March 23, 2015

தமிழில் வரலாறு எழுதுபவர்கள் யார்?

'தற்சமயம் தமிழில் எழுதிவரும் வரலாற்று ஆய்வாளர்களை அறிமுகப்படுத்தமுடியுமா? பெயர், எழுதிய புத்தகங்கள் இரண்டும் தேவைப்படுகிறது.' நான் அமைதியாக இருந்ததைக் கண்டதும் ஆர். மகாலஷ்மி அவசரமாகக் குறுக்கிட்டார். 'இப்போதே சொல்லவேண்டும் என்றில்லை. பிறகு மெயில் செய்தாலும் சரி.'

ஆர். மகாலஷ்மி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பண்டைய வரலாற்றுத் துறையில் பேராசிரியராக இருக்கிறார். தென் இந்தியாவில் சிறிது காலம் தங்கி, படித்திருக்கிறார். தமிழ் பரிச்சயம் உண்டு. என் மனைவியைப் பார்த்துவிட்டுதான் நீங்கள் கிளம்வேண்டும் என்று ராகேஷ் பதப்யால் அழுத்தமாக வலியுறுத்தியதன் காரணம் புரிந்தது. (மொழியைப்போல் ஒருவரை இன்னொருவருடன் சுலபமாக இணைக்கும் இன்னொரு கருவி வேறு உண்டா இந்த உலகில்?)

தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன் என்றதும் பேராசிரியர் மகாலாஷ்மி கேட்ட முதல் கேள்வியே என்னை மேற்கொண்டு பேசமுடியாமல் செய்துவிட்டது. இருந்தும் எங்கிருந்தாவது உரையாடலைத் தொடங்கியாகவேண்டுமே என்பதற்காக கேட்டேன்.

'ரொமிலா தாப்பர் உங்கள் துறையில்தான் இருக்கிறார் அல்லவா?'

'ஆமாம், வயதாகிவிட்டது. வகுப்புகள் எல்லாம் இப்போது எடுப்பதில்லை. அவரையும் நீங்கள் பார்க்கவேண்டுமா?'

'இல்லை, தொந்தரவு செய்யவேண்டாம்.'

'தமிழ்நாட்டில் ரொமிலா தாப்பர் பிரபலமானவர் இல்லையா?'

'ஆமாம். அபூர்வமாக இப்படிச் சிலர்தான் பிரபலமாக இருக்கிறார்கள்.'

'அவரைப் பற்றி என்ன சொல்கிறார்கள்ரா?'
'ரொமிலா தாப்பரை வெறுப்பவர்கள், கொண்டாடுபவர்கள் இருவருமே அவரை ஓர் இடதுசாரியாகவே காண்கின்றனர்.'

'அது சரியல்ல. ரொமிலா தாப்பர் வலதுசாரிகளுக்கு எதிரானவர் என்பது உண்மை. ஆனால் அதனால் மட்டுமே அவரை இடதுசாரி என்று அழைக்கமுடியுமா என்று தெரியவில்லை.'

எந்த வரலாற்று ஆசிரியரைத்தான் நாம் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறோம்? யாரைச் சீராகப் படித்திருக்கிறோம்? பள்ளிகளில் வரலாறு என்பது அலுப்பூட்டும் ஒரு துறையாகவே பெரும்பாலானோருக்கு இருந்திருக்கும். தமிழ், ஆங்கிலம் இரண்டின்மீதும் ஆர்வத்தைத் தூண்டிவிடும் ஆசிரியர்கள் எனக்குக் கிடைத்திருக்கிறார்கள். தமிழோடு சேர்த்து பெரியாரையும் பகுத்தறிவையும் அறிமுகம் செய்து வைத்த முனுசாமி; (உங்க பேரில் மட்டும் சாமி இருக்கே என்று லட்சம் பேர் இதுவரை அவரைக் கேட்டுவிட்டார்கள். அந்த லட்சம் பேருக்கும் அவர் பதில் : அந்த ராமசாமிக்கும் அப்படிதான் இருந்தது, போப்பா!) அவர் இறந்தபிறகு பொறுப்பேற்றுக்கொண்ட நேரு இருவரையும் மறந்துவிடமுடியுமா? ஓ. ஹென்ரியின் தி கிஃப்ட் ஆஃப் தி மஜாய் (மேகி என்று சொன்னால் திட்டுவார்) கதையைக் கிட்டத்தட்ட நாடகம்போல் பாவங்கள் மாற்றி மாற்றி நடித்துக் காட்டிய சக்கரவர்த்தியின் குரல்கூட கிட்டத்தட்ட துல்லியமாக நினைவில் இருக்கிறது.

வரலாறு எடுத்த ரமணிபாய் மிகவும் நல்லவர். அதிர்ந்து பேச மாட்டார். மாணவர்கள் யாரையும் அவர்  திட்டி நான் பார்த்ததில்லை. ஒரு காலத்தில் அவரேதான் ஆங்கிலப் பாடங்களும் எடுத்து வந்தார். ஆனால் வரலாறும் அவர் வசம் வந்துசேர்ந்தபோது ஆங்கிலம் அளவுக்கு வரலாறுமீது ஆர்வம் துளிர்க்கவில்லை. சிரத்தையுடன் ஆங்கில வகுப்புகள் எடுத்ததுபோல் வரலாற்றுப் பாடங்களை அவர் சொல்லித்தரவில்லை என்று நினைக்கிறேன். வரிசையாக மாணவர்களை எழுப்பி, பத்திப் பத்தியாகச் சத்தம்போட்டுப் படித்துக்காட்டச் சொல்வார். இருபது பத்திகள் கொண்ட ஓர் அத்தியாயத்தை இருபது பேர் படித்து முடிப்போம். அந்தப் பாடம் தீர்ந்தது. மறுநாள், அடுத்த பாடம். முப்பது பத்திகள். முப்பது மாணவர்கள். கிளாஸ் டிஸ்மிஸ்ட்.

பிரச்னை ரமணிபாய் அல்ல. மாணவர்களும் அல்ல. வசதிகளற்ற ஆவடி காமராஜநகர் அரசு மேல்நிலைப்பள்ளியும்கூட அல்ல. ஆங்கிலம் எடுப்பவராலேயே வரலாறும் எடுக்கமுடியும் என்று நம்பிய பள்ளி தலைமையாசிரியரிடம் இருந்துதான் பிரச்னை தொடங்குகிறது. ஆங்கிலத்தில் வரலாறு கற்பிக்க ஆங்கிலம் தெரிந்திருந்தால் போதும் என்று அவர் நினைத்திருக்கிறார். ஆசிரியரும் ஒப்புக்கொண்டு வகுப்புகள் எடுக்கத் தொடங்கிவிட்டார்.

யோசித்துப் பார்க்கும்போது இப்போதும்கூட இதுவேதான் இங்கே பிரச்னை என்று தோன்றுகிறது. தமிழில் வரலாறு குறித்து நன்றாக எழுதுவதற்கு தமிழ் நன்றாக எழுதத் தெரிந்திருந்தால்போதும் என்னும் நம்பிக்கை ஆழமாக இங்கே வேறூன்றியிருக்கிறது. அதன் விளைவாக சுவாரஸ்யமாக எழுதக்கூடிய நாவலாசிரியர்களும் கவிஞர்களும் சிறுகதை ஆசிரியர்களும் கட்டுரையாளர்களும் பத்தி எழுத்தாளர்களும் தங்கள் படைப்பிலக்கியத்தோடு சேர்த்து வரலாறும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ரமணிபாய் மிஸ்போல. 

ஆம், ஆங்கிலத்திலும்கூட பாப்புலர் ஹிஸ்டரி புத்தகங்கள் எழுதப்பட்டு வருகின்றன; நன்றாக விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால் வரலாறு என்றால் அவை மட்டும்தான் என்னும் நிலை அங்கில்லை. தமிழில் அப்படிச் சொல்லமுடியுமா? சஞ்சய் சுப்ரமணியம் எழுதிய Is Indian Civilization a myth? என்னும் கட்டுரைத் தொகுப்பை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ராமச்சந்திர குஹாவின் பிரபலமான India After Gandhi புத்தகத்தை அவரால் வரலாறு என்று வகைப்படுத்தமுடியவில்லை. ஒருவர் மாற்றி ஒருவராக ஆட்சியாளர்களை அறிமுகப்படுத்திக்கொண்டே வருகிறார் குஹா. இது ஓர் அரசியல் பதிவு. வரலாறு என்பது மிகப் பரந்துபட்டது என்கிறார் சஞ்சய் சுப்ரமணியம்.

ஆட்சியாளர்களையும் அதிகாரத்தில் இருப்பவர்களையும் ஆய்வு செய்யவோ மதிப்பீடு செய்யவோ கூடாது என்பதல்ல இங்கே விஷயம். வரலாறு என்பது தரைக்கு இறங்கிவருவது. பூமியில் கால்களைப் பதித்து நடந்து செல்லும் சாமானியர்களையும் அவர்களுடைய சூழலையும் வரலாறு பதிவு செய்யவேண்டும். நீண்டகாலமாக கண்டுகொள்ளாமல் விடப்பட்ட பெண்களின் குரல் ஒலிக்கவேண்டும். மாற்றுப் பாலினத்தவர்கள், ஏழைகள், சிறு வியாபாரிகள், விளிம்புநிலை மனிதர்கள் என்று இதுவரை ஆய்வு செய்யப்படாத துறைகள் ஆராயப்படவேண்டும். இந்த வகை People's history ஆங்கிலத்தில் அதிகம். 1) Sage 2) Routledge 3) Cambridge 4) Oxford ஆகிய பதிப்பகங்களின் இணையத்தளத்துக்குச் சென்று வரலாற்றுத் துறையில் அவர்கள் கொண்டுவந்திருக்கும் புத்தகங்களை ஒருமுறை பார்த்துவிடுங்கள். Historiography என்பது எவ்வளவு பெரிய பெருங்கடல் என்பது புரியவரும். பலவிதமான கோட்பாட்டு மற்றும் தத்துவார்த்த மோதல்கள் இத்துறையில் நித்தம் நித்தம் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. மீள்வாசிப்புகளும் மறுஆய்வுகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அறிவியல் துறையைப்போலவே புதிய கண்டுபிடிப்புகள் மலர்ந்துகொண்டிருக்கின்றன. 

சீரான வேகத்தில் காரை ஓட்டிக்கொண்டிருந்தார்  மகாலஷ்மி. 

'இந்திய வரலாறு என்று வரும்போது தமிழகம் புறக்கணிப்படுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்றேன். ரொமிலா தாப்பர் உங்கள் துறைதானே என்னும் கேள்விக்கு நிகரானது இது.

ஆனால் மகாலஷ்மி பொறுமையாகப் பதிலளித்தார்.

'அது உண்மைதான். பிராந்திய வரலாறுகளைப் புரிந்துகொள்வது அவசியம் என்பதைப் பலரும் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர். என்னுடைய புத்தகம் ஒன்றைச் சொல்கிறேன். குறித்துவைத்துக்கொள்ளுங்கள். The Making of the Goddess. தமிழ் பாரம்பரியத்தில் கொற்றவையின் பாத்திரத்தை இதில் ஆய்வு செய்திருக்கிறேன். பெங்குவின் வெளியீடு. படித்துவிட்டுச் சொல்லுங்கள்.'

சிறிது நேரத்துக்குப் பிறகு கேட்டார். 'நீங்களும் வரலாற்றுத் துறையில்தான் இயங்கி வருகிறீர்களா? புத்தகங்கள் எழுதியிருக்கிறீர்களா?'

தெளிவான குரலில் பதிலளித்தேன். 

'வரலாறுமீது எனக்கு ஆர்வம் உண்டு. ஆனால் புத்தகங்கள் எழுதும் அளவுக்கு இன்னமும் கற்கவில்லை. நான் ஒரு மாணவன் மட்டுமே.'

0


No comments: