October 23, 2008

லெனின் வாழ்க்கையில் ஒரு நாள்

’தோழர் லெனினைப் பார்க்க வேண்டும்.’

நாட்டுப்புற உடைகளில் வந்திருந்த அந்த இருவரையும் மறு வார்த்தை பேசாமல் உள்ளே அனுப்பி வைத்தார் அந்த உதவியாளர்.

ஏதோ ஒரு முக்கிய கோப்பில் மூழ்கிப் போயிருந்த லெனின் தனது பார்வையை உயர்த்தினார்.

’வாருங்கள்.’

தனது இருக்கையிலிருந்து எழுந்து நின்ற அவர், இருவரையும் அமர வைத்த பிறகு, அவர்களுக்கு அருகே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார்.

அவர்களுக்குக் கூச்சமாக இருந்திருக்கவேண்டும்.

’நீங்கள் உங்கள் இருக்கையிலேயே அமரலாமே!’

’அதை விடுங்கள். விஷயத்தைச் சொல்லுங்கள்.’

’நாங்கள் இருவரும் தொழிலாளர்கள். இயந்திரங்களோடு வேலை செய்துதான் எங்களுக்கு பழக்கம். எழுதப் படிக்கத் தெரியாது. பள்ளிக்கூடம் போனது கிடையாது. வேறு வேலை தெரியாது.’

’சரி. உங்களுக்கு வேலை வேண்டுமா?’

’உங்கள் அலுவலகத்தைச் சார்ந்தவர்கள் நேற்று எங்களைச் சந்தித்துப் பேசினார்கள். ஒரு வேலையையும் அளித்தார்கள். ஆனால், அந்த வேலையைச் செய்ய எங்களுக்கு விருப்பமில்லை.’

லெனின் யோசனையுடன் அவர்களைப் பார்த்தார்.

’அப்படி என்ன கடினமான வேலை அது?’

’அமைச்சரவை அலுவலகத்தில் வேலை செய்யச் சொல்கிறார்கள். நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. தொழிற்சாலைகளில் இருந்த எங்களை, அலுவலகத்தில் வேலை பார்க்கச் சொல்வது எந்த வகையில் நியாயம்? அதுவும் அமைச்சரவை அலுவலகத்தில்.’

லெனின் புன்னகை செய்தார்.

’தோழர்களே. நீங்கள் ஒரு விஷயத்தை மறந்துவிட்டீர்கள். நாம் அனைவரும் புதிய சோவியத் அரசாங்கத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். நமக்கு அளிக்கப்பட்ட பணிகளை நாம் நிறைவேற்ற வேண்டும்.’

’ஐயோ, எங்களுக்கு அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. எவ்வளவு கடினமான வேலையாக இருந்தாலும் செய்ய தயாராகவே இருக்கிறோம். ஆனால், அலுவலகத்தில் அமர்ந்து எங்களால் என்ன வேலை செய்ய முடியும்?’

’எல்லோருக்கும் எல்லா வேலையும் புதிதுதான். இதோ, அந்த மேஜைக்குப் பின்னால் உட்கார்ந்து ஏதேதோ கோப்புகளை பார்வையிட்டுக் கொண்டிருக்கிறேனே. எப்படி முடிகிறது என்னால்? எனக்கு என்ன இதில் அனுபவமா இருக்கிறது? முந்தைய ஜார் அரசாங்கத்தில் கோப்பு பார்க்கும் வேலையா செய்து கொண்டிருந்தேன்? வேலை என்றதும் பழகிக் கொள்ளவில்லையா?’

’ஏதாவது தவறு செய்து விட்டால் என்னாகும் என்பதுதான் என் கவலை.’

லெனின் நாற்காலியிலிருந்து எழுந்து கொண்டார்.

’தவறு செய்தால் அதிலிருந்து நாம் கற்றுக் கொள்வோம்.’

கவனிக்கவும். கற்றுக் கொள்ளுங்கள் அல்ல. கற்றுக் கொள்வோம்.

சோவியத் கொடியின் கதை

புதிய சோவியத் அரசுக்கு கொடி தயாரிக்க வேண்டிய பொறுப்பு ஒரு ஓவியரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. சிவப்பு வண்ணக் கொடி. நடுவே ஒரு வாள். அட்டகாசமாக வடிவமைத்து லெனினிடம் கொண்டு சென்றார் அந்த ஓவியர்.

லெனின் அந்தக் கொடியை உற்றுப் பார்த்தார்.

’சிவப்பு வண்ணம் சரி. அதென்ன மையத்தில் எதையோ வரைந்திருக்கிறீர்களே!’

’அது வீர வாள்.’

’ஓ, சரி எதற்காக இந்த வாள்?’

’அது... அது... ஆங், வாள் என்பது வீரத்தின் சின்னம் அல்லவா? அதற்காகத்தான் வைத்தேன். உங்களுக்குப் பிடித்திருக்கிறதுதானே?’

’இல்லை. பிடிக்கவில்லை. நமக்கு வீரம் இப்போதைக்கு அவசியமில்லை. நாடு பிடிக்கவும், பிறரிடமிருந்து பொருளை அபகரிக்கவும்தான் இந்த வாள் தேவைப்படும். அப்படிப்பட்டவர்களுக்கு எதிரானவர்கள் நாம். புரிகிறதா?’

இறுதியில், அந்தக் கொடியில் இடம்பெற்ற சின்னங்கள் இவை. சம்மட்டி. அரிவாள். அவ்வளவுதான்.

October 14, 2008

மாவோவின் மத நம்பிக்கை

மக்களிடையே உள்ள சில முரண்பாடுகளை செம்படை வீரர்கள் கண்டறிந்து வந்து மாவோவிடம் தெரிவித்தார்கள். சோஷலிச சமூகத்தை அமைக்க அவர்கள் செய்த முயற்சிகளுக்கு மக்களிடையே சில எதிர்ப்புகள். சோஷலிசத்தை சிலர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். கம்யூனிஸச் சித்தாந்தத்தில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர்கள் இறை நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். உருவ வழிபாடு செய்கிறார்கள். கோயில்களுக்குச் செல்கிறார்கள். இறை நூல்களைப் படிக்கிறார்கள். என்ன செய்யலாம்?

இது போன்ற ஒரு சிக்கல் வரும் என்று மாவோ முன்னரே எதிர்பார்த்திருந்தார். என்ன செய்யவேண்டும் என்று செம்படை தளபதிகளுக்குத் தெளிவாக விளக்கினார் அவர்.

இது மக்களுக்கான குடியரசு. மக்களால் அமைக்கப்பெற்ற குடியரசு. பத்திரிகை சுதந்தரம், பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை, சங்கம் அமைக்கும் உரிமை, ஊர்வலம் போகும் உரிமை, ஆர்ப்பாட்டம் நடத்தும் உரிமை, மத உரிமை அனைத்தும் மக்களுக்கு உண்டு. சட்டம் அப்படித்தான் அமைக்கப்பட்டுள்ளது.

சீன மக்கள் குடியரசு அமைவதற்கு முன்னால் சீனாவின் நிலைமை என்ன? உழைப்பாளி வர்க்கத்தைச் சுரண்டும் உரிமை நிலப்பிரபுக்களுக்கு உண்டு. ஆனால் என்னைச் சுரண்டாதே என்று சொல்லும் உரிமை தொழிலாளர்களுக்குக் கிடையாது. இன்று? கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்தரத்தை மக்கள் அனுபவிக்கிறார்கள். ஒருவரை மற்றொருவர் சுரண்டும் வழக்கம் முற்றிலுமாக களையெடுக்கப்பட்டுவிட்டது என்று சொல்வதற்கில்லை. ஆனால் பெரும்பாலும் வெற்றி பெற்றிருக்கிறோம்.

சுதந்தரத்துக்குக் கட்டுப்பாடு அவசியமா? ஆமாம். சோஷலிசம் என்பது ஒரு வரையறை. ஒரு கட்டுப்பாடு. ஒரு எல்லை. அந்த எல்லைக்கு உள்பட்டு வாழ்வதுதான் அனைவருக்கும் நல்லது. சுதந்தரத்தின் எல்லைக்கு உட்பட்டு வாழ்வது என்னும் கருத்தை மக்கள் மனமுவந்து ஏற்றுக்கொண்டுவிட்டனர். எல்லையில்லா சுதந்தரம் அராஜகத்துக்குத்தான் இட்டுச்செல்லும் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் ஒரு சாராருக்கு அது புரியவில்லை. அவர்களை என்ன செய்வது?

என்ன செய்துவிடமுடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நமக்குச் சரி என்று பட்டதை அவர்களுக்கு எடுத்துச்சொல்லாம். பொறுமையாக. மற்றபடி அவர்கள் மீது நம் நம்பிக்கைகளைத் திணிக்கக்கூடாது. நூற்றுக்கணக்கான மலர்கள் பூத்துக் குலுங்கட்டும். நூற்றுக்கணக்கான கருத்துகள் முட்டி மோதட்டும்.

கம்யூனிஸம் மதத்தை நிராகரிக்கிறது. உண்மை. ஆனால், மத நம்பிக்கையை நாம் நிராகரிக்க வேண்டியதில்லை. சீனாவில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கையை நம்மால் தடை செய்ய முடியாது. தடை செய்யவும் கூடாது. அதே சமயம், கடவுள் மறுப்புப் பிரசாரத்தை கைவிடவும் கூடாது. பொதுவுடைமைக் கருத்துகளை போதிக்கிறீர்கள் அல்லவா? சோஷலிசத்தின் அவசியத்தை வலியுறுத்துகீறர்கள் அல்லவா? அதே போல், கடவுள் எதிர்ப்புச் சிந்தனைகளும் சேர்த்தேதான் பிரசாரம் செய்யப்படவேண்டும். ஆனால், எந்த சமயத்திலும் நம் கருத்துகளை மக்கள் மீது திணிக்கக்கூடாது.

இன்று முதல் யாரும் வழிபடவேண்டாம் என்று சட்டம் இயற்றுவதன் மூலம் மதத்தை அழித்துவிடமுடியாது. மார்க்ஸியம் உன்னதமான ஒரு மானுட தத்துவம் என்று நமக்குத் தெரியும். மார்க்ஸின் சிந்தனைகளை, எங்கெல்சின் சிந்தனைகளை, லெனினின் எழுத்துகளை புத்தகங்களாக அச்சிட்டு விநியோகம் செய்கிறோம். ஆனால், நீங்கள் இன்று முதல் மார்க்ஸியவாதியாக மாறவேண்டும் என்று யாரையும் நாம் கட்டாயப்படுத்த வேண்டியதில்லை. கூடாது.

மக்களிடையே உள்ள முரண்பாடுகளை எச்சரிக்கையுடன் அணுகவேண்டும். நம் எதிரிகளிடம் காட்டும் அணுகுமுறையை இங்கே கையாளக்கூடாது. நம்முடைய லட்சியங்களுக்கு இணங்கிப்போகுமாறு அவர்களைத் தூண்டலாம். போதனை செய்யலாம். விமர்சிக்கலாம். உட்கார வைத்து பேசி புரியவைக்கலாம். ஆனால் எந்த சமயத்திலும் அவர்களைப் பலவந்தப்படுத்தக்கூடாது.

மாவோவின் ஒன்பது கட்டளைகள்

மாவோ பதவியேற்றபிறகு, திபெத்துக்காக உருவாக்கப்பட்ட ஒன்பது முக்கிய கட்டளைகள் இவை.

1) மதச் சடங்குகள் அனைத்தும் நிறுத்தப்படவேண்டும்.
2) நிலப்பிரபுத்துவத்தைக் கொண்டாடும் புத்தகங்கள் நீக்கப்படவேண்டும்.
3) பிரார்த்தனைக் கொடிகள், ஊதுபத்திகள் போன்றவை ஒழிக்கப்படவேண்டும்.
4) மக்கள் பிரார்த்தனைகளில் நேரம் செலவிடக்கூடாது. மந்திர தந்திரவாதிகளை நாடக்கூடாது.
5) தலாய் லாமாவின் அனைத்து புகைப்படங்களையும் மக்கள் அழித்துவிடவேண்டும்.
6) அரசாங்கம் ஏற்று நடத்தும் ஒரு சில மடாலயங்கள் தவிர்த்துப் பிறவற்றைப் பொது மக்கள் பயனுள்ள முறையில் உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும்.
7) துறவிகள் நவீன கல்வியறிவு கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
8) துறவிகள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படவேண்டும். பயனுள்ள வகையில் அவர்கள் பிறரைப் போல உழைக்க முன்வரவேண்டும்.
9) அறிவியல் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அறிவியல் அறிவை ஊட்டும் திரைப்படங்கள் திரையிடப்படவேண்டும்.

October 11, 2008

இன்னொரு செப்டம்பர் 11

வாலைச் சுருட்டிக்கொண்டு ஒரு ஓரத்தில் உட்கார்ந்திருக்கிறது வால்ஸ்ட்ரீட். முன்பெல்லாம், வால்ஸ்ட்ரீட்ல் முதலீடு செய்திருக்கிறேன் என்று சொன்னாலே போதும், பொறாமையுடன் பார்ப்பார்கள். இப்போது உச்சுக் கொட்டுகிறார்கள். ‘அடப்பாவமே போயும் போயும் அங்கேதானா பணத்தைக் கொட்டவேண்டும் வேறு இடம் கிடைக்கவில்லையா இங்கே?' என்று பரிதாபப்படுகிறார்கள். ஊர் பேர் தெரியாத சீட்டுக்கம்பெனிகளிடம் சீட்டுக் கட்டினாலும் பரவாயில்லை, வால்ஸ்ட்ரீட் பக்கம் நகர்ந்துவிடக்கூடாது என்பதில் பலர் தெளிவாக இருக்கிறார்கள்.

வங்கிகளின் இந்த வீழ்ச்சியை அமெரிக்காவை கலங்கடித்த மற்றொரு செப்டம்பர் 11 என்று வர்ணிக்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். பங்குச்சந்தையில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த ஐந்து பெரும் நிறுவனங்களில் மூன்று (பேர் ஸ்டீன்ஸ், மெரில் லிஞ்ச், லேமன் பிரதர்ஸ்) படுத்துவிட்டது. இதில், லேமன் பிரதர்ஸ் கோர்ட்டில் திவால் நோட்டீஸ் கொடுத்துவிட்டது. தவிரவும், உலகின் மிக சக்திவாய்ந்த காப்பீடு நிறுவனமாகத் தன்னை முன்னிறுத்திக்கொண்ட ஏ.ஐ.ஜி. வெளியில் போடப்பட்ட மீன் போல் தத்தளித்துக்கொண்டிருக்கிறது.

சந்தேகமேயில்லாமல் இது மிகப் பெரும் சரிவு. ஆனால் திடுதிடுப்பென்று வந்த சரிவு என்று சொல்வதற்கில்லை. அமெரிக்கப் பொருளாதார மாற்றத்தை உன்னிப்பாகக்கூட வேண்டாம், மேலோட்டமாகக் கவனித்து வருபவர்களால்கூட இந்த வீழ்ச்சியை சுலபத்தில் கணித்திருக்கமுடியும்.

வங்கிகள். வட்டிக்குக் கடன் கொடுக்கும் அந்த ஊர் சேட்டு கம்பெனிகள். ரியல் எஸ்டேட் நிறுவனங்கள். இந்த மூன்று துறைகளிலும் ஏற்பட்ட ஊழல்கள், மோசடிகள், தவறான அணுகுமுறைகள் காரணமாக ஏற்பட்ட வீழ்ச்சி இது. வீட்டுக்கடன் வாங்கியவர்கள் தொடர்ந்து வட்டி கொடுத்துக்கொண்டிருக்கவேண்டும். அதே சமயம் அவர்கள் வீட்டின் மதிப்பு குறைந்துகொண்டே போகும். இதுதான் அங்கே நிலைமை.

வங்கிகளில் முதலீடு செய்திருப்பவர்களையும் வீட்டுக் கடன் வாங்கியிருப்பவர்களையும் மட்டுமே பாதித்திருக்கும் வீழ்ச்சி அல்ல இது. ஒவ்வொரு அமெரிக்கரும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார். காரிலேயே காஸ் ஸ்டவ், ஸ்லீப்பிங் பேக், சமையல் பாத்திரம் எல்லாவற்றையும் அள்ளிப்போட்டுக்கொண்டு, ஆங்காங்கே வண்டியை நிறுத்தி சமைத்து சாப்பிட்டு, காருக்குள்ளேயே சுருண்டு படுத்துக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை பெருகிப்போயிருக்கிறது. வீட்டு வாடகை கொடுக்க பணமில்லை. பழைய தகர டப்பா கார் ஒன்றை வாங்கி அதையே வீடாக மாற்றிவிட்டார்கள். முன்பாவது, வண்டியை உருட்ட முடிந்தது. இப்போது பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்துவிட்டதால், வண்டி சாவியை உள்ளே வைத்துவிட்டு, நாய்க்குட்டிகளைப் போல் காருக்குள் முடங்கிக்கொண்டுவிட்டார்கள்.

மொத்தம் 39 மில்லியன் அமெரிக்கர்கள் ஏழைமையால் பாதிக்கப்பட்டுள்ளர்கள். இவர்களில் 20 மில்லியன் பேர் குழந்தைகள். செல்வச் செழிப்பு மிக்க ஒரு சதவீதம் பேர் தேசத்தின் மொத்த வருவாயில் 21 சதவீதத்தை சுவீகரித்துக்கொள்கிறார்கள். இது வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளிவந்த 2005ம் ஆண்டுக்கான கணக்கு. மொத்தம் 47 மில்லியன் பேருக்கு மருத்தவ காப்பீடு இல்லை. (அங்கே இது அத்தியாவசியம். இருமல், சளி என்று மருத்துவமனைக்குப் போனால்கூட பேர் பாதி சொத்தை எழுதிவைத்துவிடவேண்டியிருக்கும்).

எனக்கென்ன போச்சு என்கிறார் புஷ். அவர் முழங்கால் வீங்கினால் மட்டுமே இனி அவர் கவலைப்படுவார். பணம் வீங்கினால் என்ன, குறைந்தால் அவருக்கென்ன? அவருக்கு இன்னும் சில மாதங்களே பாக்கியிருக்கின்றன. டாட்டா காட்டிவிட்டு போய்விடப்போகிறார். அப்படி போவதற்கு முன்னால் ஒரே ஒரு நல்ல காரியத்தை மட்டும் செய்துமுடித்துவிட சித்தமாக இருக்கிறார் புஷ்.

துவண்டு போயிருக்கும் வங்கிகளைத் தூக்கி நிறுத்துவதற்காக 700 பில்லியன் டாலரை கடனாகக் கொடுக்கும்படி அரசாங்க கஜானா அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். சீக்காகிக் கிடக்கும் சில முக்கியத் தனியார் நிறுவனங்களை அரசாங்கம் தலையிட்டு அரவணைத்துக்கொள்வதற்காக. ஏற்கெனவே, பேர் ஸ்டீன்ஸ், மெரில் லிஞ்ச் இரண்டையும் அரசாங்கம் வாங்கிக்கொண்டுவிட்டது. அட பரவாயில்லையே நொடிந்து போன நிறுவனங்களுக்கு உயிர் கொடுப்பது ஆரோக்கியமான விஷயம் அல்லவா என்று அவசரப்பட்டு புஷ்ஷை வாழ்த்துவதற்கு முன்னால் சில விஷயங்களைப் பார்த்துவிடுவோம்.

நான் இருக்கிறேன் பார்த்துக்கொள்கிறேன் என்று புஷ் அபயக்கரம் நீட்டியிருப்பது பெரும் தனியார் வங்கிகளுக்கு மாத்திரமே. அதாவது, ஆகப் பெரிய பணக்காரர்கள், வங்கி முதலாளிகள், செல்வந்தர்கள் ஆகியோர் சிரமப்படும்போது ஓடிவந்து கைகொடுக்கிறது அரசாங்கம்.

இதையே வேறு வார்த்தைகளில் சொல்லலாம். ஏழை, பாழைகளுக்கு உதவ நான் தயாராக இல்லை. வீடு இல்லை, உணவு இல்லை, வேலை போய்விட்டது என்று சொல்லிக்கொண்டு சாமானிய அமெரிக்கர்கள் யாரும் என்னிடம் வரவேண்டாம்.
பசிக்கும் அனைவருக்கும் ரொட்டி, ஜாம், பட்டர் வழங்கிக்கொண்டிருக்கமுடியாது.

தனிப்பட்ட இரண்டு, மூன்று தனியார் நிறுவனங்களுக்குப் பிரச்னை என்றால் இருக்கும் வேலைகளை அப்படியே போட்டுவிட்டு 700 பில்லியன் டாலர் கடன் கேட்க முடியும். பாதிக்கப்பட்டவர்கள் சாமானியர்கள் என்றால் கஜானா பக்கம் கூட தலை வைத்துப்படுக்க மாட்டார் புஷ்.

அமெரிக்கத் தனியார் வங்கிகளை தூக்கி நிறுத்த புஷ் எடுத்துவரும் பிரயத்தனங்கள் அங்கே கடும் புயலை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. வலுவான பிரசாரம் அமெரிக்கா முழுவதும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. மக்களே, இது ஏதோ வங்கிகள் சம்பந்தப்பட்ட, ஒரு சில தனியார் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை அல்ல. இது பொருளாதார வீழ்ச்சி. முற்றிலும் தவறான திட்டங்களால் உருவான செயற்கையான வீழ்ச்சி. மெய்யாகவே பணமில்லை என்றால் இராக்கிலும் ஆப்கனிஸ்தானிலும் பரவியிருக்கும் வீரர்களைத் திரும்பப்பெற்றுக்கொள்ளவேண்டியதுதானே? நினைவிருக்கட்டும். நம் ஒவ்வொருவருடைய வரிப்பணம் பாழாகிக்கொண்டிருக்கிறது. நம் பணத்தை அரசாங்கம் தவறான திட்டங்களில் முதலீடு செய்கிறது. நம் பணத்தைக் கொண்டு பெரும் நிறுவனங்களைக் காப்பாற்ற துடிக்கிறது. குறிப்பிட்ட சாராரை மட்டுமே கவனத்துடன் கண்கானித்துவருகிறது.

நம் பணத்தைக் கொண்டு சில பெரிய மனிதர்களைக் காப்பாற்ற முடியும் என்னும்போது ரொட்டியே இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கும் சக அமெரிக்கர்களைக் காப்பாற்ற நாம் முயற்சி செய்யவேண்டாமா? தோழர்களே, இது நம் அனைவரின் பிரச்னை. நாளை நாம் அனைவருமே இதில் சிக்கி பலியாகிவிடக்கூடும். ஆகவே, போராட்டத்துக்குத் தயாராகுங்கள்.

உலகம் முழுவதற்குமாக வேறு சில பாடங்களையும் புஷ் போதித்திருக்கிறார். முதலாளித்துவ உற்பத்தி முறைதான் சிறந்தது. அமெரிக்காவைப் பார்த்து நாம் கற்றுக்கொள்வோம் என்று சொல்லிக்கொண்டிருந்த பொருளாதார வல்லுனர்கள் முதன் முறையாகத் தங்கள் தவறை ஒப்புக்கொண்டுள்ளனர்.

‘பிரைவேட்காரனை உள்ளே விடணும் ஸார், அப்போதான் நிலைமை சரியாகும். டிரைன் கரெக்ட் டைமுக்கு வரணுமா? பாங்க் எம்ப்ளாயீஸ் சரியா வேலை செய்யனுமா? இன்ஷ்யூரன்ஸ்ல நிறைய பணம் வரணுமா? பிரைவடைஸ் பண்ணுங்க‘ என்று பேசித்திரிந்துகொண்டிருந்த பொதுஜனங்கள் அமைதியாகிக்கொண்டு வருகிறார்கள். தனியார்மயத்தால் ஆனானப்பட்ட அமெரிக்காவே அடி வாங்கி காலைத் தூக்கிக்கொண்டு கத்திக்கொண்டிருக்கிறது. எனில், மற்ற நாடுகள் எம்மாத்திரம்?

0

இரண்டு வாரங்களுக்கு முன்னால் ஆனந்த விகடனில் வெளிவந்த என் கட்டுரை.

October 10, 2008

சே குவேராவின் இறுதி கடிதம்

ஃபிடல்,

இந்த நேரத்தில் எனக்குப் பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. உங்களை மரியா அந்தோனியாவின் வீட்டில் சந்தித்தது; உங்களுடன் வர என்னை நீங்கள் அழைத்தது; புறப்படத் தயாரானபோது நமக்கு ஏற்பட்ட பரபரப்பு.

நடக்க இருக்கும் விபரீதம் எனக்கு எப்போது புரிந்தது தெரியுமா? நீங்கள் இறந்துபோனால் யாருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஒரு நாள் அவர்கள் வந்து கேட்டார்கள். பிறகு, எல்லாம் புரிந்துவிட்டது. ஒரு புரட்சியின் முடிவு, வெற்றி அல்லது வீரமரணம் என்பதைப் புரிந்துகொண்டேன்.

இன்று, நாம் வளர்ச்சி அடைந்திருக்கிறோம். அன்று போல் இல்லாமல் பக்குவப்பட்டிருக்கிறோம். ஆனால், கடந்த காலம் மீண்டும் திரும்புகிறது. க்யூப மண்ணில் நிகழ்ந்த க்யூபப் புரட்சியில், எனக்கு அளிக்கப்பட்டிருந்த கடமைகளை நான் நிறைவேற்றிவிட்டேன் என்று நினைக்கிறேன்.

ஆகையால், நான், உங்களிடமிருந்தும் நமது தோழர்களிடமிருந்தும், என்னுடைய க்யூப மக்களிடமிருந்தும் விடைபெறுகிறேன்.

கட்சியின் தலைமையில் என்னுடைய பொறுப்புகளிலிருந்தும், அமைச்சர் பதவியில் இருந்தும், மேஜர் பொறுப்பிலிருந்தும், க்யூபாவின் பிரஜைக்கான உரிமையிலிருந்தும் நான் விலகுகிறேன். இனி, எனக்கு க்யூபாவுடன் சட்ட ரீதியான எந்த உறவும் இல்லை. ஆனால், வேறு வகையில் பிணைப்புகள் உள்ளன. நிச்சயமாக அவற்றை என்னால் உதறித்தள்ள முடியாது.

கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கும்போது, புரட்சியின் வெற்றியை உறுதிப்படுத்த, நான் நேர்மையாகவும் அர்ப்பணிப்போடும் செயல்பட்டு வந்தேன் என்றே நம்புகிறேன். நான் செய்த ஒரே தவறு என்ன தெரியுமா? சியாரா மிஸ்த்ரா மலைத்தொடரில் கழித்த முதல் சில தினங்களில் உங்கள் மீது மேலும் அதிக நம்பிக்கை வைக்காதது. ஒரு புரட்சியாளராக, ஒரு தலைவராக பரிமணித்த உங்கள் குணாதிசயங்களை உடடியாகப் புரிந்துகொள்ள தவறியது.

கரீபிய சிக்கல் கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டிருந்த அந்த சோகமான, ஆனால் துடிப்பு மிக்க காலகட்டத்தில், உங்களுடன் சேர்ந்து, நமது மக்களின் பக்கம் நின்ற தருணத்தை இன்றும் பெருமையுடன் உணர்கிறேன். உங்களைப் போல் ஒரு தலைவர் செயல்படுவது அபூர்வமானது. உங்களை தயக்கம் இன்றி பின்பற்றியதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

என்னுடைய எளிமையான முயற்சிகளும் உதவிகளும் வேறு சில நாடுகளுக்குத் தேவைப்படுகிறது. க்யூபாவின் தலைவராக நீங்கள் இருப்பதால் உங்களுக்கு மறுக்கப்பட்டதை என்னால் செய்ய முடியும் என்று நம்புகிறேம்.

ஆக, நாம் பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஒரு பக்கம் மகிழ்ச்சியோடும் மறு பக்கம் துயரத்தோடும் நான் என் பயணத்தை மேற்கொள்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். என் நேசத்துக்குரிய மக்கள் ஒரு சிறப்பான சமுதாயத்தை கட்டி எழுப்புவார்கள் என்ற என் நம்பிக்கையை இங்கே விட்டுவிட்டு பிரிகிறேன். புதிய போராட்டக் களங்கள் காத்திருக்கின்றன.

நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பேன். ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடுவதை புனித கடமையாக மேற்கொள்வேன். அதை நிறைவேற்றவும் செய்வேன். இதுதான் என்னுடைய பலத்துக்கு ஆதாரமாக இருக்கிறது.

எங்கோ, கண் காணாத இடத்தில் முடிவு என்னை நெருங்குமானால், அந்தக் கடைசி தருணத்தில் க்யூப மக்களையும், குறிப்பாக உங்களையும்தான் நினைத்துக் கொண்டிருப்பேன்.

எனக்கு கற்றுக்கொடுத்ததற்கும் அதற்கு நீங்களே ஒரு உதாரணமாக விளங்கியதற்கும் என் நன்றி. என்னுடைய செயல்களின் விளைவுகள் உங்கள் நம்பிக்கைக்கு பங்கம் விளைவிக்காமல் இருக்க முயல்வேன். நமது புரட்சியின் அயல்நாட்டு கொள்கையோடு எப்போதும் அடையாளம் காணப்பட்டவன் நான். இப்போதும், அது தொடர்கிறது. நான் எங்கு இருந்தாலும், ஒரு க்யூபப் புரட்சியாளனின் பொறுப்புணர்வோடு இருப்பேன்.

எனது மனைவி, மக்களுக்கு எந்த சொத்தையும் நான் விட்டுச் செல்லவில்லை. அதற்காக வருத்தப்படவும் இல்லை. உண்மையில் எனக்கு மகிழ்ச்சிதான். அவர்கள் வாழ்வதற்கு தேவையானவற்றை கவனித்துக்கொள்வதற்கும், குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதற்கும் ஓர் அரசாங்கம் இருக்கிறது.

இன்னும் பல விஷயங்களை உங்களிடமும், நமது மக்களிடமும் சொல்ல விருப்பம். ஆனால் தேவையில்லை என்றே நினைக்கிறேன். நான் சொல்ல விரும்புவதை வெளிப்படுத்தும் சக்தி வார்த்தைகளுக்கு இல்லை. காகிதங்கள் வீணாவதைத் தவிர வேறு பயன் ஏதும் ஏற்பட்டுவிடப்போவதில்லை.

நமது முன்னேற்றம் எப்போதும் வெற்றியை நோக்கியே. வெற்றி அல்லது வீரமரணம்.

என் முழுமையான புரட்சிகரமான உணர்ச்சி வேகத்துடன் உங்களை ஆரத் தழுவிக்கொள்கிறேன்.

சே

0

1965-ம் ஆண்டு மத்தியில், க்யூபாவிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு சே ஃபிடலுக்கு எழுதிய கடிதம்.