July 10, 2015

ரோஹிங்கியா முஸ்லிம்கள் : ஓர் அறிமுகம்

இந்த ஆண்டு நான் எழுதிய முதல் புத்தகம்,ரோஹிங்கியா முஸ்லிம்கள் மின் வடிவில் வெளிவரவிருக்கிறது. கிழக்கு பதிப்பகம் வெளியிடும் இந்தப் புத்தகம் பற்றிய மற்ற விவரங்களை அளிப்பதற்கு முன்னால் புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்.

0


மே 2015ல் இந்தோனேஷியா, மலேசியா கரையோரப் பகுதிகளில் சில கப்பல்கள் ஒன்றன் பின் ஒன்றாக மிதந்து வந்து கரை ஒதுங்கியபோது இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான பிரச்னை ஒன்றும் உலகின் கவனத்துக்கு வந்து சேர்ந்தது. இந்தக் கப்பல்களில் இருந்து பொலபொலவென்று உதிர்ந்த அகதிகளால் கரையை நோக்கி நகரக்கூட முடியவில்லை. கிட்டத்தட்ட எல்லோருமே எலும்பும் தோலுமாகக் காட்சியளித்தனர். சிலர் முழுமையான எலும்புக்கூடாகவே மாறியிருந்தனர். கப்பலைவிட்டு இறங்கும்போதே நடுக்கத்துடன் கீழே விழுந்த பலர், தவழ்ந்து தவழ்ந்துதான் முன்னேறியிருக்கிறார்கள். இந்த வாய்ப்பும்கூட கிடைக்காமல் நடுக்கடலில் உயிரை விட்டவர்களின் எண்ணிக்கை தெரியப்போவதேயில்லை. ‘மிதக்கும் சவப்பெட்டிகள்’ என்று மிகச் சரியாகவே இந்தக் கப்பல்களை வர்ணித்திருக்கிறது ஐக்கிய நாடுகள் சபை.

சில படகுகளை மீனவர்களும் காவல் படையினரும் கயிறு கட்டி இழுத்து கரை சேர்த்திருக்கிறார்கள். அவ்வாறு மீட்கப்பட்ட ஒரு கப்பலில் இருந்த 800 பயணிகளில் ஒருவர் மனு அப்துல் சலாம். தன் சகோதரனின் மரணத்தை அருகில் இருந்து கண்ட இந்த இளம்பெண் ‘தி கார்டியன்’ இதழுக்கு அளித்த பேட்டியில் கூறிய வார்த்தைகள் இவை. ‘இந்தப் படகுப் பயணம் இவ்வளவு கொடூரமானதாக இருக்கும் என்று தெரிந்திருந்தால் நாங்கள் பர்மாவிலேயே செத்துப்போயிருப்போம்.’

இறந்தவர்கள், பாதி உயிரோடு ஆங்காங்கே கரையேறியவர்கள் போக இன்னொரு பிரிவு அகதிகள் நடுக்கடலில் இன்னமும் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிறது தி கார்டியன். இவர்களுடைய எண்ணிக்கை சில ஆயிரங்களைத் தொட்டுவிடும். வங்காள விரிகுடாவிலும் அந்தமான் கடல் பகுதியிலும் இவர்களுடைய கப்பல்கள் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கின்றன. கைவசம் கொண்டுவந்திருந்த உணவுப் பொருள்கள், குடிநீர் அனைத்தும் தீர்ந்துவிட்ட நிலையில், பசியும் அச்சமும் அவர்களைக் கொன்று தின்றுகொண்டிருக்கிறது. இடமில்லை என்கிறது தாய்லாந்து. வசதியில்லை என்கிறது மலேசியா. ஏற்கெனவே எங்களுக்கு ஆயிரம் பிரச்னைகள் என்கிறது இந்தோனேஷியா. நடுக்கடலில் நடக்கும் இந்த பிங் பாங் விளையாட்டை அதிர்ச்சியுடனும் அறச்சீற்றத்துடனும் ஆற்றாமையுடனும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்கிறோம்.

பர்மாவைவிட்டு வெளியேறும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலைமை இப்படி என்றால் வெளியேறாதவர்களின் நிலைமை இதைவிடவும் கொடுமையானது. ரோஹிங்கியாவை ஏற்க இந்தோனேஷியாவும் தாய்லாந்தும் மலேசியாவும் மறுப்பதற்காவது ஒரு நியாயம் (அதுவே அநியாயம் என்பது வேறு விஷயம்) இருக்கிறது. நீங்கள் வெளிநாட்டவர்கள். உங்களுக்கு அடைக்கலம் அளிக்கவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று அவர்களால் வாதாட முடியும். அதைத்தான் அவர்கள் செய்தும் வருகிறார்கள். ஆனால் பர்மாவும் அதே காரணத்தையே ரோஹிங்கியாக்களிடம் கூறுகிறது. தாய்லாந்து அரசு எப்படி ரோஹிங்கியாக்களை அந்நியர்களாகப் பார்க்கிறதோ அப்படிதான் பர்மாவும் அவர்களைப் பார்க்கிறது. இத்தனைக்கும் ரோஹிங்கியாக்கள் தலைமுறை தலைமுறையாக பர்மாவில் வசித்து வருபவர்கள். இதுவே எங்கள் தாய்நாடு என்று கூறுபவர்கள். பர்மா இதனை ஏற்பதில்லை. தவிரவும், அந்நியர்களாக அல்ல, துரத்தப்படவேண்டிய, அழிக்கப்படவேண்டிய எதிரிகளாகவே ரோஹிங்கியா முஸ்லிம்களைக் கருதுகிறது பர்மா.

எதனால் ஏற்பட்ட வெறுப்புணர்வு இது? பர்மாவும்  அந்நிய நாடு என்றால் ரோஹிங்கியா முஸ்லிம்களின் தாய்நாடு எது? அல்லது அப்படியொன்று இல்லாமலா அவர்கள் இவ்வளவு காலம் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்? உயிரைப் பணயம் வைத்துத் தங்கள் சொந்த நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது அவர்களுக்கு? ஏன் அண்டை நாடுகள் அவர்களுக்குப் புகலிடம் கொடுக்க மறுக்கின்றன? பர்மாவிலும் பிரச்னை; பர்மாவைவிட்டு வெளியேறினாலும் பிரச்னை என்னும் நிலையில் ரோஹிங்கியாக்கள் என்ன செய்யவேண்டும் என்று பர்மா எதிர்பார்க்கிறது?

போதுமான அளவுக்கு மட்டுமல்ல, அதைவிடக் கூடுதலாக சர்வதேச நாடுகளின் கவனத்தைக் கவர்ந்துள்ள பிரச்னை இது. உலகில் இன்று அதிகம் ஒடுக்கப்படும் சிறுபான்மை குழுக்களில் ரோஹிங்கிய முஸ்லிம்களும் அடங்குவர் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கிறது. அமெரிக்கா தொடங்கி பல மேற்கத்திய நாடுகளும் சர்வதேச தன்னார்வுத் தொண்டு நிறுவனங்களும் மனித உரிமை அமைப்புகளும் ரோஹிங்கியா பிரச்னை குறித்து கவலை தெரிவித்திருக்கின்றன. இருந்தும் பர்மிய அரசியல்வாதிகள் ஒடுக்குமுறையை நிறுத்திக்கொள்வதாக இல்லை.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மட்டுமல்ல, அந்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதப்படும் எதிர்க்கட்சித் தலைவரும்கூட ரோஹிங்கியா பிரச்னையைக் கையில் எடுக்கத் தயக்கம் காட்டுகிறார். உலகின் பிரபலமான அரசியல் கைதிகளில் ஒருவராக இருந்த ஆங் சான் சூச்சி கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளை வீட்டுச் சிறையில் கழித்திருக்கிறார். பர்மாவில் ராணுவ ஆட்சி எப்படியிருக்கும் என்பதை நேரடியாக உணர்ந்தவர் அவர். 2015 அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் சூச்சியின் நேஷனல் லீக் ஆஃப் டெமாக்ரஸி போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. இருந்தும் பர்மாவின் முக்கியப் பிரச்னையொன்றைப் பற்றி எந்தவிதத் தெளிவான நிலைப்பாட்டையும் அவர் இதுவரை எடுக்கவில்லை. இதுவே அவருக்கு வசதியாக இருக்கிறது போலும்.

வேறு பலருக்கும்கூட இப்படி அமைதியாக இருப்பதே வசதியாக இருக்கிறது. ரோஹிங்கியாக்கள் போரை மட்டுமல்ல; இத்தகையை சந்தர்ப்பவாத அமைதியையும் சேர்த்தே வெறுக்கிறார்கள்.

0

No comments: