October 11, 2008

இன்னொரு செப்டம்பர் 11

வாலைச் சுருட்டிக்கொண்டு ஒரு ஓரத்தில் உட்கார்ந்திருக்கிறது வால்ஸ்ட்ரீட். முன்பெல்லாம், வால்ஸ்ட்ரீட்ல் முதலீடு செய்திருக்கிறேன் என்று சொன்னாலே போதும், பொறாமையுடன் பார்ப்பார்கள். இப்போது உச்சுக் கொட்டுகிறார்கள். ‘அடப்பாவமே போயும் போயும் அங்கேதானா பணத்தைக் கொட்டவேண்டும் வேறு இடம் கிடைக்கவில்லையா இங்கே?' என்று பரிதாபப்படுகிறார்கள். ஊர் பேர் தெரியாத சீட்டுக்கம்பெனிகளிடம் சீட்டுக் கட்டினாலும் பரவாயில்லை, வால்ஸ்ட்ரீட் பக்கம் நகர்ந்துவிடக்கூடாது என்பதில் பலர் தெளிவாக இருக்கிறார்கள்.

வங்கிகளின் இந்த வீழ்ச்சியை அமெரிக்காவை கலங்கடித்த மற்றொரு செப்டம்பர் 11 என்று வர்ணிக்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். பங்குச்சந்தையில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த ஐந்து பெரும் நிறுவனங்களில் மூன்று (பேர் ஸ்டீன்ஸ், மெரில் லிஞ்ச், லேமன் பிரதர்ஸ்) படுத்துவிட்டது. இதில், லேமன் பிரதர்ஸ் கோர்ட்டில் திவால் நோட்டீஸ் கொடுத்துவிட்டது. தவிரவும், உலகின் மிக சக்திவாய்ந்த காப்பீடு நிறுவனமாகத் தன்னை முன்னிறுத்திக்கொண்ட ஏ.ஐ.ஜி. வெளியில் போடப்பட்ட மீன் போல் தத்தளித்துக்கொண்டிருக்கிறது.

சந்தேகமேயில்லாமல் இது மிகப் பெரும் சரிவு. ஆனால் திடுதிடுப்பென்று வந்த சரிவு என்று சொல்வதற்கில்லை. அமெரிக்கப் பொருளாதார மாற்றத்தை உன்னிப்பாகக்கூட வேண்டாம், மேலோட்டமாகக் கவனித்து வருபவர்களால்கூட இந்த வீழ்ச்சியை சுலபத்தில் கணித்திருக்கமுடியும்.

வங்கிகள். வட்டிக்குக் கடன் கொடுக்கும் அந்த ஊர் சேட்டு கம்பெனிகள். ரியல் எஸ்டேட் நிறுவனங்கள். இந்த மூன்று துறைகளிலும் ஏற்பட்ட ஊழல்கள், மோசடிகள், தவறான அணுகுமுறைகள் காரணமாக ஏற்பட்ட வீழ்ச்சி இது. வீட்டுக்கடன் வாங்கியவர்கள் தொடர்ந்து வட்டி கொடுத்துக்கொண்டிருக்கவேண்டும். அதே சமயம் அவர்கள் வீட்டின் மதிப்பு குறைந்துகொண்டே போகும். இதுதான் அங்கே நிலைமை.

வங்கிகளில் முதலீடு செய்திருப்பவர்களையும் வீட்டுக் கடன் வாங்கியிருப்பவர்களையும் மட்டுமே பாதித்திருக்கும் வீழ்ச்சி அல்ல இது. ஒவ்வொரு அமெரிக்கரும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார். காரிலேயே காஸ் ஸ்டவ், ஸ்லீப்பிங் பேக், சமையல் பாத்திரம் எல்லாவற்றையும் அள்ளிப்போட்டுக்கொண்டு, ஆங்காங்கே வண்டியை நிறுத்தி சமைத்து சாப்பிட்டு, காருக்குள்ளேயே சுருண்டு படுத்துக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை பெருகிப்போயிருக்கிறது. வீட்டு வாடகை கொடுக்க பணமில்லை. பழைய தகர டப்பா கார் ஒன்றை வாங்கி அதையே வீடாக மாற்றிவிட்டார்கள். முன்பாவது, வண்டியை உருட்ட முடிந்தது. இப்போது பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்துவிட்டதால், வண்டி சாவியை உள்ளே வைத்துவிட்டு, நாய்க்குட்டிகளைப் போல் காருக்குள் முடங்கிக்கொண்டுவிட்டார்கள்.

மொத்தம் 39 மில்லியன் அமெரிக்கர்கள் ஏழைமையால் பாதிக்கப்பட்டுள்ளர்கள். இவர்களில் 20 மில்லியன் பேர் குழந்தைகள். செல்வச் செழிப்பு மிக்க ஒரு சதவீதம் பேர் தேசத்தின் மொத்த வருவாயில் 21 சதவீதத்தை சுவீகரித்துக்கொள்கிறார்கள். இது வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளிவந்த 2005ம் ஆண்டுக்கான கணக்கு. மொத்தம் 47 மில்லியன் பேருக்கு மருத்தவ காப்பீடு இல்லை. (அங்கே இது அத்தியாவசியம். இருமல், சளி என்று மருத்துவமனைக்குப் போனால்கூட பேர் பாதி சொத்தை எழுதிவைத்துவிடவேண்டியிருக்கும்).

எனக்கென்ன போச்சு என்கிறார் புஷ். அவர் முழங்கால் வீங்கினால் மட்டுமே இனி அவர் கவலைப்படுவார். பணம் வீங்கினால் என்ன, குறைந்தால் அவருக்கென்ன? அவருக்கு இன்னும் சில மாதங்களே பாக்கியிருக்கின்றன. டாட்டா காட்டிவிட்டு போய்விடப்போகிறார். அப்படி போவதற்கு முன்னால் ஒரே ஒரு நல்ல காரியத்தை மட்டும் செய்துமுடித்துவிட சித்தமாக இருக்கிறார் புஷ்.

துவண்டு போயிருக்கும் வங்கிகளைத் தூக்கி நிறுத்துவதற்காக 700 பில்லியன் டாலரை கடனாகக் கொடுக்கும்படி அரசாங்க கஜானா அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். சீக்காகிக் கிடக்கும் சில முக்கியத் தனியார் நிறுவனங்களை அரசாங்கம் தலையிட்டு அரவணைத்துக்கொள்வதற்காக. ஏற்கெனவே, பேர் ஸ்டீன்ஸ், மெரில் லிஞ்ச் இரண்டையும் அரசாங்கம் வாங்கிக்கொண்டுவிட்டது. அட பரவாயில்லையே நொடிந்து போன நிறுவனங்களுக்கு உயிர் கொடுப்பது ஆரோக்கியமான விஷயம் அல்லவா என்று அவசரப்பட்டு புஷ்ஷை வாழ்த்துவதற்கு முன்னால் சில விஷயங்களைப் பார்த்துவிடுவோம்.

நான் இருக்கிறேன் பார்த்துக்கொள்கிறேன் என்று புஷ் அபயக்கரம் நீட்டியிருப்பது பெரும் தனியார் வங்கிகளுக்கு மாத்திரமே. அதாவது, ஆகப் பெரிய பணக்காரர்கள், வங்கி முதலாளிகள், செல்வந்தர்கள் ஆகியோர் சிரமப்படும்போது ஓடிவந்து கைகொடுக்கிறது அரசாங்கம்.

இதையே வேறு வார்த்தைகளில் சொல்லலாம். ஏழை, பாழைகளுக்கு உதவ நான் தயாராக இல்லை. வீடு இல்லை, உணவு இல்லை, வேலை போய்விட்டது என்று சொல்லிக்கொண்டு சாமானிய அமெரிக்கர்கள் யாரும் என்னிடம் வரவேண்டாம்.
பசிக்கும் அனைவருக்கும் ரொட்டி, ஜாம், பட்டர் வழங்கிக்கொண்டிருக்கமுடியாது.

தனிப்பட்ட இரண்டு, மூன்று தனியார் நிறுவனங்களுக்குப் பிரச்னை என்றால் இருக்கும் வேலைகளை அப்படியே போட்டுவிட்டு 700 பில்லியன் டாலர் கடன் கேட்க முடியும். பாதிக்கப்பட்டவர்கள் சாமானியர்கள் என்றால் கஜானா பக்கம் கூட தலை வைத்துப்படுக்க மாட்டார் புஷ்.

அமெரிக்கத் தனியார் வங்கிகளை தூக்கி நிறுத்த புஷ் எடுத்துவரும் பிரயத்தனங்கள் அங்கே கடும் புயலை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. வலுவான பிரசாரம் அமெரிக்கா முழுவதும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. மக்களே, இது ஏதோ வங்கிகள் சம்பந்தப்பட்ட, ஒரு சில தனியார் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை அல்ல. இது பொருளாதார வீழ்ச்சி. முற்றிலும் தவறான திட்டங்களால் உருவான செயற்கையான வீழ்ச்சி. மெய்யாகவே பணமில்லை என்றால் இராக்கிலும் ஆப்கனிஸ்தானிலும் பரவியிருக்கும் வீரர்களைத் திரும்பப்பெற்றுக்கொள்ளவேண்டியதுதானே? நினைவிருக்கட்டும். நம் ஒவ்வொருவருடைய வரிப்பணம் பாழாகிக்கொண்டிருக்கிறது. நம் பணத்தை அரசாங்கம் தவறான திட்டங்களில் முதலீடு செய்கிறது. நம் பணத்தைக் கொண்டு பெரும் நிறுவனங்களைக் காப்பாற்ற துடிக்கிறது. குறிப்பிட்ட சாராரை மட்டுமே கவனத்துடன் கண்கானித்துவருகிறது.

நம் பணத்தைக் கொண்டு சில பெரிய மனிதர்களைக் காப்பாற்ற முடியும் என்னும்போது ரொட்டியே இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கும் சக அமெரிக்கர்களைக் காப்பாற்ற நாம் முயற்சி செய்யவேண்டாமா? தோழர்களே, இது நம் அனைவரின் பிரச்னை. நாளை நாம் அனைவருமே இதில் சிக்கி பலியாகிவிடக்கூடும். ஆகவே, போராட்டத்துக்குத் தயாராகுங்கள்.

உலகம் முழுவதற்குமாக வேறு சில பாடங்களையும் புஷ் போதித்திருக்கிறார். முதலாளித்துவ உற்பத்தி முறைதான் சிறந்தது. அமெரிக்காவைப் பார்த்து நாம் கற்றுக்கொள்வோம் என்று சொல்லிக்கொண்டிருந்த பொருளாதார வல்லுனர்கள் முதன் முறையாகத் தங்கள் தவறை ஒப்புக்கொண்டுள்ளனர்.

‘பிரைவேட்காரனை உள்ளே விடணும் ஸார், அப்போதான் நிலைமை சரியாகும். டிரைன் கரெக்ட் டைமுக்கு வரணுமா? பாங்க் எம்ப்ளாயீஸ் சரியா வேலை செய்யனுமா? இன்ஷ்யூரன்ஸ்ல நிறைய பணம் வரணுமா? பிரைவடைஸ் பண்ணுங்க‘ என்று பேசித்திரிந்துகொண்டிருந்த பொதுஜனங்கள் அமைதியாகிக்கொண்டு வருகிறார்கள். தனியார்மயத்தால் ஆனானப்பட்ட அமெரிக்காவே அடி வாங்கி காலைத் தூக்கிக்கொண்டு கத்திக்கொண்டிருக்கிறது. எனில், மற்ற நாடுகள் எம்மாத்திரம்?

0

இரண்டு வாரங்களுக்கு முன்னால் ஆனந்த விகடனில் வெளிவந்த என் கட்டுரை.

6 comments:

Kalaiyarasan said...

உங்களைப் போன்ற பதிவர்கள் மக்களுக்கு இதுபோன்ற உண்மைகளை சொல்வதே ஒரு தார்மீக கடமை தான். பாராட்டுகள்.

Anonymous said...

சிக்கலான ஒரு விசயத்தை மிக எளிமையாக விளக்கியிருக்கிறீர்கள்.
நன்றிகள்.......

நாளை புஷ்ஷோ அல்லது அடுத்து வரும் ஜனாதிபதியோ, அந்நிய நாடொன்றின் அரசியலை முன்வைத்து முட்டாள் அமெரிக்க ஜனங்களை திசைதிருப்பி விடுவார்கள்.

ஹாலிவூட்டில் ஆரம்பித்து அமெரிக்கர்களுக்கு ஹீரோயிசம்தானே கற்பிக்கப்படுகிறது.

ஒவ்வொரு அமெரிக்கனும் தன்னை ஒரு உலக ஹீரோவாக கற்பனை செய்து கொண்டே இருக்கிறான்.

அந்த மாயையிலிருந்து அவர்கள் வெளிவரும் வரை புஷ் போன்ற கேடுகெட்ட அரசியல்வாதிகள் அங்கு ஆட்டம் போட்டுக் கொண்டே இருப்பார்கள்.

Dr.Rudhran said...

neat and clear. write more, these are needed now

Anonymous said...

Thanks for writing for the "People".Not only Bush (to save financial houses not the interst of citizens), In india MoF MoA & MoP discussed with private airline chiefs to reduce tax on ATF after private airlines getting loses.
Govt not ready to reduce fuel prices even crude price felt down below $62/barrel.Democrazy by the people and is it for the people? or only for the benifit ofIndustrial houses? Comman man ready to pay actual fuel price/Were the govt ready to announce real price for petrol/diesel/LPG? HARI

Anonymous said...

Thanks for writing for the "People".Not only Bush (to save financial houses not the interst of citizens), In india MoF MoA & MoP discussed with private airline chiefs to reduce tax on ATF after private airlines getting loses.
Govt not ready to reduce fuel prices even crude price felt down below $62/barrel.Democrazy by the people and is it for the people? or only for the benifit ofIndustrial houses? Comman man ready to pay actual fuel price/Were the govt ready to announce real price for petrol/diesel/LPG? HARI

butterfly Surya said...

அமெரிக்கா என்றால் சொர்க்கம்" என்ற நாகரீக வெகுளிகளின் மனக்கோட்டை நமது கண்முன்னால் தகர்ந்து கொண்டிருக்கிறது. சாதாரண மக்கள், வேலை இழந்து, வீடிழந்து, வீதிக்கு விரட்டப்படுகின்றனர்.

உயிரை மட்டும் இழக்காத அமெரிக்க மக்கள், தப்பிப் பிழைத்து வாழ்வதற்காக கூடாரங்களுக்குள் தஞ்சமடைகின்றனர்

வீடியோ செய்திகள்::


http://in.youtube.com/watch?v=WvyubNLbbjo

http://in.youtube.com/watch?v=AQzILG2qEZU

பதவி விலகும் ஜனாதிபதி புஷ், $10.3டிரில்லியன் கடன் சுமையை பொது மக்களின் முதுகின் மீது ஏற்றி விட்டு செல்கிறார். தனது எட்டு வருட பதவிக்காலத்தில், புஷ் இரட்டிப்பாக்கிய கடன் தொகையை கணக்கிடுவதாயின்;

ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை செய்யும் ஒருவர், ஒரு நிமிடத்திற்கு நூறு டாலர் தாளாக எண்ணுவாராகில், வருடம் 300 நாட்களாக வேலை செய்தால், 715,000 வருடங்களுக்கு பின்னர் தான் முழுத் தொகையையும் எண்ணி முடிப்பார்.