December 13, 2008

மாவோ : என் பின்னால் வா!

கடுமையைப் பிரயோகிக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது. இப்போதே நாலு தட்டு தட்டி வைக்கவேண்டும். இல்லாவிட்டால், ஒட்டுமொத்தமாக அழிந்துபோகவேண்டியதுதான். செம்படைவீரர்களைத் திரட்டினார்.

தோழர்களே, உங்களிடம் கடுமையாக நடந்துகொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுகிறேன். நீங்கள் அனைவருமே என் தோழர்கள்தாம். ஆனால், உங்களில் சிலர் நம் இயக்கத்துக்கு விரோதமான வழியில் பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டீர்கள். அது தவறான பாதை என்று உங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆகவே, எது சரி எது தவறு என்று உங்களுக்குத் தெரியப்படுத்தவேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன். கவனிக்கவும். மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கமாட்டேன். அவ்வப்போது சில விதிமுறைகளை உங்களுக்கு வழங்குவேன். வழுவாமல் நடந்துகொள்ளுங்கள்.

மூன்று கட்டளைகளைப் பிறப்பித்தார் மாவோ. உங்கள் தளபதி எதைச் சொன்னாலும் அதை அப்படியே செய்யவேண்டும். மலையில் இருந்து குதி என்றால் குதித்துவிடவேண்டும். துப்பாக்கியை உன் தலையில் பொருத்தி சுடு என்றால் சுட்டுவிடவேண்டும். ஏன் எதற்கு என்று அநாவசியமாகக் கேள்வி கேட்கக்கூடாது. இரண்டாவது கட்டளை. விவசாயிகளிடம் இருந்து எதையும் கைப்பற்றக்கூடாது. அவர் இதை எடுத்துக்கொண்டார் அதை எடுத்துக்கொண்டார் என்று ஏதாவது புகார் வந்தால் சம்பந்தப்பட்ட நபர் (அவர் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் சரி) மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்.

மூன்றாவது கட்டளை முக்கியமானது. நிலப்பிரபுக்கள் நம் எதிரிகள். உண்மைதான். அவர்கள் சுருட்டி மடக்கி வைத்திருக்கும் பொருள்கள் மக்களுக்குச் சொந்தமானவை. கைப்பற்றப்பட்ட அத்தனை பொருள்களுக்கும் சம்பந்தப்பட்ட வீரர்கள் கறாராகக் கணக்கு வைத்திருக்கவேண்டும். ஒன்று விடாமல் அத்தனை பொருள்களையும் அரசாங்கத்திடம் சேர்ப்பிக்கவேண்டும். இதில் எந்தவித தகிடுதத்தங்களும் இருக்கக்கூடாது.

மேலும் எட்டு விதிமுறைகளை மாவோ உருவாக்கினார்.

1) சீன வீடுகளில் உள்ள மரக்கதவுகளை எளிதாகக் கழற்ற முடியும். இரவு நேரங்களில் கதவைக் கழற்றி அடுக்கிவைக்கப்பட்ட மரக்கட்டைகளுக்கு மேலே வைத்து கட்டிலைப் போல் பயன்படுத்துவார்கள். மக்கள் ராணுவத்தினரை வீட்டுக்கு வரவேற்று உபசரித்து இரவு நேரங்களில் அவர்களை வீட்டில் தங்கவைப்பது வழக்கம். ஒரு வீட்டை விட்டு வெளியேறும்போது, கதவை மீண்டும் அதன் இடத்தில் பொருத்தி வைத்துவிட்டுத்தான் வெளியேறவேண்டும். இது என்ன அத்தனை முக்கியமா? நாம் பொருத்தாவிட்டால் வீட்டில் இருப்பவர்கள் பொருத்திக்கொள்ளப்போகிறார்கள் என்று நினைத்து அசட்டையாக இருந்துவிடக்கூடாது. அடிப்படை ஒழுங்கு காப்பாற்றப்படவேண்டும். உதவி செய்பவர்களுக்கு உபத்திரம் அளிக்கக்கூடாது.

2) இரவு நேரங்களில் வரும் செம்படை வீரர்கள் உறங்குவதற்கு வைக்கோல் பாய் வழங்கப்படுவது வழக்கம். காலை எழுந்ததும் அப்படியே கிளம்பிவிடாமல், வைக்கோல் பாயைச் சரிவர சுருட்டி அதன் உடைமையாளர்களிடம் ஒப்படைத்துவிட்டுதான் திரும்பவேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் மக்களின் நன்மதிப்பை சம்பாதித்துக்கொள்ள முடியும்.

3) செம்படை வீரர்கள் என்றால் கடவுள் என்று அர்த்தமில்லை. விவசாயிகளைவிட, மக்களைவிட எந்த வகையிலும் நாம் உயர்ந்தவர்கள் கிடையாது. யாரும் நம்மைவிட தாழ்ந்தவர்கள் கிடையாது. இந்த ராணுவ உடுப்பும் மிடுக்கும் அதிகாரமும் பணியில் இருக்கும் வரைதான். தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தால் மற்றவர்களும் நாமும் சமமே. உங்களுக்கு மக்களுடைய உதவி தேவை எனில், பணிவுடன் அவர்களை அணுகவேண்டும். எனக்கு இது தேவை அளிக்க முடியுமா என்று கேட்கவேண்டும். அதே போல், முடிந்தவரை மக்களுக்கு உதவவேண்டும். தண்ணீர் எடுத்து வந்து தரலாம், வீட்டு வேலைகள் செய்யலாம், வீடுகளைப் பழுது பார்க்கலாம், ஆடு மாடுகளைக் கவனித்துக்கொள்ளலாம்.

4) சில சமயம் பிறரிடம் இருந்து கடன் வாங்கி நம் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்கிறோம். காலணி வாங்குவதற்கோ, உடுப்புகளைச் சரிசெய்து கொள்வதற்கோ நமக்குப் பணம் தேவைப்படுகிறது. நம் எதிரிகளைப் போல் நமக்கு எல்லா வசதிகளும் கிடைப்பதில்லை. கம்யூனிஸ்ட் கட்சி செல்வந்தர்களைக் கொண்டு நடத்தப்படுவது கிடையாது. ஆகவே கடன் வாங்குகிறோம். இந்தக் கடனை திரும்பச் செலுத்துவதுதான் நாகரிகம். திரும்பச் செலுத்தாமல் அந்தப் பகுதியைவிட்டு அகலக்கூடாது.

5) யாருடைய உடைமைகளையும் சேதப்படுத்தக்கூடாது. ஒருவேளை உங்களை அறியாமல் பிறருடைய பொருள்கள் சேதம் அடைந்துவிட்டால், அல்லது எதிரிகள் நம் மக்களின் உடைமைகளைச் சேதப்படுத்திவிட்டால், அந்தச் சேதத்தை ஈடுகட்டுவது நம் அனைவருடைய கடமையாகும். நமக்கென்ன போச்சு என்று விட்டேத்தியாக இருந்துவிடக்கூடாது.

6) ஏழைகளிடம் நேர்மையுடன் நடந்துகொள்ளவேண்டும். அவர்களை ஏமாற்றினால் யாருக்கும் தெரியப்போவதில்லை. ஆனால், ஒரு சிறந்த ராணுவ வீரனுக்கு நேர்மை அடிப்படையானது.

7) சில சமயம் மக்கள் தானாக முன்வந்து உங்களுக்குச் சில பொருள்களை அளிப்பதுண்டு. மக்களின் பெருந்தன்மையைக் குறிக்கும் செயல் அது. சில சமயங்களில் நம் உடுப்புகளைக் கண்டு பயந்தும்கூட அவர்கள் சில உடைமைகளை நம்மிடம் அளித்துவிடுவதுண்டு. சுரண்டும் அதிகாரிகளின் மத்தியில் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் அவர்கள். அதிகாரிகளை விரோதித்துக்கொண்டால் பிழைப்பு நடக்காது என்று தெரிந்து அவர்கள் இதுபோன்ற பரிசுகளை அவ்வப்போது வழங்குவதுண்டு. அதை நாம் நமக்குச் சாதகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நாம் மற்றவர்களைப் போன்றவர்கள் அல்லர் என்பதை அவர்களுக்கு உணர்த்தியாகவேண்டும். வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குண்டான பணத்தைக் கொடுத்துவிடுங்கள்.

8) சுத்தம். அது முக்கியம். மக்களுடன் இணைந்து தங்கும்போது, அவர்கள் வீடுகளில் இருந்து போதிய இடைவெளி விட்டு கழிப்பறைகளை உருவாக்கி பயன்படுத்தவேண்டும்.

இந்த விதிகளோடு முடிந்துபோகவில்லை. ஒவ்வொரு நாளும் புதுப்புது விதிகளை உருவாக்கிக்கொண்டிருந்தார் மாவோ. மக்களிடம் இருந்து சிறு புகார் எழுந்தாலும், அதை குறித்துவைத்துக்கொண்டார். அந்த ராணுவ வீரனின் பெயர் என்ன, அவன் பார்ப்பதற்கு எப்படி இருந்தான் போன்ற விபரங்களைச் சேகரித்துக்கொண்டார். பிறகு, விசாரணை நடத்தி தவறு செய்த வீரனை கண்டுபிடித்து முறைப்படி தண்டித்தார்.

மாவோ, அடிப்படை ஒழுக்கம் பற்றிய விதிகளை மட்டும் உருவாக்கவில்லை. ராணுவ விதிகளையும் சேர்த்தே உருவாக்கினார். எதிரிகளுடன் சரிக்குச் சமானமாக நின்று போராடவேண்டும். எந்த நிலையிலும் சண்டையை நிறுத்திக் கொள்ளக்கூடாது. வெற்றி அல்லது வீர மரணம். இரண்டில் ஒன்றை அடையும் வரை போராட்டம் தொடரவேண்டும்.

பிறகு, மக்களை ஆயுதபாணியாக்குவது குறித்த விதி. விவசாயிகளின் பணி முடிந்ததும் ஓரிடத்தில் கூட்டி வைத்து பயிற்சி அளிக்கப்பட்டது. துப்பாக்கியை குறிபார்த்து இயக்கும் பயிற்சி. மறைந்திருந்து தாக்கும் உத்தி. எதிரிகளிடம் சிக்கிக்கொள்ளாமல் மறைந்திருக்கும் உத்தி. வெடிகுண்டுகளை வீசுவதற்கும் பாய்ந்து வரும் வெடிகுண்டிடம் இருந்து தப்பிக்கும் கலை. இன்னமும் நிறைய.

2 comments:

வனம் said...

வணக்கம் மருதன்

மிக மிகத் தேவையான கருத்துக்கள்

இவற்றை எதிலிருந்து குறிப்பெடுத்தீர்கள்

தெரியத்தந்தால் நானும் அவற்றை முழுமையாக படிக்களாம் அல்லவா

நன்றி
இராஜராஜன்

மருதன் said...

வணக்கம் இராஜராஜன்,

மாவோ தொடர்பான பல்வேறு ஆவணங்களில் இருந்து இந்தத் தகவல்களை நான் திரட்டினேன். புத்தகத்தின் இணைப்பில் ஆவணங்களின் பட்டியலை வழங்கியுள்ளேன்.

மருதன்