Chen Guidi, Wu Chuntao இருவரும் இணைந்து எழுதியிருக்கும் Survey of Chinese Peasants என்னும் புத்தகம் குறித்த விமரிசனம் நியூ லெஃப்ட் ரிவ்யூவில் வெளிவந்துள்ளது. பழைய கட்டுரை. எனக்கு இப்போதுதான் காணக்கிடைத்தது. நூலாசிரியர்கள் இருவரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அன்ஹுய், ஹுனான் மாகாணாவாசிகள். இருவருமே எழுத்தாளர்கள். தம்பதிகள். அக்டோபர் 1, 2000 அன்று அன்ஹுயின் தலைநகரமான Hefei என்னும் பகுதியில் இருந்து இவர்கள் தங்கள் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தனர். பெய்ஜிங்கில் இருந்து தெற்கே 500 மைல் தொலைவில் உள்ள ஒரு பகுதி இது. இங்கிருந்து தொடங்கி அன்ஹுயில் உள்ள ஐம்பதுக்கும் அதிகமான மாகாணங்களை இவர்கள் பேருந்து மூலமாகவும் கால்நடையாகவும் சுற்றிவந்தனர்.
ஆகப் பெரும் வல்லரசாக ஜொலித்துக்கொண்டிருக்கும் சீனாவின் இன்னொரு பக்கத்தைக் கண்டறிவதே இந்தப் பயணத்தின் நோக்கம். சீன விவசாயிகளிடம் உரையாடி அவர்கள் எதிர்கொள்ளும் துயரங்களை, கொடுமைகளை நேரடி அனுபவங்கள் வாயிலாக நூலாசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அதிர்ச்சியூட்டும் பல உண்மைகளை தரவுகளோடு முன்வைக்கும் இந்தப் புத்தகம் உடனடியாக சீனாவில் தடைசெய்யப்பட்டது.
பல விவசாயிகளின் ஆண்டு வருமானம் 270 யுவான். கிட்டத்தட்ட 1400 ரூபாய். என்றால், மாதத்துக்கு, 115 ரூபாய். வெங்காயம் பயிரிடும் ஒரு விவசாயியால் காசு கொடுத்து வெங்காயம் வாங்கமுடியாது. சாப்பிடவே போதுமான காசு இல்லை என்றாலும் கிராம அதிகாரிகளுக்கு பெரும் தொகையை வரியாகச் செலுத்தியாகவேண்டும். மறுத்தால், வரி வசூலிக்கும் குழு சம்பந்தப்பட்ட விவசாயியின் வீட்டுக்கு நுழைந்து, அவர் வசமுள்ள பொருள்களை பறிமுதல் செய்யும். பன்றி முதல் வீட்டுச்சாமான் வரை எதையும் பறித்துச் செல்லும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு. இது தவிர, விவசாயியை அடிக்கலாம். கைது செய்யலாம். சிறையில் தள்ளலாம். அபராதம் விதிக்கலாம்.
காசில்லை விட்டுவிடுங்கள் என்று கதவைப் பூட்டிக்கொண்டால், கதவு உடைத்து திறக்கப்படும். கதவை உடைத்து திறக்கவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியதற்காக சிறப்பு அபராதம் விதிக்கப்படும். மிரட்டி, அடித்து பணத்தைப் பிடுங்கிகொள்வார்கள். பிறகு, இருப்பதிலேயே பெரிய உணவகத்துக்குச் சென்று வரி வசூலிக்கும் குழு சாப்பிடும். பில் கட்டுவது சம்பந்தபட்ட விவசாயியின் கடமை. Ding Zuoming என்னும் விவசாயி, வரி வசூலிப்பவர்களிள் அராஜகத்தை அம்பலப்படுத்தி சீன உயர் அதிகாரிகளுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தொடர்ச்சியாகப் பல புகார்களை அனுப்ப ஆரம்பித்தார். மக்களைத் திரட்டி போராட்டங்கள் நடத்தினார். கோபமடைந்த அதிகாரிகள் டிங்கை கைதுசெய்தனர். சித்திரவதை செய்யப்பட்டு அவர் கொல்லப்பட்டார்.
ஒரு சில கிராம அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பிரச்னையாக இதைக் குறுக்கிவிடமுடியாது. மேல் மட்டத்தின் துணை இல்லாமல் இந்த அதிகாரிகளால் இவ்வாறு இயங்கமுடியாது. அந்த வகையில், விவசாயிகள் மீது மேலாதிக்கம் செலுத்தவேண்டும் என்பது சீனாவின் அரசாங்க கொள்கை. 1990ம் ஆண்டைவிட 2003ம் ஆண்டு தானிய உற்பத்தி அளவு குறைந்துள்ளது. விவசாயிகளின் தனிநபர் வருமானம் 1997ம் ஆண்டைவிட 6 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம், மருத்துவம், கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளின் மதிப்பு அதிகரித்துவிட்டது. கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலான இடைவெளி முன்னெப்போதையும்விட இப்போது அதிகரித்துள்ளது. ஆனால் தற்போதைய சீனா, நகரங்களை மட்டுமே கவனித்துவருகிறது. நகரங்கள் ஜொலித்தால் போதும். நகரங்கள் தொழில்மயமானால் போதும். நகரங்களின் செல்வம் குவிந்தால் போதும். கிராமங்களை ஒடுக்குவதில் தவறில்லை. விவசாயிகளிடம் இருந்து கூடுதல் வரி பெற்றுக்கொள்வதில் தவறேதுமில்லை.
மொத்தம் 93 வகையான வரிகள் விவசாயிகளிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றன. இவை போக, 293 தனிப்பிரிவுகளில் வெவ்வேறு காரணங்களுக்காக உள்ளூர் கிராம அதிகாரிகளுக்கு வரி கட்டவேண்டும். கிராம நிர்வாக அலுவலகம் கட்டுவதற்கு, பள்ளிக்கூடம் கட்டுவதற்கு, சுற்றுச்சூழல் மேம்பட, கட்சி உறுப்பினர்களுக்கு சமூக நல விடுதி உருவாக்க, குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை அமலாக்க என்று பல்வேறு காரணங்கள் பட்டியலிடப்படுகின்றன. உங்கள் வீட்டில் புதிதாக ஒரு பன்றிக்குட்டி பிறந்தால் அதற்கு வரி செலுத்தியாகவேண்டும். காவலாளிகளுக்குச் சீருடைகள், காலுறைகள் வாங்குவதற்கு தனியே வரி வசூலிக்கப்படும். அரசாங்க நிமித்தமாகவும் கட்சி வேலைகளுக்காகவும் உறுப்பினர்கள் பயணம் செய்வதற்கு விவசாயிகளிடம் இருந்து வரி திரட்டப்படுகிறது. ஒரு மாட்டின் உடல் மீதுள்ள முடிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமான வரிகளை நாங்கள் செலுத்திக்கொண்டிருக்கிறோம் என்கிறார்கள் விவசாயிகள்.
புத்தகம் எங்காவது கிடைத்தால் படிக்கவேண்டும்.
9 comments:
அதிர்ச்சி ஊட்டும் உண்மைகள்...பகிர்விற்கு மிக்க நன்றிகள்..
நல்ல பகிர்வு.... முடிந்தால் இது போன்ற புத்தகங்களை தமிழாக்கம் செய்து வெளியிடவும்....
சீனா மாறிவிட்டதாக சொல்லிக்கொள்பவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும்.சீன விவசாயிகளுக்கு தமிழக விவசாயியின் அனுதாபங்கள்.
பதி : Pallavi Aiyar சீனா குறித்து எழுதிய Smoke and Mirrors என்னும் புத்தகத்தின் தமிழாக்கம், சீனா: விலகும் திரை என்னும் பெயரில் கிழக்கு வெளியீடாக வெளிவரவிருக்கிறது. இந்தப் புத்தகம் குறித்த என் பார்வையை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
வேறு வழியே இல்லை. பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறேன். எனக்கு மொத்தமாய் திருப்தி அளிக்கும் அத்தனை செய்திகளுக்குமாய். உழைப்பும் தேர்ந்தெடுக்கும் விஷயங்களுமாய் ஆச்சரியத்தின் உச்சமாய்.
உங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் என்பது கோடிகளில் (சமீப சாதனையாக விளம்பரங்கள் மூலமாகக் கூட) வருட ஓப்பந்தத்தில் ( பெரியாராக வாழ்ந்தவர் ) வாழும் நடிகர் தன்னுடைய ஒவ்வொரு மணித்துளியை உங்கள் பிடல் காஸ்ட்ரோ படித்து சிலாகித்து சொன்னது?
வேறு என்ன வேண்டும்? ஆனாலும் உங்கள் உழைப்பும் வார்த்தைகளும் அசாத்தியமானது.
மேற்கொண்டு போனஸ் சந்தோஷம் உங்களைப் போன்றவர்கள் அளிக்கும் பதிலுக்கும்.
உங்கள் புதிய வௌியீடுகள் மற்றும் புதிய பதிவுகளை மின் அஞ்சல் மூலமாக தெரிவிக்க வாய்ப்பு இருந்தால் சந்தோஷப்படும்,
நட்புடன்
ஜோதிஜி
தேவியர் இல்லம். திருப்பூர்.
http://texlords.wordpress.com
பகிர்வுக்கு நன்றி. இந்த புத்தகம் எங்கு கிடைக்கும் என்று தேடியதில் பின்வரும் தளத்தில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
Flipkart Guidi chen
- மணிகண்டன்
இணைப்பு கொடுத்தற்கு மிக்க நன்றி மணிகண்டன். Will The Boat Sink The Water? The Life Of China's Peasants. இன்றைய சீனா குறித்து தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இந்தப் புத்தகம் நிச்சயம் உதவும்.
ஜோதிஜி : உங்கள் உற்சாகமான வாழ்த்துக்கு நன்றி. புதிய வெளியீடுகள் குறித்து நிச்சயம் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். இரண்டாம் உலகப் போரை அடுத்து முதல் உலகப் போர் குறித்து வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
ஜோதிஜி :
// உங்கள் புதிய வௌியீடுகள் மற்றும் புதிய பதிவுகளை மின் அஞ்சல் மூலமாக தெரிவிக்க வாய்ப்பு இருந்தால் சந்தோஷப்படும் //
புதிய பகிர்வுகளை மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துவது எப்படி?
Post a Comment