செல்லத் தொடங்குகிறார். பிரசங்கங்கள், கடவுள், கடவுளின் ராஜ்ஜியம் அனைத்தையும் அவர் கைவிடுகிறார்.

இப்போது அந்த அந்நியர் இயேசுவிடம் இறுதியாக ஒரு வேண்டுகோள் விடுக்கிறார். இனி உன் சகோதரனால் பலனில்லை. நீ செய்யவேண்டியது ஒன்றுதான். உன் கடவுளை ரோமர்களிடம் காட்டிக்கொடுத்துவிடு. இயேசுவின் இடத்தை நீ எடுத்துக்கொள். இயேசுவால் சாத்தியப்படாததை கிறிஸ்துவாகிய நீ சாத்தியப்படுத்து. இயேசுவின் தடுமாற்றங்களை நீ சரி செய். இயேசுவின் தவறுகளை நீ சீர்படுத்து. உன் சகோதரனுக்காக குருதி சிந்தத் தயார் என்றாய். குருதி சிந்தவேண்டியது நீயல்ல, உன் சகோதரன்தான். நீ உயிர்த்திருக்கவேண்டும். இயேசு தொடங்கியதை நீ முடித்து வைக்கவேண்டும்.

அவ்வாறே முடித்துவைக்கிறார். இயேசுவைக் காட்டிக்கொடுக்கிறார் கிறிஸ்து. இயேசு கைது செய்யப்பட்டு சிலுவையில் அறையப்படுகிறார். அவர் உயிர் பிரிகிறது. அவரது உடல் புதைக்கப்படுகிறது. ஒரு சிலரைத் தவிர அவருடைய சீடர்கள் அநேகம் பேர் இயேசுவைக் கைவிடுகிறார்கள். இயேசு இப்போது அவர்களுடைய கண்களுக்கு ஒரு மீட்பராகக் காட்சியளிக்கவில்லை. சாத்தியமற்ற மாற்றங்களை எதிர்பார்த்த இயேசுவை அவர்கள் ஒரு ஏமாற்றுக்காரராகவே பார்க்கிறார்கள்.

இந்த நிலைமை மாறும், கவலைப்படாதே என்று புன்னகைக்கிறார் அந்த அந்நியர். அல்லது தேவதூதர். புதைக்கப்பட்டு மூன்று தினங்கள் கழிந்தபிறகு கற்பாறையை நகர்த்திவிட்டு இயேசுவின் கல்லறையில் இருந்து அவர் பிரேதம் அகற்றப்படுகிறது. தனது சகோதரனின் உருவத்தை ஒத்திருக்கும் கிறிஸ்து இயேசுவின் இடத்தைப் பிடித்துக்கொள்கிறார். ஆம், இயேசு இப்போது உயிர்த்தெழுந்துவிட்டார்.

அந்த தேவதூதர் சொன்னதைப்போல் எல்லாமே நொடியில் மாறிவிடுகிறது. இப்போது இயேசு ஒரு புனிதக் கடவுள். அவரிடம் அற்புதச் சக்திகள் மண்டிக்கிடக்கின்றன. அவர் நோயுற்றவர்களைக் குணமாக்குகிறார். முடமானவர்களை நடக்க வைக்கிறார். பார்வையற்றவர்களுக்குப் பார்வை கிடைக்கிறது. அவர் கடவுளின் புதல்வர். இறைவனின் ராஜ்ஜியத்தைத் துரிதப்படுத்தி இங்கே கொண்டுவந்து சேர்க்கப்போகிறவர். இயேசுவின் நாமம் ஜெயத்தைக் கொண்டுவரும். இறைவனை அடைவதற்கு இயேசுவே வழி. அவரே கதவு. இந்தக் கதவை அடைய நீங்கள் தேவாலயத்துக்குச் சென்றாகவேண்டியிருக்கும். மண்டியிட்டுப் பிரார்த்திக்கவேண்டியிருக்கும். இயேசுவின் வார்த்தைகள் இப்போது ஒழுங்குபடுத்தப்பட்டுவிட்டன. இயேசு இப்போது ஒரு மார்க்கம். இயேசு ஒரு மதம்.

நல்லவர் இயேசு வெறுத்தது இதைத்தான். ஆனால் அது சாத்தியப்பட்டதற்குக் காரணம் கயவன் கிறிஸ்து. ஆனாலும் பாவம், அவர் தன் சகோதரனின் நல்வாழ்வுக்காகத்தான் இதனைச் செய்தார். அவர் உயிர்வாழவேண்டும் என்பதற்காகத்தான் அவரைக் காட்டிக்கொடுத்தார். தவிரவும், நான் செய்தது தவறோ என்று இப்போது அவர் யோசிக்கவும் தொடங்கிவிட்டார். அந்த அந்நியரின் வார்த்தைகளை நம்பி மோசம் போய்விட்டேனா? யார் அவர்? தேவதூதனா அல்லது அந்த வடிவில் வந்த சாத்தானா?

*

இது சுருக்கமான ஓர் அறிமுகம் மட்டுமே. மொழி அழகுக்காக ஒருமுறை, கட்டுப்கோப்பான வடிவத்துக்காக ஒருமுறை, வாசிப்பு இன்பத்துக்காக ஒருமுறை, எது ஏற்கெனவே சொல்லப்பட்டது, எது புதிய கற்பனை என்று  கண்டுபிடிப்பதற்கான ஒருமுறை என்று பல காரணங்களைக் கற்பித்துக்கொண்டு இந்நாவலை திரும்பத்திரும்ப ஒருவர் வாசிக்கமுடியும். ஒரே ஒருமுறை வாசித்தாலும்கூட கிட்டத்தட்ட நிரந்தரமாகவே  உங்களுடன் தங்கியிருக்கப்போகும் புத்தகம் இது.

சகிப்புத்தன்மை குறைந்து வரும் இன்றைய சூழலில் இப்படிப்பட்ட துணிச்சலான கற்பனைகளை நாம் வரவேற்கவும் ஆதரிக்கவும் வேண்டும். அதற்காகக்கூட ஒருமுறை இந்நாவலைப் படித்துப் பார்க்கலாம்.

No comments: