March 17, 2009

அரசியலின் கதை : ஒன்பது


பிளேட்டோவின் நூல் ஒன்றில் இப்படி ஒரு குறிப்பு இடம்பெறுகிறது. கிரேக்கர்களே, நீங்கள் அனைவரும் சிறுவர்கள். உங்களில் வயதானவர் என்று சொல்லத்தக்கவர் ஒருவருமே இல்லை. எகிப்திய பாதிரியார் ஒருவருடைய குறிப்பு இது. இவ்வாறு அவர் சொன்னதற்குக் காரணம் உண்டு. கிரேக்கர்கள் கற்பதில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தனர். எதையும் தேடிச் சென்று ஆராயும் குணம் அவர்களிடம் இருந்தது. யாரோ சொன்னார்கள், அப்படியே ஏற்றுக்கொண்டோம் என்று இருக்காமல் உள்ளே சென்று தோண்டித் துருவி உண்மையை கண்டறிய முயன்றார்கள்.

Thales, Anaximander, Pythagoras, Heraclitus, Parmenides, Zeno போன்ற சிந்தனையாளர்கள் பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்து ஆராய்ந்தவர்கள். கடவுள்தான் உலகை சிருஷ்டித்தார். நட்சத்திரங்களையும் காடுகளையும் மனிதர்களையும் விலங்குகளையும் படைத்தவர் அவரே என்னும் நம்பிக்கை உலகெங்கும் வலுவாக காலூன்றி இருந்த சமயம், அறிவியில் ரீதியாக ஆராய்ச்சி நடத்தியவர்கள் இவர்கள். சிசிலியன் கற்களில் படிந்துள்ள படிமங்களை ஆராய விரும்பினார் Xenophon. மணல், மலை, காலம், பண்பாடு என்று சூரியனுக்குக் கீழே உள்ள அத்தனை சங்கதிகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்பினார் Herodotus.

எல்லாவற்றையும் ஆச்சரியத்துடனும் பரவசத்துடனும் அணுகினார்கள் கிரேக்கர்கள். கல்லிலும் மண்ணிலும் கற்க என்ன இருக்கிறது என்று அலட்சியம் காட்டவில்லை அவர்கள். ஆகவேதான் அறிவியல் மட்டுமல்ல தத்துவத்தின் பிறப்பிடமாகவும் கிரேக்கம் கருதப்படுகிறது. கொண்டாடப்படுகிறது.

ஆர்வம் காட்டியதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. எதைப் பற்றியும் தெரிந்துகொள்ளமுடியும் என்று நம்பினார்கள். உலகத்தைப் பற்றியும் மனிதர்களைப் பற்றியும் விலங்குகளைப் பற்றியும் ஆராய முடியும், புரிந்துகொள்ளமுடியும் என்று அவர்கள் நம்பினார்கள்.

எனில் கிரேக்கர்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருந்ததில்லையா? இருந்தது. வெவ்வேறு வகையான கடவுள்களை அவர்கள் வழிபட்டனர். ஆராதித்தனர். ஆனால் ஹோமர் குறிப்பிடுவதைப் போல் கடவுளும் இந்தப் பிரபஞ்சத்தின் ஒழுங்குமுறைக்குக் கட்டுப்பட்டவர். எல்லாவற்றையும் படைத்தவர் ஆகவே எல்லாவற்றையும் விட உயர்ந்தவர் என்று கடவுளை ஒரு உயர்ந்த பீடத்தில் கிரேக்கர்கள் நிறுத்தவில்லை. மனிதர்களைப் போலவேதான் கடவுள்களும். இடி கடவுள், மின்னல் கடவுள், மழை கடவுள் என்று பல வகையான கடவுள்கள் இருந்தனர். உலகின் தலைசிறந்த காவியங்களில் ஒன்றான இலியட்டில் இந்தக் கடவுள்கள் இடம்பெறுகிறார்கள். மனிதர்களோடு மனிதர்களாக.

எதற்கும் விளக்கம் வேண்டும் அவர்களுக்கு. நீங்கள் எது பேசினாலும், அப்படியென்றால் என்ன சொல்லவருகிறீர்கள் என்று திருப்பிக் கேட்பார்கள். உங்களிடம் இருந்து ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொண்டுவிட்டால் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். உண்மை என்னும் சொல்லை உச்சரிப்பதிலேயே பேரின்பம் அடைந்தவர்கள் அவர்கள். பிறந்தோம் வாழ்ந்தோம் என்று இருப்பதில் பொருள் எதுவும் இல்லை. நம் கடந்த காலத்தை நாம் ஆராயவேண்டும். நன்மை, தீமை இரண்டையும் அலசவேண்டும். இதுவரை எப்படி வாழ்ந்திருக்கிறோம் என்று தெரிந்துகொள்ளவேண்டும். தெரிந்துகொள்ளப்படாத வாழ்க்கையை வாழ்வது வீண். சாக்ரடீஸின் நம்பிக்கை இது.

உரக்கச் சிந்திக்கவேண்டும். நிறைய விவாதிக்கவேண்டும். எந்த வித அச்சமும் பயமும் இன்றி அனைத்தைப் பற்றியும் விமரிசனம் செய்யவேண்டும். தேவைப்பட்டால் எதனுடனும் எப்போதும் முரண்பட தயாராக இருக்கவேண்டும். கிரேக்கர்களின் சிந்தனை இப்படித்தான் இருந்தது.

குழு, சமுதாயம் பற்றி அவர்கள் நிறைய தெரிந்துவைத்திருந்தார்கள். தனித்தனியாக உதிரியாக இருப்பதைக் காட்டிலும் ஒரு குழுவாக, ஒரு அமைப்பாகத் திரண்டிருக்கவேண்டியது அவசியம் என்று அவர்கள் நம்பினார்கள். City State என்னும் அமைப்பு தோன்ற இந்தச் சிந்தனையே ஊற்றுவாய். பலகீனமானவர்கள் தனியாக ஒதுங்கியிருந்தால் பலகீனமானவர்களாகவே இருப்பார்கள். ஒரு சமுதாயமாக அவர்கள் திரளும்போது பலம் பெருகும் என்று கிரேக்கர்கள் கண்டறிந்தனர்.

உலகில் உள்ள மற்ற தேசங்கள் கடவுள்களையும், ஆன்மிகத் தத்துவங்களையும் மன்னர்களையும் உற்பத்தி செய்துகொண்டிருந்த காலகட்டம் அது. மன்னர் என்பவர் எல்லாவற்றையும் விட உயர்ந்தவர். அவர் சொல்வதுதான் சட்டம். கடவுள் நிர்பந்திக்கும் மதத்தில்தான் மக்கள் நிலைக்கவேண்டும். அவர் வணங்கச் சொல்லும் கடவுள்களை மக்கள் வணங்கவேண்டும். மன்னருக்கு வேறு ஒரு புதிய கடவுள் கிடைத்துவிட்டால் சட்டென்று அவர் தாவிவிடுவார். ஆகவே மக்களும் தங்கள் நம்பிக்கைகளை துறந்துவிட்டு புதிய மதத்தைத் தழுவிக்கொள்ளவேண்டும். மக்கள் சிந்திக்கவேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கும் சேர்த்து மன்னரே சிந்தித்துவிடுவார்.

கிரேக்கம் மனிதர்களை உற்பத்தி செய்துகொண்டிருந்தது. மக்களை அது முன்னிறுத்தியது. சாமானிய மக்களை. சுதந்தரமான சிந்தனையோட்டத்தை அது தூக்கிப்பிடித்தது. மக்களைப் பற்றி கிரேக்கம் அக்கறையுடன் சிந்திக்க ஆரம்பித்தது. மக்கள் மேன்மையடைவது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்தது. மக்களைப் பற்றி மேற்கொள்ளும் ஆராய்ச்சி வேறு எதைக் காட்டிலும் உன்னதமானது, அத்தியாவசியமானது என்று கிரேக்கர்கள் புரிந்துவைத்திருந்தார்கள். மக்கள் என்றால் சமூகங்கள். அவர்களுடைய பிரச்னைகள். அவர்களுடைய கனவுகள். அவர்களுடைய விருப்பங்கள்.

மனிதன் முக்கியமானவன். தனியாகவும். குழுவாகவும். குழு என்று வரும்போது அவன் ஒரு பெரும்கூட்டத்தின் பகுதி. நான், என் குடும்பம், என் நலன் என்று ஒருவன் சுருங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை. அது சரியான வாழ்க்கை முறை கிடையாது. அவனுக்கு மிகப் பெரிய பொறுப்புகள் இருக்கின்றன. தான் வாழும் சமூகத்தைப் பற்றி அவன் தெரிந்துவைத்திருக்கவேண்டும். சமூக நிகழ்வுகளை அவன் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். நிகழ்வுகளை வெறும் நிகழ்வுகளாக மட்டும் ஏற்றுக்கொள்ளாமல் அவற்றை இயக்கும் ஆதாரப் புள்ளிகளையும் அவன் உள்வாங்கிக்கொள்ளவேண்டும்.

தன் சமூகத்துக்காக அவன் சிந்திக்கவேண்டும். சமூகத்தின் நலன்களுக்காக. சமூகத்தின் எதிர்காலத்துக்காக. தனக்குத் தெரிந்ததை, தான் அறிந்துகொண்ட உண்மையை அவன் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும். விவாதம் செய்யவேண்டும். உண்மையை உணர்த்தவேண்டும். தன் சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று அவன் எப்போது மெய்யாக ஆசைப்படுகிறானோ எப்போது அந்த ஆசையை நிறைவேற்ற ஆரம்பிக்கிறானோ அப்போதுதான் அவன் வளர்ச்சி ஆரம்பமாகிறது.

(தொடரும்)

3 comments:

Kalaiyarasan said...

Democracy கிரேக்கத்தில் இருந்து ஆரம்பித்தாக ஐரோப்பிய பாடசாலைகளில் சொல்லிக்கொடுக்கிறார்கள். ஆனால் அப்போது கூட அடிமைகளுக்கு ஜனநாயக உரிமை இருக்கவில்லை.

வட-கொரியாவிலும், கியூபாவிலும் சனிக்கிழமைகளில் தொழிலாளிகள் அரசியல் வகுப்புகளுக்கு போக வேண்டும். அதைக்கூட்ட "எதற்காக தொழிலாளிகளை கஷ்டப்படுத்துகிறார்கள்?" என்று நடுத்தர வர்க்கம் பரிதாபப்படுகின்றது. ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதை இது.

Joe said...

//
தன் சமூகத்துக்காக அவன் சிந்திக்கவேண்டும். சமூகத்தின் நலன்களுக்காக. சமூகத்தின் எதிர்காலத்துக்காக. தனக்குத் தெரிந்ததை, தான் அறிந்துகொண்ட உண்மையை அவன் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும். விவாதம் செய்யவேண்டும். உண்மையை உணர்த்தவேண்டும். தன் சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று அவன் எப்போது மெய்யாக ஆசைப்படுகிறானோ எப்போது அந்த ஆசையை நிறைவேற்ற ஆரம்பிக்கிறானோ அப்போதுதான் அவன் வளர்ச்சி ஆரம்பமாகிறது.
//

நம்ம நாட்டு அரசியல்வியாதிகளுக்கு எந்த வளர்ச்சியும் இல்லைன்னு மறைமுகமாக சொல்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்! ROFL.

ஸ்ரீவி சிவா said...

பட்டய கிளப்புறீங்க மருதன்...
இன்றுதான் முதல் அத்தியாயம் தொடங்கி ஓரே மூச்சில் படித்தேன்.

தொடரட்டும் பணி...!!! வாழ்த்துகள்