October 9, 2009
மாவோயிஸ்டுகள் யார்?
Sudeep Chakravarti எழுதிய Red Sun புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்து, நூறு பக்கங்கள் கடப்பதற்குள் மாவோயிஸ்டுகள் குறித்து சூடான தலைப்புச் செய்திகள் வெளிவர ஆரம்பித்துவிட்டன. நக்ஸலைட் பீதி. தாலிபன் பாணியில் தலையை வெட்டிக் கொலை. இந்தியாவின் மிகப் பெரும் பயங்கரவாத அச்சுறுத்தல். இன்னபிற. மினுக் மினுக்கென்று மின்னும் சிவப்பு வட்டங்களை இந்திய வரைபடத்தில் ஒட்டவைத்து, 'நக்ஸல் பயங்கரத்தை' விவாதித்துக்கொண்டிருக்கிறது மீடியா.
ரெட் சன் ஒரு பயண நூல். இந்தியாவில் நக்ஸலிஸம் பரவியிருக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று, பலருடன் (அரசாங்க அதிகாரிகள், மாவோயிஸ்டுகள், மக்கள், காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், சல்வா ஜுடும்) பேசி, தகவல்கள் சேகரித்து இந்நூலை எழுதியிருக்கிறார். தன் புத்தகத்தை சுதீப் இவ்வாறு அறிமுகம் செய்துவைக்கிறார். 'இந்தியாவில் மாவோயிஸம் என்னும் தலைப்பில் வரலாறு எழுதும் எண்ணம் எனக்கில்லை. நான் அதற்குத் தகுதியானவன் அல்ல. இயக்கத்தின் வரலாறு, அதைச் சார்ந்தவர்களால் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. இனியும், எழுதப்படும்.'
முன்னுரையில் இருந்து ஒரு பகுதி.
'நம் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல், மாவோயிஸம் அல்ல. ஏழைமை, செயலற்ற அரசாங்கம், அநீதி, ஊழல் ஆகியவைதான். மூன்றில் ஒரு பகுதியில் மாவோயிஸ்டுகள் பரவியிருப்பது, நம் தோல்விகளைத்தான் பிரதிபலிக்கிறது. சரியாக நடத்தப்படாதவர்கள், வாழ்வாதாரம் மறுக்கப்பட்டவர்கள், அநீதி இழைக்கப்பட்டவர்கள் ஆகியோரே மாவேயிஸ்ட் இயக்கத்தில் இடம்பெற்றிருக்கிறார்கள். இந்த யதார்த்தங்களை மாவேயிஸ்ட் தலைவர்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள். எனவே, பலாத்கரத்தைப் பயன்படுத்தி இந்தச் சூழலை மாற்றலாம் என்று நம்புகிறார்கள்.'
வேறொரு இடத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். 'இந்தப் புத்தகத்தில், இடது சாரி போராளிகளை, எந்தவொரு இடத்திலும் 'தொந்தரவு' என்றோ 'சாபம்' என்றோ 'பரவும் கிருமிகள்' என்றோ குறிப்பிடமாட்டேன். அவ்வாறு குறிப்பிட்டாகவேண்டும் என்றால், பெரும்பாலான இந்திய அரசாங்க அமைப்புகளையும் பல அதிகாரிகளையும் இதே பெயர்களில் அழைக்கவேண்டியிருக்கும்.'
இந்தியாவில் நக்சலிஸம் பரவியிருக்கும் பகுதிகள் பிற்படுத்தப்பட்ட, வளர்ச்சி குன்றிய பகுதிகளாக நீடிப்பது நிச்சயம் தற்செயலானதல்ல. இதனை இந்திய அரசாங்கமும் ஒப்புக்கொள்கிறது. மாவோயிஸத்தை முற்றிலுமாக வெறுத்தொதுக்கும் காவல்துறை அதிகாரிகள்கூட சில விஷயங்களை வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறார்கள். ஆம், அவர்களிடம் மக்கள் பலம் உள்ளது. ஏதுமற்ற ஏழைகள், குடியானவர்கள், விவசாயிகள், பழங்குடிகள், இளைஞர்கள், படித்தவர்கள் என்று பலரும் நக்ஸலைட்டுகளை ஆதரிக்கிறார்கள். அவர்களை வெற்றிகொள்வது சுலபமான காரியமல்ல. நக்சலிஸம், சட்ட ஒழுங்கு பிரச்னையல்ல.
சுதீப் சந்திக்கும் ஓர் அதிகாரியின் கருத்து இது. நக்சலிஸத்தை மிகப் பெரிய அச்சுறுத்தலாகக் காட்டுவதை இந்தியா விரும்பவில்லை. ஆமாம் அது ஒரு பிரச்னைதான் என்று மேம்போக்காக குறிப்பிடவே அரசு விரும்புகிறது. நக்சலிஸத்தைப் பற்றி அதிகம் விவாதிக்க ஆரம்பித்தால், அதிகம் கவலைப்பட ஆரம்பித்தால், பிரச்னையின் பின்னணியை ஆராயவேண்டியிருக்கும். ஒரிஸ்ஸா, மேற்கு வங்கம், பிகார், ஆந்திரா, ஜார்க்கண்ட் என்று இந்தியாவின் வளர்ச்சியற்ற பகுதிகள் குறித்து சிந்திக்கவேண்டியிருக்கும். அதை இந்தியா விரும்பாது. அதே சமயம், காஷ்மீர் குறித்தும் பாகிஸ்தான் குறித்தும் இந்தியா கவனம் செலுத்தும். காஷ்மீர் தீவிரவாதம் குறித்து உரத்து விவாதங்கள் நடத்தும். வெளி எதிரிகள் இருந்தால் பரவாயில்லை. உள் எதிரிகளை அங்கீகரிக்கக்கூடாது.
மாவோயிஸ்டுகள் யார்? சுதீப் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். 'மாவோயிஸ்டுகள் தேசபக்தி கொண்டவர்கள். அவர்களே இதனை ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்கள் தனி தேசம் கோரவில்லை. அது ஏற்கெனவே அவர்களிடம் உள்ளது. அவர்கள் நினைத்தபடி அது இல்லை என்பதுதான் விஷயம்.'
தற்போதைய மீடியா செய்திகளைப் பார்க்கும்போது, பெரிய அளவில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் நடவடிக்கையை இந்தியா எடுத்து வருவதை யூகிக்க முடிகிறது.
புத்தகத்தை முழுவதுமாகப் படித்த பிறகு, மேலதிகம் எழுதுகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
மாவோயிசம் என்ன என்றால் என்ன என்பதை விளக்கினீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.
நல்ல பதிவு மருதன்... சொரணையற்ற அரசும், அதன் எந்திரங்களும் என்றுதான் கண்விழிக்குமோ?
கரண் தப்பாருடனான அருந்ததிராயின் பேட்டி பார்த்தீங்களா? இதைப் பற்றி அவரும் பேசி இருக்கிறார். இங்கே
http://bit.ly/3ijAYo
"ஒரிஸ்ஸா, மேற்கு வங்கம், பிகார், ஆந்திரா, ஜார்க்கண்ட் என்று இந்தியாவின் வளர்ச்சியற்ற பகுதிகள் குறித்து சிந்திக்கவேண்டியிருக்கும்."
- வளர்ச்சியற்ற பகுதிகளை பற்றி ஏன் சிந்திக்கத் தயங்குகிறார்கள். அதுவும் இந்தியாதானே?
"ஒரிஸ்ஸா, மேற்கு வங்கம், பிகார், ஆந்திரா, ஜார்க்கண்ட் என்று இந்தியாவின் வளர்ச்சியற்ற பகுதிகள் குறித்து சிந்திக்கவேண்டியிருக்கும்."
- வளர்ச்சியற்ற பகுதிகளை பற்றி ஏன் சிந்திக்கத் தயங்குகிறார்கள். அதுவும் இந்தியாதானே?
Post a Comment