May 26, 2009

ஐ.நாவும் இலங்கை இனப்படுகொலையும்


ஜூலை 26, 2006 அன்று நடைபெற்ற மாவிலாறு அணை தாக்குதல் நான்காம் ஈழப்போரைத் தொடங்கிவைத்தது. சம்பூர், வாகரை தொடங்கி கிளிநொச்சி உள்ளிட்ட கிழக்குப் பகுதி முழுவதையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது இலங்கைப் படை. புலிகளின் தலைமை உள்பட அனைவரையும் அழித்துவிட்டதாகவும் போர் முடிவடைந்துவிட்டதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

இலங்கை அளித்துள்ள புள்ளிவிவரம் இது. இன்றைய தேதி வரை 9,100 விடுதலைப் புலிகள் சரணடைந்துள்ளனர். 22,000 புலிகள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இலங்கை ராணுவத்தின் இழப்பு 6261. பாதிக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை என்ன என்பது குறித்து தகவல் இல்லை. இலங்கையின் மக்கள் தொகை, 20 மில்லியன் (200 லட்சம்) பேர். பதினெட்டு சதவீதம் பேர் தமிழர்கள். முகாம்களில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் எப்போது குடியமர்த்தப்படுவார்கள் என்று தெரியாது. புலிகளும் மக்களோடு மக்களாக கலந்திருக்கலாம் என்னும் சந்தேகத்தில் ஸ்க்ரீனிங் தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. கையோடு, போர் சாட்சியங்களையும் வேகமாக அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மே 23 அன்று பான் கீ மூன் வந்திருந்தபோது, அவருக்கு ஒரு மினி டூர் ஏற்பாடு செய்தார்கள். இருபத்து நான்கு மணி நேரங்கள். பத்திரிகையாளர்களுக்கு ஒரு பஸ். அனுமதிக்கப்பட்ட பகுதிகள் மட்டுமே காண்பிக்கப்பட்டன. அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு மட்டும். இன்னும் இரண்டு தினங்கள் இங்கே தங்கியிருக்கலாமா என்று கேட்டபோது மறுத்துவிட்டார்கள். பான் கீ மூனின் கருத்து இது. நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. இலங்கை அரசாங்கத்துக்கு இது ஒரு சவாலான சூழல். இதிலிருந்து மீள்வதற்கு ஐ.நா. நிச்சயம் உதவி செய்யும். முதல் காரியமாக, முகாம்களில் அடைபட்டிருக்கும் மூன்று லட்சம் தமிழர்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும்.

களத்துக்கும் நேரில் சென்று பார்த்திருக்கிறார். எரிந்து போன கார் டயர்கள், குப்பை கூளங்கள் மட்டும் கண்ணில் சிக்கியிருக்கின்றன. ஹெலிகாஃப்டரில் ஏற்றிச்சென்று ஒரு ரவுண்ட் காட்டியிருக்கிறார்கள். சேதத்தின் அளவை இப்போது இன்னும் கொஞ்சம் கூடுதலாக அவரால் பார்க்க முடிந்திருக்கிறது. மற்றபடி, வீதி முழுவதும் ராஜபக்ஷேவின் சிரிக்கும் கட் அவுட்கள். பிறகு, வெற்றியின் அடையாளமாக சிங்களர்களின் சிங்கக்கொடி. சரி, பார்த்ததுவரை போதும் என்று டாடா காட்டி அவரை விமானத்தில் அனுப்பிவிட்டார்கள்.

பான் கீ மூனின் வருகைக்குப் பிறகும், இதுவரை இப்படிப்பட்ட கொடுமையான ஒரு காட்சியை நான் கண்டதில்லை என்று அவர் கருத்து தெரிவித்த பிறகும், உதவிப்பணிகள் புரிவதற்கும்கூட ஒருவரையும் உள்ளே அனுமதிக்கவில்லை இலங்கை. காரணம், ஐ.நா குறித்த பயம் இலங்கைக்கு இல்லை. ஐ.நாவுக்கான இலங்கையின் சிறப்புப் பிரதிநிதி தயன் ஜெயதிலகாவின் கூற்று இது. எங்களுக்கு எதிராக ஐ.நா எப்படிப்பட்ட தீர்மானத்தைக் கொண்டு வந்தாலும் நாங்கள் பயப்படமாட்டோம். தீர்மானம் முறியடிக்கப்படும்.

நேற்று (மே 25) ஐ.நாவின் மனித உரிமைக் கவுன்ஸிலில் இலங்கை குறித்த விவாதம் நடந்தது. போர்க்குற்றங்களுக்காக இலங்கை மீது விசாரணை நடத்தப்படவேண்டுமா வேண்டாமா என்பதுதான் விவாதம். முதல் சுற்று பேச்சுவார்த்தை நேற்று நடந்திருக்கிறது. பங்கேற்ற 47 உறுப்பினர்களில் 18 பேர் விசாரணை வேண்டும் என்றும் 18 பேர் வேண்டாம் என்றும் கருதியிருக்கிறார்கள். இன்றும் விவாதம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, எகிப்து, சவுதி அரேபியா, க்யூபா, நிகாரகுவா, பொலிவியா போன்ற நாடுகள் இலங்கை பக்கம் நிற்கின்றன. எதிரணியில், அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள்.

இலங்கை தன் தரப்பு வாதத்தை தன் நண்பர்களின் துணையுடன் ஐ.நாவில் சமர்ப்பித்திருக்கிறது. போர்க்குற்றம், தண்டனை என்ற பேச்சுக்கே இடமில்லை. உண்மையில், நாங்கள் செய்திருப்பது சாதனை. மிகத் திறமையாக எங்கள் சமூகவிரோதிகளை ஒழித்துக்கட்டியிருக்கிறோம். லட்சக்கணக்கான மக்களை தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மீட்டிருக்கிறோம். நியாயப்படி பார்த்தால், ஐ.நா எங்களைப் பாராட்டவேண்டும். மேற்கொண்டு உதவியும் செய்யவேண்டும்.

விசாரணை மட்டுமல்ல இந்த விவாதமே தேவையற்றது என்று இந்தியா, பாகிஸ்தான், மலேஷியா ஆகிய நாடுகள் சொன்னபோது ஐ.நா அதை மறுத்துள்ளது. உடனே இந்தியாயும் சீனாவும் அவையைவிட்டு வெளியேறிவிட்டன. இனப்படுகொலைக்கான ஆயுதங்களை வழங்கியதே இந்தியாவும் சீனாவும்தான் என்னும்போது இலங்கைக்கு எதிராக எப்படி அவர்களால் வாக்களிக்கமுடியும்? எப்படி இலங்கை மீது குற்றம் சுமத்தமுடியும்?

அமெரிக்காவை எதிர்த்து ஆடும் ஒரு களமாக இலங்கையை சீனாவும் ரஷ்யாவும் பயன்படுத்திக்கொள்வதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. அதேபோல், சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்கவேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு இருக்கிறது. இந்தியாவோடு சேர்ந்துகொண்டு சீனா இலங்கைக்கு ஆயுதங்கள் வழுங்குவதன் மூலம், ஆசியாவின் வல்லரசு என்னும் அந்தஸ்தை அது உறுதிபடுத்திக்கொள்கிறது. ஆகவே, சீனாவை எதிர்க்கவேண்டும். இது அமெரிக்காவின் லாஜிக். தவிரவும், இலங்கைக்கு எதிரான அறிக்கைப்போர் மூலமாக, இராக் ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட கெட்ட பெயர் குறைவதற்கு வாய்ப்புண்டு.

ஆனால், க்யூபா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகள் இலங்கைக்கு ஆதரவு அளித்திருப்பது அதிர்ச்சிகரமானது. அமெரிக்கா இலங்கையை எதிர்க்கிறது. நாங்கள் அமெரிக்காவை எதிர்ப்பவர்கள். ஆகவே, இலங்கையை ஆதரிக்கிறோம். இத்தகைய குறுகிய கண்ணோட்டத்தில் அவர்கள் முடிவு எடுத்திருக்கலாம். அல்லது, இலங்கையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதையே அறியாமல், இலங்கை தரப்பு செய்திகளையும் புள்ளிவிவரங்களையும் மட்டுமே நம்பி இலங்கையை ஆதரித்திருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும் முடிவு அபத்தமானது. ஆபத்தானதும்கூட. ரால் காஸ்ட்ரோ அயல்துறையின் மிக மோசமான முடிவு இது. காலனியாதிக்கத்துக்கும் அடக்குமுறைக்கும் எதிராக லத்தீன் அமெரிக்கா தொடர்ந்து போராடி வந்திருக்கிறது. இந்நிலையில், இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தை அவர்கள் அறிந்து வைத்திருக்காதது பெரும் பிழை. அதைவிட பிழை அவர்களுக்கு எதிராக வாக்களித்திருப்பது.

மொத்தத்தில், ஐ.நாவின் தோல்வி எதிர்பாராதது அல்ல. ஐ.நா மட்டுமல்ல எந்தவொரு சர்வதேச அமைப்பாலும் இலங்கை மீது நடவடிக்கை எடுக்கமுடியாது. மகிந்த ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளியாக்க முடியாது. ஒப்புக்கு மீட்டிங் போடலாம். பேச்சுவார்த்தைகள் நடத்தலாம். அறிக்கைகள் தயாரித்து வாசிக்கலாம். எதிராகவும் ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பலாம். கண்டிக்கலாம். மேற்கொண்டு எதுவும் செய்வதற்கில்லை. இலங்கை தன்னைத்தானே விசாரணை செய்துகொள்ளவேண்டும் என்னும் அற்புதமான யோசனையை மட்டுமே ஐ.நாவால் வழங்கமுடியும்.

ஐ.நாவில் இன்று கதை பேசிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நாடும் தன் தோட்டத்தில் ஒரு கல்லறையை கட்டி பராமரித்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாட்டின் மீதும் ரத்தக்கறை படிந்துள்ளது. இலங்கை மட்டுமல்ல அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, சீனா, ரஷ்யா, இஸ்ரேல் என்று அத்தனை நாடுகளும் போர்க்குற்றங்கள் செய்திருக்கின்றன. இலங்கை குற்றவாளி என்றால் இவர்களும் குற்றவாளிகளே. எனவே, எதிரெதிர் அணியில் இருந்தாலும், இவர்கள் யாரும் இலங்கையை விட்டுக்கொடுக்கப்போவதில்லை. மகிந்த ராஜபக்ஷேவுக்கு இது மிக நன்றாகத் தெரியும். எனவே அவர் கவலையின்றி சிரித்துக்கொண்டிருக்கிறார்.

ஆதாரம் :

1) GEOPOLITICS DROWNS SRI LANKA’S TAMILS: The great game
2) UN faces fierce clash over call for Sri Lanka war crimes inquiry
3) India, Pakistan back Lanka in 'rights battle'
4) Sri Lanka : Vanni Emergency OCHA Situation Report No.17
5) Hope for Lanka reconciliation
6) UN chief ‘appalled’ by scenes in Sri Lanka
7) Sri Lankan envoy lashes out at Western "colonizers" over U.N. emergency session, but rights groups call proposed resolution "toothless"

10 comments:

ராஜ நடராஜன் said...

நல்ல அலசல்.ஐ.நா லாபிகள் எப்படி செயல்படுகின்றன,Behind the doors talk என்பன பற்றியெல்லாம் நாம் தெரிந்து கொள்வது அவசியம்.ஐ.நாவும் கூட தன்னை மீள் பரிசோதனை செய்து கொள்ளவேண்டியது அவசியமானதும் கூட.இலங்கை குறித்த ஐ.நா முடிவுகள் எப்படியென்பது நாளை தெரிந்து விடும்.பார்க்கலாம்.

சி. சரவணகார்த்திகேயன் said...

That's a good article.
I have added it to the படித்தது / பிடித்தது series in my website.
http://www.writercsk.com/2009/05/thamizhagame.html

MUSICALLY YOURS!! said...

அன்பு நண்பர் மருதன்,
கட்டுரை அருமை. இலங்கை பிரச்னை பொறுத்து உலக நாடுகள் இரண்டு பத்து நிற்பது ராஜ பக்ஸேவுக்கு போர்க் குற்றங்கள் குறித்த விசாரணையிலிருந்து தப்பிக்க ஒரு வாய்ப்பக அமையும் என கருதுகிறேன்.

புழல் said...

ஐக்கிய நாடுகள் சபையால் இலங்கை பிரச்னையைத் தீர்க்கமுடியாது. நோர்வை முதலில் அந்த வேலையை செய்து பார்த்தது. மிகவும் நம்பினோம். ஆனால் காரியம் கைகூடவில்லை.

சந்திரன் புலேந்திரன் said...

எல்லாவற்றையும் செய்துவிட்டு ராஜபக்ஷே தப்பிச்சென்றுவிடுவார் எனறு நினைத்துப் பார்க்கையில வேதனையே மிஞ்சுகிறது. நன்றாக வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறீர்கள் மருதன். தொடரந்து எழுதுங்கள்

Anonymous said...

Tomorrow we will know

Ragztar said...

//ஆனால், க்யூபா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகள் இலங்கைக்கு ஆதரவு அளித்திருப்பது அதிர்ச்சிகரமானது. //

இதில் அதிர்வதற்கு ஒன்றுமில்லை, உண்மையில் நுண் அரசியல் புரிந்திருந்தால்.

மாலன் said...

உங்கள் கவ்னத்திற்கு:

1.இலங்கை தனது தீர்மானத்தில் சமூக விரோதிகள் என்று சொல்லவில்லை. பயங்க்ரவாதத்தை வென்று விட்டோம் என்று சொல்கிறது. தாலிபான், அல்கைதா போன்ற பயங்கரவாதம் எனச் சொல்கிறது.

2. இந்தச் செய்தியையும் பாருங்கள்:


இலங்கைக்கு ஆயுத உதவி செய்ய இந்தியா மறுத்து விட்டது
ராணுவ தளபதி பொன்சேகா சொல்கிறார்


கொழும்பு, மே.26-

இலங்கைக்கு ரேடார் உள்ளிட்ட கருவிகளையும், ஆயுதங்களையும் வழங்க இந்தியா மறுத்து விட்டது என்று அந்த நாட்டு ராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ராணுவ தளபதி பேட்டி

இலங்கையில் விடுதலைப்புலிகளை ஒழிப்பதாக கூறி சிங்கள ராணுவம் நடத்திய போரில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். தமிழர்களை படுகொலை செய்வதற்கு ரேடார், பீரங்கி மற்றும் பல ஆயுத உதவிகளை இந்தியா செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இலங்கைக்கு இந்தியா ஏராளமான உதவிகள் செய்து வருவதாக பாராளுமன்றத்திலும் அங்குள்ள மந்திரிகள் தெரிவித்தனர்.

இந்த சூழ்நிலையில், இலங்கைக்கு ஆயுத உதவி செய்ய இந்தியா மறுத்ததாக ராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கில செய்தி டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

இந்தியா மறுத்தது

கனரக ஆயுதங்களை இலங்கைக்கு விற்கவோ அல்லது அனுப்பவோ முடியாத சூழ்நிலையில் இருப்பதாக இந்தியா எங்களிடம் தெரிவித்தது. அடிப்படை தகவல் தொடர்புக்கு உதவும் ரேடார் கருவிகளை வழங்க கூட மறுத்து விட்டது. எனவே எங்களுடைய ஆயுத தேவைகளுக்காக பாகிஸ்தான், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளை அணுகினோம். ஆனால், இலங்கை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் குறைந்த அளவிலான ஆயுதங்களை வழங்க பாகிஸ்தான் முன்வந்தது.

அதே ஆயுதங்களுக்கு ரஷ்யா, உக்ரைன் போன்ற நாடுகளில் அதிக விலை கூறினார்கள். அதே நேரத்தில் அதிக ஆயுதங்களை அளிக்க சீனா முன்வந்தது. ரஷ்யாவை ஒப்பிடும்போது பாதி விலையில் ஆயுதங்கள் கிடைத்ததால் நாங்கள் வேறு எந்த வாய்ப்பையும் நாடவில்லை. ஆர்ட்டிலறி போன்ற ஆயுதங்களை முதன் முதலாக சிங்கள ராணுவம் பயன்படுத்தியது.

இவ்வாறு சரத் பொன்சேகா தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் சரண்

இதற்கிடையே, விடுதலைப்புலிகளை முற்றிலுமாக அழித்து விட்டதாகவும், மீண்டும் அவர்கள் துளிர்விட அனுமதிக்க முடியாது என்றும் இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோதபையா ராஜபக்சே தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கை டி.வி.க்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

சிங்கள ராணுவத்திடம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் சரண் அடைந்துள்ளனர். அவர்களில் கிரிமினல் குற்றவாளிகள் மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு சட்டத்தின் கீழ் நிறுத்தப்படுவார்கள். மற்றவர்கள் அனைவரும் மறுவாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள்.

மீண்டும் துளிர்விட முடியாது

விடுதலைப்புலிகளை சிங்கள ராணுவம் முற்றிலுமாக அழித்து விட்டது. இலங்கையில் விடுதலைப்புலிகளோ அல்லது வேறு எந்த தீவிரவாத இயக்கமோ மீண்டும் துளிர்விட வாய்ப்பே கிடையாது. இலங்கையில் செயல்பட்ட பல்வேறு மனித உரிமை அமைப்புகள், அப்பாவி மக்களை இடம்பெயர செய்யாமல் விடுதலைப்புலிகளை காப்பாற்றுவதிலேயே ஆர்வமாக இருந்தன.

அவர்களை அரசு அடையாளம் கண்டு சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டது. பத்திரிகை சுதந்திரத்தை இலங்கை அரசு ஒருபோதும் பறிக்கவில்லை.

இவ்வாறு கோதபையா ராஜபக்சே தெரிவித்தார்.

-தினத்தந்தி 26.5.08

Anonymous said...

//
இந்தியாவும் சீனாவும்தான் என்னும்போது இலங்கைக்கு எதிராக எப்படி அவர்களால் வாக்களிக்கமுடியும்? எப்படி இலங்கை மீது குற்றம் சுமத்தமுடியும்?
//
It's a shame that we are still holding Indian passports, inspite of India helping Srilanka to kill so many Tamils there.

புரட்சிக்கவி said...

மருதையன்,

நல்ல அலசல். கியூபா பற்றிய கருத்தும் சரியானதுதான்.

இலங்கையில், மக்கள் கொல்லப்பட்டதற்கு, அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ் குண்டுகளும் காரணம். சகல தேசங்களும், சிங்களர்களுக்கு உதவி இருக்கின்றன.

இப்போது, இவர்கள் கவலை எல்லாம், எதாவது பயமுத்திக் கொண்டே, இலங்கையை எப்படி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் என்பது தான். அதற்காகத்தான் இத்தனை நாடகங்கள் எல்லாம் !!!.

அறிவுடைநம்பி