April 14, 2015

காந்தியும் விடுதலைப் போராட்டமும் : பிபன் சந்திரா

ஒன்று : இந்திய விடுதலைப் போராட்டம்

இந்திய விடுதலைப் போராட்டம் என்பது போலியானது, அது ஒரு பூர்ஷ்வா இயக்கம் என்னும் வாதம் பிழையானது. இந்திய மக்களின் உரிமைகளை முன்வைத்து அவர்களுடைய பல்வேறு அடிப்படைப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் நோக்கத்தோடுதான் இந்திய விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கட்டாய தொடக்கக் கல்வி, ஏழை நடுத்தர மக்களின் வரிச்சுமை குறைப்பு, உப்பு வரி குறைப்பு, விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் கடன், வாடகைக்குக் குடியிருப்போரின் உரிமைகள் பாதுகாப்பு, தொழிலாளர்களுக்காக குறைந்தபட்ச கூலி, வேலை நேர குறைப்பு, தொழிலாளர்கள் ஒன்றுகூடுவதற்கான உரிமை, கிராமப்புறத் தொழிற்சாலைகளுக்குப் பாதுகாப்பு, மது ஒழிப்பு, பெண்களின் வாழ்நிலை முன்னேற்றம், பெண் கல்வி, தீண்டாமை ஒழிப்பு, சட்ட ஒழுங்கு சீரமைப்பு என்று பல முற்போக்கு முழக்கங்கள் விடுதலைப் போராட்டத்தில் எதிரொலித்தன.

இந்திய தேசிய காங்கிரஸ் தொடர்ந்து தன்னை மெருகேற்றிக்கொண்டு, தொடர்ந்து வெவ்வேறு தரப்பினரைச் சேர்த்து அணைத்துக்கொண்டு, முற்போக்கான வழியில் தொடர்ந்து முன்னேறிச் சென்றது. தாதாபாய் நௌரோஜி  ஏழைகளுக்குச் சாதகமான ஒரு வலிமையான உணர்வை காங்கிரஸில் ஏற்படுத்தினார். காந்தியின் வருகைக்குப் பிறகு இந்த உணர்வு பலப்பட்டது. 1920 மற்றும் 1930களில்  காங்கிரஸில் இடதுசாரி போக்கு பலமடையத் தொடங்கியது. கட்சியில் இருந்த வலதுசாரிகள் தங்கள் அடிப்படை நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டியிருந்தது. 

காந்தி பல சமயங்களில் புரட்சிகரமான முறையில் சிந்தித்தார். லூயி ஃபிஷரிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது, 'உழுபவர்களுக்கே நிலம் சொந்தமானது; நிலச்சுவாந்தார்கள் நிலத்தைக் கைவிடத் தயங்கினால் அவர்கள் நிலம் பலவந்தமாக கையகப்படுத்தப்படும்' என்றார் காந்தி. ஆனால் அவருடைய முற்போக்கான சிந்தனைகளைப் புரிந்துகொள்ள இயலாத வரலாற்றாசிரியர்களும் இடதுசாரிகளும் காந்தியைத் தொடர்ந்து தவறாகவே மதிப்பிட்டு வந்தனர். அதற்குக் காரணம் ஐரோப்பிய-லிபரல்-புரட்சிகர அல்லது மார்க்சியச் சொல்லாடல்களை காந்தி பயன்படுத்தாமல் போனதுதான். ஆனால் காந்தியை மக்கள் சரியாகவே புரிந்து வைத்திருந்தனர்.

ஒரு போராட்டம் வெற்றி பெறுவதற்கு உத்தி அவசியமானது. அந்த உத்தி செயல்படுத்தக்கூடியாகவும், மக்களின் செயல்திறனுக்கு ஒத்துப்போகக்கூடியததாகவும் இருக்கவேண்டும். இந்திய தேசிய காங்கிரஸ் தெளிவான உத்தியைக் கொண்டிருந்தது. ஆனால் அது குறித்து யாரும் அதிகம் பேசவில்லை. அதை ஒரு சித்தாந்தமாக வடித்து, விவாதிக்கும் போக்கும் வளரவில்லை.

தன் காலத்தில் வாழ்ந்த லெனின், மாவோ ஆகிய இருவரையும்போல் காந்தி ஒரு சிறந்த அறிவுஜீவி, சிந்தனையாளர், எழுத்தாளர். ஆனால் இந்த இருவரையும் போலன்றி காந்தி தனது பார்வையை ஒரு தெளிவான, விரிவான சித்தாந்தமாக வடித்தெடுக்கவில்லை. காந்தி எத்தகைய உத்திகளைக் கடைபிடித்து விடுதலைப் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தினார் என்பதை அவருடைய வார்த்தைகளில் இருந்து அல்ல, போராட்டத்தின் தன்மைகள் மற்றும் விளைவுகளில் இருந்தே ஒருவரால் புரிந்துகொள்ளமுடியும்.

இந்திய காலனியாதிக்கம் என்பது ஹிட்லரின் ஜெர்மனி, ஜாரின் ரஷ்யா, சியாங் கை ஷேக்கின் சீனா, பாடிஸ்டாவின் க்யூபா, சமோசாவின் நிகாரகுவா, பிரெஞ்சு அல்ஜீரியா, வியட்நாம் ஆகியவற்றில் இருந்து பெரிதும் வேறுபடுகிறது. வலிமையைப் பயன்படுத்தியே இந்தியாவை பிரிட்டன் காலனியாக்கியது. அதே சமயம், சில சிவில் அமைப்புகளையும் அது தோற்றுவித்தது. சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்தி, சில சிவில் உரிமைகளையும் மக்களுக்கு அது வழங்கியது. அரை ஜனநாயக, அரை மேலாதிக்க, அரை பாசிஸ அமைப்பு என்று பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை விவரிக்கலாம். உதாரணத்துக்கு, 1928 பத்ரோலி சத்தியாக்கிரகம், 1930 கேதா வரி கொடா போராட்டம் ஆகியவற்றின்போது காவல்துறை இருட்டியபிறகு ஒருவருடைய வீட்டுக்குள்ளும் நுழையாது. எந்தப் பொருளையும் கைப்பற்றாது. அடக்குமுறையிலும் ஒருவித நியாய உணர்வு இருந்ததை இது காட்டுகிறது.

பிரிட்டனால் முழு அடக்குமுறையை இந்தியாவில் ஏவிவிடமுடியாமல் போனதற்குக் காரணம் அடிப்படையில் அது ஒரு ஜனநாயக அரசு என்பதுதான். பிரிட்டனில் உள்ள அரசு இந்தியாவில் நடைபெறும் தனது காலனி ஆட்சியைக் குறித்து தன் மக்களுக்கு அவ்வப்போது தகவல்கள் சொல்லவேண்டிய நிலையில் இருந்தது. தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டால் அது பிரிட்டனில் கடும் முரண்பாட்டைத் தோற்றுவிக்கும். மேலும், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான உணர்வும் பொதுவில் பரவிவந்த சமயம் அது. லேபர் கட்சியின் செல்வாக்கும் வளர்ந்து வந்த தருணம். பிரிட்டனில் இருந்த ஆளும் வர்க்கத்தினர் பலரும் லிபரல் பள்ளிச்சூழலில் பயின்றவர்கள் என்பதால் மனிதத்தன்மையற்ற முறையில் காலனிகள் நிர்வகிக்கப்படுவதை அவர்களால் ஏற்கமுடியவில்லை. இவை போக, இந்தியாவின் பரப்பளவை பிரிட்டனால் தொடர்ச்சியாகக் கட்டுப்படுத்தி வைக்கமுடியவில்லை.

தடியடியில் சிக்குண்டு சிறையில் இருந்த சுதந்தரப் போராளிகள் பலரும்கூட பிரிட்டனின் சிவில் தன்மையை ஒத்துக்கொள்ளவே செய்தனர். ஹிட்லரையோ ஜார் மன்னரையோ எதிர்த்து இப்படி அகிம்சைப் போராட்டத்தை நடத்தமுடியாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் இந்த இயல்புகளை காந்தி சரியாகப் புரிந்து வைத்திருந்தார். பிரிட்டனின்அடக்குமுறையில் பாசிசத்தின் கூறுகள் தென்பட்டபோதும் பாசிஸத்திடம் இருந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வேறுபடுகிறது என்று காந்தி கருதினார். அவருடைய போராட்ட உத்திகள் இத்தகைய புரிதல்களில் இருந்தே தோன்றின.

சீனா, லத்தின் அமெரிக்கா, அயர்லாந்து, இத்தாலி, போலந்து, துருக்கி என்று பல நாடுகள் ராணுவ பாதையைத் தேர்ந்தெடுத்து விடுதலைப் போராட்டத்தை நடத்திவந்தபோது பிரிட்டனின் காலனியாதிக்கம் பற்றிய சரியான புரிதலைக் கொண்டிருந்ததால் காந்தி அகிம்சையைத் தனது ஆயுதமாகத் தேர்ந்தெடுத்தார். மக்களின் அற உணர்வுகளைத் தட்டியெழுப்பிய காந்தி அநீதிக்கு எதிரான போராட்டமாக விடுதலைப் போராட்டத்தைக் கட்டமைத்தார். உயர்வான அற விழுமியங்களை அவர் பேணியதற்குக் காரணமும் இதுதான். அரசியல் அல்லது பொருளாதார கோரிக்கைகளைக்கூட அவர் அறம் சார்ந்த பிரச்னைகளாக மாற்றியமைத்தார். பிரிட்டிஷ் ஆட்சிமுறை தீங்கானது; ஆனால் பிரிட்டிஷார் தீங்கானவர்கள் அல்லர் என்று திரும்பத்திரும்பச் சொல்லிவந்தார் காந்தி. தீங்கை எதிர்க்கவேண்டும், ஆனால் மனிதர்களை எதிர்க்கவேண்டியதில்லை என்றார்.

ஓயாத தொடர் போராட்டங்களில் அல்ல, அவ்வப்போது இடைவெளி விட்டு, சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் போராட்டத்தைத் தொடங்கும் உத்தியைக் காந்தி சிபாரிசு செய்தார். பலப்படுத்திக்கொள்ள அவ்வப்போது சிறிது ஒய்வு மக்களுக்குத் தேவைப்படும் என்று அவர் நம்பினார். மக்கள் திரள் எப்போதும் ஒன்றுபோல் இருக்காது, ஒரே விதமான தீவிரத்தன்மை இருக்காது என்பதால் இந்த ஏற்பாடு. திடீரென்று பெரும் அலையாகக் கிளம்பி பிறகு சட்டென்று ஒரு கட்டத்தில் காணாமல் போய்விடும் போராட்ட முறை பயன்படாது; நீண்ட, நெடிய போராட்டத்துக்கு இடையிடையில் அமைதி அவசியம் என்று காந்தி நினைத்தார்.

அகிம்சையை காந்தி முன்மொழிந்தது  பல வகைகளில் காங்கிரஸுக்கு அனுகூலமானதாக இருந்தது. பெருவாரியான மக்கள் விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டதற்குக் காரணம் அகிம்சை என்பது அவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய, அவர்களால் சுலபமாக உடன்படக்கூடிய ஒரு செயல் உத்தியாக இருந்தது. வன்முறைப் போராட்டத்தைக் கையில் எடுத்திருந்தால் குறைவானவர்களே முன்வந்திருப்பார்கள்; இழப்பும் அதிகமாக இருக்கும். பிரிட்டனின் ஒடுக்குமுறை மேலும் தீவிரமடையவே செய்யும். தனிப்பட்ட முறையில் காந்திக்கு அகிம்சை என்பது அவருக்கு நெருக்கமான ஒரு தத்துவம். மற்றவர்கள் அவ்வாறு நினைக்கவேண்டியதில்லை; நடைமுறை சாத்தியமுள்ள கருவியாக, குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு போர்முறையாக அகிம்சையை அவர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்றார் காந்தி. ஏழை மக்களும், பெண்களும், விவசாயிகளும் போராட முன்வந்ததற்குக் காரணம் அகிம்சையே.

மிக முக்கியமாக, வெகுஜன மக்களின் அகிம்சை போராட்டம் பிரிட்டனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அவர்களுடைய அற உணர்வுகளை அது கிளறிவிட்டது. நிராயுதபாணிய மக்கள்மீது ஆயுதத்தை ஏவுவது அவர்களுக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியதோடு உலகின் பார்வையில் பிரிட்டனைச் சிறுமைப்படுத்தவும் செய்தது. அதே சமயம் அப்பட்டமான முறையில் சட்டத்தை உடைக்கும் மக்களை அவர்களால் அமைதியாக வேடிக்கை பார்க்கவும் முடியவில்லை. அமைதியாக ஊர்வலம் சென்றுகொண்டிருந்தவர்கள்மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டபோது சுற்றியிருந்தவர்கள் தாமாகவே வெகுண்டெழுந்து விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அகிம்சை ஒரு வலிமையான போராட்ட உத்தியாக மாற்றம் பெற்றது. ஒரே சமயத்தில் அது இந்தியர்களை ஒருவிதமாகவும் பிரிட்டிஷாரை இன்னொருவிதமாகவும் பாதித்தது.

அதே சமயம், அகிம்சையைத் தவிர காந்திக்கும் இந்தியாவுக்கும் அப்போது வேறு மாற்று இருக்கவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும். 1857 புரட்சிக்குப் பிறகு மக்களிடம் இருந்த ஆயுதங்களை பிரிட்டிஷ் அரசு கைப்பற்றிவிட்டதால் மக்கள் இயல்பாகவே நிராயுதபாணியாக இருந்தனர். ஒருவேளை அவர்கள் விரும்பி ஆயதப் போராட்டத்தில் ஈடுபட முன்வந்திருந்தாலும் அவர்களால் பெரிய அளவில் ஆயுதத்தைத் திரட்டியிருக்கமுடியாது. ஆயுதம் எப்படியோ கிடைத்துவிட்டது என்று வைத்துக்கொண்டாலும் அதைப் பிரயோகிப்பதற்கான பயிற்சி அவர்களிடம் இல்லை. மேலும், மக்கள் ஒருவேளை ஆயுதப் பாதையைத் தேர்ந்தெடுத்து பெருமளவில் திரண்டு வந்து போரிட்டால் வெகு சுலபமாக காலனி அரசால் அவர்களை எதிர்கொண்டு வீழ்த்தியிருக்கமுடியும். தங்கள் ஒடுக்குமுறையை நியாயப்படுத்தியிருக்கவும் முடியும்.

தாமஸ் கே என்னும் பிரிட்டிஷ் ஐசிஎஸ் அதிகாரி அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு சொல்கிறார். 'திருப்பி அடிக்காத சாதாரண ஆண்கள், பெண்கள்மீது லத்தி சார்ஜ் நடத்தியது எங்கள் அற உணர்வைக் கடுமையாகப் பாதித்தது.' காந்தியின் வெற்றி இதுதான்.

முக்கியமாக, வன்முறை அற்ற போராட்டம் என்பதாலேயே இந்திய விடுதலைப் போராட்டம் புரட்சிகரப் போராட்டம் அல்ல என்று சொல்லிவிடமுடியாது. எத்தகைய வழிமுறையை அல்லது உத்தியைக் கடைபிடிக்கிறது என்பதை மட்டும் வைத்து அந்தப் போராட்டத்தை மதிப்பிட்டுவிடக்கூடாது. அதன் நோக்கம் என்ன என்பதைப் பார்க்கவேண்டும். அந்தப் போராட்டம் யாரை அல்லது எதை எதிர்த்து நடத்தப்படுகிறது என்று பார்க்கவேண்டும். எத்தகைய அமைப்புமுறையை அது அகற்றவிரும்புகிறது என்பதைக் கவனிக்கவேண்டும். அப்படிப் பார்க்கும்போது சந்தேகமில்லாமல் இந்திய விடுதலைப் போராட்டம் புரட்சிகரமானதுதான்.

(தொடரும்)

No comments: