December 20, 2009

சென்னை புத்தகக் கண்காட்சி / நூல் அறிமுகம் 1 - விவாகரத்து

விவாகரத்து குறித்து தந்தை பெரியார் 17-8-1930 அன்று குடிஅரசு இதழில் எழுதிய தலையங்கம் இங்கே. (தமிழ் ஓவியாவுக்கு நன்றி). இந்தியாவில் பெண்களின் நிலை குறித்தும், ஏன் அவர்களுக்கு விவாகரத்து தேவைப்படுகிறது என்பது குறித்தும் பெரியார் மிகத் தெளிவாக இந்தக் கட்டுரையில் விளக்கியிருப்பார்.

"... நமது நாட்டிலும் மற்ற நாடுகளில் இருப்பது போன்ற கல்யாண ரத்துக்குச் சட்டம் சமீபத்தில் ஏற்படாமல் போகுமாயின், கல்யாண மறுப்புப் பிரச்சாரமும், கல்யாணம் ஆன புருஷர்களுக்கும் பெண்களுக்கும் பலதாரப் பிரச்சாரமும்தான் செய்ய வேண்டியது வரும். அன்றியும், இதுசமயம் ஒற்றுமைக்கும் திருப்திக்கும் இன்பத்திற்கும் உதவாத பெண்களுடைய புருஷர்கள் கண்டிப்பாக தைரியமாக முன் வந்து தங்களுக்கு இஷ்டமான பெண்களைத் திரும்பவும் மணம் செய்து கொள்ளத் துணிய வேண்டும் என்றும் தூண்டுகிறோம். ஏனெனில், அப்படி ஏற்பட்டால்தான் தெய்வீகம் என்கின்ற பெயரைச் சொல்லிக் கொண்டு புருஷர்களுக்கும் பெண்களுக்கும் சம்மதமும், முன்பின் அறிமுகமும் இல்லாமல் செய்யப்பட்டு வரும் கல்யாணங்களினால் மணமக்களடையும் துன்பமும் ஒழிபட முடியும். மனிதன் ஏன் பிறந்தானோ, ஏன் சாகிறானோ என்பது வேறு விஷயம். ஆதலால், அது ஒருபுறமிருந்தாலும் மனிதன் இருக்கும்வரை அனுபவிக்க வேண்டியது இன்பமும் திருப்தியுமாகும். இதற்கு ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் முக்கியச் சாதனமாகும்.

அப்படிப்பட்ட சாதனத்தில் இப்படிப்பட்ட தொல்லைக்கும் துன்பத்திற்குமிடமான இடையூறு இருக்குமானால், அதை முதலில் களைந்தெறிய வேண்டியது ஆறறிவுள்ள மனிதனின் முதல் கடமையாகும். மனித ஜீவகாருண்யத்திற்கும், திருப்திக்கும், இன்பத்திற்கும் வேலை செய்பவர்கள் இதை முதலில் செய்ய வேண்டும். அப்படிக்கில்லாமல், ஏதோ கல்யாணம் என்பதாக ஒன்றைச் செய்து கொண்டோமே, செய்தாய்விட்டதே, அது எப்படி இருந்தாலும் சகித்துக் கொண்டுதானே இருக்க வேண்டும் என்று கருதி, துன்பத்தையும் அதிருப்தியையும் அனுபவித்துக் கொண்டிருப்பதும் அனுபவித்துக் கொண்டிருக்கச் செய்வதும், மனிதத் தன்மையும், சுயமரியாதையுமற்ற காரியமாகுமேயல்லாமல் ஒரு நாளும் அறிவுடைமையாகாது என்பதே நமது அபிப்பிராயமாகும்."

சட்டம் விவாகரத்தை அனுமதிக்கிறது. நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டிருக்கிறது. ஆனால், சமூகம் விவாகரத்தை இன்னமும் ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக, பெண்கள் விவாகரத்து கோரும்போது குடும்பத்தினரிடம் இருந்து எதிர்ப்புகளே மிகுதியாக கிளம்புகின்றன. தடை செய்யப்பட்ட சொல்லாகவே விவாகரத்து இன்னும் நீடிக்கிறது.

ஆண்கள் விவாகரத்து கோரி பெறுவது ஏற்றக்கொள்ளத்தக்கதே. விவாகரத்து பெற்ற ஒரு ஆணை சமூகம் பரிதாபத்துடன் அணுகுகிறது. அட, தனியாளா இன்னும் எத்தனை காலத்துக்குக் கஷ்டப்படப்போறீங்க? என்ன பெரிய வயசாயிடுச்சு, பேசாம இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோங்க ஸார்.

பெண்கள் அவசரப்படக்கூடாது. இரண்டுக்கு மூன்று முறை, மூன்றுக்கு மூவாயிரம் முறை யோசிக்கவேண்டும். மீறி விவாகரத்து பெற்றுவிட்டாலும், பிரச்னைதான். தாய், தந்தை, குழந்தைகள், சகோதரர்கள் என்று பலர் உடனிருந்தாலும், ஒரு பெண்ணை நோக்கி முதலில் கேட்கப்படும் கேள்வி, உன் கணவன் எங்கே என்பதுதான்.


என்னென்ன காரணங்களுக்காக விவாகரத்து கோர முடியும்? விவாகரத்துக்கு எப்படி, எங்கே மனு செய்வது? விவாகரத்துக்குப் பிறகு தம்பதிகள் மனம் மாறி மீண்டும் இணைய விரும்பினால், அது சாத்தியமா? எந்த அடிப்படையில் ஜீவனாம்சம் வழங்கப்படுகிறது? பல்வேறு காரணங்களுக்காகப் பிரிந்திருக்கும் கணவனையோ மனைவியையோ சட்டப்படி திரும்ப அழைக்க முடியுமா? பிரிவுக்குப் பிறகு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு யாரிடம் அளிக்கப்படும்? இஸ்லாமிய, கிறிஸ்தவ விவாகரத்து முறைகள் எப்படி இருக்கும்?

விவாகரத்து குறித்து கிழக்கு பதிப்பகம் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளது.
நூல் விவரம் இங்கே. எதிர்வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தகம் கிடைக்கும்.

நூலாசிரியர் புஷ்பா ரமணி உயர் நீதிமன்ற வழக்கறிஞர். பதினைந்து ஆண்டுகால சட்ட அனுபவம் பெற்றவர். திருமணங்கள் மற்றும் விவாகரத்து வழக்குகளில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் இந்நூலை எழுதியுள்ளார். விவாகரத்து குறித்த மிக முக்கியமான, அதே சமயம் எளிமையான அறிமுகத்தை இந்நூல் அளிக்கிறது.

2 comments:

Praveen said...

useful book. will check out in buk fair

Anonymous said...

பெரியார் கூற்று மிக அருமை