February 16, 2009

ஹமாஸுக்குப் பேசத் தெரியாது!

ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம் என்றால் இஸ்ரேல்? ஹமாஸ் செய்வது அநியாயம் என்றால் இஸ்ரேல் செய்வது? ஆயிரம் சொன்னாலும் துப்பாக்கி தூக்கிய இயக்கம்தானே என்று கடுகடுத்துக்கொண்டிருந்தவர்கள்கூட ஹமாஸை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். இஸ்ரேல் நடத்திய தொடர் குண்டு வீச்சுகள், ஹமாஸை ஒரு ஹீரோவாக உருமாற்றி இருக்கிறது. தீவிரவாத இயக்கம் என்னும் பெயர் மெல்ல மெல்ல அழிந்து, ஒரு பேராளி குழுவாக, அரசியல் நிறுவனமாக ஹமாஸ் எழுச்சி பெற்றிருக்கிறது. இது நல்லதா தீயதா என்பதை ஆராய்வதைக்காட்டிலும் இஸ்ரேலின் அராஜகத்தால் ஏற்பட்ட இந்த தவிர்க்கமுடியாத விளைவை ஏற்றுக்கொள்வது முக்கியமானது.

பாலஸ்தீன தலைவர் முகமது அப்பாஸ், போதுமான அளவுக்குச் செயல்படாமல் இருப்பதும் இந்தப் புதிய மாற்றத்துக்குக் காரணம். இருபத்து இரண்டு தினங்கள், நிறுத்தாமல் காஸாவைத் தாக்கி சீரழித்திருக்கிறது இஸ்ரேல் படை. சிறு குழந்தைகளின் சடலங்கள் புதைக்குழிகளுக்கு கீழே இருந்து கண்டெடுக்கப்படுகின்றன. சரியான இழப்பு எண்ணிக்கை தெரியப்போவதே இல்லை. இன்றைய தினம் வரை, போதுமான மருத்துவ வசதிகள் இல்லை. சிறு சத்தம் கேட்டாலும் பெரியவர்களும் குழந்தைகளும் ஓடிச்சென்று பதுங்குக்குழிக்குள் மறைந்துகொள்கிறார்கள் . போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுவிட்டாலும், பீதியும் ரணமும் வலியும் ஆறவில்லை.

ஏன் அரசாங்கம் எதுவும் செய்யவில்லை? உதடுகள் துடிக்க கேள்வி எழுப்புகிறார்கள் பாலஸ்தீன மக்கள். குளித்து நாள்கள் பல ஆகிவிட்டன. குடிக்கவே போதுமான நீர் இல்லை. காலி கோகோ கோலா பாட்டில்களை ஒரு கூடையில் நிரப்பிக்கொண்டு சிறுவர்கள் பல மைல் தொலைவு நடந்துசெல்கிறார்கள். அரசாங்கமும் எங்களைப் போலவே இடிந்து உட்கார்ந்திருப்பது வேதனையளிக்கிறது. இஸ்ரேலைத் திருப்பித் தாக்கவும் இல்லை. எங்களை மீட்டெடுக்கவும் இல்லை.

இஸ்ரேல் போன்ற வலிமையான ஒரு தேசத்தை திருப்பித் தாக்கும் திராணி உண்டா என்றெல்லாம் யோசிக்கவில்லை ஹமாஸ். தோதான சமயங்களில், இஸ்ரேலுக்கு அவ்வப்போது பதிலடி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பாலஸ்தீன் அரசாங்கமா, ஃப்பூ என்ற ஊதித்தள்ளும் இஸ்ரேல்கூட, ஹமாஸ் என்றால் சற்றே பின்வாங்குகிறது. இஸ்ரேலின் ஆயுத பலத்தையும் ஆள்பலத்தையும் ஹமாஸோடு எந்த வகையிலும் ஒப்பிடமுடியாது என்றாலும், ஹமாஸின் கெரில்லாத் தாக்குதல் போர்முறைகள் மீது இஸ்ரேலுக்கு அச்சமுண்டு. வான் படைத் தாக்குதலை முன்பே ஆரம்பித்துவிட்ட இஸ்ரேல், தரைப்படைத் தாக்குதலை இறுதிகட்டத்தில்தான் நிகழ்த்தியது. அதுவும் தயக்கத்துடன்தான். காரணம், ஹமாஸ்.

ஹமாஸ் ஒரு ஹீரோவாக உதயமாவது இந்த இடத்தில்தான். இஸ்ரேல் மட்டுமல்ல, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்று சர்வதேச அளவில் ஹமாஸ் ஒரு சவாலாக மாறியுள்ளது. பாலஸ்தீன மக்களின் நிஜமான பிரதிநிதி முகமது அப்பாஸின் அரசாங்கம் அல்ல, ஹமாஸ்தான் என்று பலரும் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். முகமது அப்பாஸ் இதை ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் காஸா பகுதி மக்கள் ஹமாஸை திடமாக நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸால் வெற்றிபெற முடியவில்லை என்பது உண்மை. ஆனால், முன்பை காட்டிலும் கூடுதலான மக்கள் ஆதரவை ஹமாஸ் திரட்டியிருக்கிறது. இந்த அரசியல் வெற்றியை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்துவிட்டது ஹமாஸ். காஸா மக்களே, எமக்குப் பின்னால் அணிதிரளுங்கள். எத்தனை சங்கடங்கள் வந்தாலும் கலங்காதீர்கள். நாங்கள் உடனிருக்கிறோம். பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை நிச்சயம் முன்னெடுத்துச் செல்வோம். உங்கள் ஆதரவுடன்.

ஹமாஸ் தொடங்கப்பட்டது 1987ம் ஆண்டில். ஹமாஸ் தொடங்குவதற்கு முக்கியக் காரணமாக இருந்தது இன்னொரு அமைப்பு. ஜமாத் அல் இக்வான் அல்முஸ்லிமின் என்பது அதன் பெயர். இஸ்லாமிய சகோதரத்துவம் என்று அர்த்தம். சமூகப் பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். வீதிகள் அமைத்திருக்கிறார்கள். மசூதிகள் கட்டியிருக்கிறார்கள். இஸ்லாமிய மார்க்கத்தை தீவிரமாகப் பரப்பியிருக்கிறார்கள். ஓர் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தைக்கூட உருவாக்கியிருக்கிறார்கள். முக்கிய நம்பிக்கைகள் இவை. அல்லாஹ்வையும் இறை நம்பிக்கையையும் போற்றுவோம். இஸ்லாமிய நெறியில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம். இறைவனுக்காக உயிரைக் கொடுக்கவும் சித்தமாக இருப்போம்.

தொடங்கப்பட்டது எகிப்தில் என்றாலும் மெல்ல மெல்ல சிரியா, ஜோர்டன் என்று ஆரம்பித்து மத்திய கிழக்கின் பல பகுதிகளிலும் இவர்கள் பரவ ஆரம்பித்தார்கள். பாலஸ்தீனக் கிளை 1946ல் ஜெருசலேத்தில் உருவானது. எழுபதுகளில், ஷேக் முகமது யாசின் என்பவர் தலைமையில் இந்த இயக்கம் காஸாவில் செயல்பட்டு வந்தது. இதுவே பின்னர் ஹமாஸாக உருமாறியது.

இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்னைனை முதன் முறையாக இஸ்லாமிய நோக்கத்தில் அணுகியது ஹமாஸ். பாலஸ்தீனத்தில் இருக்கும் இஸ்லாமியர்களை, இஸ்ரேலில் இருக்கும் யூதர்கள் ஆக்கிரமிக்க துடிக்கிறார்கள். அதை இறைவனின் பெயரால் தடுத்து நிறுத்தவேண்டும். இஸ்லாம் தழைக்கவேண்டுமானால், இஸ்லாமியர்கள் உயிர்த்திருக்கவேண்டுமானால், இஸ்ரேல் மீது புனிதப் போர் தொடுக்கவேண்டும். இஸ்ரேலை எதிரி தேசமாகக் கருதவேண்டும். யூதர்களை, எதிரிகளாக.

ஒரு பக்கம், சமூக சேவைகள். இன்னொரு பக்கம் மதச் சேவைகள். மற்றொரு பக்கம், இஸ்ரேலை எதிர்ப்பதற்கான தயாரிப்புகள். மூன்றையும் சமஅளவில் முன்னெடுத்துச்சென்றது ஹமாஸ். எதிலும் குறை வைக்கக்கூடாது என்பதில் ஹமாஸ் தெளிவாக இருந்தது. தனிமனித ஒழுக்கம் முக்கியம். இஸ்லாமிய வாழ்க்கை நெறி முக்கியம். சாலைகள், பள்ளிக்கூடங்கள் முக்கியம். எதிரிகளை அழிப்பதும் முக்கியம்.

பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருந்த யாசிர் அராஃபத்தின் பி.எல்.ஓ. (பாலஸ்தீன விடுதலை இயக்கம்) ஹமாஸிடம் இருந்து இரு முக்கிய விஷயங்களில் வேறுபடுகிறது. பி.எல்.ஓ. இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்புவதில்லை. தேவைப்பட்டால் இஸ்ரேல் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அவர்கள் தயாராக இருந்தனர். ஹமாஸுக்கு பேசப் பிடிக்காது. எதிரிகளுடன் என்ன பேசுவது? பேசி தீர்க்கக்கூடிய பிரச்னையா இது? எதிரிகளை ஒழிப்போம். புனித இஸ்லாமிய பாலஸ்தீனை உருவாக்குவோம்.

தொடக்கக் காலத்தில், யூதர்கள் மீது நேரடியாகவே தாக்குதல்கள் தொடுத்திருக்கிறது ஹமாஸ். அரசாங்கம் இழைக்கும் குற்றங்களுக்கு பொது மக்களைத் தண்டிக்கலாமா என்று கேட்கப்பட்டபோது ஹமாஸ் சீறிப் பாய்ந்தது. இவர்கள் ஏன் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள்? ஓர் அரசாங்கம் தவறு செய்யும்போது தட்டிக்கேட்கவேண்டாமா? எதிர்த்து போராட வேண்டாமா? தவிரவும், பொதுமக்கள் ராணுவத்தினர் என்று தனித்தனி பிரிவுகள் இல்லை அங்கே. சுழற்சி முறையில் சிவிலியன்கள் ராணுவத்தில் பணிபுரிந்தாகவேண்டும். ஆகவே, யூதர்கள் அனைவரும் நமக்கு எதிரிகளே.

இஸ்ரேலின் நிரந்தர தலைவலியாக ஹமாஸ் மாறிப்போனது. 2000ம் ஆண்டு முதல் 2003 வரை ஹமாஸ் நிகழ்த்திய தற்கொலைப் படைத் தாக்குதல்களைக் கண்டு அலறியது இஸ்ரேல். ஹமாஸை அழிக்க என்னென்ன செய்யமுடியுமோ அனைத்தையும் செய்து பார்த்தது இஸ்ரேல். அமெரிக்காவின் உதவியுடன். அழிவதற்கு மாறாக கூடுதல் வளர்ச்சி பெற்றது ஹமாஸ். அட பரவாயில்லையே நமக்காக போராடுவதற்கு ஓர் இயக்கமாக இருக்கிறதே என்று மக்களும் ஹமாஸின் பின்னால் அணிதிரள ஆரம்பித்தார்கள்.

ஹமாஸ் தன் போராட்ட வழிமுறைகளை மாற்றிக்கொண்டது. தேவைப்படும்போது மட்டுமே ஆயுதம். பிற சமயங்களில், அரசியல் பணிகள். ஆளுங்கட்சியின் (பி.எல்.ஓ.வின் ஃபதா கட்சி) ஊழல்களை அம்பலப்படுத்தி பாலஸ்தீன மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானது ஹமாஸ். ஜனவரி 2006ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஹமாஸ் அபரிமிதமான வெற்றியை அள்ளிக்கொண்டபோது, உலகம்தான் வாய்பிளந்து நின்றதே தவிர பாலஸ்தீனர்கள் வியக்கவில்லை. சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஹமாஸை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. பொறுப்பேற்ற ஹமாஸ் தலைவர்கள் ஜூன் 2007ல் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். மக்களே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்ட பிறகு எங்களை யாராலும் அகற்ற முடியாது என்று திமிறி எழுந்த ஹமாஸ் வலுக்கட்டாயமாக காஸாவைக் கைப்பற்றிக்கொண்டது.

கிழக்குக் கரை முகமது அப்பாஸின் (ஃபதா கட்சி) கட்டுப்பாட்டில் இருக்கிறது. காஸா ஹமாஸின் கட்டுப்பாட்டில். இரு வேறு அரசாங்கங்கள் அங்கே இயங்கிக்கொண்டிருக்கின்றன. இரண்டும் எதிரெதிரானவை. ஒன்று மற்றொன்றை ஏற்றுக்கொள்வதில்லை. தேவைக்கேற்ப தன் போர்முறைகளையும் கருவிகளையும் மாற்றிக்கொள்ளத் தெரிந்ததால் ஃபதாவைவிட ஹமாஸுக்கு அதிக ஆதரவும் வரவேற்பும் கிடைத்துவருகிறது.

தற்போது ஹமாஸ் தீவிரமாகப் பயன்படுத்தி வரும் ஆயுதம், அரசியல் பிரசாரம். சர்வதேச கவனத்தை காஸாவை நோக்கி திருப்பியாகவேண்டும். பாலஸ்தீன் கோரிக்கைக்கு ஆதரவு திரட்டவேண்டும். இஸ்ரேலின் மேலாதிக்கத்தை முறியடிக்கவேண்டும். பாலஸ்தீனர்களுக்கு சுதந்தர தேசத்தைப் பெற்றுத்தரவேண்டும். அதற்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறது ஹமாஸ்.

(ஆனந்த விகடனில் வெளிவந்த என் கட்டுரை)

6 comments:

ஹரன்பிரசன்னா said...

ஹமாஸுக்கு வாயில் விரலை வைத்தாலும் கடிக்கத் தெரியாது என்கிற வரியை யார் எடிட் செய்தது தோழர்?

Anonymous said...

well, thanks for your explnation about hamaz view..

Siva Sutty - m of n said...

சின்ன ரவுடி தாதாவாகி மினிஸ்டர் லெவலுக்கு உயர்வது போல் தானே தீவிரவாதிகள் போராளியாகிறார்கள்

Arun said...

Yasir Arafat Irandha nilayil, indrum Palastine makkalukku irukkum orey valvadharathukana nambikai indha " Hamaz".. Irundum perumbanmayana india makkalal 'poraligalukkum','Theeviravadhigalukkum' ulla adipadayana vidhyasathai inam kaana mudiyamal iruppadharku karanam avargalin Parvayil padum theviravadha seyalgal mattume enbadhu en karuthu.. Iniyadhoru katturai nan mathikum eluthu poraliyidamirundhu..

Anonymous said...

அய்யா கடவுளே, கோவையில் குண்டு வைத்து பொதுமக்களை சாகடித்தவர்களின் மனித சேவை - பம்பாயில் ரயிலில் குண்டுவைத்து நூற்றுக்கணக்கான அப்பாவிகளை கொன்று குவித்தவர்களின் மதச்சேவை, அல்குவெதே, அல் உம்மா, பின் லாடன் என்று பல விஷயங்களை விட்டு விட்டீர்களே.

நடத்துங்க, எங்க மக்களோட சாவ பணம் பண்றீங்க, அத பயன்படுத்தி மதச்சார்பற்ற தலவரா ஆறீங்க..நடத்துங்க எஜமான் நடத்துங்க....

வஜ்ரா said...

//
குளித்து நாள்கள் பல ஆகிவிட்டன. குடிக்கவே போதுமான நீர் இல்லை. காலி கோகோ கோலா பாட்டில்களை ஒரு கூடையில் நிரப்பிக்கொண்டு சிறுவர்கள் பல மைல் தொலைவு நடந்துசெல்கிறார்கள்.
//

உண்மையில் அங்கே போய்ப் பார்த்தீர்களா ?

சும்மா எவனோ சொன்னத ஏன் சார் திரும்பத் திரும்பச் சொல்றீங்க ?

உண்மையில் பாலஸ்தீன் மக்கள், தென் தமிழகத்துப் பட்டித் தொட்டியில் வாழ்பவர்களைவிட சீரும் சிறப்பாக வாழ்கிறார்கள். இவ்வளவு ஏன், பாலஸ்தீனில் பொதுக்கழிப்பிடம் கூட நம் தெருக்களைவிட சுத்தமாகத் தான் இருக்கிறது.

ஹமாசுக்கு பேசத் தெரியாதா இல்லை அவர்கள் பேசும் பாசை உங்களுக்குப் புரியவில்லையா என்று எனக்குத் தெரியவில்லை.

என் முடிவு இது தான், அவர்கள் பேசும் பாசை இஸ்ரேலுக்கு நல்லாவே புரியுது. அவிங்களும் ஹமாசுக்கு பதில் சொல்கிறார்கள். ரெண்டு வருசமா நானும் இஸ்ரேலிலேயே இருந்து பார்த்துட்டுத் தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன்.