June 28, 2009

லால்கார் : நிறம் மாறும் சிவப்பு


மாவோயிஸ்ட் இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என்று அறிவித்து, சட்டப்பூர்வமாக தடை செய்துள்ளது இந்திய அரசு. இனி, முன்பை காட்டிலும் கூடுதல் வேகத்துடன், கூடுதல் செயல்திறனுடன் நக்ஸலைட்டுகளை வேட்டையாடமுடியும். தீவிரவாதத்துக்கு எதிரான போரை கூடுதல் பலத்துடன் தொடுக்கமுடியும். நாட்டின் மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று பரவலாக வருணிக்கப்படும் மாவோயிஸ்ட் இயக்கத்தினரை முடக்கமுடியும். பாதுகாப்புப் படையினருக்கு இனி விசேஷ சலுகைகள் அளிக்கப்படும். யாருக்கும் கவலைப்படாமல் சட்டப்பூர்வமாகவே இனி அவர்கள் தேடுதல் வேட்டை நடத்தலாம். விசாரணை இன்றி இயக்கத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்யலாம். தண்டிக்கலாம். இவர்கள் சுட்டிக்காட்டும் அனைவரும் நக்ஸலைட்டுகள். இவர்கள் கைது செய்யப்போகும் அனைவரும் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள்.

மேற்கு வங்கத்தில் உள்ள லால்காரில் மக்கள் குடை பிடித்துக்கொண்டு வரிசையில் நின்றுகொண்டிருக்கிறார்கள். அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் எதுவும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தைவிட்டு வெளியேறிவிட்டார்கள். கடைகள் மூடப்பட்டவிட்டன. தெருக்கள் வெறிச்சோடிக்கிடக்கின்றன. திரும்பும் திசையெங்கும் எல்லையோரப் பாதுகாப்புப் படை, ரிசர்வ் படை. கவலைவேண்டாம், அமைதியை நிலைநாட்டிவிட்டோம், லால்காரைக் கைப்பற்றிவிட்டோம் என்கிறது காவல்துறை.

அசப்பில் இலங்கையை நினைவுபடுத்துகிறது லால்கார். தீவிரவாதம், மனித கேடயம், தேடுதல் வேட்டை, உணவுத் தட்டுப்பாடு, ரத்தம், வேதனை, கண்ணீர். அங்கே விடுதலைப் புலிகள், இங்கே மாவோயிஸ்டுகள். பல லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் அங்கே முகாம்களில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். இங்கே எண்ணிக்கை குறைவுதான். என்றாலும், அதே தவிப்பு, அதே துயரம். அங்கே இலங்கை அரசு முகாம்களை உருவாக்கி வைத்திருக்கிறது. இங்குள்ள முகாம்களை உருவாக்கியவர்கள் சி.பி.எம் மற்றும் திரிணாமூல் கட்சியினர். நீ புலியா, நீ புலியா என்று கண்ணில் படுபவர்களை எல்லாம் இழுத்து வைத்து விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் அங்கே. இங்கேயும் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. உண்மையைச் சொல், நீ நக்ஸலைட்தானே?

நக்ஸலைட்டுகள் தொடங்கிய போர் இது என்கிறார்கள் காவல்துறையினர். நவம்பர் மாதம் தொடங்கி லால்காரை அவர்கள் ஆக்கிரமிப்பு செய்துவருகிறார்கள். சட்டீஸ்கரில் 11 படையினரை கொன்றுவிட்டார்கள். இரு தினங்கள் கழித்து, 16 பேர் நக்ஸலைட்டுகளின் பொறிக்குள் சிக்கி வெடித்துச்சிதறிவிட்டார்கள். சிபிஎம் உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கட்சி அலுவலங்கள் உடைத்து நொறுக்கப்பட்டுள்ள. இப்படியே விட்டால் லால்கார் தொடங்கி பல பகுதிகளை இழக்கவேண்டிவரும் என்பதால்தான் விரைந்து நடவடிக்கை எடுத்தோம். இப்போது லால்காரை மீட்டுவிட்டோம். நல்ல வேளையாக, மாவோயிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்டுவிட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, நக்ஸலைட் இயக்கத்தை முற்றிலுமாக அழிக்கவேண்டும். இதுபோன்ற இயக்கங்களுக்கு இரக்கம் காட்டுவது ஆபத்தானது.

தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்ற ஒரு மாதத்தில் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2004ல் ஒருமுறை தடை விதித்திருந்தார்கள். ஆந்திரா, மத்தியப் பிரதேசம், ஒரிஸா, சத்தீஸ்கார், ஜார்காண்ட் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் முன்னரே தடை செய்யப்பட்டுள்ளனர். லஷ்கர் ஈ தொய்பா, சிமி, ஹிஸ்புல் முஜாஹிதின், உல்ஃபா போன்ற தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இனி மாவோயிஸ்டுகளும் இடம்பெறுவார்கள்.

இந்த தடை உத்தரவை புத்ததேவ் உடனடியாக மேற்கு வங்கத்தில் நீட்டிக்கவேண்டும் என்று மத்திய அரசாங்கம் விரும்புகிறது. ஆனால், புத்ததேவால் அதை செய்யமுடியவில்லை. இத்தனைக்கும், மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டத்தை பலமாக எதிர்ப்பவர்தான் அவர். நக்ஸலைட்டுகள் வேட்டையாடப்படவேண்டும் என்பதில் அவருக்கு மாற்று கருத்து கிடையாது. என்றாலும், மத்திய அரசாங்கத்தைப் போல் வெளிப்படையாக மாவோயிஸ்டுகள் மீது தடை விதிக்க அவருக்குத் தயக்கம்.

ஒரு கம்யூனிஸ்ட் அரசாங்கமே மற்றொரு கம்யூனிஸ்ட் பிரிவை தடைசெய்வது தீவிர விமரிசனங்களை கிளப்பும். ஏற்கெனவே தேர்தல் தோல்வி. அத்தோடு சேர்த்து இதுபோன்ற சர்ச்சைகளும் சேர்ந்துகொள்வது அரசியல் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. அதைவிடப் பெரிய ஆபத்து, மம்தா பானர்ஜி. மாவோயிஸ்டுகள் மீது இவருக்கு எந்த அபிமானமும் கிடையாது என்றாலும் சிபிஎம்மை எதிர்ப்பதற்கு இந்த தடையுத்தரவை அவர் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அந்த வகையில், கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொந்தரவு கொடுத்து வரும் மாவோயிஸ்டுகளை அவர் மறைமுகமாக ஆதரிக்கவும்கூடும். மார்க்ஸிஸ்ட் கட்சிக்கும் மாவோயிஸ்ட் கட்சிக்கும் அதிக வித்தியாசங்கள் இருப்பதாக தெரியவில்லை என்று கிண்டலடித்துகொண்டிருக்கிறார். இடது சாரி அரசு எப்போது கவிழும் என்று காத்துக்கொண்டிருக்கும் மம்தாவுக்கு எதற்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கவேண்டும்?

ஆகவே கொஞ்சம் பூசி மெழுகிப் பேசியிருக்கிறார் புத்ததேவ். தடை விதிப்பது குறித்து விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. என்றாலும், அரசியல் ரீதியில் மாவோயிஸ்டுகளை எதிர்கொள்வதே சரியான வழி என்று தோன்றுகிறது. சிபிஎம் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், சிபிஐ பொதுச்செயலாளர் ஏ.பி. பரதன் இருவரின் கருத்தும் இதுவேதான். அதாவது, தடை என்று அறிவித்துவிட்டு போரிடுவதைவிட அறிவிக்காமலே அதைச் செய்துமுடிக்கலாம்.

நக்ஸலைட்டுகளுக்கு எதிரான போர் என்று பெயரளவில் அறிவித்திருந்தாலும் நிஜத்தில் இது பழங்குடி இன மக்களுக்கு எதிரான போராகவே உருவெடுத்துள்ளது. கடந்த காலங்களில் நடைபெற்றதும் இதுவேதான். சட்டீஸ்கரில் உள்ள பழங்குடி மக்களை ஒடுக்குவதற்காக 2005ல் சல்வா ஜுடும் என்னும் குண்டர்கள் படை உருவாக்கப்பட்டது. இந்தப் படைக்கு நிதியுதவி தொடங்கி ஆயுத உதவி வரை அனைத்தையும் சத்தீஸ்கர் அரசே செய்துகொடுத்தது. இங்குள்ள பழங்குடி மக்கள் நக்ஸலைட்டுகளை ஆதரிக்கிறார்கள் என்பதால் இந்த ஏற்பாடு. எந்தவொரு தீவிரவாத இயக்கத்தையும் மிஞ்சிவிடும் அளவுக்கு மிகக் கொடூரமான பல தாக்குதல்களை சல்வா ஜுடும் அப்பாவி பழங்குடி மக்கள் மீது நடத்தியுள்ளது. தொடர்ந்து நடத்திவருகிறது. நக்ஸலைட்டுகளைப் பற்றி பக்கம் பக்கமாக விவாதிக்கும் ஊடகங்கள் இதுபோன்ற சட்டவிரோதமான ஏற்பாடுகளை கண்டுகொள்வதில்லை.

லால்காரிலும் இதுதான் நிலைமை. நக்ஸலைட்டுகள் மீது அளவுக்கு அதிகமாக வெளிச்சத்தைப் பாய்ச்சி நிஜத்தை இருட்டில் மூழ்கடித்துவிட்டது அரசு. சமீபத்தில் லால்காரில் நடைபெற்றது நக்ஸலைட்டுகளுக்கும் காவல்துறைக்கும் இடையிலான மோதல் மட்டுமல்ல பழங்குடி இன மக்களுக்கும் அரசுக்கும் எதிராக நடைபெற்ற மோதலும்தான். இதுவே ஆரம்பப் புள்ளி. நந்திகிராமில் நடைபெற்றதைப் போலவே லால்காரிலும் 5000 ஏக்கர் நிலத்தை சிறப்புப் பொருளாதார மண்டலமாக அறிவிக்கும் முயற்சியில் சில காலமாகவே ஈடுபட்டுவருகிறது மேற்கு வங்க அரசு. ஜிண்டால் என்னும் நிறுவனம் தனது இரும்பு எஃகு ஆலையை அமைப்பதற்காக லால்காரின் காட்டு வளத்தை அழிக்க முடிவு செய்துவிட்டது அரசு.

இதற்கு எதிராக பழங்குடி மக்கள் அணிதிரண்டு போராட ஆரம்பித்தனர். போராட்டத்தை எதிர்க்க அரசாங்கம், கட்சி, காவல்துறை மூன்றும் கைகோர்த்துக்கொண்டபோது, மக்கள் இந்த மூன்றையும் சேர்த்தே எதிர்க்க ஆரம்பித்தனர். மாவோயிஸ்டுகளின் துணையும் அவர்களுக்கு கிடைத்தது. மாவோயிஸ்டுகள் மட்டுமல்ல பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை காப்பாளர்கள் என்று பல்வேறு அணியினர் லால்கார் மக்கள் பக்கம் வந்து நின்றனர். அரசாங்கத்துக்கு எதிராக கல்கத்தாவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

பழங்குடி மக்களின் இந்த எழுச்சியை நக்ஸலைட்டுகளின் தாக்குதலாக மட்டுமே குறுக்கிப் பார்ப்பது பிரச்னையை திசைதிருப்பும் செயல். மாவோயிஸ்ட் அமைப்பின் மீது கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த தடையுத்தரவு பிரச்னையை எந்த விதத்திலும் முடிவுக்குக் கொண்டுவரப்போவதில்லை. மேற்கு வங்கப் பிரச்னைக்குக் காரணம் மாவோயிஸ்டுகள் என்று சொல்வது இலங்கை இனப் பிரச்னைக்குக் காரணம் விடுதலைப் புலிகள் என்று சொல்வதற்கு ஒப்பானது. விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது பிரச்னை அல்ல. பிரச்னையின் விளைவு. மாவோயிஸ்டுகள் இயக்கத்தையும் அவ்வாறேதான் அணுகவேண்டும். விளைவுகளை அழித்துவிடுவதன் மூலம் பிரச்னை காணாமல்போவதில்லை.

(கல்கியில் இந்த வாரம் வெளிவந்துள்ள என் கட்டுரையின் முழு வடிவம் இது)

June 26, 2009

சீனாவின் இன்னொரு முகம்

Chen Guidi, Wu Chuntao இருவரும் இணைந்து எழுதியிருக்கும் Survey of Chinese Peasants என்னும் புத்தகம் குறித்த விமரிசனம் நியூ லெஃப்ட் ரிவ்யூவில் வெளிவந்துள்ளது. பழைய கட்டுரை. எனக்கு இப்போதுதான் காணக்கிடைத்தது. நூலாசிரியர்கள் இருவரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அன்ஹுய், ஹுனான் மாகாணாவாசிகள். இருவருமே எழுத்தாளர்கள். தம்பதிகள். அக்டோபர் 1, 2000 அன்று அன்ஹுயின் தலைநகரமான Hefei என்னும் பகுதியில் இருந்து இவர்கள் தங்கள் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தனர். பெய்ஜிங்கில் இருந்து தெற்கே 500 மைல் தொலைவில் உள்ள ஒரு பகுதி இது. இங்கிருந்து தொடங்கி அன்ஹுயில் உள்ள ஐம்பதுக்கும் அதிகமான மாகாணங்களை இவர்கள் பேருந்து மூலமாகவும் கால்நடையாகவும் சுற்றிவந்தனர்.

ஆகப் பெரும் வல்லரசாக ஜொலித்துக்கொண்டிருக்கும் சீனாவின் இன்னொரு பக்கத்தைக் கண்டறிவதே இந்தப் பயணத்தின் நோக்கம். சீன விவசாயிகளிடம் உரையாடி அவர்கள் எதிர்கொள்ளும் துயரங்களை, கொடுமைகளை நேரடி அனுபவங்கள் வாயிலாக நூலாசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அதிர்ச்சியூட்டும் பல உண்மைகளை தரவுகளோடு முன்வைக்கும் இந்தப் புத்தகம் உடனடியாக சீனாவில் தடைசெய்யப்பட்டது.

பல விவசாயிகளின் ஆண்டு வருமானம் 270 யுவான். கிட்டத்தட்ட 1400 ரூபாய். என்றால், மாதத்துக்கு, 115 ரூபாய். வெங்காயம் பயிரிடும் ஒரு விவசாயியால் காசு கொடுத்து வெங்காயம் வாங்கமுடியாது. சாப்பிடவே போதுமான காசு இல்லை என்றாலும் கிராம அதிகாரிகளுக்கு பெரும் தொகையை வரியாகச் செலுத்தியாகவேண்டும். மறுத்தால், வரி வசூலிக்கும் குழு சம்பந்தப்பட்ட விவசாயியின் வீட்டுக்கு நுழைந்து, அவர் வசமுள்ள பொருள்களை பறிமுதல் செய்யும். பன்றி முதல் வீட்டுச்சாமான் வரை எதையும் பறித்துச் செல்லும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு. இது தவிர, விவசாயியை அடிக்கலாம். கைது செய்யலாம். சிறையில் தள்ளலாம். அபராதம் விதிக்கலாம்.

காசில்லை விட்டுவிடுங்கள் என்று கதவைப் பூட்டிக்கொண்டால், கதவு உடைத்து திறக்கப்படும். கதவை உடைத்து திறக்கவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியதற்காக சிறப்பு அபராதம் விதிக்கப்படும். மிரட்டி, அடித்து பணத்தைப் பிடுங்கிகொள்வார்கள். பிறகு, இருப்பதிலேயே பெரிய உணவகத்துக்குச் சென்று வரி வசூலிக்கும் குழு சாப்பிடும். பில் கட்டுவது சம்பந்தபட்ட விவசாயியின் கடமை. Ding Zuoming என்னும் விவசாயி, வரி வசூலிப்பவர்களிள் அராஜகத்தை அம்பலப்படுத்தி சீன உயர் அதிகாரிகளுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தொடர்ச்சியாகப் பல புகார்களை அனுப்ப ஆரம்பித்தார். மக்களைத் திரட்டி போராட்டங்கள் நடத்தினார். கோபமடைந்த அதிகாரிகள் டிங்கை கைதுசெய்தனர். சித்திரவதை செய்யப்பட்டு அவர் கொல்லப்பட்டார்.

ஒரு சில கிராம அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பிரச்னையாக இதைக் குறுக்கிவிடமுடியாது. மேல் மட்டத்தின் துணை இல்லாமல் இந்த அதிகாரிகளால் இவ்வாறு இயங்கமுடியாது. அந்த வகையில், விவசாயிகள் மீது மேலாதிக்கம் செலுத்தவேண்டும் என்பது சீனாவின் அரசாங்க கொள்கை. 1990ம் ஆண்டைவிட 2003ம் ஆண்டு தானிய உற்பத்தி அளவு குறைந்துள்ளது. விவசாயிகளின் தனிநபர் வருமானம் 1997ம் ஆண்டைவிட 6 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம், மருத்துவம், கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளின் மதிப்பு அதிகரித்துவிட்டது. கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலான இடைவெளி முன்னெப்போதையும்விட இப்போது அதிகரித்துள்ளது. ஆனால் தற்போதைய சீனா, நகரங்களை மட்டுமே கவனித்துவருகிறது. நகரங்கள் ஜொலித்தால் போதும். நகரங்கள் தொழில்மயமானால் போதும். நகரங்களின் செல்வம் குவிந்தால் போதும். கிராமங்களை ஒடுக்குவதில் தவறில்லை. விவசாயிகளிடம் இருந்து கூடுதல் வரி பெற்றுக்கொள்வதில் தவறேதுமில்லை.

மொத்தம் 93 வகையான வரிகள் விவசாயிகளிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றன. இவை போக, 293 தனிப்பிரிவுகளில் வெவ்வேறு காரணங்களுக்காக உள்ளூர் கிராம அதிகாரிகளுக்கு வரி கட்டவேண்டும். கிராம நிர்வாக அலுவலகம் கட்டுவதற்கு, பள்ளிக்கூடம் கட்டுவதற்கு, சுற்றுச்சூழல் மேம்பட, கட்சி உறுப்பினர்களுக்கு சமூக நல விடுதி உருவாக்க, குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை அமலாக்க என்று பல்வேறு காரணங்கள் பட்டியலிடப்படுகின்றன. உங்கள் வீட்டில் புதிதாக ஒரு பன்றிக்குட்டி பிறந்தால் அதற்கு வரி செலுத்தியாகவேண்டும். காவலாளிகளுக்குச் சீருடைகள், காலுறைகள் வாங்குவதற்கு தனியே வரி வசூலிக்கப்படும். அரசாங்க நிமித்தமாகவும் கட்சி வேலைகளுக்காகவும் உறுப்பினர்கள் பயணம் செய்வதற்கு விவசாயிகளிடம் இருந்து வரி திரட்டப்படுகிறது. ஒரு மாட்டின் உடல் மீதுள்ள முடிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமான வரிகளை நாங்கள் செலுத்திக்கொண்டிருக்கிறோம் என்கிறார்கள் விவசாயிகள்.

புத்தகம் எங்காவது கிடைத்தால் படிக்கவேண்டும்.

June 16, 2009

ஐ.நா.வை நம்பவேண்டாம்!

ஐ.நா. தலையிட்டு இலங்கைத் தமிழர்களுக்கு ஈழம் பெற்றுத்தரும் என்று நம்பியவர்களும், குறைந்தது, மகிந்தா இழைத்த போர்க்குற்றங்களுக்குத் தண்டனையாவது பெற்றுத்தரும் என்று எதிர்பார்த்தவர்களும் கடும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர். ஆனால், ஐ.நா.வின் கடந்த கால வரலாற்றை அறிந்தவர்களுக்கு இதில் பேரதிர்ச்சி எதுவும் இல்லை.

ஐ.நா தொடங்கப்பட்டது 1945ம் ஆண்டில். அதற்கு முன்னால் சர்வதேச நாடுகளின் சங்கம் (லீக் ஆஃப் நேஷன்ஸ்) என்று ஒரு பஞ்சாயத்து தலைவர் இருந்தார். முதல் உலகப்போர் ஏற்படுத்திய பேரழிவுக்குப் பிறகு தோற்றுவிக்கப்பட்ட தலைவர் இவர். இவரிடம் பல பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருந்தன. மனிதர்களின் அடிப்படை உரிமைகள் காக்கப்படவேண்டும். குறிப்பாக, பெண்களின் உரிமை, வெள்ளையர் அல்லாதவர்களின் உரிமை, போர்வீரர்களின் உரிமை. நாடுகள் தங்கள் இஷ்டத்துக்கு ஆயுதங்கள் தயாரித்துக்கொள்வதை தடுக்கவேண்டும். நீயா நானா என்று நாடுகள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும். எங்கே என்ன பிரச்னை வெடித்தாலும் முதல் ஆளாக போய் பார்த்து பேசி, அமைதி வழியில் சுமூகமான தீர்வு காணவேண்டும். சுருக்கமாகச் சொல்வதானால், மானுட குலத்தின் மேன்மையை கட்டிக்காக்கவேண்டும்.

கட்டவும் இல்லை காக்கவும் இல்லை லீக். எஞ்சியிருந்த கால் வாசி மீசையைத் தடவியபடி ஹிட்லர் ஐரோப்பாவை கபளீகரம் செய்து தன் பாக்கெட்டில் செருகிக்கொண்டபோது, லீக் செய்வதறியாது திகைத்து நின்றது. பிறகு சுதாரித்துக்கொண்டு, இது முறையல்ல, உலக அமைதியை நீங்கள் கெடுப்பது போல் தெரிகிறது, போரை கைவிடுங்கள் என்று சட்டப்புத்தகத்தில் இருந்து சில ஆர்டிகிளை இடம்சுட்டிப்பொருள் விளக்கியது. சர்தான் போப்பா என்று லீகை ஒதுக்கித்தள்ளிவிட்டு மூர்க்கத்துடன் முன்னேறினார் ஹிட்லர். லீக் திருதிருவென்று விழித்துக்கொண்டிருந்தபோதே இரண்டாம் உலகப் போர் நடந்து முடிந்துவிட்டது.

பஞ்சாயத்து தலைவரின் பணியும் முடிவுக்கு வந்தது. இனி லீக் தேவையில்லை என்று ஐரோப்பிய பெரும்தலைகள் ஒன்றுசேர்ந்து லீகை கருணைக்கொலை செய்தன. ஹிட்லரைப் போன்ற அடாவடிகளோடு அன்பொழுக பேசிக்கொண்டிருக்கக்கூடாது காதைத் திருகி நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவே, லீகைவிட சக்திவாய்ந்த ஒரு தலைமை தேவை. இந்த எண்ணத்துடன் அக்டோபர் 25, 1945 அன்று ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. உருவாக்கியவர்கள் இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற நேச நாடுகளின் அணியைச் சேர்ந்த அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ், சோவியத் யூனியன், சீனக் குடியரசு ஆகிய நாடுகள். யாரைச் சேர்க்கலாம், என்னென்ன விதிமுறைகள், சட்டத்திட்டங்கள் என்னென்ன போன்ற விஷயங்களை விவாதித்து ஐ.நாவுக்கு ஒரு வடிவம் கொடுத்தார்கள்.

கடமைகள் வரையறுக்கப்பட்டன. இன்னொரு யுத்தத்தை தாங்கும் திராணி யாரிடமும் இல்லை. ஆகவே, இனியொரு போர் கூடவேகூடாது. உலக நாடுகளுக்கு இடையே, வேறுபட்ட சமூகங்களுக்கு இடையே ஒற்றுமை பூக்கவேண்டும். ஒரு சர்வாதிகார நாடு தன் மக்களை ஒடுக்குவதை, அழிப்பதை அனுமதிக்கக்கூடாது. ஏழைமையில் இயற்கை சீற்றத்தில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு புணரமைப்பு.

ஐக்கிய நாடுகள் என்னும் பெயரை முதலில் பயன்படுத்தியவர்கள் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட். தொடக்கத்தில் ஐம்பது நாடுகள் உறுப்பினர்களாக இருந்தனர். இன்று 192 நாடுகள். மொத்தம் ஐந்து பிரிவுகளை ஐ.நா. உள்ளடக்கியுள்ளது. விஷயங்களை விவாதித்து முடிவெடுக்க ஜெனரல் அஸெம்பிளி. உலக அமைதி பேண பாதுகாப்பு கவுன்சில். இதில் மொத்தம் 15 உறுப்பு நாடுகள் உள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகிய ஐந்தும் நிரந்தர உறுப்பினர்கள். எந்த தீர்மானத்தையும் தடுக்கும் வீட்டோ அதிகாரம் இவர்களுக்கு உண்டு. மூன்றாவதாக, பொருளாதார, சமூக நல கவுன்சில். நான்காவது, செயலகம் (செகரடேரியேட்). ஐ.நா.வுக்குத் தேவைப்படும் புள்ளிவிவரங்களை, அறிக்கைகளைத் தயாரித்து அளிக்கும் பிரிவு. ஐந்தாவதாக, சர்வதேச நீதிமன்றம். நாடுகளுக்கிடையிலான சச்சரவுகளை சட்ட ஆலோசனைகள் மூலமாகத் தீர்த்து வைக்கும் பிரிவு.

இவைபோக, ஐ.நா.வின் அதிகாரபூர்வ அமைப்புகள் பல உள்ளன. ஒரு நாட்டில் நடைபெறும் போர்க்குற்றங்களை விசாரித்து தண்டனை வழங்க, சர்வதேச கிரிமினல் நீதிமன்றம். இது பாதுகாப்பு கவுன்சிலின் பரிந்துரையை ஏற்று செயல்படும். இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பான வழக்குகளை சர்வதேச நீதிமன்றம் எடுத்துக்கொள்ளலாம். பிறகு, உலகச் சுகாதார மையம், ஐக்கிய நாடுகளின் குழந்தைகளுக்கான நிதியகம் (யுனிசெஃப்), காலனி ஆதிக்கத்தை விடுவிக்கும் கமிட்டி. அமைதியை விரும்பும் நாடுகளுக்கு மட்டுமே உறுப்பினர் அட்டை. சேர்க்கலாமா வேண்டாமா என்பதை பாதுகாப்பு கவுன்சில் ஆராய்ந்து பரிந்துரைக்கும். புது செட்டப்பில் பக்காவான ஒரு பஞ்சாயத்து தலைவர் தயார்.

ஒரு நல்ல நாளில் வேலையை ஆரம்பித்தது ஐ.நா. சில வாரங்கள்தான் கழிந்திருக்கும். லிட்டில் பாய், ஃபேட் மேன் என்னும் இரு அணுகுண்டுகளைத் தயாரித்து ஜப்பான் மீது வீசியது அமெரிக்கா. ஐயோ என்று மக்களோடு மக்களாகச் சேர்ந்து ஐ.நா.வும் அலறியது. மேலதிகம் எதுவும் செய்யவில்லை. முடியவில்லை. ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா நிரந்தர உறுப்பினர். ஐந்து வல்லரசுகள் கொண்ட கூட்டணி அது என்றாலும் பிற உறுப்பினர்களைவிட அமெரிக்கா பொருளாதார ரீதியில் முன்னணியில் இருந்தது. ஆகவே, தவிர்க்கமுடியாதபடி, ஐ.நா,வில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக அமெரிக்கா மாறிப்போனது. வாய்மூடி அமைதியாக இருப்பதைத் தவிர ஐ.நா.வுக்கு வேறு வழி இருக்கவில்லை.

ஐ.நா. ஆரம்பிக்கப்பட்ட சில வாரங்களிலேயே ஐ.நா.வின் தோல்வியும் ஆரம்பமாகிவிட்டது. வால்பிடித்ததுபோல் மற்ற நாடுகள் அணுகுண்டு பரிசோதனைகளில் ஒன்றன்பின்ஒன்றாக இறங்கியபோது, ஐ.நா. மேற்கொண்ட அதிகபட்ச நடவடிக்கை அறிக்கைக் கண்டனங்களை அச்சடித்து அனுப்பியதுதான். 1947 தொடங்கி சோவியத் யூனியனுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் மத்தியில் பல கட்டங்களாகப் பனிப்போர் மூண்டபோது, ஐ.நா.வால் இடைமறித்து தடுக்கமுடியவில்லை. எதற்கும் லாயக்கற்ற ஓர் அமைப்பு இது என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ரிச்சர்ட் நிக்ஸன் வெளிப்படையாக ஐ.நா.வை குறைகூறினார்.

அமைப்பு ரீதியாகவும் ஐ.நா. பலகீனமடைய ஆரம்பித்தது. பாதுகாப்பு கவுன்சில் ஒன்றுசேர்ந்து பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று ஐ.நா.வின் அரசியல் சாசனம். அப்படித்தான் ஆரம்பத்தில் தேர்ந்தெடுத்தார்கள். பிறகு ஒருநாள் இந்த விதிமுறையை ஐவர் குழு உடைத்தது. எதற்கு வீண் விவாதம், வெள்ளைப்பூண்டு? பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் நாங்கள். நாங்களே கூடிப்பேசி முடிவெடுக்கிறோம். அதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும். ஐவரில் மூவர் ஒப்புதல் கொடுத்துவிட்டால், தலைவர் ரெடி.

பனிப்போரின் முடிவில் 1991ல் சோவியத் யூனியன் சிதறியபோது, எஞ்சியிருந்த ஒரே பெரும் வல்லரசான அமெரிக்காவின் பின்னால் பதுங்கிகொண்டது ஐ.நா. உலக விஷயங்களை தன்னிச்சையாக ஆராய்ந்து, விவாதித்து, தீர்வு காணும் வழக்கம் ஒழிந்துபோனது. விவாதங்கள் என்னும் பெயரில் பாதுகாப்பு கவுன்சிலில் குத்துச்சண்டைகளே அதிகம் நடைபெற்றன. நீ, நான் என்று நாடுகள் தங்களுக்குள் போட்டிப் போட்டுக்கொண்டு ஆயுத பலத்தைக் கூட்டிக்கொண்டன.

1994ல் ருவாண்டாவில் மூண்ட இனமோதலில் பத்து லட்சம் பேர் கொல்லப்பட்டனர். 1998 தொடங்கி 2002 வரை காங்கோவில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் 50 லட்சம் மக்களை பலிவாங்கியது. சூடான், டாஃபர் இனப்படுகொலை பல ஆயிரக்கணக்கான மக்களை சீரழித்தது. இஸ்ரேல் பாலஸ்தீன் மீது தொடர் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்திகொண்டிருக்கிறது. காஸா முனை விட்டுவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. மார்ச் 2003ல் சர்வதேச தீவிரவாதத்துக்கு எஜதிரான போரின் ஒரு பாகமாக ஜார்ஜ் புஷ் ஆப்கனிஸ்தானையும் இராக்கையும் ஆக்கிரமித்தார். சதாம் ஹுசைன் தூக்கிலிடப்பட்டார். இராக் இன்று வரை விடுவிக்கப்படவில்லை.

ஐ.நா. என்ன செய்தது? என்ன செய்துகொண்டிருக்கிறது? எண்ணற்ற விவாதங்களை நிகழ்த்தினார்கள். டன் கணக்கில் தீர்மானங்கள் கொண்டு வந்தார்கள். குண்டு விழ விழ கண்டனங்களையும் அனுப்பிக்கொண்டே இருந்தார்கள். பெரும் செலவில் நிறைய மாநாடுகள் நடத்தப்பட்டன. ஆக்கிரமித்த நாடு, ஆக்கிரமிக்கப்பட்ட நாடு. இரு தரப்பினரையும் சந்தித்து கைகுலுக்கிக்கொண்டார்கள். தேநீர் அருந்தினார்கள். ஆக்கிரமிப்பாளர்களுக்கு கொஞ்சம் அட்வைஸ். இனி இதுபோல் செய்யாதீர்கள். சீரழிந்த மக்களுக்கு ஏதாவது பார்த்துப் போட்டு செய்துகொடுங்கள். வரட்டுமா?

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் வழியே உணவுப் பொட்டலங்கள். காயமடைந்தவர்களுக்கு ஆம்புலன்ஸ் வண்டிகள். நிலைமை முற்றினால், அமைதி காக்கும் படைகள். இவ்வளவுதான் செய்யமுடிந்திருக்கிறது. இவ்வளவுதான் செய்யமுடியும். ஐ.நா.வால் எந்தவொரு போரையும், எந்தவொரு இனப்படுகொலையையும், எந்தவொரு ஆக்கிரமிப்பு யுத்தத்தையும் தடுத்து நிறுத்தமுடியவில்லை என்பதுதான் நிஜம்.

நிலைமை இவ்வாறிருக்க, மகிந்த ராஜபக்ஷே மீது ஐ.நா. நடவடிக்கை எடுக்கும் என்று எப்படி நாம் எதிர்பார்க்கலாம்? ஐ.நாவில் உறுப்பினராக இருக்கும் ஒவ்வொரு நாடும் தன் தோட்டத்தில் ஒரு கல்லறையை கட்டி பராமரித்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாட்டின் மீதும் ரத்தக்கறை படிந்துள்ளது. இலங்கை மட்டுமல்ல அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, சீனா, ரஷ்யா, இஸ்ரேல் என்று அத்தனை நாடுகளும் போர்க்குற்றங்கள் செய்திருக்கின்றன. இலங்கை குற்றவாளி என்றால் இவர்களும் குற்றவாளிகளே. எனவே, இவர்கள் யாரும் இலங்கையை விட்டுக்கொடுக்கப்போவதில்லை. எனவே, வழக்கம்போல், ஐ.நா. அமைதி காக்கிறது.

(ஆனந்த விகடனில் வெளிவந்த என் கட்டுரை)

June 4, 2009

சிங்கள இனவெறியின் வேர்கள்

சிங்களர்கள் தமிழர்களை மட்டுமே தங்கள் எதிரிகளாகக் கொண்டனர் என்று நினைப்பது தவறு. கிறிஸ்தவர்களுக்கு எதிராக அனகாரிக தர்மபாலா 1902ம் ஆண்டு மேற்கொண்ட பிரசாரத்தின் ஒரு பகுதி இங்கே.

'காட்டுமிராண்டிக் கொள்ளையோரால் அழிவு உண்டாகும் முன்னர் இந்த அழகான இலங்கைத்தீவு ஆரிய சிங்களவர்களால் ஒரு சொர்க்கமாக ஆக்கப்பட்டிருந்தது. கிறிஸ்தவரும் பலதெய்வ வணக்கமும் உயிர்க்கொலை, களவு, விபசாரம், பொய், மதுப்பழக்கம் யாவற்றுக்கும் காரணமாக இருந்தது. பண்டைப் பெருமைமிக்க, நாகரிகமடைந்த சிங்கள மக்கள் பிரித்தானிய நிர்வாகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சதித்திட்டங்களால் வீழ்ச்சியடைகின்றனர். உயர் அதிகாரிகள் தேயிலைச் செய்கைக்காகக் காடுகளை அழிக்கின்றனர். அபின், கஞ்சா, விஸ்கி, சாராயம் போன்ற மது சார்ந்த நஞ்சுகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு கிராமத்திலும் சாராயக் கடைகளையும் சிகையலங்கார நிலையங்களையும் திறந்துள்ளனர். பழைய கைத்தொழில்களை அழித்து மக்களைச் சோம்பலாக்கிவிட்டனர்.'

கவனிக்கவும். தர்மபாலாவின் பிரசாரப் போர் பிரிட்டனின் காலனியாதிக்கத்துக்கு எதிரானது அல்ல. கிறிஸ்தவர்களுக்கு எதிரானது மட்டுமே. பிரிட்டனின் அநீதியான ஆக்கிரமிப்பை அவர் எதிர்க்கவில்லை. தன் நாடு அடிமைப்படுத்தப்பட்டாலும் பரவாயில்லை, தன் இனம் பாதுகாக்கப்படவேண்டும் என்று மட்டுமே தர்மபாலா விரும்பினார். என் இனம், என் சமயம், என் மொழி, என் மக்கள்.

தமிழர்கள், கிறிஸ்தவர்களுக்கு அடுத்தபடியாக முஸ்லீம்கள். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் நடைபெற்ற அரேபியர்களின் வரவு இஸ்லாத்தை இலங்கையில் செழிக்கச்செய்தது. பதினைந்தாம் நூற்றாண்டில் அரேபிய வர்த்தகர்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் இலங்கையிலும் தொழில்துறையில் முன்னணியில் இருந்தனர். பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜாவா, மலேஷிய முஸ்லீம்களை டச்சு, பிரிட்டன் அரசு பெருமளவில் இலங்கைக்கு அழைத்து வந்தது. பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்து முஸ்லீம்கள் இலங்கைக்குக் குடிபெயர்ந்தனர். பாகிஸ்தானிய மற்றும் தென்னிந்திய முஸ்லீம்களும் இதில் அடங்குவர்.

1915ம் ஆண்டு தர்மபாலா இப்படி எழுதினார்.

'அந்நியரான முகமதியர் ஷைலாக்கின் வழிமுறைகளால் யூதர்கள் போன்று செல்வந்தராக மாறினர். 2358 வருடங்களாக அந்நிய முற்றுகைகளில் இருந்து நாட்டைக் காப்பதற்காக ரத்தத்தை ஆறு போல் பெருக்கிய மூதாதையரைக் கொண்ட மண்ணின் மைந்தரான சிங்களவர் பிரித்தானியரின் கண்களில் நாடோடிகளாகத் தெரிகின்றனர். தென்னிந்திய முகமதியர் இலங்கைக்கு வந்து, வியாபாரத்தில் எத்தகைய அனுபவமுமற்ற, உதாசீனம் செய்யப்பட்ட கிராமவாசியைக் காண்கிறான். இதன் விளைவு முகமதியன் முன்னேறுகிறான். மண்ணின் மைந்தன் பின்தள்ளப்படுகிறான்.'

(ஷேக்ஸ்பியரின் தி மெர்ச்சண்ட் ஆஃப் வெனிஸில் வரும் கதாபாத்திரம் ஷைலாக். சதையை அடமானாகக் கேட்டுப்பெற்று கடன் கொடுத்த யூதர்).

அதே 1915ம் ஆண்டு முஸ்லீம்களுக்கு எதிரான முதல் பெரும் கலவரம் வெடித்தது. நூற்றுக்கணக்கானோர் இறந்துபோயினர். பிரிட்டன் துருப்புகள் இடைமறித்து கலகத்தை முடிவுக்குக் கொண்டு வந்தன. முஸ்லீம்களுக்கு எதிராக இனவெறியைத் தூண்டிப் பேசிய சிங்கள அரசியல்வாதிகள் மக்களிடையே செல்வாக்குப் பெற்றனர்.

சிங்கள இனம் ஏன் உசத்தியானது என்பதை விவரிக்கும் 1980ம் ஆண்டு பிரசுரம் ஒன்று கீழே. Kauda Kotiya? என்று தலைப்பிடப்பட்ட பிரசுரம் அது. இதன் பொருள், புலி யார்? இந்தப் பிரசுரத்தின் முழுமையான வடிவத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

'சிங்கள இனம் 2500 வருடங்களுக்கு மேற்பட்ட சான்றாதாரமுள்ள தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. இலங்கைச் சிங்களவரின் வரலாற்றைவிடப் பழமையான வரலாறு வேறொன்றுமில்லை. இலங்கை சிங்களவருக்குரியது என்ற கருத்து வெறும் வாய் மொழி மரபாக வழங்கும் ஐதீகங்களையோ கட்டுக்கதைகளையோ அடிப்படையாகக் கொண்டதல்ல. பண்டைய குகைச் சாசனங்கள், மாபெரும் பௌத்த தூபிகள், விகாரைகள், பாறைகளில் செதுக்கப்பட்ட புத்த பெருமானின் உருவச் சிலைகள், மிகப் பெரிய குளங்கள், நீர்ப்பாய்ச்சல் முறைமைகள் யாவும் சிங்கள இனம் மற்றும் சிங்கள தேசத்தினரின் பாரம்பரியத்துக்கு அசைக்கமுடியாத சான்றுகளாகும்.'

'..இந்தச் சிங்களரல்லாத சிறுபான்மையினர், தமது சொந்த மண்ணின் மீது சிங்கள மக்களுக்குரிய உரிமையை மிகவும் அநீதியான முறையில் அழிக்க முயல்வது மாத்திரமல்லாது ஐயமற்ற அப்பாவிச் சிங்கள மக்களுக்கும் வேறு பல அநீதிகளை இழைத்து வருகின்றனர்.'

இதன் அர்த்தம், பௌத்தம் என்றால் சிங்களம். சிங்களம் என்றால் பௌத்தம். சிங்களர்களின் தொன்மைக்கு ஆதாரம், பௌத்தத்தின் தொன்மை. சிங்கள வரலாறு என்பது பௌத்தத்தின் வரலாறு. சிங்களர்களின் கலாசாரம் என்பது பௌத்தத்தின் கலாசாரம். தொன்மையான வரலாறு கொண்டவர்கள் ஆதலால் சிங்களர்கள் இலங்கையின் பூர்வகுடிகள். பூர்வகுடிகள் ஆதலால் இலங்கை சிங்களர்களுக்கு மட்டுமே சொந்தமானது.

(ஆதாரம் : இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள், குமாரி ஜெயவர்த்தனா)