May 8, 2009

சி.பி.எம் : அரசியலும் முரண்பாடுகளும்

டாடா நிறுவனம் அரசியல் கட்சிகளுக்காக என்றே நிதி ஒதுக்கீடு செய்து அனுப்பிய காசோலையை திருப்பி அனுப்பிய கட்சி மார்க்சிஸ்ட் கட்சி.

பக்கம் 74

பாதையில் இடறிக் காயப்படுத்தும் கல்லைப் போல நந்திகிராமம் பிரச்னை வந்தது. நந்தி கிராமம் என்ற வட்டாரத்தையே நக்சலைட்டுகள் ஆயுதங்களோடு வளைத்துக்கொள்ள, சிபிஎம் மீது உள்ள ஆத்திரம் காரணமாக நக்சலைட்டுகளோடு மற்ற சில கட்சிகள் ஒத்துழைத்ததை நாடு கண்டது. ஆயினும், காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்துகிற அளவுக்கு அந்தப் பிரச்னைகளைக் கையாள்வதில் தவறு நேர்ந்ததா என்பதை சிபிஎம் நேர்மையாக ஆய்வுசெய்துள்ளது.

பக்கம் 77

அ. குமரேசன் எழுதிய சி.பி.எம் (கட்சிகளின் கதை 6) புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்கள் இவை. வெளியீடு, மினிமாக்ஸ். இந்தியாவையே குலுக்கிய நந்திகிராம் விவகாரத்தைப் பாதையில் இடறிய கல்லாக குறுக்க முடிந்தது ஆச்சரியம்தான்.

டாடாவுக்கு காசோலையைத் திருப்பி அனுப்பிய கம்யூனிஸ்ட் கட்சியால் டாடா நிறுவனத்தை திருப்பி அனுப்ப முடியவில்லை. காசோலை பெறுவது கொள்கைக்கு முரணானது என்றால், மக்களின் எதிர்ப்பை ஒடுக்கி இறுதிவரை விடாப்பிடியாக டாடா அணியில் சிபிஎம் நின்றது எந்தக் கொள்கையின் அடிப்படையில்? சிபிஎம் நேர்மையாக ஆய்வு செய்துள்ளது என்கிறார் அ. குமரேசன். அந்த ஆய்வின் முடிவில் அவர்கள் என்ன கண்டுபிடித்தார்கள்? ஒரு வரி சுயவிமரிசனம்கூட புத்தகத்தில் காணப்படவில்லையே!

கொள்கை பற்றி புத்தகத்தில் வரும் சில குறிப்புகள் இவை.

இப்போது நாடு முழுவதற்குமான ஒரு மாற்று அணியை உருவாக்குவதற்கு சிபிஎம் முயன்று வருகிறது. பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றுக்கு மாற்றான அந்த அணி தேர்தல் தொகுதிப் பங்கீடுகளுக்கான கூட்டணி அல்ல. கொள்கை உடன்பாடு அடிப்படையில் கட்டப்பட உள்ள அந்த அணி, இயக்கத்தின் இலக்கை நோக்கிச் செல்லும். மக்கள் ஜனநாயகம் என்ற இலக்கை நோக்கிப் பயணிப்பதில் சரியான துணைகளோடு தோள் சேர்வது ஒரு வரலாற்றுத் தேவை.

பக்கம் 78

இந்த முதலாளித்துவ--நிலப்பிரபுத்துவ அமைப்பில் தலைமைப் பாத்திரம் வகிப்பது ஏகபோக, பெருமுதலாளிகள். இந்த அமைப்புக்கேற்பவே சட்டங்கள் வகுக்கப்படுகின்றன. மக்களிடையே வறுமை, சாதிமதப் பகைமை, பிற்போக்குத்தனங்கள் போன்றவை வலுவாக இருப்பதற்கு இந்த வர்க்கக் கட்டுமானமே காரணம்.

இதை மாற்றிமைப்பதற்கான புரட்சியின் முதல் கட்டம்தான் மக்கள் ஜனநாயகம். அதை உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட இயக்கங்கள்தான் நிலைநாட்டும். அப்படி நிலைநாட்டுவதற்காகவே ஒத்த கருத்துள்ள இடதுசாரி கட்சிகளின் ஒற்றுமை, பொதுவான உடன்பாடுகளுக்கு வரக்கூடிய ஜனநாயக சக்திகளின் கூட்டுச் செயல்பாடு ஆகியவற்றை வலுப்படுத்த சிபிஎம் முயல்கிறது.

பக்கம் 69

அதிமுகவுடன் அணிசேர்வதன் மூலம் மக்கள் ஜனநாயகத்தைக் கொண்டுவரமுடியும் என்று சிபிஎம் நம்புகிறதா? இதுதான் மாற்று அணியா? ஜெயலலிதாவின் எந்த குறிப்பிட்ட கொள்கையோடு சிபிஎம் ஒத்துப்போகிறது? அதிமுகவுடனான சிபிஎம்மின் தற்போதைய கூட்டணியை, பொதுவான உடன்பாடுகளுக்கு வரக்கூடிய ஜனநாயக சக்திகளின் கூட்டுச் செயல்பாடு என்று அழைக்கலாமா?

சோவியத் யூனியன் குறித்த சிபிஎம்மின் பார்வையும் குழப்பத்தையே அளிக்கிறது. கோர்பச்சேவ் தலைமையிலான சோவியத் அரசின் செயல்பாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கைவிடும் அறிகுறிகள் தென்பட்டன என்று பக்கம் 52ல் குறிப்பிடப்பட்டுள்ளது. சோஷலிசத்தைப் போட்டுடைக்கும் பணி நிகிதா குருஷேவ் காலத்திலேயே தொடங்கிவிட்டது. குருஷேவ் ஆட்சிக்கு வந்தது 1958ல். குருஷேவ் தொடங்கிவைத்ததைதான் கோர்பச்சேவ் பூர்த்திசெய்தார். நிலைமை இவ்வாறிருக்க, சோவியத் ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கைவிடும் அறிகுறிகளை சிபிஎம் முதல் முதலாக கோர்பச்சேவிடம் கண்டுகொண்டது விநோதமாக இருக்கிறது. சீனாவை கம்யூனிஸ்ட் தேசமாக உருவகம் செய்திருப்பதும் ஏற்கக்கூடியதல்ல.

இந்த இடத்தில், நேபாளத்தில் இருந்து சில படிப்பினைகளை நாம் கற்றுக்கொள்ளவேண்டும். தேர்தல் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து மாவோயிஸ்ட் கட்சி போட்டியிட்டு, பெருவாரியாக வெற்றி பெற்று கடந்த ஆண்டு ஆட்சியைப் பிடித்தது. பிரசந்தாவின் தலைமையில் கூட்டணி ஆட்சி. நிலச் சீர்திருத்தம் தொடங்கி எத்தனையோ விஷயங்களை சாதிக்கவேண்டும் என்னும் ஆவலில் அரசாங்க இயந்திரத்தை சுழலவிட்டார் பிரசாங்கம். இயந்திரத்தின் ஒவ்வொரு சக்கரத்தில் இருந்தும், சக்கரத்தின் ஒவ்வொரு பல்லில் இருந்தும் பிரச்னை வெடித்தது. தொட்டதற்கெல்லாம் எதிர்ப்பு. எடுத்ததற்கெல்லாம் மோதல். காபினெட் அஸெம்ப்ளி என்று ஒன்று உண்டு என்றாலும் அதை யாரும் மதிப்பதாகத் தெரியவில்லை. வேறு வழியின்றி பிரசந்தா ராஜிநாமா செய்துவிட்டார்.

அரசாங்க இயந்திரத்தின் கோளாறு இது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில பற்களைப் பழுதுசெய்துவிட்டால் இயந்திரம் ஜோராக சுழல ஆரம்பித்துவிடும் என்று எதிர்பார்க்கமுடியாது. அதனால்தான் பெரியார் கட்சி அரசியலை நம்பவில்லை. மூன்றாவது அணி, நான்காவது அணி, பத்தொன்பதாவது அணி என்று எத்தனை குழுக்கள் உதயமானாலும் தீர்வு கிடைக்கப்போவதில்லை. தற்போதைய அரசியல் கட்டமைப்பு அதற்கு அனுமதிக்காது.

ஆளுங்கட்சியுடன் கூட்டணி இருந்த சமயத்தில்கூட, 123 அணுசக்தி ஒப்பந்தத்தை உதட்டளவில் மட்டுமே சிபிஎம்மால் எதிர்க்கமுடிந்தது. சிபிஎம்மின் எதிர்ப்பை காங்கிரஸ் அசட்டை செய்தததால் வேறு வழியின்றி வெளியேறிவிட்டனர். அதிமுகவுக்கு வெற்றி கிடைத்து, காங்கிரஸுடன் அக்கட்சி இணைந்துகொண்டால் சிபிஎம் என்ன செய்யும்? அதிமுகவுடனான உறவைத் துண்டித்துக்கொள்ளுமா அல்லது பாஜகவை எதிர்க்கும் பொருட்டு மீண்டும் காங்கிரஸுடன் அணிசேருமா?

சந்தர்பங்களுக்கு ஏற்றாற்போல் வளைந்து, நெளிந்தால் மட்டுமே அரசியல் நடத்தமுடியும். மதச்சார்பின்மை, மக்கள் ஜனநாயகம், மனித முகம் கொண்ட உலகமயமாக்கல், மாற்று அரசியல் என்று பலவிதமான விளையாட்டுகளை மக்கள் பார்த்து சலித்துவிட்டனர்.

11 comments:

தயாளன் said...

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு நல்ல கட்டுரை மருதன். கம்யூனிஸ்ட் என்று கட்சிக்குப் பெயர் வைத்தாலே அது புரட்சிகரமான இயக்கமாக மாறிவிடாது

Chill-Peer said...

அருமை, இதற்காகத்தான் இங்கு வருகிறேன்.
ஏன் நீண்ட இடைவெளி தோழா?

மருதன் said...

Chill-Peer : இரண்டாம் உலகப் போர் பற்றி ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருந்தேன். அதன் பொருட்டு ஏராளமான புத்தகங்களைப் படிக்கவேண்டி வந்தது. வலைப்பதிவு பக்கம் வருவதற்குக்கூட நேரம் கிடைக்கவில்லை. இப்போதுதான் புத்தகப்பணி முடிந்தது. சிறிது ஓய்வு. இனி தொடர்ந்து இங்கே எழுதுவேன்.

TAMILSUJATHA said...

இனிய நண்பர் மருதனுக்கு,

டாடா நிறுவனத்தில் இருந்து வந்த காசோலையை சிபிஎம் கட்சி திருப்பிக் கொடுத்தது. ஆனால் டாடா நிறுவனத்தைத் திருப்பியனுப்ப முடியவில்லை என்கிறீர்கள். காசோலையைத் திருப்பியனுப்பியது கட்சியின் கொள்கை. ஆனால், ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது அந்த மாநிலத்தின் தொழில்துறை முன்னேற்றத்தில்தான் இருக்கிறது என்பதை உங்களால் மறுக்க முடியுமா? (இல்லையென்றால், கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலங்களில் தொழிற்சாலைகள் பெருகாது என்ற குற்றச்சாட்டை சொல்வீர்களே!)

நந்திகிராம் பிரச்னையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நேற்று என்டிடிவி நிகழ்ச்சியில் கூட ,மூன்றுக்கும் அதிகமான குழுக்கள் வந்து கிராமத்தை முற்றுகையிட்டார்கள் என்றுதான் மக்கள் சொல்கிறார்கள். நடந்துபோனது மிகப் பெரிய துயரம். ஆனால், அங்கு என்ன நடந்தது என்பதை கம்யூனிஸ்ட் கட்சியினர் சொல்வதை யாரும் ஏற்கத் தயாராக இல்லை. (நீங்கள் இலங்கை, க்யூபா, வெனிசூலா போன்ற நாடுகளில் மீடியா சொல்லும் விஷயங்களை நம்ப மாட்டீர்கள். சீனா, கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலங்களில் மீடியா சொல்லும் விஷயங்களை அப்படியே நம்புவீர்கள்!)

தேர்தல் உடன்பாடு என்பது வேறு. தேர்தல் கூட்டணி என்பது வேறு. கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலங்களில்தான் கூட்டணி. மற்ற இடங்களில் தேர்தல் உடன்பாடு.

கம்யூனிஸ்ட் கட்சி என்பது அரசியல் கட்சியல்ல. அது ஓர் இயக்கம். அரசியல் என்பது ஓர் அங்கம்தான். பணம், அதிகாரம், மீடியாவைக் கையில் வைத்துக்கொண்டு அராஜகம் நடத்திக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் கொள்கை, நேர்மை, தொண்டர்களின் உழைப்பை நம்பியே களத்தில் நிற்கின்றன கம்யூனிஸ்ட் கட்சிகள்.

தேர்தலில் நின்று சொற்ப சீட்டுகளைப் பெறுவது மட்டுமே கட்சியின் கொள்கை அல்ல. அதே சமயம் தேசம் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் நல்ல விஷயங்களை முனைப்போடு கொண்டுவரவும், தீய விஷயங்களைத் தடுத்து நிறுத்தவும் சீட் என்ற துருப்புச் சீட்டு தேவைப்படுகிறது. வீடு எரியும்போது நல்ல தண்ணீரில்தான் தீயை அணைப்பேன் என்று பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. கிடைக்கும் கூவம் தண்ணீரிலும் அணைக்க வேண்டும். மக்களோடு நெருங்கவும் கொள்கைகளை எடுத்துச் சொல்லவும் இந்தியா போன்ற நாடுகளில் தேர்தலே பிரதான வழியாக இருக்கிறது. அப்படி மக்களைச் சென்றடையாமல் நான்கு சுவர்களுக்குள் வெறுமனே சித்தாந்தங்களைப் பேசிவிட்டு உறங்கச் செல்பவர்களைத்தான் நீங்கள் கம்யூனிஸ்ட் என்று ஏற்றுக்கொள்வீர்களா?

தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டங்களை இந்த சீட்டுகளை வைத்துதான் தடுத்து நிறுத்த முடிந்தது. மகளிர் மசோதா நிறைவேறுவதற்கான போராட்டத்தைத் தொடர்ந்து செய்யவேண்டியிருக்கிறது. வல்லரசு நாடுகள் தங்களின் குப்பைகளைக் கொட்டும் இடமாக இந்தியாவை எண்ணி வருவதை எதிர்த்து நிற்கவேண்டியிருக்கிறது. இதையெல்லாம் நாடாளுமன்றத்தில் பேசாமல் நான்கு பேர் மட்டும் சும்மா பேசி என்ன பயன்?

மக்களுக்காகத்தான் கொள்கை. மக்களைச் சென்றடையாமல் வைத்துக்கொண்டிருக்கும் ஒரு கொள்கையால் என்ன பயன்? கிடைக்கும் வாய்ப்புகளில் நம் இயக்கத்தையும் கொள்கையையும் எப்படி எடுத்துச் செல்கிறோம் என்பதில்தான் இயக்கத்தின் வளர்ச்சி இருக்கிறது. இந்தியா போன்ற நூறுகோடிக்கும் அதிக மக்கள் இருக்கும் ஒரு நாட்டில், ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு கலாசாரம், பழக்கவழக்கங்கள், சிந்தனைகள், செயல்பாடுகள் என்ற நிலை. இதில் ஏதாவது மக்கள் நலனுக்குச் செய்ய வேண்டும் என்றால் எல்லோருடனும் சேர்ந்துதான் வேலை செய்ய வேண்டியிருக்கிறது.

மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. மாற்றத்துக்கு உள்பட்டு, நம் கொள்கையுடன் சேர்ந்து வேலை செய்வதுதான் இன்றைய தேவை. கொள்கைதான் முக்கியம் என்று ஒதுங்கி இருந்து, வேடிக்கை பார்த்தால், இன்னும் பல நூற்றாண்டுகள் பின்தங்கிவிடுவோம்.
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியேவா வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் விருப்பு வெறுப்புகளை காலத்தின் போக்கில் மாற்ற வேண்டிய நிலை உங்களுக்கு ஏற்பட்டதில்லையா?

கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள ஒவ்வொரு தோழரும் தங்களுக்காகச் சிந்திப்பதில்லை. தங்களுக்காகவோ, தங்கள் குடும்பத்துக்காகவோ நேரத்தைச் செலவு செய்வதில்லை. சக மனிதர்களுக்காகப் போராடுகிறார்கள். சமூகத்துக்காக வேலை செய்கிறார்கள். தன் குடும்பதையும் காப்பாற்றி, தான் சார்ந்திருக்கும் சங்கத்துக்கும் வேலை செய்து, தன் கட்சிக்காகவும் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். உழைப்பு உழைப்பு உழைப்புதான் அவர்கள் கண்டது. ஒவ்வொரு கம்யூனிஸ்ட் தோழரும் தான் மட்டும் சமுதாயத்துக்காக உழைப்பதில்லை. அவர்களுடைய குடும்பமும் இதில் பங்கெடுக்கிறது. பலர் தங்கள் வேலையை உதறிவிட்டு, கட்சிக்காக முழு நேரமும் உழைக்கிறார்கள். நூறு ரூபாய் சம்பாதிக்கும் தோழர் பத்து ரூபாயைக் கட்சிக்கு கொடுத்து விட்டு வேலை செய்கிறார். உறக்கம் கிடையாது. வேளாவேளைக்கு சாப்பாடு கிடையாது. உடல் நலத்தைப் பொருட்படுத்துவது இல்லை. வேறு எந்தக் கட்சியில் இப்படிப்பட்ட உணர்வாளர்களை நீங்கள் கண்டிருக்கிறீர்கள்?

சாதி ஒழிய வேண்டும் பேசும் அரசியல் கட்சிகள், தொகுதிகளில் சாதிக்காரர்களைத்தான் நிறுத்துகிறார்கள். இப்படி சாதி, மதம், அரசியல், தண்ணீர், உணவு, கழிப்பிடம், வேலையின்மை, தொழிற்சாலைகள் மூடல், உயரும் விலைவாசி, மக்கள் அதிகம் பயன்படுத்தும் கத்தரிக்காயில் மரபணுவைப் புகுத்தி, சோதித்துப் பார்க்கும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆய்வுக்கூடமாகத் திகழ இந்தியர்களின் உயிர்கள் பணயம் வைக்கப்படுதல், ஆபத்தான விஷங்களை இந்தியாவில் செய்து பார்ப்பதைத் தடுத்தல், மணல் கொள்ளை, சுற்றுச் சூழல் கேடு, பாலியல் கொடுமைகள், பெண்களுக்கு சம உரிமை, கல்வி, சுகாதாரம் என்று நொடிக்கு ஆயிரம் பிரச்னைகள்... அவற்றுக்கான போராட்டங்கள்...

எத்தனையோ தோழர்களின் உயிர்களை இழந்து, எத்தனையோ கஷ்டங்களுடன் போராடி வரும் ஒவ்வொரு தோழரும் உயர்ந்தவரே! எல்லோருக்கும் தெரியும், நாளையே புரட்சி வந்து விடும். நாடே மாறிவிடும் என்றெல்லாம் கனவு கொண்டிருக்கவில்லை. ஆனால், என்றோ இந்த நாட்டில் பொதுவுடைமை நிலவும் என்ற நம்பிக்கையில், பின்னால் வரும் சந்ததியினராவது சமமாக வாழவேண்டும். அதற்கு தங்களால் இந்தச் சமூகத்தை ஒரு படி மேலே கொண்டுபோக வேண்டும் என்ற எண்ணத்தில்தான், இன்று தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்கள்.

இல்லாதவர்களுக்கு ஐந்து ரூபாய் கொடுத்தாலே சேவை என்று சொல்லித் திரியும் இந்தக் காலத்தில் செய்யும் சேவையை சேவை என்று நினைக்காமல், கடமை என்று நினைத்து செயல்படுகிறார்கள்.

கட்டிடத் தொழிலாளர்கள், சாலை வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், சாலைப்பணியாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், துப்புரவுத் தொழிலார்கள், விவசாயக்கூலிகள் என்று எல்லா இடங்களிலும் கம்யூனிஸ்ட் தோழர்கள் அவர்களுக்காகப் போராடி வருகிறார்கள்.

//கம்யூனிஸ்ட் என்று பெயர் வைத்ததாலேயே புரட்சி வந்துவிடாது. //
ஆமாம்... உலக கம்யூனிஸ்ட் கொள்கைகளைப் படித்ததாலும், பிடித்ததாலும், தனக்குள்ளே அந்தக் கருத்துகளை வைத்துக்கொள்வதாலும் கூட புரட்சி வந்துவிடாது. விமர்சனம் செய்வது எளிது. இதுவரை எந்த இயக்கத்திலாவது நீங்கள் இணைந்து வேலை செய்திருக்கிறீர்களா?
இல்லை... இந்திய அரசியல், ஏழை எளிய மக்களின் நிலையாவது உங்களுக்குத் தெரியுமா? கண் தெரியாத தேசத்தில் மண் ரொட்டியைச் சாப்பிடுவதுதான் உங்களுக்குத் தெரியும். இங்கு உணவின்றி, எலிக்கறி சாப்பிட்டவர்களைத் தெரியுமா? இன்னமும் இந்தியாவில் தமிழ்நாட்டில் மூன்று வேளை உணவே ஆடம்பரம் என்று ஒரு வேளை மட்டுமே சாப்பிடும் மக்கள் பல லட்சம் இருப்பது தெரியுமா?

123 ஒப்பந்தத்துக்காக உதட்டளவில் எதிர்க்க மட்டுமே முடிந்தது. காங்கிரஸ் அசட்டை செய்ததால் வெளியேறி விட்டனர் என்கிறீர்கள். உங்கள் எண்ணத்திலேயே முரண்! முடிந்த வரை போராடினார்கள். முடியாத போது வெளியேறினார்கள்.

கொள்கைதான் முக்கியம் என்றால், நீங்கள் ஏன் உங்கள் கொள்கைக்கு ஒத்துப்போகும் இடங்களில் பணி செய்யவில்லை? உங்கள் கொள்கையை உங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்க முடிந்திருக்கிறதா? விகடனும் நக்கீரனும் கொள்கை உறுதி கொண்ட பத்திரிகைகளா? உங்கள் கருத்து பலரையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம்தானே? அதே போலத்தான் கட்சியும்!

உங்கள் பாணியில் கேள்வி கேட்பது என்றால், இலங்கை தமிழர்களுக்காக வருத்தப்படும் நீங்கள் அவர்களுக்காக என்ன செய்தீர்கள்? அவர்களுக்காகப் போராடுபவர்களுடன் சேர்ந்து போராடினீர்களா? இல்லை... இலங்கைத் தமிழர்களுக்காக விடுதலைப்புலிகள் புத்தகத்தின் வருமானத்தை அனுப்பினீர்களா என்றுகூட கேட்கலாமே!

மதச்சார்பின்மை, மக்கள் ஜனநாயகம், மனித முகம் கொண்ட உலகமயமாக்கம், மாற்று அரசியல் என்று பலவித விளையாட்டுகளைப் பார்த்து உங்களுக்கு வேண்டுமானால் சலிப்பு வந்திருக்கும். ஆனால், கம்யூனிஸ்ட்களுக்கு சலிப்பு வராது. ஏனென்றால் இதுபோன்ற விமர்சனங்களைத் தாங்கிக்கொண்டு, சுயவிமர்சனம் செய்துகொண்டு, அடுத்தடுத்து செய்ய வேண்டிய, போராட வேண்டிய பணிகள் வரிசைக்கட்டி நிற்கின்றன. உண்மையான கம்யூனிஸ்ட்களால் ஓய்வெடுக்கவோ, சலிப்படையவோ முடியாது! சிந்தனையில் இருந்தால் மட்டும் கம்யூனிஸ்ட் கொள்கையைச் செயல்படுத்த முடியாது. இறங்கி களத்துக்கு வாருங்கள். மக்களுடன் சேருங்கள். போராடுவோம்!

தோழமையுடன்
சுஜாதா

Premkumar said...

marudhan, these shortfalls of CPI-M has been pointed many times earlier. But they are not heeding to any of them. Reason being - Power. Power can do anything.

R. Vinod said...

தோழர் தமிழ் சுஜாதா யாரெனத் தெரியவில்லை. ஆனால் அவர் எழுப்பியுள்ள வினாக்கள் முக்கியமானவை. மருதன் நீங்கள் எழுதுவதைக் கொண்டு உங்களை ஒரு தீவிர இடதுசாரி என எடுத்துக்கொள்கின்றேன். அப்படியிருக்கையில் மனசாட்சியை அடகுவைத்துவிட்டு எப்படி நீங்கள் கிழக்குப் பதிப்பகத்தில் வேலை பார்க்கின்றீர்கள்? ஈழமக்கள் மீது தங்களுக்குள்ள அக்கறையை மதிக்கிறேன். ஆனால் இதுவரை நீங்கள் அவர்களுக்காக என்ன செய்திருக்கிறீர்கள் என்று சொல்ல இயலுமா? காகிதத்தில் கண்ணீர் வடிப்பதுதான் ஆக சாத்தியமான பணியென்றால் நீங்களும் கிழக்கு கூட்டத்தில் ஒருவரே. உங்கள் இடதுசாரி முலாம் தேவையற்றது தோழரே.

மருதன் said...

R Vinod :

நீங்கள் நினைத்தது சரிதான். இடது சாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவன்தான் நான். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ போன்றவர்களின் மூலப் படைப்புகளை வாசித்துக்கொண்டிருப்பவன்தான். கிட்டத்தட்ட புரட்சியாளர்களைப் பற்றி மட்டுமே தொடர்ந்து எழுதி வந்திருக்கிறேன். இனியும் எழுதுவேன். சிபிஎம் கட்சியை நான் விமரிசித்ததற்குக் காரணம் அதிலுள்ள முரண்பாடுகளே. இந்த முரண்பாடுகள் பற்றி பெரியார் முதற்கொண்டு பலர் எழுதியும் பேசியும் வந்திருக்கிறார்கள். சிபிஎம்மை நான் சில விஷயங்களில் எதிர்க்கிறேன் என்ற ஒரே காரணத்துக்காக நான் இடதுசாரி கிடையாது என்று நினைத்துவிடவேண்டாம். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை விமரிப்பதற்கும் சிபிஎம் கட்சியை விமரிசிப்பதற்கும் வேறுபாடு உண்டு. கம்யூனிஸ்ட் கட்சி மீது எனக்குக் கூடுதல் அக்கரையும் ஈர்ப்பும் உள்ளதால்தான் அதனை விமரிசிக்கிறேன், எதிர்க்கிறேன், வருத்தப்படுகிறேன். மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றம் பெறும்போது இதுபோன்ற முரண்பாடுகள் ஏற்படுவதுண்டு. சிபிஎம் அதற்கு விதிவிலக்கல்ல.

ஈழ மக்களுக்காக மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக எழுதுவதும் பேசுவதும் ஒரு கம்யூனிஸ்டின் பணி. அதை நான் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறேன்.

நந்தன் said...

கம்யூனிஸ்ட் கட்சியை விமரிசிக்கவே கூடாது என்கிறீர்களா? என்ன அநியாயம் இது? நந்திகிராம் விவகாரத்தை இதயம் உள்ள எவராலும் மறக்க முடியாது. மறுக்கவும் முடியாது. இதுவரை மேற்கு வங்கம் நந்திகிராம் விவகாரத்தில் விடையளிக்கவில்லை.

Theekanal said...

I am a communist by tradition. My father was an active party member. But, somehow I could not associate with the party. Like you pointed out, I find many contradictions in the party. They have almost forgotten the principles that marx and lenin stood for. I agree with you totally. One need not have to be a party member to be a communist.

R. Vinod said...

தோழர் மருதன், உங்கள் பதிலுக்கு நன்றி. இடதுசாரி என ஒப்புக்கொண்டமைக்கும் சேர்த்தே சொல்கிறேன். ஒடுக்கபடும் மக்களுக்கு ஆதரவாக எழுதுவது ஒரு கம்யூனிஸ்டின் பணிதான். மறுக்கவில்லை. ஆனால் நீங்கள் எந்த ஒடுக்கப்படும் மச்க்கள் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்? உங்கள் விடுதலை புலிகள் புத்தகத்தில் ஈழ மக்களின் துயரம் எவ்வளவு வெளிபட்டிருகிறது? அதுமட்டுமில்லாமல் உங்கள் பார்வையில் போராளி இயக்கங்கள் எல்லாமே இடதுசாரி இயக்கங்கள்தானா? ஒரு இடதுசாரியாக இருந்துகொண்டு தீவிரவலதுசாரி இயக்கமான விடுதலை புலிகள் பற்றி எப்படி அத்தனை உயர்வாக சிலகித்து எழுத முடிகிறது உங்களால்? இதுபற்றி விளக்கவேண்டும். நன்றிகள்.

மருதன் said...

R Vinod

1) போராளி இயக்கங்கள் அனைத்துமே இடதுசாரி இயக்கங்கள் என்று சொல்வதற்கில்லை. விடுதலைப் புலிகள் நிச்சயம் இடதுசாரி இயக்கம் அல்ல. அவர்கள் செய்துள்ள பல்வேறு தவறுகளை -- முஸ்லீம் வெளியேற்றம், சக இயக்கங்கள் அழித்தல், ஃபாஸிச பண்புகள் -- நான் புத்தகத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறேன். விரிவாக அல்ல என்றாலும் சுருக்கமாக.

2) விடுதலைப் புலிகளை விமரிசனம் செய்வதற்கும் அவர்களிடைய உள்ள பல்வேறு முரண்பாடுகளைக் களையவேண்டியதன் அவசியத்தை வலியிறுத்துவதற்குமான சமயம் இதுவல்ல என்று நினைக்கிறேன். முதலில் தமிழர்கள் உயிருடன் இருக்கவேண்டும். போர் முடிவுக்கு வரவேண்டும். புலிகள் மீது பழியைப் போட்டுவிட்டு தமிழர்கள்மீது மிருகத்தனமான வன்முறையை பிரயோகித்துக்கொண்டிருக்கிறது இலங்கை அரசு. இந்நிலையில் நாமும் புலிகள் எதிர்ப்பை பிரதானமாக்கினால், அதை இலங்கை சாதகமாக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது.