February 10, 2009

ஈழக்குறிப்புகள் : இலங்கை அரசும் சிங்களர்களும்

இலங்கைக்கு வழங்கிக்கொண்டிருந்த வானொலி சேவையை பிபிசி துண்டித்துக்கொண்டுவிட்டது. இலங்கை மீது பிபிசி வைக்கும் குற்றச்சாட்டுகள் இவை. சில செய்திகளை இலங்கை மக்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக நிகழ்ச்சி ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கும்போது, இடையிடையே இசையை ஓடவிட்டு கெடுக்கிறார்கள். சில நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுவதே கிடையாது. ஆங்கிலம், சிங்களம், தமிழ் மூன்று மொழி நிகழ்ச்சிகளுக்கும் இதே நிலைமைதான். இலங்கை அரசுடன் இதுவரை பலமுறை பேசிப்பார்த்துவிட்டோம். பதிலில்லை. ஆகவே, சேவையைத் துண்டித்துக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

பிபிசிக்கே இந்த நிலைமை என்றால் உள்நாட்டு ஊடகவியலாளர்களின் கதி என்ன என்பதைப் புரிந்துகொள்ளலாம். போர் காலங்களில் அரசாங்கங்கள் செய்திகளைத் தணிக்கை செய்வது வாடிக்கைதான் என்றாலும் இலங்கை அரசின் ஊடக அடக்குமுறை உச்சத்தைத் தொட்டிருக்கிறது. மிகக் கடுமையான தணிக்கை. கொலை மிரட்டல். தாக்குதல். தாதாக்களே தேவலை.

ஊடகங்களுக்கு எதிராக மூன்று வழிமுறைகளைக் கடைப்பிடிக்கிறது இலங்கை அரசாங்கம். எதிரான செய்திகள் அனைத்தையும் அமுக்குவது முதல் வகை. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான செய்திகள் எதிலும் வந்துவிடாதபடி கவனமாக இருப்பார்கள். இலங்கையில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளை மட்டுமல்ல இந்தியப் பத்திரிகைகளையும் தன் வயப்படுத்த இலங்கை அரசு முனைப்புடன் முயன்றுவருகிறது.

செய்திகளைத் திரித்து வெளியிடுவது இரண்டாவது வகை. புலிகள் தரப்பு இழப்புகளைப் பூதாகரப்படுத்தியும் இலங்கை ராணுவ இழப்பை சிறிதாக்கியும் வெளியிடப்படும் செய்திகள் இந்த வகைக்குள் அடங்கும். மூன்றாவது, லசந்த விக்கிரமதுங்கவுக்கு நேர்ந்த கதி. மிரட்டியும் கேட்கவில்லையா? நீக்கிவிடு.

கடந்த சில வாரங்களாக, கொழும்பிவிலும் பிற பகுதிகளில் உள்ள சிங்களர்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சிகள் நடத்தி வருகிறார்கள். தமிழர்கள் மீதுள்ள அக்கறையால் அல்ல. இலங்கை அரசாங்கத்தின் போக்கு அதிருப்தி அளிப்பதால். புலிகளுடனான போரில் கொல்லப்பட்ட சிங்களர்கள் பற்றிய சரியான புள்ளிவிவரங்களை இலங்கை அரசு அளிக்க மறுத்துவருகிறது. என் கணவர் எங்கே, என் சகோதரர் எங்கே, என் மகன் எங்கே என்று கேட்டு ராணுவத் தலைமையகத்தை சிங்கள மக்கள் முற்றுகையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சொல்கிறோம், சொல்கிறோம் என்று தட்டிக் கழித்துக்கொண்டே இருக்கிறது அரசு. இன்று வரை சரியான தகல்கள் வெளிவரவில்லை.

இலங்கையின் பயங்கரவாத ஆட்சிமுறையால் பாதிக்கப்படுபவர்கள் தமிழர்கள் மாத்திரமல்ல. சிங்களர்களும்தான். அமெரிக்காவை எடுத்துக்கொள்ளுங்கள். அமெரிக்காவின் மேலாதிக்க வெறி இராக், ஆப்கனிஸ்தான் போன்ற அந்நிய தேசங்களை மட்டுமல்ல அமெரிக்காவையும் சேர்த்தே குட்டிச்சுவராக மாற்றியிருக்கிறது. எனவேதான், அமெரிக்காவுக்கு எதிராகச் சென்ற ஆண்டு முழுவதும் அமெரிக்கர்கள் முழுவீச்சில் போராடினார்கள். சிங்களர்கள் செய்யவேண்டியதும் இதுவேதான். இலங்கை அரசின் செயல்பாட்டை சிங்களர்கள் அம்பலப்படுத்தவேண்டும். கண்டிக்கவேண்டும். எதிர்த்துப் போராடவேண்டும்.

(தொடரும்)

ஆதாரம்

BBC suspends FM radio broadcasts for Sri Lanka
Reporters Without Borders வெளியிட்டுள்ள அறிக்கை
Sri Lanka Journalism 'under threat' பிபிசி கட்டுரை

5 comments:

Anonymous said...

ஹலோ! எப்ப பார்த்தாலும் சீரியஸ் மேட்டரையே எழுதுறீங்களே. மாறுதலுக்காக நகைச்சுவையா முகில் மாதிரி எழுதிதான் பாருங்களேன்.

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

சந்திப்பு said...

உங்களது எழுத்து நடை சிறப்பானதாய் உள்ளது. தொடருங்கள் உங்கள் பயணத்தை. நல்ல முறையில் பல தலைப்புகளையும் கொடுத்து வருகிறீர்கள். கொள்ளை வித்தியாம் இல்லாமல் இருப்பினும் இது நல்லதே. தமிழில் இதுபோன்ற படைப்புகள் வெளி வருவது சிறப்பானது. வாழ்த்துக்கள் மருதன்.

Anonymous said...

மிகவும் சிறப்பாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் மருதன். குறிப்புகள் தொடரட்டும். நிறைய எழுதுங்கள்

Anonymous said...

Good one. Very few thought about Sinhala people's involvement in the struggle against Sri Lanka govt.