October 19, 2015

வரலாறு நம்மை விடுதலை செய்யும்


இந்திய வரலாறு இன்று எப்படிக் கற்பிக்கப்படுகிறது? இதற்கு முன்னால் எப்படிக் கற்பிக்கப்பட்டது? புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றை எப்படிப் புரிந்துகொள்வது? கற்பனைக் கதைகள் என்று ஒதுக்கிவிடவேண்டுமா அல்லது நிஜத்தில் நடந்தவை என்று ஆராதிக்கவேண்டுமா? அல்லது அவற்றில் இருந்தும் வரலாற்றை வெளியில் கொண்டு வரவேண்டுமா? அப்படியானால் எப்படி? வரலாற்றைத் திருத்தியும் மாற்றியும் எழுதும் போக்கு வளர்ந்து வரும் இன்றைய சூழலில் நாம் செய்யவேண்டியது என்ன?
 கோழிக்கோடு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வரலாற்றுத் துறைப் பேராசிரியர் கே.என். கணேஷ் சென்ற வாரம் சென்னை வந்திருந்தபோது இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் உரையாற்றினார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்த அவருடைய உரையின் மிகவும் சுருக்கப்பட்ட வடிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பண்டைய புராணங்களில் இருந்தும் இலக்கியங்களில் இருந்தும் மிக விரிவான உதாரணங்களை அவர் எடுத்தாண்டார். எனக்கு இவற்றில் பரிச்சயம் இல்லை என்பதால் அந்த இரண்டு மணி நேர உரையை ஓரளவுக்குப் புரிந்துகொள்ள இரண்டு, மூன்று தினங்களுக்கு மேல் பிடித்தது. கீழே உள்ள எழுத்து வடிவத்தில் பிழைகள் தென்பட்டால் நானே முழுப் பொறுப்பு.  நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த வெங்கடேஷ் ஆத்ரேயாவுக்கு என் நன்றி.

வரலாற்றின் வரலாறு

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருக்கவேண்டும் என்றே அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் விரும்பினார்கள். இருந்தாலும் 1976 எமர்ஜென்சி காலகட்டத்தில்தான் மதச்சார்பின்மை என்னும் பதம் அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. இந்தியா ஒரு சோஷலிஸ்ட் நாடாக இருக்கும் என்றும் அப்போது திருத்தம் செய்யப்பட்டது. ஆனால் நிஜத்தில் மதச்சார்பின்மையும் சோஷலிசமும் சிறிது சிறிதாக விலகிச் செல்ல ஆரம்பித்தன.

முன்னதாக, ஜவாஹர்லால் நேரு ஆட்சி காலத்தில் இந்தியா ஒரு வகையில் லிபரல் நாடாக இருந்தது என்று சொல்லலாம். அவ்வப்போது சில எதிரான நிகழ்வுகளும் நடந்தன என்பதும் உண்மை. உதாரணத்துக்கு, கேரளாவில் ஆட்சி கலைக்கப்பட்ட சம்பவத்தைச் சொல்லலாம். ஆனால் பெருமளவில் லிபரல் தன்மைகள் நீடிக்கவே செய்தன

தேச மறுகட்டுமானம் நடைபெற்றபோது பொருளாதாரத் துறையில் திட்டக் கமிஷன், ஐந்தாண்டு திட்டம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன . உயர் கல்வியில் அறிவியல் தொழில்நுட்பத்துக்கு மதிப்பு அளிக்கப்பட்டது. கல்வித் துறையை, குறிப்பாக கல்வி நிலையங்களில் கற்பிக்கப்பட்ட  வரலாற்றுப் பாடங்களை ஆராயும்போது சில விஷயங்கள் தெளிவாகின்றன. ஆரம்பத்தில் இருந்தே வரலாறு, வரலாற்றுப் பாத்திரத்தை வகிக்காமல் சித்தாந்தப் பாத்திரத்தையே வகித்து வந்துள்ளது. இந்தியாவின் கடந்த காலம் எப்படி இருந்தது என்று அவர்கள் கற்றுக்கொடுக்கவில்லை. எப்படி இருந்திருக்கும் அல்லது இருந்திருக்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார்கள். இந்தப்  போக்கு நிலவியதற்குக் காரணம் அப்போதிருந்த வரலாற்றுப் புத்தகங்கள்.

வின்சண்ட் ஸ்மித் எழுதிய The Oxford History of India 1920ல் வெளிவந்ததுஆர்.சி. மஜூம்தார், ராய்சவுதுரி, தத்தா மூவரும் இணைந்து The Advanced History of India என்னும் புத்தகத்தை 1946ல் கொண்டுவந்தார்கள். 1977 வாக்கில் வி.டி. மகாஜன் ஒரு இந்திய வரலாற்றைக் கொண்டுவந்தார். இந்த மூன்று புத்தகங்களும் நீண்ட காலத்துக்குச் செல்வாக்கு செலுத்தின. ஸ்மித் இந்திய வரலாற்றுக்கு ஒரு சித்தாந்தத்தைக் கொடுத்தார். மகாஜன் தகவல்களைச் சேர்த்தார். மஜூம்தார் அதனை அலங்கரித்தார். இந்திய வரலாறு என்றால் இந்த மூவரும்தான் என்பதே அன்றைய நிலை. தென் இந்தியாவின் நிலைமை இன்னமும் மோசம். 1964 வாக்கில்தான் நீலகண்ட சாஸ்திரி தென் இந்திய வரலாற்றை எழுதினார். அதுவரை தென் இந்தியாவுக்கு வரலாறு இருந்ததே பலருக்குத் தெரியாது.

இந்திய வரலாறு என்பது என்ன? வேத நாகரிகம். உபநிஷத் காலம். இதிகாச காலம். ராமாயணம், மகாபாரதம். மெளரியப் பேரரசு, குப்தப் பேரரசு. அதற்குப் பிறகு வீழ்ச்சி ஆரம்பித்துவிடுகிறது. ஆம், அப்படித்தான் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. ராஜராஜ சோழன் வருகிறார். பிறகு முகமது கஜினி, கோரி. படையெடுப்பும் ஆக்கிரமிப்பும் தொடர்கின்றன. முஸ்லிம் ஆட்சி அமைகிறது. கிபி1000 தொடங்கி பிளாஸி யுத்தம் வரையிலான காலகட்டத்தை சிலர் முஸ்லிம் ஆட்சிக்காலாம் என்று வகைப்படுத்துகின்றனர்.

பிறகு, ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலம் தொடங்கிவிடுகிறது. முஸ்லிம்களின் ஆட்சியை வெற்றிகரமாக முடித்து வைத்தவர் என்றொரு பெயர் ராபர்ட் கிளைவுக்கு வழங்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியுடன் சேர்ந்து வரலாறும் ஒரு புதிய போக்கில் நகர ஆரம்பித்தது. ஜேம்ஸ் மில் எழுதிய The History of British India (1817) அந்த வரிசையில் முக்கியமானது. இந்திய வரலாற்றைப் புரிந்துகொள்ள மில் மூன்று காலகட்டங்களை அறிமுகப்படுத்தினார். இந்து காலகட்டம், முகமதியர்கள் காலகட்டம், பிரிட்டிஷ் காலகட்டம். மில்லுக்குப் பிறகு வந்தவர்களும் அதற்குப் பிறகு வந்தவர்களும் நீண்ட நெடுங்காலத்துக்கு இந்த வழக்கத்தைப் பின்பற்றினர். 

இத்தகைய அணுகுமுறைக்கு எதிர்வினையாக தேசியவாதப் போக்குடன் கூடிய வரலாறு எழுதப்பட ஆரம்பித்தது. முதலில் இந்திய தேசிய காங்கிரஸ் தனது அதிகாரபூர்வமான அல்லது அதிகாரபூர்வமற்ற வரலாற்றை உருவாக்கத் தொடங்கியதுதாரா சந்த் என்பவர் History of the Freedom Movement in India (1967) என்னும் புத்தகத்தை எழுதினார்.  இதில் சுதந்தரப் போராட்டம், இந்திய தேசிய காங்கிரஸின் தோற்றம், வளர்ச்சி ஆகியவை அதீதமான முறையில் புகழப்பட்டிருந்தன.

ஆர்.சி. மஜூம்தாரின் புத்தகத்தையும் இந்த வரிசையில்தான் சேர்க்கவேண்டும். இந்திய வரலாறு என்று இதுவரை நாம் புரிந்துவைத்திருப்பது இந்திய கலாசாரத்தையே என்று அறிவித்தார் இவர். இதற்கு நேருவின் வாதத்தை மஜூம்தார் பயன்படுத்திக்கொண்டார். தனது Discovery of India புத்தகத்தில் நேரு, இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சுட்டிக்காட்டி வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவைப் புரிந்துகொள்வதற்கான அளவுகோல் என்று வாதிட்டிருப்பார். பல்வேறுபட்ட மதங்களும் நம்பிக்கைகளும் ராஜ்ஜியங்களும் கலாசாரங்களும் கருத்தாக்கங்களும் ஒன்றுசேர்ந்துதான் இந்திய தேசத்தை உருவாக்கியிருக்கின்றன என்றார் நேரு. வேற்றுமையில் ஒற்றுமை என்னும் பண்புதான் தேசிய விடுதலை இயக்கத்தைக் கட்டமைத்து இறுதியில் சுதந்தரத்தையும் பெற்றுக்கொடுத்தது.

மஜும்தார் நேருவின் வாதத்தை மாற்றியமைத்தார். இந்தியாவில் பல்வேறு மதப் பிரிவினரும் பல்வேறு கலாசாரங்களும் ஒன்றிணைந்து வாழ்கிறது என்றால் அதற்குக் காரணம் இந்து மக்களின் பெருந்தன்மைதான் என்றார் அவர். ஆனால் இந்தப் பெருந்தன்மை உண்மையில் இந்து மதத்துக்கு உள்ளேளே நிலவவில்லை என்பதுதான் உண்மை. இந்து மன்னர்கள் என்று சொல்லப்படுபவர்களில் எவ்வளவு பேர் தலித்துகளாக, ஆதிவாசிகளாக இருந்துள்ளனர்?

கோசாம்பிக்கு முன், கோசாம்பிக்குப் பின்

இந்தப் போக்கில் இருந்து மாறுபட்ட வகையில் சிலர் எழுதினர்.அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், கே.எம். அஷ்ரஃப் (Life and Conditions of the People of Hindustan: 1200-1500 AD), நிர்மல் குமார் போஸ், பூபேந்திரநாத் தத்தா ஆகியோர். தத்தா, விவேகானந்தரின் சகோதரர் ஆவார். இவர்களை ஒரு வகையில் கோசாம்பிக்கு முன்னோடிகள் என்று அழைக்கலாம்.

டி.டி. கோசாம்பி அடிப்படையில் ஒரு கணிதப் பேராசிரியர். ஆனால் பல வரலாற்று ஆசிரியர்களால்கூட அளிக்கமுடியாத அசலான, அபூர்வமான பங்களிப்பு அவருடையது. இந்திய வரலாறு என்பது இதிகாசப் புராணங்கள் அல்ல; அது ஆட்சியாளர்களின் வரலாறும் அல்ல. மதத்தை முன்னிலைப்படுத்தி, மதத்தைக் கொண்டு மக்களைப் பாகுபடுத்தி எழுதப்படுபவையும் அல்ல. இந்திய வரலாறு என்பது நிஜத்தில் இந்திய மக்களின், உழைக்கும் மக்களின் வரலாறு. விவசாயம் செய்த, கால்நடைகளைப் பராமரித்த, வேட்டையாடிய, இன்னபிற வேலைகளைச் செய்துவந்த சாமானியர்களின் வரலாறு அது.

கோசாம்பியின் Myth and Reality மிக முக்கியமான ஒரு புத்தகம். இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமான ஒரு படைப்பும்கூட. அவருக்கு முந்தைய வரலாற்றாசிரியர்கள் எவரிடமும் இல்லாத பார்வை கோசாம்பியிடம் இருந்தது. இந்தியப் பாரம்பரியத்தையும் புராண இதிகாசங்களையும் அவர் முற்றிலும் புதிய முறையில் ஆய்வு செய்து பல புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் அனைத்தையும் கட்டுடைத்துப் பார்த்தார். புராணக் கதைகளிலும் நீதி நூல்களிலும் கதைகளிலும் பாடல்களிலும் ஒளிந்திருக்கும் வரலாற்றுக்கு உயிர் கொடுக்க முனைந்தார்.

உதாரணத்துக்கு இந்த மகாபாரதக் கதையை எடுத்துக்கொள்வோம். பரிட்சித்து என்னும் அரசர் ஒரு நாகத்தால் தீண்டப்பட்டு கொல்லப்படுகிறார். இவருடைய மகன் ஜனமேஜயன். உன் தந்தையைப் போலவே நீயும் நாகத்தால் தீண்டப்படுவாய் என்று இவர் சபிக்கப்பட்டிருந்தார். அதனால் ஜனமேஜயன் அனைத்து நாகங்களையும் பலிகொடுக்க முடிவெடுத்தார். சூரியனுக்குக் கீழே உள்ள அனைத்து நாகங்களையும் கொல்லும் விதமாக சர்ப சாத்ரா என்னும் பலிச் சடங்கைத் தொடங்கிவைத்தார்ஆனால் தட்சகன் என்னும் நாகம் மட்டும் தப்பி சூரியனுக்கு மேலே சென்று இந்திரனின் சிம்மாசனத்துக்கு அருகில் மறைந்துகொள்கிறது. இறுதியில் இந்திரனிடம் மன்றாடி தட்சகனைக் கைப்பற்றுகிறார்கள். ஜனமேஜயன் தட்சகனைப் பலிகொடுக்க முனையும்போது ஒரு முக்கியமான திருப்பம் ஏற்படுகிறது.

என்னை எதற்காக நீ பலியிடுகிறாய் என்று ஜனமேஜயனைப் பார்த்து கேட்கிறது தட்சகன். திகைத்து பின்வாங்கிய ஜனமேஜயன் தன்னுடைய தந்தை ஒரு நாகத்தால் தீண்டப்பட்டதைச் சொல்கிறார். அப்படியானால் உன் தந்தையைக் கொன்ற நாகத்தைக் கொல்வதற்குப் பதில் எல்லா நாகங்களையும் எதற்கு நீ கொல்லவேண்டும் என்று திருப்பிக் கேட்கிறது தட்சகன்ஜனமேஜயனால் இதற்குப் பதில் அளிக்கமுடியவில்லை. உண்மையில் அவருக்கு என்ன நடந்தது என்றே சரியாகத் தெரியவில்லை. எதற்காக சாபம் இடப்பட்டது? இந்தப் பாம்பு ஏன் இப்படி என்னை எதிர்க்கிறது? முழு கதையையும் தெரிந்துகொள்ள அவர் விரும்புகிறார். மகாபாரதம் தொடங்குகிறது.

கோசாம்பி இங்கே சில கேள்விகளை எழுப்புகிறார். யார் இந்த தட்சகன்? சமஸ்கிருதத்தில் தக்ஷக் என்பதன் பொருள் நாகம் அல்ல. அப்படியானால் தச்சுவேலை செய்பவரை இது குறிக்கிறதா? தனது ஆய்வை நாகர்களை நோக்கி குவிக்கும் கோசாம்பி எங்கெல்லாம் நாகங்கள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன என்று ஆராய்கிறார். சிவபெருமானின் கழுத்தைச் சுற்றி படர்ந்திருக்கும் வாசுகி ஒரு நாகம். அர்ஜுனனின் மகன்களில் ஒருவரான பப்ருவாகனா இன்னொரு நாகம். இப்படி பல நாகங்கள் வருகின்றன.
இந்த நாகங்களுக்கு நாகமாக இருப்பதைத் தவிர வேறு பணிகளும் இருக்கின்றன. வேறு அடையாளங்களும் இருக்கின்றன. நாக வழிபாடு என்பது இருந்துள்ளது. நாகர்கள் என்னும் பிரிவினர் இருந்துள்ளனர். இந்து புராணங்களில் மட்டுமல்ல கிரேக்கத்திலும் இன்னபிற மொழிகளிலும்கூட நாக வழிபாடு பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. இவற்றுக்கு இடையில் உள்ள ஒற்றுமைகள் என்னென்ன?

இப்படி நாகர்கள் பற்றி மட்டுமல்ல, ராமர், கிருஷ்ணர் என்று தொடங்கி அனைத்துக் கடவுள்களையும் அனைத்து இதிகாசப் புராணச் சம்பவங்களையும் விரிவான தளத்தில் பொருத்தி ஆராய்ந்தார் கோசாம்பி. மகாபாரதத்தில் ஒரு கிருஷ்ணர் வருகிறார். பகவத் கீதையில் ஒரு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார். உபநிஷத்தில் ஒரு கிருஷ்ணர் வருகிறார். துவாராகாவில் ஒரு கிருஷ்ணர். பிருந்தாவனத்தில் ஒருவர். நாராயணா என்றொருவர். விஷ்ணு என்றொருவர். வாசுதேவர் பிறிதோரிடத்தில் வருகிறார். கோபிகர்களுடன் ஒரு கிருஷ்ணர் இருக்கிறார். திருமால், மாயோன் என்றெல்லாம் வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே கிருஷ்ணர்களா அல்லது வெவ்வேறானவர்களா? அவர்களிடம் உள்ள ஒற்றுமை என்ன? கிருஷ்ணர் நீலமாக இருக்கிறார். அவர் மஞ்சள் ஆடை அணிகிறார். ஏன் குறிப்பாக மஞ்சள்? இதேபோல் மஞ்சள் ஆடை அணிபவர்கள் பௌத்த பிக்குகள் அல்லவா? இதிலிருந்து ஏதேனும் புலப்படுகிறதா?

சிந்து சமவெளி நாகரிகத்தில் எத்தகைய மத நம்பிக்கை நிலவியது? பௌத்தம் எப்படித் தோன்றியது வீழ்ந்தது? ஆரிய படையெடுப்பு உண்மையில் நிகழ்ந்ததா? அனைத்தையும் அவர் ஆராய்ந்தார். புராணங்களில் ஏதேனும் தகவல் கிடைக்குமா? ஒப்புநோக்கி ஆய்வு செய்ய ஏதேனும் கூறுகள் தென்படுமா? அப்போதைய வாழ்க்கை முறை பற்றிய பதிவுகள் அவற்றில் மறைந்து கிடக்கக்கூடுமா? என்றெல்லாம் அவர் ஆராய்ந்தார். புனிதத்தன்மையை விலக்கிவைத்துவிட்டு ஒரு பிரதியாக அவர் புராணங்களை அணுகி ஆராய்ந்தார். அவருடைய ஆய்வுமுறை அறிவியல்ரீதியில் அமைந்திருந்தது.

ஒருவர் எதற்காக புராணங்களைப் படிக்கவேண்டும் என்று கேட்டால் கோசாம்பியின் பதில் இதுவாகத்தான் இருக்கும். ஆராய்வதற்காக அதனைப் படியுங்கள். அதில் வரலாறு இருக்கிறதா என்று பாருங்கள். கற்பனைக் கதைகளில் வரலாறு இருக்குமா? கோசாம்பி அளிக்கும் விடை இது. எந்தக் கதையையும் முழுக்க முழுக்க கற்பனையில் உருவாக்கிவிடமுடியாது. எல்லாக் கற்பனைகளிலும் ஒரு சிறு பகுதி உண்மையாவது இருக்கும். அதுவே அந்தக் கதைகளின் அடிப்படையாகவும் இருக்கும். காற்றில் இருந்து ஒரு புராணத்தை உருவாக்கி அளித்துவிடமுடியாது. வெறுமையில் இருந்து கதைகள் உருவாவதில்லை.

வரலாறும் இந்துத்துவமும்

கே.என். கணேஷ்
ஆனால் இன்று ஆட்சியில் இருக்கும் இந்துத்துவ அரசு இந்திய வரலாற்றைத் திரிக்கவும் மாற்றவும் திருத்தவும் முயற்சி செய்துவருகிறது. அறிவியல் ஆய்வுமுறைக்கு நேர் எதிரானவற்றை, அறிவியல் உண்மைகளுக்கு நேர் எதிரானவற்றை வரலாறு என்னும் பெயரில் நமக்குக் கொடுக்கத் தொடங்கியுள்ளது.

முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்து கோயில்களை இடித்தனர் என்று நமக்குச் சொல்லப்படுகிறது. இது உண்மை என்றால் ஆம், உண்மைதான். அப்படி நடக்கத்தான் செய்தது. ஆனால் அவர்கள் எதற்காக கோயில்களை இடித்தார்கள்? எல்லாக் கோயில்களையும் இடித்தார்களா? இல்லை. பெரிய கோயில்களை மட்டுமே தாக்கினார்கள். அந்தக் கோயில்களிலும்கூட கடவுள் சிலைகள் எதுவும் சேதப்படுத்தப்படவில்லை. அப்படியானால் அவர்களுடைய நோக்கம் என்ன? கொள்ளையடிப்பதுதான். கோயில்களில் பெரும் செல்வம் குவிந்திருக்கும் என்பதை அறிந்திருந்த காரணத்தால் இத்தகைய கொள்ளைகள் நடைபெற்றன. இன்னொன்றையும் நீங்கள் கவனிக்கவேண்டும். அப்போது கொள்ளை என்பது ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான்.

ஆனால் முஸ்லிம் ஆட்சியாளர்கள் கோயில்களை இடித்தார்கள் என்று கூக்குரல் இடுபவர்கள் இந்த உண்மையைச் சொல்வதில்லை. குத்புதின் அய்பக் இந்துக்களுக்கு நெருக்கமாக இருந்தார் என்று சொல்வதில்லை. அவர்களுக்கு முழு வரலாறு முக்கியமல்ல. வரலாற்றில் இருந்து சிலவற்றை மட்டும் வசதிக்கேற்றார்போல் தேர்ந்தெடுத்துக்கொடுப்பதுதான் அவர்களுடைய விருப்பம். அதுதான் அவர்களுடைய அரசியலுக்கு உதவுகிறது என்பதால் அதையே அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

கோசாம்பியின் அணுகுமுறைக்கு நேர் எதிராக, புராணங்களையும் இதிகாசங்களையும் பழங்கதைகளையும் வரலாறு என்னும் போர்வையில் இந்துத்துவ ஆட்சியாளர்களும் அவர்களைச் சார்ந்துள்ளவர்களும் அளித்து வருகிறார்கள்.

வரலாற்றுத் துறையைப் பொறுத்தவரை நாம் பல கட்டங்களைத் தாண்டி இந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறோம். தேசியவாத வரலாறு, பிரிட்டிஷாரின் வரலாறு, இந்து கலாசாரத்தை மட்டும் உயர்வானதாகப் பிடித்துக் காட்டும் வரலாறு, குறைபுரிதலுடன் எழுதப்பட்ட வரலாறு ஆகியவற்றைக் கடந்து அறிவியல்பூர்வமான ஆய்வுமுறைக்கு நாம் வந்திருக்கிறோம். கோசாம்பியைத் தொடர்ந்து ரொமிலா தாப்பர், டி.என். ஜா, இர்ஃபான் ஹபீப், ஆர்.எஸ். சர்மா என்று பலர் இத்தகைய ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்துத்துவ அரசியல்வாதிகள் நம்மை மீண்டும் பழைய நிலைக்கு இழுத்துச் செல்ல முயல்கிறார்கள்.

ராமாயணமும் மகாபாரதமும் அவை சொல்லப்பட்டவை போலவே உண்மையில் நிகழ்ந்தவை என்கிறார்கள். சிவாஜி இந்து மதத்தின் மாபெரும் வீரர் என்கிறார்கள். உண்மையில் அவர் ஒரு சிறிய பிரதேசத்தில் இருந்தபடி தன் பூர்விக நலன்களுக்காகப் போரிட்ட ஒரு சிறிய தலைவர் மட்டுமே. எஸ்.ஜி. சர்தேசாய், எஸ்.. டாங்கே (கம்யூனிஸ்ட் தலைவர் டாங்கே அல்ல, இவர் ஒரு வரலாற்றாசிரியர்) போன்றவர்கள் இதனை ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். இருந்தும் பால் தாக்கரே போன்றோருக்கு சிவாஜி ஒரு மாபெரும் வீரன். இந்து மதத்தின் பாதுகாவலன். அரசியல் லாபம் ஈட்டிக்கொள்ள அவர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு சிவாஜி தேவைப்படுகிறார் என்பதால் அவர்களாகவே அதனை உருவாக்கிவிட்டார்கள். அதையே நிஜ வரலாறு என்று அவர்கள் போதிக்கவும் தொடங்கிவிட்டார்கள்.

கோவிந்த் பன்சாரியும் மற்றவர்களும் இதையெல்லாம்தான் எதிர்த்தனர். அதனாலேயே கொல்லப்பட்னர். பிழையான வரலாற்றைச் சுட்டிக்காட்டுபவர்களுக்கு, அறிவியல் வழியைச் சுட்டிக்காட்டுபவர்களுக்கு, பகுத்தறிவைப் பரப்புபவர்களுக்கு இன்று நேரும் கதி இதுவே. இந்த நிலையை நாம் மாற்றியாகவேண்டும்.

இந்துத்துவர்கள் வரலாற்றை அரசியலுக்குக் கொண்டுவருகிறார்கள். வரலாற்றைக் கொண்டு தங்கள் அதிகாரத்தை உயர்த்திக்கொள்ளவும் தங்கள் கொள்கைகளுக்கு நியாயம் கற்பித்துக்கொள்ளவும் முயற்சி செய்கிறார்கள். இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தல் வந்திருக்கிறது. நாம் என்ன செய்யவேண்டும்?

நரேந்திர மோடியை எதிர்ப்பதென்பது தீர்வாகாது. மோடி ஒரு தனி மனிதர் அல்ல.  அவர் மட்டுமே அனைத்துக்கும் காரணம் என்று சொல்வது சரியல்ல. மோடியை விளாசி எடுப்பதன்மூலம் அனைத்தும் மாறிவிடும் என்று எதிர்பார்ப்பதும் சரியல்ல. இது உதவாது என்பது மட்டுமின்றி மோடியை மேலும் பலப்படுத்துவதில்தான் சென்று முடியும்.

நாம் விமரிசிக்கவேண்டியது மோடி தலைமையிலான இந்துத்துவ அரசையும் அதன் நியோலிபரல் கொள்கைகளையும்தான். வரலாற்றைத் திரிக்கவும் மாற்றவும் யார் முயற்சி செய்தாலும் நாம் அதனை எதிர்க்கவேண்டும். எது சரியான வரலாறு என்பதையும் நிறுவி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். இன்று கலாசார தேசியவாதம் அல்லது இந்து தேசியவாதம் ஒரு புயலாக அடித்துக்கொண்டிருக்கிறது. குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா என்று பல பள்ளிகளில் இந்தப் புதிய வரலாற்றுப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வரலாற்றை மீட்டெடுக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அனைத்தையும் கேள்வி கேளுங்கள். அனைத்தையும் ஆராயுங்கள். அனைத்தையும் கட்டுடைத்துப் பாருங்கள். சரியான வரலாற்றைப் படியுங்கள். சரியான வரலாற்றைப் படையுங்கள்.

0


4 comments:

Anisha Yunus said...

Miga Arumaiyaana pathivu Sir. Need of the hour too. An excellent and a much needed approach on our thinking and learning methodology. Thank you for sharing. But, where did this take place Sir and do you have a Video / Audio recording of it?

மருதன் said...

Umm Omar : நன்றி. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள BEFI அரங்கத்தில் கடந்த 13ம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. உரையைப் பதிவு செய்யமுடியவில்லை.

Anonymous said...

Many thanks Marudhan. Very nice updation on the subject which is much necessary in the current situation. நடந்து வந்த பாதை எதுவென தெரியவில்லை எனில் போகும் பாதை எங்கே போகும் என யாருக்கும் தெரியாது! நமக்கு முன் எத்தனோயோ பேர் அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்தித்தார்கள். நாம் இப்போது செய்வது என்ன என்ற சிந்தனை நம்மில் உருவாக இத்தகைய பதிவுகள் மிக அவசியம். வாழ்த்துக்கள்! தொடர்ந்து முன்னேறுவோம்! வீ. பா. கணேசன்

CLASSBIAS said...

Excellent summary Marudhan. Congratulations