January 10, 2009

சென்னை புத்தகக் கண்காட்சி - நாள் 3

முடிவடைவதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்புவரை கூட்டம் இல்லை. அரங்க நிர்வாகிகள் வெளிப்படையாகவே சலித்துக்கொண்டார்கள். ப்ச், அப்துல் கலாமோ கலைஞரோ வந்திருந்தால் மீடியாவில் கவனம் பெற்றிருக்கலாம். இருவரும் வரவில்லை. மீடியா கண்டுகொள்ளமாட்டேன் என்கிறது. என்ன செய்ய?

ஆறு மணிக்கு வைரமுத்துவின் வழக்கமான rhetoric உரை. சீனா, இந்தியா. இந்த இரு தேசங்களும்தான் எதிர்காலத்தில் வல்லரசுகளாக இருக்கும் என்று அறிவித்து அரங்கத்தை அதிரவைத்தார். உலகளவிலா அல்லது ஆசியாவிலா என்று தெரியவில்லை. வல்லரசு ஆவது என்றால் என்ன? எதற்காக ஒரு நாடு வல்லரசாக வேண்டும்? வல்லரசாக இருக்கும் பெரிய பெரிய தேசங்கள் அடைந்த நன்மைகள் என்ன? இந்தியா வல்லரசாக மாறிவிட்டால் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

கர்த்தர் நினைவுக்கு வந்தார். இதோ, கர்த்தர், இங்கே வந்துவிட்டார். அதோ அந்த வளைவில் முந்திவிட்டார். இதோ, இதோ. வந்துகொண்டேஇருக்கிறார். வந்தேவிட்டார். நான் நிஜமாகவே திரும்பி பார்த்திருக்கிறேன். கர்த்தருக்குப் பதிலாக வைரமுத்து அழைத்தது வல்லரசை.

தமிழர்கள் இருவர் சந்தித்துக்கொண்டால், மூன்று விஷயங்களைப் பற்றி பேசுகிறார்கள் என்றார் வைரமுத்து. திருமங்கலம் என்ன ஆகும்? (அரசியல்), வில்லு ஜெயிக்குமா? (சினிமா), கடைசியா எந்தக் கோவிலுக்குப் போயிருந்தீங்க (ஆன்மிகம்). கவனியுங்கள் நண்பர்களே, இந்த மூன்றும் கற்பனையில் கட்டமைக்கப்பட்டவை. வைரமுத்து தொடர்கிறார். இந்தியா எப்பொழுது உருப்படும் தெரியுமா? புத்தகங்களைப் பற்றி பேசும்போதுதான். கடைசியாக நீங்கள் வாசித்த புத்தகம் என்ன என்று கேளுங்கள். இங்குள்ள ஒவ்வொருவரும் புத்தகத்தின் உயிர் விளம்பரமாக மாறுங்கள்.

பொருளாதாரச் சிக்கல் தீர ஒரு வழியும் சொன்னார் வைரமுத்து. இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் அடையாள அட்டை இல்லாமல் அவதிப்படுகிறார்கள். வேலையிழந்த, வேலையில்லாத அத்தனை இளைஞர்களும் அடையாள அட்டைகளைத் தயாரிக்க முன்வரவேண்டும். அடையாள அட்டை தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையை அரசாங்கம் அமைத்து இவர்களுக்கு வேலை கொடுக்கவேண்டும். செய்தால், இன்னும் பத்து ஆண்டுகளுக்கு (குறைந்தபட்சமாம்) அனைவருக்கும் வேலை இருக்கும். இதற்கும் கைதட்டினார்கள். நல்லவேளையாக, ரத்த சாட்சியம் சொல்ல ஒருவரும் மேடையேறவில்லை.

இந்தியப் பிரிவினை புத்தகத்துக்கு நல்ல வரவேற்பு. அட, இந்தியா என்று ஒரு நாடு இருப்பதும் உங்களுக்குத் தெரியுமா என்றார் ஒரு வாசகர். இந்திய வரலாறு கொண்டு வருவீர்களா என்று சிலர் கேட்டார்கள். குறித்து வைத்துக்கொண்டேன். கவிஞர் வெண்ணிலா, முருகேஷ் இருவரும் வந்திருந்தார்ள். செங்கிஸ்கான், பாக் ஒரு புதிரின் சரிதம், கிறிஸ்தவ வரலாறு மூன்றும் வாங்கிசென்றார்கள்.

தான் கண்ட வேறு சில கொடுங்கனவுகளை பகிர்ந்துகொண்டார் நண்பர் ஹரன் பிரசன்னா. அதில் ஒன்று, நான் ஆஞ்சநேயர் வாழ்க்கை வரலாறு எழுதுவது. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கீழைக்காற்று புத்தகங்கள் தனக்குப் பிடிக்கும் என்று சொன்னார். கனவல்ல, நிஜம்.

நான் வாங்கிய புத்தகங்கள். ராகுல் சாங்கிருத்யாயனின் ஐரோப்பியத் தத்துவ இயல். ஜென்னி மார்க்ஸ் எழுதிய எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை. கம்யூனிஸ்ட் அறிக்கையின் கதை. ஸன் யாட் ஸென் வாழ்க்கை வரலாறு (வெ. சாமிநாத சர்மா). சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து இரு நூல்கள். Being and Unity in Western Philosophy by Herbert Herring. Political Justice, Legislative Reservation for Scheduled Castes and Social Change. (அம்பேத்கர் நினைவு உரைகள்). நைந்துபோன பல புத்தகங்களை மூட்டைகட்டி அடியில் போட்டுவைத்திருக்கிறார்கள். தொன்மம், மானுடவியல், அகழ்வாராய்ச்சி என்று நிறைய கண்ணில் பட்டன. மீண்டும் ஒரு முறை தேடவேண்டும்.

Indian Thought Publications-ல் இருந்து ஆர்.கே. நாராயணனின் மூன்று புத்தகங்களை செட்டாக வாங்கினார், மனைவி அனுஷா. Malgudi Days. Under the Banyan Tree & Other Stories. A Tiger for Malgudi. 250 ரூபாய். தமிழ் சரளமாக வாசிக்க வராது என்பதால், பெண் ஏன் அடிமையானாள் ஆங்கில மொழிபெயர்ப்பை அவருக்குப் பரிசளித்தேன்.

3 comments:

குப்பன்.யாஹூ said...

vairamuthu is good only in lyrics. If he started talking, we cant hear him more than 5mins.

Anonymous said...

/// இந்திய வரலாறு கொண்டு வருவீர்களா என்று சிலர் கேட்டார்கள். குறித்து வைத்துக்கொண்டேன். ///

;)

மாலன் said...

க்ல்கியில் நீங்கள் எழுதிவரும் புத்தகங்கள் பற்றிய தொடரை வாசித்து வரும் ஒரு வாசகன் நான். நீங்கள் இந்தச் சந்தையில் தேர்ந்துள்ள புத்தகங்கள் உங்கள் மீதான மரியாதையை அதிகரிக்கின்ற்ன.
அன்புடன்
மாலன்