இளைஞர்களுக்குப் பெரியார் அறிவுரை என்னும் சிறிய பிரசுரத்தை சமீபத்தில் எடுத்துப் படித்தேன். பெரியார் சுயமரியாதைப் பிரசாரர நிறுவன வெளியீடு. ஈரோடு திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பாக பெரியார் ஆற்றிய உரை ஒன்று இதில் உள்ளது. உங்கள் படிப்புக்கு லட்சியமே இல்லை என்று ஆரம்பிக்கிறார் பெரியார். படித்தவர்களுக்கு அறிவு விருத்தியாகிறதா? இப்படிப்பினால் ஏற்படும் நிச்சயமான பலன் என்ன? எந்த துறையில் படிக்கிறார்களோ அந்தத் துறை பற்றி மாணவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்களா?
'சரித்திரம் படித்தவன் இராமாயண, பாரதம் முதலிய புராணக் கதையும், சரித்திரத்தில் சேர்ந்துப் படித்து இராமனும், பரதனும் இந்த நாட்டை ஆண்டார்கள் என்றும், அது இன்ன காலம் என்றும், இந்த நாட்டுக்கு பாரத தேசம் என்பது பெயர் என்றும் கருதிக்கொண்டு அனுபவத்தில் அதற்கேற்ற வண்ணம் நடந்து பாரதமாதாவை வணங்கிக்கொண்டு திரிகிறான். நிஜமாக நடந்த சரித்திர உண்மைகள், நிஜமான போர்கள், நபர்கள், அதன் காலங்கள் ஆகியவை சரித்திரம் படித்தவர்கள் என்பவர்களுக்குச் சரியாகத் தெரிவதில்லை. நடவாததும், நடந்ததாக நம்ப முடியாததும் அதற்கும் காலம் நிர்ணயிக்க முடியாததுமான அறிவுக்குப் பொருந்தாத காரியங்களுக்கு அதிக விவரம் தெரிகிறது. ஆனால், நடந்தவைகளுக்கு சரியான விவரம் தெரியவில்லை. சேர, சோழ, பாண்டியர், நாயக்கர் ஆகியவர்களும் அவர்களது வாரிசு, அண்ணன் தம்பிமார்களும், மனைவி மக்களும் ஆண்ட நாட்டெல்லைகளும், முறைகளும், முடிவுகளும், சரித்திரம் படித்த 100-க்கு 90 மாணவர்களுக்கு விவரம் சொல்லத் தெரியாது. தசரதனுக்கும், ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும், பாண்டவருக்கும், துரியோதனாதிகளுக்கும், இரணியனுக்கும், பலிச்சக்ரவர்த்திக்கும், மனு நீதி கண்ட சோழனுக்கும், அண்ணன் தம்பிமார்கள், மனைவி, மக்கள், அவர்கள் கணவர்கள் இவ்வளவு என்று 100-க்கு 90 மாணவர்களுக்குத் தெரியும்.'
பெரியார் இன்னமும் அனைவரிடமும் போய்ச்சேரவில்லை. கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள். அல்லது, இவரே கடவுள் என்று வழிபடுகிறார்கள். பெரியாருடைய எழுத்துகள் இன்னமும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை என்பது தமிழ் அறியாத அனைவருக்கும் ஏற்பட்ட இழப்பு. இப்படி ஒரு இழப்பு ஏற்பட்டிருப்பதே ஒருவருக்கும் தெரியாது என்பது சோகம்.
தமிழில் மட்டும் என்ன வாழ்ந்தது? பெரியாரின் எழுத்துகளும் பேச்சுகளும் சீராகத் தொகுக்கப்படவில்லை. பெரியாரை ஒரு மத எதிர்ப்பாளராகவும், பார்ப்பன எதிர்பபாளராக மட்டுமே பெரும்பாலானோர் அறிந்து வைத்திருக்கிறார்கள். பெண்கள் பற்றியும் கற்பு பற்றியும் மொழி பற்றியும் தேசியம் பற்றியும் அறிவியல் பற்றியும் பெரியார் கொண்டிருக்கும் கருத்துகள் புரட்சிகரமானவை. பரவலான மக்கள் கவனத்துக்கு இன்னமும் இந்தக் கருத்துகள் சென்றடையவில்லை.
வாழ்க்கை வரலாறு என்று தேடிப்போனாலும் நமக்குக் கிடைப்பவை சொற்பமான புத்தகங்கள்தாம். சாமி சிதம்பரனார், கவிஞர் கருணானந்தம், கி. வீரமணி ஆகியோரின் வரலாறு பெரியாரின் முழுமையான வாழ்க்கையை சித்தரிக்கவில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கட்டத்தில் நிறைவடைந்துவிடுகிறது. கவிஞர் கருணானந்தத்தின் விரிவான புத்தகத்தில், பெரியார் தொடர்பான ஆவணங்களும், நிறைய மேற்கோள்களும் உள்ளன. பாராட்டப்படவேண்டிய தொகுப்பு. பெரியார் குறித்த எஸ்.வி. ராஜதுரையின் திறனாய்வு நூல்கள் முக்கியமானவை.
கிழக்கில் பெரியார் வாழ்க்கை வரலாறு ஏன் இன்னமும் வெளிவரவில்லை என்று எங்களை பலரும் கேட்டு வந்திருக்கிறார்கள். இதோ! ஆர். முத்துக்குமார் எழுதிய பெரியார் புத்தகத்தை இந்தப் புத்தகக் கண்காட்சியில் கிழக்கு அறிமுகம் செய்துவைக்கிறது. இன்றோ நாளையோ அரங்கில் கிடைக்கும். வாசித்துவிட்டு கருத்துச் சொல்லுங்கள். தெரிந்துகொள்வதற்கும், ரசிப்பதற்கும், விவாதிப்பதற்கும், முரண்படுவதற்கும் ஏராளமான விஷயங்கள் உள்ளன.
விவரிக்கும்போது பெரியார் பற்றிய சில முரண்பாடுகளை முத்துக்குமார் தொட்டுச்செல்கிறார். என்னைப் பொறுத்தவரை, பெரியார் பற்றிய விமரிசனங்களில், முரண்பாடுகளில் பிரதானமானதும் பொருட்படுத்தக்கூடியதுமான ஒன்று, மேல்ஜாதியினரின் ஆதிக்கம் பற்றிய அவரது சித்தாந்தம். ம.க.இ.க.வின் அணுகுமுறையை இந்த விஷயத்தில் நான் ஏற்றுக்கொள்கிறேன். பார்ப்பனர்களை எதிர்த்த அளவுக்கு பெரியார் பிற ஆதிக்க ஜாதியினரை எதிர்க்கவில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்புகளிலேயே, ஆண்டான் அடிமை மனோபாவம் நீடிக்கிறது. இன்றுவரையிலும். நான் பிற்படுத்தப்பட்டவன்தான். ஆனால், என்னைவிட நீ பிற்படுத்தப்பட்டவன். நான் பார்ப்பனரைவிட ஒரு படி தாழ்ந்தவன். நீ, என்னைவிட ஒரு படி கீழே.
சமூகத்தைத் திருத்த நிலச்சீர்திருத்தத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் என்றார்கள் கம்யூனிஸ்ட்டுகள். வேண்டாம் முதலில் மதத்தையும் ஜாதியையும் களைவோம் என்றார் பெரியார். இந்த ஒரு புள்ளியில் இருவரும் வேறுபடுகிறார்கள்.
1 comment:
dear maruthan, yaar sonnathu periyar ethirkavillai endru? pls periyarai muluvathum padithuvittu karuthu sollavarungal,, vijay tirupur. vijaycreate@gmail.com
Post a Comment