April 4, 2015

ஆம் ஆத்மி கட்சி : கலைந்த கனவுகள்

மிகப் பெரிய தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்ற மறுதினம் நான் டெல்லி சென்று இறங்கினேன். மார்க்கெட், மெட்ரோ ரயில் நிலையம், பேருந்துகள், குடியிருப்புப் பகுதிகள் என்று எங்கு சென்றாலும் மக்கள் ஆரவாரமாகப் பேசினார்கள். எளிமையாக நடந்தேறிய பதவியேற்பு விழா; அடுத்தடுத்து அரவிந்த் மேற்கொள்ளவிருந்த அதிரடி நடவடிக்கைகள்; இலவச இணையம்; இலவச குடிநீர் ஆகியவற்றைப் பற்றிப் பலரும் உற்சாகமாக இருந்தார்கள். எல்லாவற்றையும்விட முக்கியமாக,  சுத்தமான அரசியலை அரவிந்த் கெஜ்ரிவால் வழங்குவார் என்று அவர்கள் உளமாற நம்பினர். புதிய, நாகரிக அரசியல். துடிதுடிப்பான இளைஞர்களின் அரசியல். பஸ்திக்களுக்கான, நடுத்தர வர்க்கத்தினருக்கான, மேலட்டு வர்க்கத்தினருக்கான அரசியல். புது டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து சஃப்தர்ஜங் அழைத்துச்சென்ற ப்ரீ பெய்ட் ஆட்டோக்காரர் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார். அந்த அதிகாலைக் குளிரிலும் அவர் குரலில் நடுக்கமில்லை. 'நண்பரே, நீங்கள் ஒரு புதிய டெல்லியைப் பார்க்கப்போகிறீர்கள்.'

நான் முதலில் பார்த்த தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (பிப்ரவரி 16) தலைப்புச் செய்தி இதுதான் : Wall to Wall, Kejriwal. எழுபதில் 67 இடங்களை (96%) வென்றெடுத்து மக்களை ஈர்த்த அரவிந்த் கெஜ்ரிவாலை 'கர் வாப்ஸியின் தாய்' என்று இந்தச் செய்தி வர்ணித்திருந்தது. ஒரே கட்சிக்கு இவ்வளவு இடங்களை டெல்லி இதுவரை தந்ததில்லை. இவ்வளவு அதிக எண்ணிக்கையில் டெல்லி மக்கள் இதற்குமுன் ஓட்டளித்ததும் இல்லை. தேர்தல் முடிவுகள் வெளிவந்த சில நிமிடங்களில் துடைப்பத்தின் விலை ஏழு மடங்கு அதிகரித்து ரூ.200-ஐ தொட்டுவிட்டது. அப்படியும்கூட ஆத் ஆத்மி ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் பாய்ந்து வந்து கேட்கும் விலையைக் கொடுத்து தங்கள் கட்சிச்சின்னத்தை அள்ளிக்கொண்டார்களாம். (மொத்தமுள்ள 12 ரிசர்வ் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி பெற்ற வெற்றிக்குத் துடைப்பம் ஒரு முக்கியக் காரணம் என்கிறது டைம்ஸ்).

தாமாகவே காசு செலவழித்து கெஜ்ரிவால் படம் வாங்கி ஒட்டிக்கொண்ட ஆட்டோக்காரர்கள் இருந்திருக்கிறார்கள். அரசியலில் இதற்கு முன்னால் ஆர்வம் காட்டாத மாணவர்கள் பலர் அர்விந்த கெஜ்ரிவாலை இப்போது ஆதரிப்பதாகச் சொன்னார்கள். ஆப்பிள் ஐஃபோன் போல் ஆம் ஆத்மி ஒரு ஃபேஷன் ஸ்டேட்மெண்டாக அவர்களுக்கு மாறிப்போயிருந்தது. தனிப்பட்ட முறையில் நான் பாஜக ஆதரவாளன். ஆனால் ஆம் ஆத்மியால் நிஜமாகவே மாற்றங்களைச் செய்யமுடிந்தால் நல்லதுதான் என்றார் கிரீன்பார்க் மெட்ரோ நிலையத்துக்கு அருகில் வசிக்கும் தமிழரான சுந்தரம்.

ஆனால் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஷர்மிளாவுக்கு ஆம் ஆத்மி மீது எந்தவித பிரமையும் இல்லை. 'ஆம் ஆத்மியை இடது என்றோ புதிய இடது என்றோ அழைப்பது நான்சென்ஸ். அவர்களுக்கும் மார்க்சியத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. அவர்களுடைய சில திட்டங்கள் இடதுசாரி அரசியலை சில சமயம் நினைவுபடுத்தியிருக்கலாம். ஆனால் தனியார்மயம் குறித்து ஆம் ஆத்மியிடம் எந்தவிதத் தெளிவான கொள்கையும் இல்லை. குரோனி காபிடலஸித்தை மட்டுமே எதிர்ப்பது என்றால் என்ன? அவர்களுடைய பொருளாதாரக் கொள்கைகள் என்ன? அவர்கள் அளித்திருக்கும் வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேறப்போகிறது? அவர்களை அப்பாவிகள் என்று சொல்லவேண்டுமா அல்லது calculative, shrewd politicians என்று சொல்லவேண்டுமா என்று தெரியவில்லை.'

இடதுசாரி மாணவர்கள் அமைப்புகளை அதிகம் கொண்டிருக்கும் இந்தப் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில்தான் ஆம் ஆத்மி ஆதரவு மாணவர் பிரிவு தொடங்கப்பட்டிருக்கிறது. அதன் பலம் என்ன, எப்படி இயக்கப்படுகிறது என்பது பற்றி இனிதான் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும். அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பினரின் செல்வாக்கு பாஜகவின் வரவுக்குப் பிறகு அதிகரித்திருக்கிறதா என்று தெரியவில்லை.  ஒவ்வொரு அமைப்பினரும் தங்களுக்கு விருப்பமான அரசியல் தலைவர்களை, பேச்சாளர்களை, சிந்தனையாளர்களை கல்லூரிக்கு வரவழைத்து உரையாட வைக்கிறார்கள். தங்களுடைய அரசியலை மற்றவர்களுக்கு எதிராக நிறுத்தி மோதவிடுகிறார்கள். ஆவேசம் பொங்க மாணவர்கள் சண்டையிட்டுக்கொள்வதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் என்றார் ஷர்மிளா. 

அருகிலுள்ள காண்டீனுக்கு அழைத்துச் சென்றார். லெமன் டீ ஆர்டர் செய்தோம். 'ஆம் ஆத்மி சொல்வதையெல்லாம் அப்படியே நம்பி ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நான் குழந்தையில்லை. இங்கே குழந்தைகள் அதிகம் படிப்பதும் இல்லை' என்று சொல்லி சிரித்தார் ஷர்மிளா. 'நான் படித்ததெல்லாம் கல்கத்தாவில். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடதுசாரி அரசியல் சாய்வு என்பது இயல்பிலேயே இருக்கும். என்னுடன் படித்த பலர் இடதுசாரிகளாகவே இருக்கிறார்கள். இதோ இங்கே சொல்லவே வேண்டியதில்லை. திரும்பும் திசையெங்கும் பகத் சிங்கும் கார்ல் மார்க்ஸும் அம்பேத்கரும்தான் இருப்பார்கள். கருத்தரங்குகள், அரசியல் உரையாடல்கள், பொதுக்கூட்டங்கள் என்று எல்லாவற்றிலும் அழுத்தமான சிவப்பைப் பார்க்கமுடியும். நானும் இதில் அடித்துச்செல்லப்படுவேனா என்று தெரியவில்லை. இப்போதைக்கு அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்,கற்றுக்கொண்டிருக்கிறேன். இன்னும் தெளிவான அரசியல் சார்பு நிலை உருவாகவில்லை.'

ஹரிஷ் கரே திட்டவட்டமாக ஆம் ஆத்மியை நிராகரித்தார்.'ஆம் ஆத்மி மற்றொரு அரசியல் கட்சி, எந்த வகையிலும் அவர்கள் மற்றவர்களைவிட வித்தியாசமானவர்கள் அல்லர். அவர்கள் போலியானவர்கள். அவர்களுடைய நிஜமுகத்தை நீங்கள் விரைவில் பார்க்கத்தான் போகிறீர்கள்.' 

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரசாந்த் பூஷண் எழுதிய கடிதத்தை இன்று காலை வாசித்தபோது ஹரிஷ் கரேயின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. ஆம் ஆத்மி கட்சி ஆம் ஆத்மியின் நம்பிக்கையைச் சிதறடித்துவிட்டது. யாரும் செய்யாத எதையும் அரவிந்த் கெஜ்ரிவால் செய்துவிடவில்லை என்று சிலர் இன்னமும் வாதிடக்கூடும். ஒரு கட்சியில் ஆள்கள் வருவதும், போவதும் இயல்பானது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டக்கூடும். உள்கட்சி ஜனநாயகம் என்பதெல்லாம் இங்கு சாத்தியமேயில்லை; அதையெல்லாம் பெரிதுபடுத்தத் தேவையில்லை என்றும் அவர்கள் சமாதானப்படுத்தலாம். இதையே அரவிந்த் கெஜ்ரிவாலுக்குச் சாதகமாகத் திருப்பி, அவருடைய 'வலிமையான'  முடிவுகளுக்காகப் பாராட்டவும் செய்யலாம். 

எல்லோரும் செய்வதைத்தான் ஆம் ஆத்மி செய்கிறது என்றால் இதுவரை என்ன கிடைத்துவந்ததோ அதுவேதான் இனியும் டெல்லிக்குக் கிடைக்கப்போகிறது. சிறு, சிறு மேலோட்டமான மாற்றங்கள் தவிர அடிப்படையில் எதுவும் மாறிவிடப்போவதில்லை. புதிய அரசியல், புதிய மாற்றம் என்று முழங்கியவர்களும் சொந்த செலவில் சுவரொட்டி அடித்தவர்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர். நரேந்திர மோடிக்கு மாற்றாக அரவிந்த் கெஜ்ரிவாலை முன்னிறுத்தி மகிழ்ந்தவர்களும் புதிய இடது உதயமாகிவிட்டது என்று நம்பிக்கை கொண்டவர்களும் தோற்றுப்போயிருக்கிறார்கள். 

நண்பரே, புதிய டெல்லியை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள் என்று சொன்ன அந்த ஆட்டோ ஓட்டுநரின் முகம் நினைவுக்கு வர மறுக்கிறது.

0

No comments: