ஞானக்கூத்தன் கவிதைகள். இரண்டு பக்கங்களில் இரு கவிதைகளை நவம்பர் மாத உயிர்மையில் வெளியிட்டிருந்தார்கள். ஒரு கவிதையின் பெயர், 'பாதி போர்த்திய கவிதைகள்'. இன்னொன்றின் பெயர், நீ கொஞ்சம் நாறுகிறாய். முதல் கவிதைக்கு, சோகமாக (அல்லது ஏக்கமாக அல்லது ஏகாந்தமாக) படுத்திருக்கும் ஒரு நாயின் படம் போட்டிருந்தார்கள். இரண்டாவது கவிதைக்கு உலக உருண்டையின் படம். அந்த உருண்டை, கடற்கரைக்கு மேலே சாய்ந்தபடி நின்றுகொண்டிருந்தது. உருண்டைக்கு மேலே ஈட்டியின் முனை துருத்திக்கொண்டிருந்தது. அதாவது, உலகப் பந்தின் மையத்தில் யாரோ ஒருவர் நின்றுகொண்டு, மேல்நோக்கி ஈட்டியை செருகியிருக்கிறார்கள்.
முதல் கவிதையைப் படிக்கலாம் என்றால் தொடக்கத்திலேயே குழப்பம். கவிதையை ஏன் போர்த்தவேண்டும்? அதுவும் பாதி? மிச்சத்தைப் போர்த்தினால் என்ன ஆகும்? பாதி போர்த்துவதற்குப் பதில் சும்மாவே இருந்துவிடலாமே! இரண்டாவது கவிதையின் தலைப்பில் நாற்றம் இருந்தாலும், பொருள் சுத்தமாக இருந்தது. ஆனால், படம் புரியவில்லை.
எனில், எதைப் படிப்பது? புரியாத தலைப்பு கொண்ட கவிதையையா அல்லது புரியாத படம் கொண்ட கவிதையையா? நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, இரண்டாவது கவிதையைத் தேர்ந்தெடுத்தேன்.
நீ கொஞ்சம் நாறுகிறாய்...
'நீ கொஞ்சம் நாறுகியாய்' என்கிறாய்
'நீயும்தான்' என்கிறேன் நான்.
கடற்கரையில் புரள்கின்றன
அங்குபாஸ்தி நீளமும் இல்லாத
சின்னஞ்சிறு சங்குகள்
சங்குகள் நாறுகின்றன என்று
சொல்லிப்போகிறது காற்று.
நீண்ட நேரமாய்
வானில் உள்ளது ஒரு மேகம்.
மறக்க முடியாத வசைச் சொல்போல
மற்றும் ஒரு நாற்றத்தைப்போல.
ஆட்கள் வேலையில் இருக்கிறார்கள் என்னும்
அறிவிப்பைப் போன்றதல்லவா நாற்றம்?
நாற்றமே மண்ணின் அடையாளம் என்கிறது
யக்ஞோபவீதர்களின் வேதங்கள்.
புழுதி வெளிச்சம் மற்றும் நாற்றம்
இவற்றால் ஆனதன்றோ ஏழுலகம்
இருளோடு இருளாக
எதிர்வந்த நாற்றத்தை
என்ன செய்தாள் அகலிகை!
சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது
உனது மெல்லிய நாற்றம்
உனது ஜன்மம் தெரிகிறது கண்ணே
நாறாத உலகும் உண்டோ
கொஞ்சம் நாறினால் என்ன, கண்ணே.
0
கவிதை இங்கே முடிகிறது.
இப்போது எதெல்லாம் நாறுகிறது, யாரெல்லாம் நாறுகிறார்கள் என்று பார்ப்போம். நீ, நான். பிறகு, அங்குபாஸ்தி நீளம் இல்லாத சங்குகள். பிறகு, மேகம். பிறகு, மண். பிறகு, ஏழுலகம். இப்படி எல்லாமே நாறும்போது, நாமும் ஏன் நாறக்கூடாது என்னும் கூற்றோடு கவிதை நிறைவடைகிறது.
இந்தக் கவிதையைப் படித்துவிட்டு, படத்தை இன்னொரு முறை நுணுக்கமாகப் பார்த்தேன். அந்த ஈட்டியின் நாறும் நுனியில், பல உயிர்கள் கதறியபடி துடித்துக்கொண்டிருந்தன.
2 comments:
புது கவிதைகள் எது தான் புரிகிறது? எல்லாமே குழப்பம் தான்.
I am a big fan of Gnanakoothan. But I cant understand this. :-(
Post a Comment