இது தேறாது என்றது முதல் விமரிசனம். விக்டர் ஹியூகோவிடம் இருந்து இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை என்றனர் தேர்ந்த இலக்கிய விமரிசகர்கள். இதையெல்லாம் யார் காசு கொடுத்து வாங்கிப் படிக்கப்போகிறார்கள் என்று உதடு பிதுக்கினார்கள் சக எழுத்தாள நண்பர்கள். ஒரு கவிஞராக விக்டர் ஹியூகோ அறியப்பட்டிருந்த சமயம் அது. இந்தா ஒரு காவியம் வைத்துக்கொள் என்று ஹியூகோ திடுதிடுப்பென்று கத்தை காகிதங்களை எடுத்து நீட்டியபோது இலக்கிய உலகம் பின்வாங்கியது. ஒரு காவியமாக அல்ல, ஒரு நாவலாகவும்கூட அதை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள். ஆகவே நிராகரித்தார்கள்.
கத்திரிக்கோல் போடாமல் அளித்தால் ஆயிரத்து இருநூறு பக்கங்களுக்கு நீண்டுவிடும் நாவல் அது. இருநூறு பக்கங்களிலும் கிடைக்கிறது. சுருக்கப்பட்டப் பதிப்பாக. ஜன்னல் வழியாக எட்டி வானத்தைப் பார்ப்பதற்கும் வீட்டை விட்டு வெளியில் வந்து அண்ணாந்து பார்த்து வானத்தை ரசிப்பதற்குமான இடைவெளிதான் இரண்டுக்கும். என்றாலும், அந்த இருநூறு பக்க புத்தகத்தை வாசித்தாலே லே மிஸரபிளின் பிரமாண்டம் நம்மை சட்டென்று தாக்கிவிடுகிறது.
ஒரு துண்டு ரொட்டியில் இருந்து தொடங்குகிறது கதை. பசி என்னும் கொடும் நோயால் பாதிக்கப்படும் ழான் வால்ஜீன் (Jean Valjean), தனக்காகவும் தன்னைச் சார்ந்திருப்பவர்களுக்காகவும் வேண்டி சில ரொட்டி துண்டுகளைத் திருடிவிடுகிறான். இது சட்டம் ஒழுங்கு பிரச்னை என்று சொல்லி பிரெஞ்சு அரசாங்கம் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துவிடுகிறது. ஐந்து ஆண்டு சிறைவாசம். முடிந்து வெளியில் வந்துவிட்டாலும் அடுத்து என்ன செய்வது என்று வால்ஜீனுக்குத் தெரியவில்லை.
மீண்டும் திருடுகிறார். இந்த முறை ஒரு பாதிரியாரின் வீட்டில் இருந்து. சற்று விலையுயர்ந்த ஒரு பொருளை. எப்படியும் சிறை. எதற்கு ரொட்டியைத் திருடிக்கொண்டிருக்கவேண்டும்? அதிகாரிகள் விலங்கோடு ஓடிவருகிறார்கள். ஆனால் பாதிரியார் அவர்களை தடுத்துவிடுகிறார். ஐயா, இவர் நல்லவர். குறிப்பிட்ட பொருளை அவர் திருடவில்லை. அதை நான்தான் அவருக்கு அன்பளித்தேன்.
வால்ஜீன் இதை எதிர்பார்க்கவில்லை. அன்பும் நேசமும் முழுமுற்றாக இன்னமும் அழிந்துவிடவில்லையா? ஒரு திருடனான என் மீது ஏன் இந்தப் பாதிரியார் இரக்கம் காட்டவேண்டும்? ஆறு ஆண்டுகளில் புதிய மனிதராக மாறிவிடுகிறார் வால்ஜீன்.
இப்போது வால்ஜீன் ஒரு செல்வந்தர். பளபளப்பும் மினுமினுப்பும் செல்வாக்கும்கூடிய முக்கியப்புள்ளி. முகம் தெரியாத பாதிரியாரிடம் இருந்து பெற்ற நேசத்தை பிறருக்கும் பரப்பிவிடும் துடிதுடிப்புடன் அமைதியாக இயங்கிக்கொண்டிருக்கிறார் வால்ஜீன். ஆனால் காவலாளிகள் சமூகம் மட்டும் இவரை குறுகுறுப்புடன் நிழலாகப் பின்தொடர்கிறது. இவனைப் பார்த்தால் பழைய குற்றவாளி போல் தெரிகிறதே! விடாதே, பிடி! காவல் வளையத்தையும் சந்தேகப் பார்வைகளையும் கடந்து வால்ஜீனின் பயணம் தொடர்கிறது. தனிப்பட்ட முறையில் தனக்கு என்று இனி வாழ்க்கை எதுவும் இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறார். ஒரு சிறுமியை தத்தெடுத்து வளர்க்கிறார். அவள் வளர்ந்து காதலிக்க ஆரம்பித்தபோது அருகில் இருந்து அரவணைத்துக்கொள்கிறார். ஐயோ நீங்கள் ஒரு முன்னாள் குற்றவாளியா, சேச்சே இது தெரியாமல் உங்கள் பெண்ணை காதலித்துவிட்டேனே என்று மருமகன் முகம் சுளித்தபோது, புன்முறுவலுடன் தன் கதையை விவரிக்கிறார். சிறு சலனமும் இல்லாமல் இறந்துபோகிறார்.
மொத்தம் 5 பாகங்கங்களில் நீளும் இந்நாவலின் மையக்கதை இதுதான். கதை நடக்கும் காலம், 1815ம் ஆண்டு. ஒரு ஊரில் ஒரு வால்ஜீன் என்று தொடங்கி அவர் வாழ்க்கையை விவரிப்பதோடு நின்றிருந்தால் லே மிஸரபிளை இன்று நாம் கொண்டாடிக்கொண்டிருக்க மாட்டோம். நாவல் என்பதற்கு ஒரு படி மேலே போய், தான் வாழ்ந்த காலகட்டத்தின் ஒரு கண்ணாடியாகவே மாறிவிடும் விக்டர் ஹியூகோ தன் சமூகத்தை மிக தத்ரூபமாக இந்நாவலில் பிரதிபலிக்கிறார். மிக விரிவாகவும்கூட. மதம், மனிதம், சமூகம் குறித்து ஹியூகோ முன்வைக்கும் கருத்துகள் புத்தகம் முழுவதும் பரவிக்கிடக்கின்றன.
பத்தொன்பதாம் நூற்றாண்டு இலக்கிய உலகம் லே மிஸரபிளை ஒதுக்கியதற்கு முக்கியக் காரணம் விக்டர் ஹியூகோவின் புரட்சிகர சிந்தனைகள். ஃபிரெஞ்சுப் புரட்சியை நான் ஆதரிக்கிறேன். ஒடுக்கப்பட்டவர்கள் திமிறி எழுவது சகஜமானது; இயற்கையானதும்கூட. கோபுரங்கள் மண்மேடுகளாக மாறும். மக்களை மதிக்காத அரசாங்கங்கள் கவிழும்; மண்ணைக் கவ்வும்.
ஒரு நாவலில் என்ன உபதேசம் வேண்டிக்கிடக்கிறது என்று தோள்பட்டையை கன்னத்தால் இடித்து லே மிஸரபிளைத் தூக்கிப்போட்டார்கள் ஃபிரெஞ்சு விமரிசகர்கள். கொண்டா கொண்டா என்று இரு கரங்களால் அதை வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டது காலம். இன்று லே மிஸரபிள் ஒரு க்ளாஸிக். உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் மொழி பெயர்த்திருக்கிறார்கள். பாகம் பாகமாக, பக்கம் பக்கமாகத் தழுவியிருக்கிறார்கள். ஏழை படும் பாடு என்னும் பெயரில் சுத்தானந்த பாரதியார் தமிழ்படுத்தியிருக்கிறார்.
3 comments:
Not for publishing.
இந்தப் பதிவு தேறாது.
இந்த பின்னூட்டமும் தேறாது.
இந்தப் பதிவையும், பின்னூட்டத்தையும் காலம் இரண்டு கைகளாலும் வா வா என்றழைப்பது தெரிகிறதா தோழர்?
மருதன் உலகின் தலைசிறந்த புத்தகத்தை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்! இந்த ஏழைபடும் பாடு புத்தகம் இன்றைக்கும் உலகில் உள்ள துன்பப்படும் நாடுகளில் உள்ள ஆன்மாக்களுக்கு பொருந்தும் ஒரு புத்தகம் என்பதுதான் இதன் சிறப்பம்சம். ஒரு திருனோ அல்லது ஒரு விபச்சாரியோ தானாக உருவாவதில்லை. அவர்களை இந்த சமூகம் எப்படி உருவாக்குகிறது என்பதுதான் கதையின் மையக்கரு. அதவாது முதலாளித்துவ சமூகத்தில் எப்படி மிகச் சிறிய பகுதியினரிடம் செல்வம் குவிகிறது. இவர்களின் சுயநலத்தாலும் - செல்வக்குவிப்பின் ஆசையாலும் உழைப்பாளிகள் எப்படி திருடர்களாக்கப்படுகிறார்கள்... என்பதை இந்த நாவல் மிகச் சிறப்பாக உணர்த்துகிறது. இதனை சமீபத்தில் இனிய உதயம் வெளியிட்டிருந்தது. மிகச் சிறப்பான மொழி பெயர்ப்பு. உலக உழைப்பாளிகளின் வீட்டில் இருக்க வேண்டிய புத்தகம். மன்னிக்கவும் படிக்க வேண்டிய புத்தகம்.
என்னுடைய வலைப்பதிவில் நான் எழுதிய விமர்சனத்தையும் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
http://santhipu.blogspot.com/2005/12/blog-post_29.html
நன்றி சந்திப்பு. உங்கள் விமரிசனத்தை வாசித்தேன். சிறப்பாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.
Post a Comment