March 9, 2009

அரசியலின் கதை : ஏழு


நான் எதை விரும்புகிறேனோ அதை அடைந்துவிடவேண்டும். என் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் வாழவேண்டும். சிட்டுக் குருவியைப் போல் உல்லாசமாக உலகைச் சுற்றி வந்து அத்தனை இன்பங்களையும் அனுபவிக்கவேண்டும். ஒவ்வொரு மனிதனின் விருப்பமும் விழைவும் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும்.

ஆனால் இது ஒரு கனவு மட்டுமே. நடைமுறையில் இது சாத்தியமே இல்லை. நேபாளம் ஒரு சமீபத்திய உதாரணம். உலகின் ஒரே இந்து தேசம். அதாவது, நேற்று வரை. மக்களுக்கு நினைவு தெரிந்த நாள் முதலாக அங்கே மன்னராட்சிதான். இடது கை சுண்டு விரலை நீட்டி மன்னர் அளிக்கும் உத்தரவுகள் அப்படி அப்படியே நிறைவேற்றப்பட்டன. மன்னர்தான் அரசாங்கம். மன்னர்தான் நிர்வாகம். மன்னர்தான் எல்லாமும். ஒருவர் போனால் இன்னொருவர். ஆள்கள்தான் மாறுவார்கள். ஆட்சி மாறாது. தன் விருப்பப்படி ஆட்சி நடத்தும் உரிமை மன்னருக்கு உண்டு. மன்னருக்கு மீசை பிடிக்காது என்றால் இப்படி ஒரு சட்டத்தை அவர் தாராளமாக இயற்றலாம். அடர்த்தியாக மீசை வளர்ப்பவர்களுக்கு மரண தண்டனை!

இன்று? மன்னரை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் மாவோயிஸ்டுகள் பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியிருக்கிறார்கள். சரிதான் போப்பா என்று கழுத்தைப் பிடித்து மக்கள் தள்ளுவார்கள் என்று கனவாவது கண்டிருப்பாரா அந்த மன்னர்?

ரஷ்யா என்னுடையது. ரஷ்யாவின் வளங்கள் என்னுடையது. மக்கள் அனைவரும் என்னுடைய அடிமைகள். நான் இட்ட பணிகளை என் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் நிறைவேற்றுவது மட்டுமே இவர்களுடைய வேலை. என்னை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கக்கூடாது. எதிர் கருத்து, மாற்று கருத்து, வெங்காய கருத்து எதுவும் சொல்லக்கூடாது. நான் காலால் இடும் பணிகளை தலையால் செய்து நிறைவேற்றுவது மட்டுமே மக்களின் பணி. கீழ்படிவதற்கு மட்டுமே அவர்களுக்கு உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது.

நான்தான் அரசாங்கம். நான்தான் ரஷ்யா. நாட்டை விட, மக்களை விட, எனது முறுக்கு மீசை எனக்கு முக்கியம். எனக்கு நான் முக்கியம். நான் மட்டுமே முக்கியம். மக்களைப் பற்றியெல்லாம் அநாவசியமாகச் சிந்தித்து நேரத்தை வீணாக்க என்னால் முடியாது. இருக்கும் இன்பங்களை அனுபவிக்கவே நேரமில்லை. என்னைப் பார்த்து எல்லோரும் பயப்பட வேண்டும். சர்வ ஜீவராசிகளும் நடுங்க வேண்டும். சொல் பேச்சு கேட்டால் பிழைத்து போ என்று விட்டுவிடுவேன். மீறினால், தொலைத்து விடுவேன். மனித உரிமை, மண்ணாங்கட்டி உரிமை என்றெல்லாம் யாரும் முணுமுணுக்கக் கூடாது.

அரசாங்க அதிகாரிகளும், அமைச்சர்களும் ஜாருக்கு ஏத்த மூடிகளாக இருந்தனர். உட்கார் என்றார் உட்கார்ந்தார்கள். நில் என்றால் நின்றார்கள். கொல் என்றால் கொன்றார்கள். ரஷ்யர்களைப் பொருத்தவரை, இதுதான் வாழ்க்கை. இதுதான் விதி. ஜார் தவிர்க்கவே முடியாத ஒரு சக்தி. அடித்தாலும் உதைத்தாலும் அவர்தான். இரண்டாம் அலெக்ஸாண்டர் இல்லை என்றால் இருபத்தோராம் அலெக்ஸாண்டர்.

கல்வி இல்லை. உணவு இல்லை. உரிமை இல்லை. ஆடு, மாடு போல்தான் விவசாயிகளும் தொழிலாளர்களும் நடத்தப்பட்டனர். ஆனாலும், வேறு மார்க்கம் கிடையாது. தொண்டைக்குள் சிக்கிய முள்ளை விழுங்கவும் முடியாது. துப்பவும் முடியாது. ஜார் ஒரு முள்.

வேலை கிடைப்பது குதிரைக்கொம்பு. அப்படியே கிடைத்தாலும் எத்தனை மாதங்களுக்கு அல்லது வாரங்களுக்கு வேலை செய்ய முடியும் என்று சொல்ல முடியாது. அப்படியே செய்தாலும் சம்பளத்துக்கு உத்தரவாதம் கிடையாது. சட்டையை மாட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே கிளம்பினால் எத்தனை மணி நேரங்களுக்குப் பிறகு வீட்டுக்கு வருவோம் என்று தெரியாது. பதினெட்டு மணி நேரம், இருபத்து நான்கு மணி நேரம் என்று தொடர்ச்சியாக நாள் கணக்கில், வாரக் கணக்கில் இயந்திரங்களோடு இயந்திரங்களாக மாறி துருப்பிடித்துச் சாக வேண்டியதுதான்.

ஒரு தொழிலாளி வேலை செய்து கொண்டிருக்கிறான். இயந்திரங்களை பழுது பார்க்கும்போது, அசதி காரணமாக அவனது கை பல் சக்கரத்தில் சிக்கிக் கொள்கிறது. அலறுகிறான். துடிக்கிறான். மேற்பார்வையாளர்கள் உடனடியாக விரைந்து வருகிறார்கள். அந்தக் கணமே இயந்திரம் பழுது பார்க்கப்படுகிறது. நல்லது என்று கையை கழுவிக் கொண்டுச் சென்று விடுகிறார்கள். அடிபட்ட அந்த தொழிலாளி? இனி அவன் உதவ மாட்டான். அவனை வீட்டுக்கு அனுப்பி விட்டு, வேறு ஆளை அமர்த்த வேண்டியதுதான். நஷ்ட ஈடு? ம்ஹும். அவனால் தொழிற்சாலைக்குத்தான் நஷ்டம். தொழிலாளிகளுக்கு பஞ்சமில்லை. ஒருவன் செத்தால் இன்னொருவன். அவன் இல்லையென்றால் மற்றொருவன்.

ரஷ்யாவில் பண்ணையார்கள் மட்டும்தான் மனிதர்கள். 1649-ம் ஆண்டு விதிக்கப்பட்ட சட்டவிதிகள்படி, விவசாயிகள், அவர்களுடைய குடும்பத்தினர், உற்றார், உறவினர் என்று பரம்பரையே நிலப்பிரபுவின் உடைமைகள். பண்ணையில் வேலை செய்பவன் பண்ணையடிமை. அவ்வளவுதான். குதிரை, உழவு மாடு போல் அவனும் ஒரு பிராணி. தேவைப்படும் போதெல்லாம் சொடக்குப் போட்டுக் கூப்பிட வேண்டிய பிராணி. செய்யச் சொல்லும் வேலையை செய்து முடிக்கும் பிராணி. பிடிக்கும் வரை வைத்திருந்து பிடிக்காமல் போனால் அல்லது நோய்வாய்ப் பட்டால் விற்றுவிட வேண்டிய பிராணி.

அடிமைகளைத் துன்புறுத்தாத பண்ணையார்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். சவுக்கால் அடி பின்னி எடுத்துவிடுவார்கள். தேவை ஏற்பட்டால் தயங்காமல் கொலை கூட செய்வார்கள். ஆடுகளை, மாடுகளை, அடிமைகளைக் கொல்வதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அடிமைகள் தப்பிச் செல்லவும் முடியாது. தப்பியவர்கள் பிடிபடும் போது, குரூரமாக சித்ரவதைப்படுவது வழக்கம் என்பதால் தப்பிச் செல்வதாகக் கனவு கூட காண முடியாது. மொத்தத்தில், அடிமைகளாக இருப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி கிடையாது.

1917ம் ஆண்டு லெனின் தலைமையில் நடத்தப்பட்ட ரஷ்யப் புரட்சி ஜார் ஆட்சியைத் தூக்கியெறிந்தது. ஜார் மன்னரின் அரண்மனைச் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அரண்மனை மக்கள் கூடமாக மாறியது. மக்கள் ஆட்சி முதல் முறையாக அங்கே மலர்ந்தது.

சமூகத்தோடு ஒட்டி வாழாதவர்களுக்கும் சமூகத்தை உறிஞ்சி வாழ்பவர்களுக்கும் சரித்திரத்தில் இடம் இல்லை. அனைவருமே சமுதாயத்தின் ஒரு பாகம்தான். இதில் விதிவிலக்குகளே கிடையாது. சமுதாயத்தைவிட உயர்ந்தவர் என்று ஒருவரும் இங்கே இல்லை.

எங்கெல்லாம் ஒடுக்குமுறை நீடிக்கிறதோ அங்கெல்லாம் மக்கள் எழுச்சி நடைபெறுகிறது. அரசாங்கம் தூக்கியடிக்கப்படுகிறது.

(தொடரும்)

3 comments:

Anonymous said...

// எங்கெல்லாம் ஒடுக்குமுறை நீடிக்கிறதோ அங்கெல்லாம் மக்கள் எழுச்சி நடைபெறுகிறது. அரசாங்கம் தூக்கியடிக்கப்படுகிறது. //

ஐரோப்பாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருப்பது இதுதான்.

Anonymous said...

மிகவும் முக்கியமான பணியை செய்துகொண்டிருக்கிறிர்கள் மருதன். அரசியல் கதை காலத்தின் அவசியம். வரலாற்றை நாம் மறக்கலாகாது. மறந்தால், வரலாறு நம்மை மன்னிக்காது. கோர்வையாகவும் வாசிக்கும்படியாகவும் எளிமையாகவும் இருக்கிறது உஙக்ள் எழுத்து. அரசியல் பற்றி இப்படி எழுதினால் தான் அனைவருக்கு்ம் போய் சேரும். We can't leave education to schools and politics to politicians என்று சொல்வார்கள். தொடர்ந்து எழுதுங்கள் மருதன். கிட்டத்தட்ட உங்கள் புத்தகங்கள் அனைத்தையும் வாசித்துவிட்டேன். கண்காட்சியிலும் உங்களை சந்தித்திருக்கிறேன். நினைவிருக்கக்கூடும். உங்கள் blog ஐ நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தியிருக்கிறேன். ஐடி துறையில் இருக்கும் அவர்களுக்கும் அரசியல் புரியவேண்டும்

hariharan said...

எட்டு மணி நேர வேலைக்காக போராடிய தொழிலாளர்களை எப்படியெல்லாம் ஒடுக்கியிருப்பார்கள். இன்று அவர்கள் பெற்றுத் தந்த உரிமைகள் யாவும் கண்முண்ணே உலகமயத்தின் பெயராலும் புதிய பொருளாதாரக்கொள்கையின் பெயராலும் இழந்துகொண்டிருக்கிறோம்,தொழிற்சங்க உரிமைகள் இல்லாமல் புதிய தொழிற்சாலைகள் வருகின்றன. இந்தியாவில் தொழிலாளி வர்க்கத்தில் காணப்படும் பிளவுகள் ஆள்வோருக்கு மிகவும் சாதகமாக உள்ளது. நாட்டில் பெரும்பான்மையாக உள்ள தொழிலாளிகளின் நலன்களை விட மிகச்சிறிய அளவில் உள்ள முதலாளிகளின் நலன்கள் அரசால் பாதுகாக்கப்படுகிறது, ஒவ்வொன்றுக்கும் பாட்டாளி வர்க்கம் போராடவெண்டியிருக்கிறது ஆனால் அவர்களுக்கு மட்டும் கோரியவுடன் கிடைத்துவிடுகிறது. எப்படியென்று தெரியவில்லை.