April 7, 2015

மோடி vs மீடியா

டெல்லி டைரி : ஒன்று  |  இரண்டு  |  மூன்று

சன்னமான குரலில், யோசித்து யோசித்து, பொறுமையாகப் பேசினார் ஹரிஷ் கரே. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்த அந்தப் புத்தக அறிமுக நிகழ்ச்சியில் அவர் பேசிய பல வார்த்தைகள் தெளிவாகக் கேட்கவில்லை. இத்தனைக்கும் அங்கே கூடியிருந்தவர்கள் இருபது பேர்தான். ஒரு பெரிய மேஜையைச் சுற்றி நாங்கள் அனைவரும் அமர்ந்திருந்தோம். அவருடன் உரையாடி கேள்விகள் கேட்ட ஆதித்ய முகர்ஜி, நிகழ்ச்சியை வழிநடத்திய ராகேஷ் பதப்யால் நீங்கலாக அனைவரும் மாணவர்கள். வார்த்தைகள் மெலிதாக ஒலித்தாலும் கருத்துகள் அழுத்தமாகவே இருந்தன. ஒன்றிரண்டு முறை குரலை உயர்த்தினார். ஒரே ஒருமுறை மட்டும் சற்று கோபப்பட்டார். அது, நான் கேட்ட கேள்விக்கு.

ஹரிஷ் கரே 2009 முதல் 2012 வரை மன்மோகன் சிங் அரசின் ஊடக ஆலோசகராக இருந்திருக்கிறார். பத்திரிகையாளர், கட்டுரையாளர், எழுத்தாளர். இந்துஸ்தான் டைம்ஸ், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி இந்து ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியிருக்கிறார். நரேந்திர மோடிமீது கடுமையான விமரிசனங்களைத் தொடர்ந்து முன்வைத்து வருவதால் காங்கிரஸ் ஆதரவாளர் என்று குற்றம்சாட்டப்படுபவர்.

கடந்த இருபதாண்டுகளாக இந்தியத் தேர்தல்களைத் தொடர்ந்து கவனித்து செய்திக்கட்டுரைகள் எழுதி வந்திருக்கிறார் ஹரிஷ் கரே.  2014 பொதுத் தேர்தல் குறித்து எந்தச் செய்தி நிறுவனத்துக்கும் அவர் ரிப்போர்டிங் செய்யவில்லை என்றாலும் தனிப்பட்டமுறையில் குறிப்புகள் எடுத்து வைத்து, தொகுத்து நூலாக்கியிருக்கிறார். தலைப்பு, How Modi Won It : Notes From the 2014 Election. இந்தப் புத்தகத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காகத்தான் அவர் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். பிப்ரவரி 18,  மதியம் 3.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. சமூகவியல் துறை (Centre for Media Studies, School of Social Sciences) இதனை ஏற்பாடு செய்திருந்தது.

தன் புத்தகத்தில் இருந்து சில பக்கங்களைப் படித்துக் காட்டிய ஹரிஷ் கரே, ஆதித்ய முகர்ஜி ஒன்றன் பின் ஒன்றாக வீசிய விரிவான கேள்விகளை எதிர்கொள்ளத் தொடங்கினார். ஆதித்ய முகர்ஜி தற்கால இந்திய வரலாற்றுத் துறை பேராசிரியர் (JNU). சமூக அறிவியல் துறையின் முதல்வர். India's Struggle for Independence, India Since Independence ஆகிய நூல்களை பிபன் சந்திராவுடன் இணைந்து எழுதியுள்ளார். முதல் புத்தகம் இதுவரை 58 மறுபதிப்புகளைக் கண்டுள்ளது. சேஜ் வெளியிட்டு வரும் நவீன இந்திய வரலாறு வரிசையில் இதுவரை வெளிவந்துள்ள 15 நூல்களை எடிட் செய்த மூவருள் இவரும் ஒருவர். (மற்றவர்கள் பிபன் சந்திரா, மிருதுளா முகர்ஜி).

பாஜக வெற்றி பெற்ற கதை என்பது காங்கிரஸ் தோற்ற கதையும்தான் என்பதால் உரையாடல் பெரிதும் இந்த இரண்டையும் மையப்படுத்தியே அமைந்திருந்தது. சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவரையும் கறாரான விமரிசனத்துக்கு உட்படுத்தினார் ஹரிஷ் கரே. கட்சியைவிடவும் வாரிசு அரசியலே முக்கியமாகப் போய்விட்டதைச் சுட்டிக்காட்டி அதற்கு காங்கிரஸ் கொடுத்த விலை சரியானதுதான் என்றார். ராகுல் காந்தி தேர்தலுக்கு முதல்நாள் வரையிலும்கூட செல்லும் திசை குறித்த சிந்தனையின்றி, அக்கறையின்றி, பொறுப்பின்றி, தன்னிச்சையாக நடந்துகொண்டதை விவரித்தார்.

இந்தியாவில் வகுப்புவாத உணர்வைப் பயன்படுத்தி முதலில் ஆட்சியமைத்த கட்சி காங்கிரஸ் என்பது ஹரிஷ் கரேயின் கருத்து. 1984 தேர்தல் வெற்றியை அதற்கு உதாரணமாகக் காட்டுகிறார். பாஜக தனது பாடத்தை காங்கிரஸிடம் இருந்தே கற்றுக்கொண்டது என்பது அவர் நம்பிக்கை. அதற்குப் பிறகு தேர்தல் வெற்றிக்காக மத உணர்வுகளைத் தூண்டிவிடும் பணியை பாஜக செழுமைபடுத்தியது. குஜராத்தில் மோடி அரசு பெற்ற தொடர் வெற்றிக்கும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் செயலற்ற தன்மையே காரணம் என்கிறார் ஹரிஷ் கரே. சிறுபான்மையினரைத் திருப்திபடுத்துவதை ஓர் அரசியல் உத்தியாக காங்கிரஸ் வடிவமைத்து பலன் ஈட்டியபோது தவிர்க்கவியலாதபடி மற்றொரு பக்கம் பெரும்பான்மை உணர்வு தூண்டிவிடப்பட்டது. சிறுபான்மையினரைச் சுட்டிக்காட்டி பெரும்பான்மையினருக்குப் பீதியூட்ட முடிந்தது. சிறுபான்மையினருக்குத் தேவையில்லாத பலன்கள் சென்றடைகின்றன என்று குற்றம்சாட்டி பெரும்பான்மை மக்களுக்குக் கோபமூட்டி அவர்களைத் திரட்டமுடிந்தது. இந்துத்துவச் சக்தி குஜராத்தில் வலுபெற்றது இப்படிதான் என்கிறார் ஹரிஷ் கரே.

2014 பொதுத் தேர்தலை புது விதமான வியூகங்களை வடிவமைத்து நரேந்திர மோடி வெற்றிகொண்டதைத் தன் புத்தகத்தில் விரிவாக விவரித்திருக்கிறார் ஹரிஷ் கரே. காங்கிரஸ் ஆட்சியால் சோர்வடைந்து கிடந்த மக்களை (குறிப்பாக, மத்திய வர்க்கத்தினரை) உற்சாகமூட்டும் நம்பிக்கை முழக்கங்களைக் கொண்டு மோடி ஈர்த்தார். 1984ம் ஆண்டு ராஜிவ் காந்தி பெற்ற வெற்றியோடு இதனை ஒப்பு நோக்கவேண்டும். இந்த இரு வெற்றிகளுமே வகுப்புவாத உணர்வுகளைக் கிளறிவிட்டதன்மூலம் சாத்தியமானவை. தேர்தல் பிரசாரங்களின்போது ராகுல் காந்தியைக் கேலி செய்ய shehzada என்னும் பதத்தை மோடி பயன்படுத்தியதைக் குறிப்பிட்டுச் சொல்லும் ஹரிஷ் கரே, மிகவும் நுட்பமான முறையில் திட்டமிடப்பட்ட வகையில் ஒரு பக்கம் இஸ்லாமிய வெறுப்புணர்வு தூண்டிவிடப்பட்டதையும், மறு பக்கம் இந்துமத உணர்வு ஒன்றுதிரட்டப்பட்டதையும் விவரித்தார்.

இன்றைய இந்தியாவின் சவால் என்று அவர் கருதுவது இந்துத்துவத்தை. டெல்லியில் தேவாலயத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதலைச் சுட்டிக்காட்டிய ஹரிஷ் கரே, பாஜக ஆட்சியில் அமரும்போதேல்லாம் சிறுபான்மையினர் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்படுவதை நினைவுபடுத்தினார். இஸ்லாமிய, கிறிஸ்தவ வெறுப்பை ஆதாரமாகக் கொண்டிருக்கும் இந்துத்துவம் இந்தியாவைப் பிளவுபடுத்தவே செய்யும் என்று எச்சரித்தார்.

மாணவர்கள் உரையாடலை மேலும் வளர்த்தெடுத்தனர். டெல்லியில் ஆம் ஆத்மி பெற்றிருக்கும் வெற்றி குறித்து அவர் கருத்தை அறிந்துகொள்ள அவர்கள் ஆர்வம் காட்டினார்கள். இந்த வெற்றி தன்னை உற்சாகப்படுத்தவில்லை என்று அழுத்தமாகச் சொன்னார் ஹரிஷ் கரே. 'ஒரு மாற்றுச்சக்தியாக ஆம் ஆத்மி கட்சி திகழும் என்று நான் நம்பவில்லை. காங்கிரஸ், பாஜகவைப்போல் மற்றொரு அரசியல்கட்சியாகவே அவர்கள் இருக்கப்போகிறார்கள். இப்போது அளவுக்கு அதிகமாக அவர்கள்மீது மீடியா வெளிச்சம் பாய்ந்துகொண்டிருக்கிறது. பலரும் பலவிதமான நம்பிக்கை கோட்டைகளைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆம் ஆத்மியின் நிஜ முகத்தை நீங்கள் அனைவரும் விரைவில் பார்க்கத்தான் போகிறீர்கள்.'

விவாதம் மீடியாவை மையம் கொண்டபோது ஹரிஷ் கரே திட்டவட்டமாகச் சொன்னார். 'எல்லாப் பத்திரிகைகளும் தொலைக்காட்சி சானல்களும் மோடி பக்கம் சாய்ந்துவிட்டன. அனைவருக்குமான ஜனநாயக வெளி என்பது குறைந்துவருகிறது. இது ஆபத்தானது. இந்த நிலைமையை மாற்றவேண்டியது மாணவர்களாகிய உங்கள் கடமை. நீங்கள் படிப்பு முடிந்து களப்பணிக்கு வரும்போது பல சவால்களைச் சந்திக்கப்போகிறீர்கள். ஆனால் நீங்கள் பயந்துவிடக்கூடாது. கருத்துரிமைக்கு ஆபத்து வரும்போதெல்லாம் நீங்கள் குரல் கொடுக்கவேண்டும்.'

ஏதேனும் கேள்விகள் என்று அவர் என் பக்கம் திரும்பியபோது என் கருத்தைச் சுருக்கமாக முன்வைத்தேன். 

'நீங்கள் சொல்வது போன்ற அபாயகரமான நிலை இப்போது உண்மையில் நிலவுகிறது என்று நினைக்கிறீர்களா? மீடியா முழுக்க முழுக்க மோடி பக்கம் சாய்ந்துவிட்டதாகவா நினைக்கிறீர்கள்? ஆங்கிலச் செய்தி சானல்களை எடுத்துக்கொண்டால் என்டிடிவி, டைம்ஸ் நவ் என்று தொடங்கி அனைத்தும் மோடியைத் தொடர்ந்து விமரிசித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ராஜ்தீப் சர்தேசாய், அர்ணாப் கோஸ்வாமி போன்ற பிரபலங்களை மோடி ஆதரவாளர்கள் என்று சொல்லமுடியுமா என்று தெரியவில்லை. அவுட்லுக், வீக், தெஹல்கா, ஃபிரண்ட்லைன் என்று ஆங்கில பத்திரிகைகளில் பெரும்பாலானவை மோடியை எதிர்க்கின்றன. நீங்கள் எழுதிவரும் தி இந்து இந்துத்துவத்துக்கு எதிரானதுதானே?'

ஹரிஷ் கரே வெடித்தார். 'நீங்கள் குறிப்பிடும் சானல்கள், பத்திரிகைகளை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வரமுடியாது. இந்தியா முழுக்க வெளிவரும் பத்திரிகைகளை, ஒளிபரப்பப்படும் சானல்களை அலசுங்கள். சில லிபரல் பத்திரிகைகள், சானல்கள் போக பெரும்பாலானாவை மோடியைப் புகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. எஞ்சியிருப்பவையும் அந்தத் திசையை நோக்கி நகர்ந்துசென்றுகொண்டிருப்பதை நீங்கள் உணரவில்லை. இடதுசாரிகளுக்கான, ஜனநாயகச்சிந்தனைகளுக்கான மீடியா வெளி குறைவாகவே உள்ளது. வரும்காலங்களில் இது மேலும் சுருங்கும்.'

அதுவரை மேஜைமீது முகவாயைப் பொருத்தி கண்களைமூடி அமர்ந்துகொண்டிருந்த ஒரு மாணவி விருட்டென்று எழுந்து என்மீது பாய்ந்தார்.

'நீங்கள் சொல்வது தவறு. தமிழ்நாட்டில் எப்படி என்று தெரியவில்லை. டெல்லியில் மோடிக்கு மீடியா கொடுத்த பிரமாண்டமான விளம்பரத்தை நீங்கள் பார்த்திருக்கவேண்டும். செய்தித்தாள்கள் அனைத்திலும் பக்கம் பக்கமாக மோடியின் முகம். தெரு முழுக்க மோடி போஸ்டர்ஸ். டிவியைத் திருப்பினால் அவர் முகம். இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும் உங்களுக்கு? உங்கள் கண்முன்பாகவே மீடியா சாய்ந்துகொண்டிருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா?'

எனக்கு அருகில் அமர்ந்திருந்த மாணவி ஒரு விசித்திரமான பார்வையை என்மீது வீசியெறிந்தார். நீங்கள் இந்தி பத்திரிகைகளைப் பார்த்திருக்கிறீர்களா என்று எனக்குப் பின்னால் இருந்து ஒரு குரல் எழுந்தது. தமிழ்நாட்டில் மோடி ஆதரவு பலமாக இருக்கிறதா என்று வலது பக்கத்தில் இருந்து ஒரு குரல்.

அதற்குள் ஹரிஷ் கரே இயல்பான நிலைக்குத் திரும்பியிருந்தார். என்னைப் பார்த்து பொறுமையாகப் 

'நீங்கள் தமிழ்நாட்டுக்குச் சென்றபிறகு நிதானமாக சில மாதங்கள் எல்லாவற்றையும் கவனியுங்கள். இதுவரை இடதுசாரியாகத் தோற்றமளித்தவர்கள், லிபரலாக எழுதியவர்கள் பலரும் தடம் மாறுவதைப் பார்ப்பீர்கள்.'

நிகழ்ச்சி முடிந்ததும் சில மாணவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டு கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். விடுபட்டு வெளியில் வரும்போது ஆதித்ய முகர்ஜி புன்னகையுடன் எதிர்கொண்டார்.  அவருடன் சிறிது நேரம் செலவிடவேண்டும் என்று விரும்பினேன். ஆனால் சாத்தியப்படவில்லை. பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தார். 'சென்னைக்குத்தான் சென்றுகொண்டிருக்கிறேன். ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வரவேற்றிருக்கிறார்கள். இல்லாவிட்டால் நாம் சிறிது நேரம் பேசியிருக்கலாம். மன்னிக்கவும்.'

இருளும் குளிரும் ஒரே சமயத்தில் வந்து ஒட்டிக்கொண்டன. இருபது நிமிடங்கள் நடந்தால் டி ஜாயிண்ட் எனப்படும் இடம் வரும். அங்கிருந்து ஒரு பேருந்து பிடித்து வெளியில் சென்று இன்னொன்று பிடித்து வீடு போய் சேரவேண்டும். யோசித்துக்கொண்டே நடந்தேன். ஹரிஷ் கரேயின் முதல் எச்சரிக்கை நிறைவேறிவிட்டது. ஆம் ஆத்மி கட்சியின் நிஜ முகம் வெளிவந்துவிட்டது. (அது சரி, இதில் இந்துத்துவர்களுக்கு ஏன் இத்தனை மகிழ்ச்சி?)  இரண்டாவது எச்சரிக்கையும் நிறைவேறிவிடுமா? மீடியா முழுக்க மோடி பக்கம் சாய்ந்துவிடுமா?  அறிவுஜீவிகள் தடம் புரண்டுவிடுவார்களா? லிபரல் பாதையில் சென்றவர்கள் எல்லாம் வலது பக்கம் திரும்பிவிடுவார்களா? இடதுசாரி சிந்தனை வலுவிழந்துவிடுமா?

அப்படி ஆகாது என்றே தோன்றியது. ஹரிஷ் கரே நின்று பேசிய ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அதற்கு அனுமதிக்காது.

0

No comments: