December 11, 2008

பாம்பு மனிதர்

எழுத விருப்பம் என்று சொல்லி வந்தார் குணசேகரன். அமர வைத்து பேசிக்கொண்டிருந்தேன். நேரு, எமர்ஜென்சி, காரல் மார்க்ஸ், சோழர்கள், தோழர்கள், சிப்பிக் காளான், சிங்கப்பூர், லாலா லஜபதி ராய், பழங்குடிகள், பறவைகள், சங்க இலக்கியம் என்று நிறைய பேசினார். பாம்புகள் பற்றியும். சரி இங்கிருந்தே ஆரம்பியுங்கள் என்றேன்.

வாரத்துக்கு நான்கு முறை அலுவலகம் வந்துவிடுவார். முந்தைய தினம் சேகரித்த தகவல்களை ஆர்வத்துடன் விவரிப்பார். எடுத்து வைத்திருக்கும் குறிப்புகளைக் காண்பிப்பார். இரவோடு இரவாக அவற்றைச் செம்மைப்படுத்தி, மறுநாள் காலை கொண்டுவந்து கொடுத்துவிடுவார்.

பாம்பு எப்படி படம் எடுக்கும்? நாகத்துக்கு அந்தப் பெயர் வந்தது ஏன்? விஷத்தை வைத்து என்னென்ன செய்வார்கள்? எப்படி பாம்பைக் கையால் பிடிப்பார்கள்? கடிக்காதா? கடித்தால் என்ன செய்வார்கள்? பாம்பு பால் குடிக்குமா? முட்டை? கை விரல்களைக் குவித்து, நாக்கைச் சுழற்றி, கண்களை உருட்டி படம் எடுத்து பாகம் வரைந்து விளக்குவார்.

இருளர்களின் குடியிருப்புகளைத் தேடிச்சென்று மணிக்கணக்கில் பேசியிருக்கிறார். எட்கர் தர்ஸ்டன் தொடங்கி சமீபத்தில் வெளிவந்துள்ள ஆய்வு நூல்கள் வரை அனைத்தையும் வாசித்திருக்கிறார். இந்தியப் பழங்குடி இனங்கள் பற்றி ஆய்வு செய்து வருகிறார். முழுநேரப் பணி வாசிப்பதும் எழுதுவதும். மானுடவியல் குறித்து அவரிடம் இருந்து மேலும் பல புத்தகங்களை எதிர்பார்க்கிறேன். அந்த வரிசையில், முதலில் இருளர்கள்.

இருளர்கள் : ஓர் அறிமுகம் புத்தகத்தில் இருந்து சில பகுதிகள் இங்கே.



சூழ்நிலைதான் பழக்க வழக்கங்களைத் தீர்மானிக்கிறது. ஐயோ பல்லி என்று பயந்து அலறுபவர்கள் வாழும் அதே பூமியில்தான் ஒரு கையில் கருநாகத்தைத் தலைகீழாகத் தொங்கவிட்டபடி மற்றொரு கையால் பீடி புகைத்துக்கொண்டிருக்கிறார்கள் இருளர்கள். அது அவர்களுடைய வாழ்க்கை முறை. பூஞ்சையாக இருந்தால் பிழைக்க முடியாது. ஆகவே அவர்கள் தங்கள் சூழ்நிலையோடு ஒன்றிவிட்டார்கள்.

கொடிய விஷமுள்ள பாம்பை அகற்ற இருளர்களின் உதவி வேண்டும். பாம்பின் விஷம் வேண்டுமென்றால் இருளர்கள் வேண்டும். பாம்பு ஆராய்ச்சியா? தகவல்கள் வேண்டுமா? இருளர்களிடம் ஓட ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் கண்டுபிடிப்பாளர்களும் தயாராக இருக்கிறார்கள்.

இன்று உலகளவில் பாம்பினங்கள் பற்றிய நூல்கள், ஆய்வுகள் முதலானவை நூற்றுக்கணக்கில் வெளி-யாகின்றன. அதிலும் இந்திய அளவிலான பாம்பு இனம் தொடர்பான நூல்களிலும், ஆய்வுகளிலும் இருளரின் பங்களிப்பு கணிசமானது. ஆய்வாளர்கள் தங்கள் படைப்புகளில் தங்களை மாத்திரமே முன்னிலைப்படுத்திக் கொள்கின்றனரே தவிர நிழலாக இருந்து உதவி செய்யும் இருளர்கள் பற்றிய தகவலை வெளியிடுவதில்லை. இதனால் குறிப்பிட்ட இனப் பாம்புகள் பற்றிய தகவல் தொகுப்பில் ஆய்வாளரே கண்டறிந்ததாக பதிவு செய்யப்-படுகிறது. இது இருளர்கள் மீதான கருத்துச் சுரண்டலாகும்.

0

இந்தியா பாம்புகளின் தேசம் என்று அழைக்கப்படுகிறது. பாம்பாட்டிகளின் நாடு என்றும் சொல்லப்படுகிறது. இந்த மதிப்பீட்டை முன்வைத்தவர்கள் ஆங்கிலேயர்கள். இந்தியா என்றாலே பாம்புகள் என்று ஆங்கிலேயர்கள் முடிவு செய்ததற்குக் காரணம் இருளர்கள். இருளர்கள் பற்றிய ஆங்கிலேயரின் பிரமிப்பு.

பாம்பை வைத்து வித்தை செய்பவர்கள் இருளர்களா? கிடையாது. இருளர்கள் வித்தை காட்டிப் பிழைப்பதில்லை. ஆனால் இருளர்களிடம் இருந்து பாம்பை வாங்கிச் செல்லும் சிலர் இவ்வாறு நடந்துகொள்வதுண்டு.

சுரைக்காயைப் பக்குவம் செய்து அதன் கனத்த தோலில் மேலும் கீழும் வாகாக சிறிய புல்லாங் குழல்களைச் செருகி அதை பாம்பின் முன்பாக ஆட்டுவிப்பார்கள். இந்த கருவியே மகுடி எனப்படும். பாம்பு இதிலிருந்து வரும் இசைக்காக மயங்கி ஆடுவதில்லை. மேலும் கீழும் ஆடும் மகுடியின் திசையை எச்சரிக்கையோடு படமெடுத்து அசை-வதையே இசைக்கு பாம்பு படமெடுத்து ஆடுவதாகக் கூறுவர்.

பாம்புகளால் மெல்லிய உணர்வுகளையும் உணர இயலும். மகுடியின் ஒலி எழுப்பும் மெல்லிய அதிர்வுகளை மட்டுமே பாம்புகளால் உணர முடியும். பாம்புகளுக்குக் காதுகள் இல்லை. ஆனால், நீண்ட தொலை-வில் வரும் உருவத்தையும் கூர்மையாக பார்க்கும் திறன் அதன் கண்களுக்கும் உண்டு. மெல்லிய சருகு அசைந்தால்கூட பாம்பு தன் உடலால் அந்த அசைவை கண்டுபிடித்துவிடும்.

பாம்புகள் பல வகைப்படும். பாம்பின் விஷமும் பலவகைப்படும். அதே போல்தான் விஷங்களின் சுவையும். பாம்புகளின் மணமும் மாறுபட்டவை. உணவு முறைகள் மாறு-பட்டவை. பாம்புகளை துல்லியமாக அறிந்தவர்கள் இருளர்கள். நாகப்பாம்பு பாம்பினங்களில் உயர்வானது என்று இருளர்கள் கருதுகிறார்கள். நாகம் தீண்டிவிட்டால் உடனே விஷம் பரவிவிடும். கோப குணம் அதிகம். எல்லாவற்றையும் கணக்கில் கொண்டுதான் நாகம் என்னும் பெயர் இந்த வகை பாம்புக்கு அளிக்கப்பட்டது. உலோக வகைகளில் துத்தநாகம் என்பது ஒரு வகை. இதன் பயன்பாடு பிற உலோகங்களைக் காட்டிலும் அதிகம் என்பதை இங்கே நினைவுகூறலாம்.

நாகர்களை அவ்வாறு அழைப்பதற்குக் காரணம் அவர்களது தொன்மை. அரவம் என்றால் பாம்பு. அரவர் என்ற சொல் தமிழரைக் குறிப்பதாகும். அரவரும், நாகரும் தமிழர்களே. மனித உடலில் இயங்கும் இரத்தக் குழாய்கள் வளைந்து நெளிந்து செல்லும் பாம்பின் உருவைக் கொண்டிருப்பதால் ரத்தத்தை அரக்கம் என்றும் குறிப்பிடுவார்கள்.

அரவக்குறிச்சி, அரவங்குடி, அரவங்காடு (கேரளா) மற்றும் அரவக்கிரி (வேங்கடமலை) போன்ற பகுதிகளின் பெயர்களை உற்று நோக்கும்போது இருளர்களும் நாகர்களும் அங்கே வாழ்ந்திருக்கிறாரகள் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.

வாசத்தை நுகர்ந்து பார்த்தே பாம்பின் வகைகளை கண்டறிந்துவிடுவதால் இருளரை பாம்பு கண்ட சித்தன் என்றும் அழைப்பதுண்டு.

0

கருத்தமேனி. உரம் வாய்ந்த கைகள். எப்போது வேண்டுமானாலும் நெகிழ்ந்து விழலாம் என்ற நிலையில் இடுப்பில் ஊசலாடிக்கொண்டிருக்கும் ஒரு வேட்டித் துண்டு. வாயில் புகை கக்கும் பீடி. குழி விழுந்த கண்கள். பார்வையில் துல்லியம். தோளிலே ஒரு தொங்கு பை. கையில் நீளமான கழி. அதன் முனை ஆங்கில ஒய் எழுத்து போல் தோற்றமளிக்கும். பேசும்போது கடைசி சொல்லை மட்டும் இழுத்து இழுத்து பேசும் லாகவம். எந்த கட்டுப்பாட்டுக்கும் உட்படாத சுதந்திரமான மனோநிலை. இருளர்கள் தனியொரு பிறவிகள்.
பொதுவாக அடர்ந்த காட்டுப் பகுதியில்தான் இருளர்களின் குடியிருப்புகள் அமைந்திருக்கும். அல்லது ஊரின் ஒதுக்குப்புறத்தில். நீர்நிலைகள் இருக்கும் பகுதியை விரும்பி தேர்ந்தெடுப்பார்கள். மனிதர்கள் தங்கள் வாழ்வைத் தொடங்கியது நதிக்கரையில்தான் என்பதை இங்கே நினைவுப்படுத்திக்கொள்ளலாம்.

4 comments:

Anonymous said...

migavum azgagai ezhuthi ullirgal en sontha oor tamilnadu manamadurai angum engal oorin othukku paguthiel irularkal vasikirakal avarkalin mozhi telegu ponrathu siruvarkal kooda kodiya visamulla pambu pidiparkal


gsr

ILA (a) இளா said...

அப்பா, என்னா ஒரு ஆய்வு.. கீழே பாம்பு ஊருகிற மாதிரி உணர்வு.

Anonymous said...

கடைசி வரைக்கும் பாம்பு பால் குடிக்குமா என்பதை பற்றி சொல்ல வில்லையே.

காலம் said...

இப்புத்தகத்தை அதிக ஆர்வத்துடனும் கனத்துடனும் வாங்கினேன் தகவலும் சுவராசியம் குறைந்திருக்கும் ஒரு புத்தகம் இன்னும் கூடுதல் முயற்சி தேவை