November 26, 2009

மாவீரர் தினம் -- என்ன நடக்கப்போகிறது?

எங்கிருந்து வந்தது, யார் அனுப்பியது, எப்படி என்னும் விவரங்கள் இல்லை. ஆனால், விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து சமீபத்தில் (நவம்பர் 17) வெளிவந்திருக்கும் அதிகாரபூர்வமான அறிவிப்பு இது.

'அன்பார்ந்த தமிழ் ஈழ மக்களுக்கும், புலம் பெயர் வாழ் தமிழ் உறவுகளுக்கும், கடந்த 18-5-2009 அன்று தமிழ் ஈழ மக்களின் விடுதலைக்காக போராடிய எமது இயக்கம் சந்தித்த பெரிய பின்னடைவை தொடர்ந்து நாம் மீண்டும் எமது விடுதலை இயக்கத்தை தாயகத்தில் மீண்டும் கட்டியமைத்து வருகிறோம்.

இதை அறிந்த இலங்கை பேரினவாத அரசும், அரசு துணை குழுக்களும் பொய்யான பிரசாரங்களை ஊடகங்கள் வாயிலாக கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இது போன்ற பிரசார போரை கடந்த 30 ஆண்டு பேராட்ட வரலாற்றில் இலங்கை அரசு பல தடவை நிகழ்த்தியுள்ளது. இதை நீங்கள் நன்கு அறிவீர்கள். எனவே இவ்வாறான போலி பிரசாரங்களை நம்பவேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அதே வேளையில் எமது விடுதலை போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு பற்றி கொள்கை விளக்க உரை வழக்கம் போல எதிர்வரும் மாவீரர் நாள் அன்று நிகழ்த்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.'

புலிகள் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள், சர்வதேச ஊடகங்கள், இலங்கை முள்கம்பிகளில் சிக்கியிருக்கும் அகதிகள், இலங்கை, இந்திய அரசியல்வாதிகள் என்று அனைவரது எதிர்பார்ப்புகளையும் தூண்டிவிட்டிருக்கிறது இந்த அறிக்கை. என்ன ஆகப்போகிது நவம்பர் 27 அன்று? யார் வந்து உரை நிகழ்த்தப்போகிறார்கள்? பிரபாகரனா? அவர் உயிருடன் இருக்கிறாரா? ஆம் எனில், தோன்றுவாரா? அடுத்தக்கட்ட திட்டத்தை அறிவிப்பாரா? நம்பிக்கை அளிப்பாரா? அனைத்து சந்தேகங்களும், குழப்பங்களும், அச்சங்களும் நவம்பர் 27 அன்று விலகும் என்று துடிதுடிப்புடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள் அனைவரும்.

நவம்பர் 27 அன்று ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் வாரத்தின் இறுதி நாள் அன்று, பிரபாகரன் மாவீரர் தின உரை நிகழ்த்துவது வழக்கம். கடந்த ஆண்டு, கடுமையான போர்ச்சூழல் நிலவியபோதும், பிரபாரகன் உரை நிகழ்த்தினார். இந்த முறை அதைவிடக் கடுமையான சூழல். வருவாரா வரமாட்டாரா என்பது மட்டுமல்ல கேள்வி. இருக்கிறாரா இல்லையா என்பதும்தான்.

அந்த சந்தேகத்துக்கே இடமில்லை, பிரபாகரன் பாதுகாப்பான ஒரு மறைவிடத்தில் பத்திரமாக இருக்கிறார் என்று நம்பிக்கையுடன் சொல்லிவருகிறர்கள் புலிகளோடு தொடர்பு கொண்டவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் அபிமானிகளும்கூட. சற்று முன்னால்வரைகூட, பிரபாகரன் நிச்சயம் மாவீரர் தின உரையாற்றுவார் என்றுதான் இவர்கள் சொல்லி வந்தனர். இணையத்தளங்களில் இது பற்றிய பல அறிவிப்புகளும் வலம் வந்தன. பிரபாகரனுக்கு அவசரப்பட்டு வீரவணக்கம் செலுத்தவேண்டாம், கொஞ்சம் பொறுத்திருங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால், மாவீரர் தினம் நெருங்கி வரும் சூழலில், ஒரே வரியில் தங்கள் வாதத்தை முடித்துக்கொள்கிறார்கள். பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். ஆனால், மாவீரர் தின உரை நிகழ்த்தமாட்டார். அது அவருடைய பாதுகாப்புக்கு உகந்ததல்ல. எங்கே இருக்கிறார், எப்போது வருவார் என்னும் கேள்விகளுக்கு பதிலில்லை.

பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கு இவர்களிடம் வலுவான ஆதாரங்கள் என்று எதுவும் இல்லை. அல்லது, அளிக்கத் தயங்குகிறார்கள். அல்லது, மறுக்கிறார்கள். ஆனால், மாவீரர் உரையாற்ற மாட்டார் என்பதில் மட்டும் சர்வநிச்சயமாக இருக்கிறார்கள். புலிகள் தரப்பில் இவர்கள் யாருடன் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.

இரண்டாவது தரப்பினர், பிரபாகரனுக்குப் பதிலாக பொட்டு அம்மானை முன்னிறுத்துகிறார்கள். இலங்கை அரசு பொட்டு அம்மான் மரணத்தை இன்று வரை அதிகாரப்பூர்வமாக, ஆதாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது இந்த வாதத்துக்கு வலு சேர்க்கிறது. நிச்சயம் இறந்துவிட்டார் ஆனால் உடலைக் கண்டுபிடிக்கமுடியவில்லை என்கிறார் பாதுகாப்பு ஆலோசகர் கோத்தபய ராஜபக்ஷே. பிரபாகரனின் உடலையே நம்பாத புலி ஆதரவாளர்களால் இந்த வாதத்தை குறைந்தபட்சம் பரீசீலிக்கக்கூட முடியவில்லை. இந்நிலையில், பிரபாகரனும் பொட்டு அம்மானும் வெள்ளை ஆடை தரித்து அருகருகே அமர்ந்திருக்கும் படம் வெளிவந்து, பரவலாக ஊடகங்களில் பரப்பப்பட்டது கூடுதல் உத்வேகத்தை அளித்தது. எனவே, அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதத்தில் பொட்டு அம்மான் நவம்பர் 27 அன்று மாவீரர் உரை நிகழ்த்துவார் என்று இவர்கள் நம்புகிறார்கள்.

பிரபாகரன், பொட்டு அம்மான் இருவரும் உரை நிகழ்த்த மாட்டார்கள். ஆனால், உரை மட்டும் புலிகள் லெட்ட்ர் பேடில் வந்து சேரும் என்கிறார்கள் மூன்றாவது தரப்பினர். அந்த உரையில், இருவரும் உயிருடன் இருப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்கிறார்கள். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் அந்த உரை விளக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். பெரும்பாலானாவர்கள், இந்த மூன்றாவது கருத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். மாவீரர் உரை நிகழ்த்தப்படும். புலிகளின் அடுத்தக்கட்ட திட்டம் வெளியிடப்படும். யார் மூலமாக என்பது முக்கியமல்ல.

கே.பி.யால் இப்போதைக்குத் தொடர்பு கொள்ளமுடியாது. உலகெங்குமுள்ள இலங்கைத் தமிழர்கள் நவம்பர் 27ஐ ஆர்வத்துடன் எதிர்நோக்குவார்கள். அவர்களை ஏமாற்றமுடியாது. இனி புலிகளால் காந்திய வழியில் மட்டும்தான் போராடமுடியும், புலிகளால் மட்டுமல்ல ஆயுதம் தாங்கிய எந்தவொரு அமைப்பாலும் இனி இலங்கையில் செயல்படமுடியாது என்று சர்வதேச ஊடகங்கள் எழுதியும் பேசியும் வருகின்றன. பிரபாகரன் உயிருடன் இருந்தாலும், இன்னொரு ஆயுத எழுச்சி இப்போதைக்குச் சாத்தியமில்லை என்றே அவர்கள் கருதுகிறார்கள். மாவிலாறில் தொடங்கி முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற இந்தப் போர் விடுதலைப் புலிகளுக்கு ஏற்படுத்திய சேதம் மிகக் கடுமையானது. இயக்கத்தின் எதிர்காலம் குறித்தும் தமிழர்களின் எதிர்காலம் குறித்தும் அவநம்பிக்கை அகலமாகவும் அழுத்தமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் மாவீரர் தினம் கூடுதல் முக்கியத்தும் பெறுகிறது.

இன்னொரு காரணமும் இருக்கிறது. இலங்கையில் இப்போது கடுமையான அதிகாரப்போட்டி நிலவிக்கொண்டிருக்கிறது. புலிகள் அழித்தொழிப்புப் போர் மூலம் கிடைத்த வெற்றி யாருக்குப் போய் சேரவேண்டும் என்பதில் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் சரத் ஃபொன்சேகாவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவிக்கொண்டிருக்கிறது. இலங்கை அதிகார அமைப்பு பிளவுப்பட்டு கிடக்கும் இந்த சந்தர்பத்தை புலிகள் தவறவிடக்கூடாது. தவறவிடவும் மாட்டார்கள்.

அதே சமயம், சில தீர்மானமான முடிவுகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் புலிகள் இருக்கிறார்கள். சுயவிமரிசனங்களும் மறுபரிசீலனைகளும் தேவைப்படும் சமயம் இது. நடந்து முடிந்த அத்தியாயங்களைப் புரட்டிப் பார்ப்பதற்கும், தவறுகளைக் கண்டுகொள்வதற்கும், புதிய படிப்பினைகளைக் கற்றுக்கொள்வதற்கும், புதிய யுக்திகளை வடிவமைப்பதற்கும் நிச்சயம் அவர்களுக்கு அவகாசம் தேவைப்படும். இலங்கை குறித்து மட்டுமல்ல, இந்தியா குறித்தும் சர்வதேச நடுநிலைமையாளர்கள் குறித்தும் நடந்து முடிந்த போரில் அவர்கள்து பங்களிப்பு எத்தகையது என்பது குறித்தும் ஆழ்ந்து சிந்தித்து ஒரு முடிவுக்கு வரவேண்டியது அவசியம். பிரபாகரன், பொட்டு அம்மான இருவரும் உயிருடன் இருந்தாலும், மாவீரன் தினம் அன்று இருவரும தோன்றமாட்டார்கள் என்று நம்பலாம்.

(குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த என் கட்டுரை)

9 comments:

க.பாலாசி said...

மிக முக்கிய தகவல்கள்...பகிர்ந்தமைக்கு நன்றி அன்பரே...

நிமல்-NiMaL said...

வணக்கம் மருதன்,

உங்களின் பல தரமான நூல்களை நான் வாசித்திருக்கிறேன்.

ஆனாலும் தமிழக "வணிக" சஞ்சிகைகளுக்காக பணத்தையும் நேரத்தையும் வீண்டிப்பதற்கு விரும்பாமல் அவற்றை வாசிப்பதில்லை.

நீங்களும் ஒரு பக்கா "ஜனரஞ்சக" எழுத்தாளராகவும் இருக்கிறீர்கள் என்பதும், குமுதம் வகையறா எழுத்துக்களும் உங்களுக்கு வரும் என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது.

இலங்கையில் வசிக்கும் எங்களை விடவும் உங்களுக்கு தெரிந்த "வட்டாரங்கள்" பெரிய பெரிய செய்திகள் கூறூவது மகிழ்ச்சி. உங்களுக்கு இருக்கு இத்தகைய செல்வாக்கு புல்லரிக்க வைக்கிறது.

தொடர்ந்து இவ்வாறு சிறந்த ஆதாராபூர்வமான கட்டுரைகளை எழுத வாழ்த்துக்கள்.

நன்றிகளுன்,
நிமல்

தீக்கனல் said...

எங்கள் தலைவர் மரிக்கவில்லை. அவர் வாழ்கிறார். வாழ்வார்.

Anonymous said...

Leader will come

Anonymous said...

அதெப்படி அவர் வரமாட்டார் என்று சொல்கிறீர்கள்? பிரபாகரன் இறந்துவிட்டார் என்று நீங்களும் நிகைன்க்கிறீர்களா?

மருதன் said...

அன்புள்ள நிமல்,

ஊடகங்களில் வலம் வரும் பல்வேறு செய்திகளின் அடிப்படையில்தான் என் கட்டுரையை நான் கட்டமைத்திருந்தேன். இலங்கையில் இருக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு நிச்சயம் மேலதிக விஷயங்கள் தெரிந்திருக்கும். அதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. உங்கள் கருத்துகளை தொடர்ந்து தெரியப்படுத்துங்கள். நன்றி.

அன்புடன்
மருதன்

vijitha said...

நீங்கள் சொல்வது போல அறிக்கை வராது. வேறு ஒருவர் அறிக்கை விடப்போகிறார். அனேகமாக அவர் புலிகளின் மூத்த தளபதி ராமாக இருக்ககூடும்.

Anonymous said...

In Prabhakaran Era, LTTE did not groom second level of leaders. Lot of hero worship and mislead even Prabhakaran.

Now, they should built 2nd level of leaders.

Going forward, they should have politbureo and decision making body.

Anonymous said...

http://www.psminaiyam.com/