திடீரென்று வகுப்பாசிரியர் அழைத்தார். போய் தலைமை ஆசிரியரைப் பார். தயங்கித் தயங்கி சென்றார் அந்த மாணவர். வா என்று உள்ளே அழைத்த தலைமை ஆசிரியர் மேஜை டிராயரைத் திறந்து ஒரு காகிதத்தை எடுத்து நீட்டினார். பெற்றுக்கொண்டு ஆசிரியரிடம் கொண்டு வந்து காண்பித்தார் அந்த மாணவர். பார்த்தவுடனே சொல்லிவிட்டார் அவர். இனி இங்கே வராதே. வீட்டுக்குப் போய்விடு. அதற்கான உத்தரவுதான் இது. தன்னை எதற்காக பள்ளியில் இருந்து நீக்கினார்கள் என்று அந்த மாணவருக்கு இந்த நிமிடம் வரை தெரியாது.
சமீப காலங்களில், பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் அமெரிக்கப் பள்ளிகளில் இருந்து அடித்து துரத்தப்பட்டிருக்கின்றனர். ஒழுங்கீனமானவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு பலர் சிறைச்சாலைகளில் (குழந்தைகளுக்கான சிறைச்சாலைகள்) அடைக்கப்பட்டிருக்கிறார்கள். கலவரமடைந்த பல மாணவர்கள் படிப்பு முடிவதற்கு முன்பே பள்ளிகளில் இருந்தும், கல்லூரிகளில் இருந்தும் நின்றுவிடுகிறார்கள்.
பொருளாதாரம் மட்டுமல்ல அமெரிக்காவின் கல்வித்துறையும்கூட கோமா நிலையில்தான் இருக்கிறது. குறிப்பாக, அரசாங்கம் ஏற்று நடத்தும் பொதுப்பள்ளிகளின் கல்வித் தரம். சரி, ஜார்ஜ் புஷ்ஷின் மற்றுமொரு சொதப்பல் என்பதாகத்தான் நினைத்துக்கொண்டது அமெரிக்கா. போனது போகட்டும். எப்படியும் ஒபாமா வரப்போகிறார். பொருளாதாரத்தையே மீட்டெடுக்கப்போகிறவர் கல்வியை விட்டுவிடுவாரா?
அந்த ஆசையும் இப்போது பொய்த்துவிட்டது. ஒரு மந்திரம் போல் பராக் ஒபாமாவின் பெயரை உச்சரித்துக்கொண்டிருப்பவர்கள்கூட கல்வி துறையில் உருப்படிம்ன மாற்றம் வரும் என்பதை நம்ப மறுக்கிறார்கள். காரணம், ஆர்னே டங்கன் என்பரை கல்வி அமைச்சராக ஒபாமா தேர்ந்தெடுத்ததுதான். இளவயது நண்பர் எனும் ஒரே காரணத்துக்காக ஒரு முக்கியப் பதவியை அவரிடம் கொடுப்பது நியாயமா? பல லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட முடிவு அல்லவா இது?
டங்கனை அவர்கள் அறிவார்கள். சிகாகோ பொதுப்பள்ளிகளின் சி.ஈ.ஓ.வாக இருப்பவர். அவரது புகழ்பெற்ற திட்டம், மறுமலர்ச்சி 2010. கல்வித்துறையில் சில பரிசோதனை முயற்சிகள் நடத்தவேண்டும் என்பது அவர் கனவு. சில புதிய பரிசோதனை முயற்சிகளைக் கல்வியில் மேற்கொள்ளவேண்டும். சில பள்ளிகளை இழுத்து மூடவேண்டும். பள்ளிக்கூடங்களில் ராணுவக் கட்டுப்பாட்டை கொண்டுவரவேண்டும். பள்ளி நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்கவேண்டும். வரிசையாக இதையெல்லாம் செய்தால் கல்வியின் தரம் உயர்ந்துவிடும். அமெரிக்கா கல்விப் பூங்காவாக மாறிவிடும். டங்கனின் நீண்ட கால கனவு திட்டம் இது.
பள்ளிகளில், தலைமை ஆசிரியர் வேண்டாம். தேவை கார்ப்பரேட் நிறுவனங்களில் இருப்பதைப் போன்ற சி.ஈ.ஓ.க்கள். ஆசிரியர்கள் அல்ல, மேனேஜர்கள் தேவை. சொல்லிக்கொடுப்பதில் அல்ல, ஒழுங்கு கடைபிடிக்கப்படுகிறதா என்பதை சூப்பர்வைஸ் செய்வதுதான் அவர்களுக்கு முக்கியப் பணி. பள்ளிகள் அனைத்தும் கல்வி அமைச்சகத்தின் கீழ் வந்து சேரும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பள்ளிகள் ரிப்போர்ட் அனுப்பவேண்டும். பச்சை, மஞ்சள், சிகப்பு என்று கிராஃப் போட்டு. குறிப்பிட்ட வகுப்பில் எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள், அவர்களது மூன்று மாத பெர்ஃபார்மன்ஸ் என்ன, எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு அனைத்தையும் கலரில் குறிக்கவேண்டும். இதை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட பள்ளியின் தரத்தை அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.
உதாரணத்துக்கு, எழுபது சதவீதத்துக்கும் குறைவாக அந்தப் பள்ளி ஸ்கோர் செய்திருந்தால், மேனேஜர்களை வேலையில் இருந்து தூக்குவார்கள். இன்னும் குறைச்சல் என்றால் சி.ஈ.ஓ. தூக்கப்படுவார். அதையும்விட குறைச்சல் என்றால், குறிப்பிட்ட பள்ளி இழுத்து மூடுப்படும். நஷ்டத்தில் ஓடும் பள்ளி என்னத்துக்கு? பதிலுக்கு, ஏதாவது பிட்ஸா கார்னர் காண்ட்ராக்ட் கொடுத்தால் நாலு காசு கிடைக்கும். மாணவர்கள்? அவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்ய? நஷ்டத்துக்கு மூலக்காரணமே அவர்கள்தானே? டிஸி கொடுத்து துரத்தியடி.
டங்கனின் நண்பரும் ஆதரவாளருமான ஜோயல் க்ளீன் (டங்கன் இடத்தில் இவரை பதவியில் அமர்த்துவார்கள் என்று பலர் எதிர்பார்த்திருந்தனர்) இந்த திட்டத்தை முன்னர் அறிமுகப்படுத்தியபோது பெற்றோர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகளை அவர் சந்திக்கவேண்டியிருந்தது. ஜோயல் பதவி விலகவேண்டும் என்று ஊர் முழுக்க கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. ஜோயலின் கனவு நிறைவேறவில்லை. வருத்தம்தான் என்றாலும் தன் நண்பர் டங்கன் ஒபாமாவால் தேர்ந்தெடுக்கப்பட்டதில் அவருக்கு மகிழ்ச்சியே.
1980ல் இருந்தே அமெரிக்காவில் முணுமுணுப்புகள் ஆரம்பித்துவிட்டன. அரசாங்கம் ஏற்கெனவே திணறிக்கொண்டிருக்கிறது. ஏகப்பட்ட வேலை. எக்கச்சக்க செலவு. இதில், பொதுப் பள்ளிக்கூடங்களையும் நடத்திக்கொண்டிருக்கமுடியுமா? அதுவும் இலவசமாக? இலவசமாக அளிக்கப்படும் கல்வி எப்படி இருக்கும்? பேசாமல், அனைத்து பொது பள்ளிக்கூடங்களையும் அப்படியே மூட்டை கட்டி தனியாரிடம் ஒப்படைத்துவிடலாம். டெண்டர் விடுவோம். யார் அதிகம் தருகிறார்களோ அவர்களுக்கு விற்றுவிடலாம். பிறகு அவர்களாச்சு, மாணவர்களாச்சு.
அமெரிக்கர்கள் சீறினார்கள். அரசாங்கமே கல்வியை விற்க தயாராக இருக்கும்போது, காசு போட்டு பிசினஸில் ஈடுபடப்போகும் தனியார் நிறுவனங்கள் என்ன செய்யும்? ஒரு மாணவனுக்கு என்ன தேவையோ அதை அவர்கள் வழங்கமாட்டார்கள். தொழிற்சாலைகளில் இருந்து தயாராகும் கோக் பாட்டில்கள் போல் வரிசை வரிசையாக மாணவர்களுக்குள் எதையாவது திணித்து வெளியில் தள்ளிவிடுவார்கள். பெரும் விலையையும் அதற்கு நாம் அழவேண்டியிருக்கும். வேண்டாம். பொதுப்பள்ளிகளை அரசாங்கமே ஏற்று நடத்தட்டும். தனியார் இதில் வேண்டாம். குறைந்தது, இதிலாவது.
சரி, நேரடியாகத் தனியார் ஆள்களைக் கொண்டுவந்தால்தானே பிரச்னை? வழிமுறையை மாற்றிக்கொண்டது அரசாங்கம். பொதுப் பள்ளிகளை கார்ப்பரேட் பள்ளிகளாக மாற்றும் முயற்சி முடுக்கிவிடப்பட்டது. மாணவர்களும் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகிகளும் அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் வந்து சேர்ந்தனர். அவர்கள் தரம் கணக்கிடப்பட்டது.
ஆசிரியர்களைத் தனியே அழைத்துப் பேசினார்கள். எங்களுக்கு ஆசிரியர்கள் தேவையில்லை. டெக்னீஷியன்கள் இருந்தால் போதும். அறிவியில், கணக்கு, ஆமணக்கு என்று கண்டதையெல்லாம் சொல்லிக்கொடுத்தால் போதாது. மார்க்கெட்டில் மாணவர்கள் விலைபோகவேண்டும். சுற்றிலும் உள்ள பெரும் நிறுவனங்களைப் பாருங்கள். அவர்கள் தேவைகளை குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். வளர்ந்ததும் மாணவர்கள் பணியாற்றப்போவது அவர்களிடத்தில்தான். ஆகவே, நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ற கல்வியை அளித்தால் போதும். அவர்களை மாணவர்களாகப் பார்க்காதீர்கள். கஸ்டமர்களாகப் பாருங்கள். புரிகிறதா?
கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மாணவர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் வித்தியாசம் அதிகம் இல்லை. போர்வீரர்களைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? செய் என்றால் உயிரைக் கொடுத்தாவது செய்து முடிப்பார்கள். இவர்களையும் அதுபோல் வளர்த்தெடுக்கவேண்டும். அதற்குத் தேவை கண்டிப்பு. கடுமையான கண்டிப்பு. ஒழுக்க விதிகளிலோ, கொடுக்கப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பதிலோ மாணவர்கள் பின்தங்கினால், கடுமையான தண்டனைகளை அளிக்கவேண்டும். அடங்க மறுத்தால், டிஸியைக் கிழித்து கையோடு கொடுத்துவிடுங்கள்.
உங்களால் கடுமையாகத் தண்டிக்க முடியாவிட்டால் நாங்கள் பார்த்துக்கொளகிறோம். பாதுகாப்பு வீரர்களை அனுப்புகிறோம். அவர்கள் கவனித்துக்கொள்வார்கள். வகுப்பறையில் மட்டுமல்ல வகுப்பறைக்கு வெளியில் மாணவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதையும் அதிகாரிகள் சொல்லிக்கொடுப்பார்கள்.
பொதுப் பள்ளிகள் மீது ஏன் அரசாங்கத்துக்கும், குறிப்பாக கல்வி அமைச்சகத்துக்கும் இத்தனை காழ்ப்புணர்ச்சி? ஏன் இத்தனை வெறுப்பு? காரணம், பொதுப் பள்ளிகளில் அதிகம் படிப்பவர்கள் வெள்ளை இன அமெரிக்கக் குழந்தைகள் கிடையாது. கறுப்பினத்தவர். அமெரிக்கர்களுக்கு இரண்டு நிறங்கள் மட்டுமே தெரியும். வெள்ளை. இன்னொன்று, கறுப்பு. வெள்ளை அல்லாத எதுவும் கறுப்புதான் அவர்களுக்கு. வெள்ளை அல்லாத எதற்கும் முன்னுரிமை வேண்டியதில்லை. வெள்ளை அல்லாதவர்களுக்கு செய்யப்படும் செலவுகள் அனைத்தும் வீண். அல்லது, தண்டம்.
டங்கன் தன் கனவை தெளிவாகவே அறிவித்துவிட்டார். கல்வியை கார்ப்பரேட் ஆக்குவேன். கூடுதல் மிலிட்டரி கட்டுப்பாட்டைக் கொண்டுவருவேன். செயல்படாத பொதுப் பள்ளிகளை இழுத்துமூடுவேன். ஒபாமா டங்கனை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டுள்ளார் என்னும்போது டங்கனின் கனவுத்திட்டத்தையும் சேர்த்தேதான் அவர் அங்கீகரித்திருக்கவேண்டும். ஒபாமாவின் தீவிர ரசிகர்களேகூட இந்த விஷயத்தில் சங்கடத்துடன் நெளிந்துகொண்டிருக்கிறார்கள்.
(ஆனந்த விகடனில் வெளிவந்த என் கட்டுரை
6 comments:
ஏதோ நேரில் வந்து பாத்தாப்ல எழுதியிருக்கீங்க. ஓபாமாவின் தீவிர ஆதரவாளர்களிடம் கருத்துக் கணிப்பு கூட நடத்திய மாதிரி தெரிகிறது.
தமிழக அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? எவ்வாறு தரத்தை முன்னேற்றலாம் என்றெல்லாம் ஆய்வு செய்யக்கூடிய தூரத்தில் இருந்து கொண்டு, நேரில் காணாத ஒன்றை, கள ஆய்வும் செய்ய இயலாத தூரத்தில் இருந்து கொண்டு அலசுவது பிரமிக்க வைக்கிறது!
சூப்பர் ஆர்ட்டிக்கள் சார். பின்னிட்டீங்க
உங்கள் பாஸ்போ்ர்ட் பத்தியை நான் தொடர்ந்து வாசித்துவருகிறேன். என் நண்பர்களிடம் விவாதித்தும் வருகிறேன். அமெரிக்காவை நேசித்த பலர் பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு நிலைமாறிவிட்டடார்கள். தொடரந்து எழுதுங்கள். புத்தக கண்காட்சி வந்தால் உங்களைப் பார்க்கலாமா? கிழக்கு பதிப்பக ஸ்டாலில் இருப்பீர்களா?
கொஞ்சம் விரிவான பதில்: அமெரிக்காவில் கல்வி
நன்றி
நீங்கள் கல்வியாளரா அல்லது சொந்த அனுபவம் ஏதேனும் இருக்கிறதா (அமெரிக்கப் பள்ளியில் படித்தவராக அல்லது படிக்கும் மாணவரின் தந்தையாக)? இக்கட்டுரை எந்த தரவுகளின் அடிப்படையில் வைத்து எழுதப்பட்டது? நீங்கள் எழுதியுள்ளவற்றில் உண்மைகள் குறைவு, கற்பனை அதிகம். தற்போதைய தகவல் புரட்சி யுகத்தில் நாம் எத்தகைய கருதுகோளோடு ஒரு பிரச்சினையை அணுகினாலும் அதற்கான "ஆதாரம்" இணையத்தில் கிடைக்கும். இப்போதைய பொருளாதார நெருக்கடியில் அமெரிக்காவைப் பற்றி என்ன எழுதினாலும் மக்கள் நம்பி விடுவார்கள் என்பதற்காக இந்த அளவுக்கு பூச்சாண்டி காட்டியிருக்கத் தேவையில்லை. அமெரிக்காவின் அடிப்படை வலிமை, முதலாளித்துவம், இராணுவ பலங்களில் மட்டுமில்லை. கல்விக்கும் பெரும்பங்கு உண்டு.
சீனியர் புஷ் அதிபராக இருந்த காலத்தில் மத்திய கல்வித்துறையை இழுத்து மூடவேண்டும் என்ற ஒரு கருத்து நிலவியது. காரணம் கல்வியை கவனித்துக் கொள்ளவேண்டிய பொறுப்பு உள்ள மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் பொறுப்பு என்று கருதப்பட்டது.
தற்போதைய புஷ் இன் எட்டாண்டு ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட
ஒரே உருப்படியான காரியம் "எந்தக் குழந்தையும் பின் தங்கலாகாது (No Child Left Behind)" திட்டம் தான். ஒபாமா கூட தேர்தல் பிரச்சாரத்தின் போது இத்திட்டத்தை குறை சொல்ல முடியாமல், இந்த திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று தான் குற்றம் சாட்டினார்.
இது அமெரிக்காவைப் பற்றிய கட்டுரையா? தமிழ்நாட்டிலோ என்று மயங்கிப் போனேன்...
தமிழ்னாட்டின் கல்வி நிலைமைக்கும் பொருத்தமாகத் தான் இருக்கிறது நண்பர் அவர்களே... முடிந்தால் தமிழ்நாட்டு கல்வி பற்றியும் அலசி ஒரு கட்டுரை போடுங்களேன்..
நட்புடன்...
சிவாஜி
Post a Comment