மாவோ செயற்கை பஞ்சத்தை உருவாக்கி பல லட்சக்கணக்கான சீனர்களை கொன்றொழித்தார் என்பதில் தொடங்கி அவர் தனிப்பட்ட வாழ்க்கை வரை பல்வேறு குற்றச்சாட்டுகள், அவதூறுகள் ஆண்டாண்டு காலமாகச் சொல்லப்பட்டு வருகின்றன. இந்த அவதூறுகள் குறித்து பல்வேறு விளக்கங்கள் பல்வேறு சமயங்களில் வெளிவந்துள்ளன. என்றாலும், விடாப்பிடியாக விக்கிபீடியா லிங்க் கொடுத்து, இதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்பவர்கள் குறைந்தபாடில்லை. மன்த்லி ரிவியூ இதழில் வெளிவந்த இந்தக் கட்டுரை மாபெரும் பாய்ச்சல் (1958-61) குறித்தும் கலாசார புரட்சி (1966-76) குறித்தும் சில கூர்மையான வாதங்களை முன்வைக்கிறது.
Farmers, Mao, and Discontent in China
From the Great Leap Forward to the Present
Dongping Han
கட்டுரையாசிரியர் சீனாவின் பல பகுதிகளை நேரில் சென்று பார்த்து, அங்குள்ள மக்களிடம், குறிப்பாக விவசாயிகளுடன் பேசி அவர்கள் அனுபவங்கள் வாயிலாக இதனை எழுதியிருக்கிறார். மாவோ காலத்து சீனாவையும் தற்போதைய சீனாவையும் அருகருகே வைத்து ஒப்பிடுகிறார். மாவோவின் சீர்திருத்த நடவடிக்கைகளை, விமரிசனப்பூர்வமாக ஆராய்ந்து தன் முடிவுகளை அளிக்கிறார்.
விவாசய உற்பத்தியையும் தொழிற்சாலை வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் பொருட்டு மாபெரும் பாய்ச்சல் திட்டம் தொடங்கப்பட்டது. சீனா முழுவதும் ஆறு லட்சம் உருக்கு ஆலைகள் சிறிய அளவில் தொடங்கப்பட்டன. கம்யூன்கள் பரந்த அளவில் ஆரம்பிக்கப்பட்டன. அடுத்து வரும் ஆண்டுகளில் விளைச்சல் அதிவேகமாகப் பெருகும் வகையில், தொழில்துறை பெருமளவில் முன்னேறும் வகையில், இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது.
கம்யூனிஸ்ட் கட்சியும் மக்களும் மீன்களும் நீர்நிலையும் போல் இருக்கவேண்டும் என்றார் மாவோ. நீருக்கு மீன்கள் தேவையில்லை. மீன்களுக்கு நீர் வேண்டும். கட்சி இல்லாமல் மக்களால் இருந்திடமுடியும். ஆனால், அவர்கள் இல்லாமல் நாம் கட்சி நடத்தமுடியாது. எனவே, மாபெரும் பாய்ச்சல் திட்டத்தைச் செயல்படுத்தும்போது மக்களின் ஒத்துழைப்பை முழுவதுமாக பெறவேண்டும் என்று வலியுறுத்தினார் மாவோ. எனவே, கட்சியினர், விவசாயிகள், நகர்ப்புற மக்கள் என்னும் பேதங்கள் இன்றி அனைவரும் இந்தக் காலகட்டத்தில் ஒன்றிணைந்து உழைத்தனர்.
எனில், தவறுகளே நடைபெறவில்லையா? நடைபெற்றன. சறுக்கல்களே இல்லையா? இருந்தன. ஆனால் பஞ்சம் ஏற்பட்டு பல லட்சம் பேர் இறந்தார்கள் என்னும் கூற்று தவறானது. சீனர்களின் வேலை நேரம் அதிகரித்தது. உடலுழைப்பு அதிகரித்தது. அதே சமயம், அந்த உழைப்புக்கு ஏற்ற சத்தான உணவு அவர்களுக்கு கிடைக்கவில்லை. உணவுத் தட்டுப்பாடு பெருகியது. பல சமயங்களில், சர்க்கரை கிழங்குகளும் சிறிதளவு இறைச்சியும் மட்டுமே கிடைத்தன. மக்கள் மட்டும அனுபவித்த சிரமங்கள் அல்ல இவை. தலைமை தொடங்கி, கட்சியினர், மக்கள் என்று அனைவரும் இந்தச் சவால்களை ஒன்றுபோலவே எதிர்கொண்டனர். ஒன்றுபோலவே பாதிக்கப்பட்டனர்.
மாவோவின் சீனாவை இன்றைய சீனாவோடு ஒப்பிடும்போது இந்த வித்தியாசத்தை உணரமுடியும். சீனாவில் இன்றைய விவசாயிகளின் நிலையையும் அன்றைய விவசாயிகளின் நிலையையும் ஒப்பிடவேண்டும். அன்றைய சீனக் கம்யூனிஸ்ட கட்சியையும் இன்றைய கட்சியையும் ஒப்பிடவேண்டும். அன்று எத்தனை விவசாயிகள் மாவோ அரசுக்கு எதிரான கலகங்களில் இறங்கினர் என்பதையும் இன்று, எத்தனை விவசாயிகள் அரசாங்கத்தை எதிர்த்து திரண்டுகொண்டிருக்கிறார்கள் என்பதையும் ஒப்பிடவேண்டும்.
பிற்கால சீனா முதலாளித்துவ, சந்தைப் பொருளாதாரத்துக்குத் திரும்பியதை நியாயப்படுத்தவேண்டுமானால், மாவோவின் அரசு நிர்வாகத்தைக் குற்றம் கூறவேண்டும். மட்டம் தட்டவேண்டும். குறைத்து மதிப்பீடு செய்யவேண்டும். டெங் ஜியோபிங் இதனை ஆரம்பித்து வைத்தார். அது தொடர்ந்துகொண்டிருக்கிறது.
கட்டுரையின் முழு ஆங்கில வடிவம்.
1 comment:
விவசாயத்தையும், விவசாயிகளையும் நாட்டின் முதுகெலும்பாக எண்ணி ஆண்ட மாவோ காலத்தில் விவசாயம் வளரவில்லையா? மேலும் வீழ்ச்சி அடைந்து பஞ்சம் ஏற்பட்டதா? அடடா..... அப்படியென்றால் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்றதாக சொன்னதெல்லாம்???
Post a Comment