December 27, 2009

புரட்சியாளர்கள் வரிசை

01) ஃபிடல் காஸ்ட்ரோ: சிம்ம சொப்பனம்


காஸ்ட்ரோ பற்றி நான் முதலில் படித்த புத்தகம் அவரே எழுதிய My Early Years. இந்தப் புத்தகம் அவரது இளமைக்கால வாழ்க்கையை நேர்த்தியாகப் படம் பிடிக்கிறது. இந்தப் புத்தகத்தின் முன்னுரையை எழுதியவர், மார்க்வேஸ். பாரதி புத்தகாலயம் இதனை பின்னர் தமிழில் கொண்டுவந்தது. என் புத்தகம் வெளிவந்த அதே சமயம்தான் இந்த தமிழ் மொழிபெயர்ப்பும் (என் இளமைக்காலங்கள்) வெளிவந்தது என்று நினைக்கிறேன். தமிழாக்கத்தின் ஒரு பகுதியை ரமேஷ் செய்திருந்தார்.

காஸ்ட்ரோவின் உரைகளில் முக்கியமானது, History Will Absolve Me. இதுவும் தமிழில் கிடைக்கிறது. நூறு பக்கங்களுக்கு மேல் நீளும் உரை இது. மொன்காடோ தாக்குதலையடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக காஸ்ட்ரோ மீது க்யூபா வழக்குத் தொடுத்திருந்தது. தன்நிலை விளக்கமாக அக்டோபர் 1953ல் காஸ்ட்ரோ அளித்த நான்கு மணி நேர உரை, பின்னர் புத்தகமாக்கப்பட்டது. உரையின் ஆங்கில வடிவம் இங்கே.

காஸ்ட்ரோவின் வாழ்க்கை என்பது க்யூபாவின் ஐம்பதாண்டு கால வரலாறும்கூட என்பதால், என் புத்தகம் காஸ்ட்ரோவின் வாழ்க்கை வரலாறாக மட்டும் இல்லாமல் ஒரு தேசத்தின் வரலாறாகவும் இருக்கவேண்டும் என்று திட்டமிட்டேன். க்யூபாவின் வரலாறு, ஹொஸே மார்த்தி (அமரந்தா எழுதிய மார்த்தியின் வாழ்க்கை வரலாறு முக்கியமானது. க்யூபா குறித்தும் காஸ்ட்ரோ குறித்தும் அமரந்தா பல மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார்). அமெரிக்க வரலாறு என்று பரவலாகத் தேடிப்போனேன். காஸ்ட்ரோ எதிர்ப்பு அமெரிக்க இணையத்தளங்களை வலம் வந்தேன். தீவிர கம்யூனிஸ்ட் எதிர் பிரசாரங்களை வாசித்தேன். காஸ்ட்ரோவின் உரைகளையும் பேட்டிகளையும் அவர் எழுதிய கட்டுரைகளையும் சேகரித்தேன். ஆவணப்படங்கள் காணக்கிடைத்தன. க்யூபன் மிஸைல் க்ரைஸிஸ் குறித்தும் சி.ஐ.ஏ. குறிப்புகள் குறித்தும் நிறைய தேட வேண்டியிருந்தது.

காஸ்ட்ரோ குறித்து சமீபத்தில் நான் வாசித்த புத்தகம், My Life. Ignacio Ramonet என்பவருக்கு காஸ்ட்ரோ அளித்த விரிவான பதில்களின் தொகுப்பு நூல் இது. எழுநூறு பக்கங்களுக்கு மேல் நீளும் புத்தகம் என்றாலும் வாசிப்பதற்கு எளிமையானது.

02) சே குவேரா : வேண்டும் விடுதலை


காஸ்ட்ரோவின் வாழ்க்கையை சே குவேராவின் வாழ்கையில் இருந்து பிரித்து எடுத்துவிடமுடியாது. வரலாற்றின் புகழ்பெற்ற இரட்டையர்கள் அவர்கள். மரணத்துக்குப் பிறகல்ல, வாழும் காலத்திலேயே சே ஒரு குறியீடாக மாறியிருந்தார். காஸ்ட்ரோவைக் காட்டிலும் அதிகம் பேரால் நேசிக்கப்பட்டவர். நேசிக்கப்படுபவர்.

சே குவேரா மீது முன்வைக்கப்படும் விமரிசனங்களுள் பிரதானமானது, அவர் ஒரு சாகசவாதி என்பது. அரசியலில் அல்ல, ஆயுதப் போராட்டத்தில் மட்டுமே அவர் கவனம் செலுத்தினார் என்பது மற்றொரு குற்றச்சாட்டு. சே குவேராவின் வாழ்க்கையை மட்டுமல்ல அவர் வாழ்ந்த அரசியல், சமூகச் சூழலையும் ஒருங்கே வாசிக்கும்போது, இந்தக் குற்றச்சாட்டுகள் தவறானவை என்பது தெரியவரும்.

சே குவேராவின் வாழ்க்கை, போராட்டம், மரணம் மூன்றிலும் உள்ள அரசியலை முன்வைக்கிறது 'வேண்டும் விடுதலை'.

03) ஹியூகோ சாவேஸ் : மோதிப்பார்!


சாத்தான் என்று புஷ்ஷைத் திட்டியதால் ஊடகங்களில் பரபரபப்பாகப் பேசப்பட்டார் சாவேஸ். காஸ்ட்ரோ வழியில் வெனிசூலாவில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால் அமெரிக்காவின் நிரந்தர எதிரியாக இன்றுவரை நீடிக்கிறார். காஸ்ட்ரோ உடல் நலம் சரியில்லாமல் இருந்த சமயங்களில், அவரைச் சந்தித்து உரையாடிய சிலரில் சாவேஸும் ஒருவர். வெனிசூலாவின் எதிர்காலத்தை மட்டுமல்ல லத்தீன் அமெரிக்காவின் எதிர்காலத்தையும் இவரால் வடிவமைக்கமுடியும் என்று பலர் நம்புகிறார்கள். காஸ்ட்ரோவைப் போலவே இவர் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன. மோசடிகளால் தேர்தலில் வெற்றி பெற்றவர். அதிகார வேட்டை கொண்டவர். இன்னபிற.

மோதிப்பார், சாவேஸின் வாழ்க்கையை சுருக்கமாக அறிமுகம் செய்துவைக்கிறது. சமீபத்திய முன்னேற்றங்களைச் சேர்த்து, இந்தப் புத்தகத்தை விரிவாக்கவேண்டும். அடுத்த ஆண்டு திட்டத்தில் வைத்துள்ளேன்.

04) லெனின் : முதல் காம்ரேட்


Leaders & Revolutionaries என்னும் சிறப்பு தொகுப்பைக் கொண்டுவந்த டைம் பத்திரிகை, லெனினை இவ்வாறு மதிப்பிடுகிறது. ஆயிரம் இருந்தாலும் லெனின் குரூரமானவர். இரக்கமற்றவர். இந்த நூற்றாண்டின் இன்னல்களுக்குக் காரணமானவர். அரசியலைப் புறக்கணித்துவிட்டு, அழித்தொழிப்பைத் தொடங்கிவைத்தவர்.

உலகத் தொழிலாளர்களின், பாட்டாளி மக்களின் தாயகமாக சோவியத் மாறியபோது, இந்தக் குற்றச்சாட்டுகள் மேலும் அதிகரித்தன. லெனினுக்குப் பிறகு பொறுப்பேற்ற ஸ்டாலின் லெனினைவிடக் கூடுதலாக விமரிசிக்கப்பட்டார். அவதூறு செய்யப்பட்டார்.

லெனின் யார், வரலாற்றில் அவர் வகித்த பாத்திரம் என்ன என்பதை அறிமுகம் செய்துவைக்கிறது முதல் காம்ரேட். லெனினின் வாழ்க்கையை, ரஷ்யப் புரட்சியை, ரஷ்யா சோவியத்தாக மாறிய வரலாறை சுருக்கமாக விவரிக்கிறது இந்நூல்.

05) சர்வம் ஸ்டாலின் மயம்


ஸ்டாலினைப் பற்றி கருத்து தெரிவிக்கப் பயப்படுகிறார் விளாதிமிர் புடின். அல்லது தயங்குகிறார். அவர் நல்லவர் என்று சொன்னால் ஒரு சாரார் கோபித்துக்கொண்டுவிடுவார்களாம். கெட்டவர் என்று சொன்னால் மற்றொரு சாரார் எதிர்ப்பார்களாம். எனவே, வாய்மூடி இருந்துவிட்டார். ஸ்டாலினின் 130வது பிறந்தநாளை ரஷ்யர்கள் கொண்டாடியதை, அத்தேசம் கஷ்டப்பட்டுத்தான் சகித்துக்கொண்டது. செஞ்சதுக்கத்தில் மலர் கொத்துக்களுடன் கூட்டம் நிரம்பியதை, ரஷ்ய ஊடகங்கள் சங்கடத்துடன்தான் பதிவு செய்தன.

அரசியல்வாதிகள் தொடங்கி இலக்கியவாதிகள் வரை பலரும் ஸ்டாலினை வெறுத்தொதுக்குகிறார்கள். சர்வம் ஸ்டாலின் மயம், ஸ்டாலினை ஒரு புரட்சியாளராக அறிமுகம் செய்துவைக்கிறது. ஸ்டாலின் குறித்த அவதூறுகளுக்கு விடையளிக்க அவர் வாழ்க்கையை அறிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

06) மாவோ : என் பின்னால் வா


சூழ்நிலைதான் தலைவர்களை உருவாக்குகிறது. ஒருவர் முதலாளித்துவவாதியாகவும், இன்னொருவர் கம்யூனிஸ்டாகவும் இருப்பதற்குக் காரணம் அவர்கள் அவ்வாறு சிந்திக்கிறார்கள் என்பதல்ல. அவர்கள் அவ்வாறு சிந்திப்பதற்குக் காரணம் அவர்கள் முதலாளித்துவவாதியாகவும் கம்யூனிஸ்டாகவும் இருக்கிறார்கள் என்பதுதான். அந்த வகையில், ஒரு புரட்சியாளர் எப்படி உருவாகிறார் என்பதைவிட முக்கியமானது, எந்தச் சூழல் அவரை ஒரு புரட்சியாளராக உருமாற்றுகிறது என்பதே. என் பின்னால் வா, அப்படி உருவான புத்தகம். மாவோ குறித்து சமீபத்தில் நான் எழுதிய பதிவு இங்கே.

07) மால்கம் எக்ஸ்


காந்தியையும் மார்டின் லூதர் கிங்கையும் நெல்சன் மண்டேலாவையும் கொண்டாடும் உலகம், மால்கம் எக்ஸையும் ஃபிரான்ஸ் ஃபனானையும் நிராகரிக்கவே செய்யும். அடிப்பவர்களுக்கு இரு கன்னங்களையும் ஒன்றன் பின் ஒன்றாகக் காட்டச் சொன்னவர்கள் உலகத் தலைவர்களாக மாறிப்போனார்கள். அடிக்க வந்த கையை இழுத்துப் பிடித்து திருப்பியடி என்று சொன்னவர்கள் கலகக்காரர்களாக சித்தரிக்கப்பட்டார்கள். வன்முறை குறித்து ஃபிரான்ஸ் ஃபனான் கொடுத்த விளக்கத்துக்கு மால்கம் எக்ஸ் செயல்வடிவம் கொடுத்தார்.

மால்கம் எக்ஸின் சுயசரிதையை அவர் சொல்லக்கேட்டு எழுதியவர் அலெக்ஸ் ஹெய்லி. விடியல் தமிழில் இப்புத்தகத்தைக் கொண்டுவந்திருக்கிறது. அழகிய மொழிபெயர்ப்பு. அவசியம் வாசிக்கவேண்டிய நூல்.

08) நெல்சன் மண்டேலா



வரலாற்றின் நீண்ட சிறைவாசியாக மட்டுமே நெல்சன் மண்டேலா அறியப்படுகிறார். பத்தாயிரம் தினங்களுக்கு மேல் சிறையில் கழித்திருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக அவரை ஒரு தலைவராக உலகம் அங்கீகரித்துவிடவில்லை.

அடிப்படையில் ஒரு கம்யூனிஸ்டாக இல்லாவிட்டாலும், ஒரு புரட்சியாளராக மண்டேலாவை நான் முன்னிறுத்தியதற்குக் காரணம் தென் ஆப்பிரிக்காவில் அவர் ஏற்படுத்திய மாற்றங்கள். பல நூற்றாண்டுகளாக இரண்டாம்தர குடிமக்களாக இருந்துவந்த கறுப்பின மக்களுக்கு நெல்சன் மண்டேலா ஜனநாயகத்தை அறிமுகம் செய்துவைத்தார். வாக்களிக்கும் உரிமையைப் பெற்றக்கொடுத்தார். என்றாலும், தென் ஆப்பிரிக்கா மாறிவிடவில்லை. தான் அறிமுகப்படுத்திய பல நல்ல திட்டங்களை மண்டேலாவே பிற்காலத்தில் அவசரமாக விலக்கிக்கொள்ள நேரிட்டது.

நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கையை, ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தின் பின்னணியில் விவரிக்கிறது இந்தப் புத்தகம்.


0

மேற்கூறிய நூல்கள் குறித்தும் என்னுடைய பிற நூல்களும் குறித்தும் மேலதிக விவரங்கள் இங்கே.

8 comments:

Anonymous said...

Impressive listing. I am yet to read Chavez and Mandela

சதீஷ் said...

மார்டின் லூதர் கிங் எழுதவிலலையா?

மருதன் said...

சதீஷ்: பாலு சத்யா எழுதி கறுப்பு வெள்ளை என்னும் தலைப்பில் மார்டின் லூதர் கிங்கின் வாழ்க்கை வரலாறு முன்னரே வெளிவந்துவிட்டது. நூல் விவரம் : http://nhm.in/shop/978-81-8368-356-2.html

தென்றல் said...

மருதன் -

'ஃபிடல் காஸ்ட்ரோ: சிம்ம சொப்பனம்' படித்தேன். அலுப்பே தட்டாத எழுத்து நடை! வெக்கசக்க தகவல்களை சேகரித்து...படிப்பதற்கு எளிமையாக கொடுத்துள்ளீர்கள்.

காஸ்ட்ரோவை 'தகர்க்க' CIA நடத்திய Operation Mongoose யைப் பற்றிய எழுதியிருந்தீர்களா? நினைவில்லை....

உங்கள் புத்தகத்தை தொடர்ந்து காஸ்ட்ரோவைப் பற்றி இன்னும் சில புத்தகங்கள் எடுத்து வந்துள்ளேன்!

வாழ்த்துக்கள்!

மருதன் said...

நன்றி தென்றல்.

ஆமையடி மகேஷ் said...

வணக்கம் .தங்களின் புரட்சியாளர்கள் பற்றிய தெகுப்பினை வாசித்தேன் எல்லாம் அருமை அனைவரும் உண்மையான புரட்சியாளர்களே ,ஒரு சின்ன வருத்தம் அந்த வரிசையில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பெயரும் ,மாவீரன் பிரபாகரன் பெயரும் இல்லாதது சின்ன வருத்தமே.

ஆமையடி மகேஷ் said...

வணக்கம் .தங்களின் புரட்சியாளர்கள் பற்றிய தெகுப்பினை வாசித்தேன் எல்லாம் அருமை அனைவரும் உண்மையான புரட்சியாளர்களே ,ஒரு சின்ன வருத்தம் அந்த வரிசையில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பெயரும் ,மாவீரன் பிரபாகரன் பெயரும் இல்லாதது சின்ன வருத்தமே

ஆமையடி மகேஷ் said...

வணக்கம் .தங்களின் புரட்சியாளர்கள் பற்றிய தெகுப்பினை வாசித்தேன் எல்லாம் அருமை அனைவரும் உண்மையான புரட்சியாளர்களே ,ஒரு சின்ன வருத்தம் அந்த வரிசையில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பெயரும் ,மாவீரன் பிரபாகரன் பெயரும் இல்லாதது சின்ன வருத்தமே