புத்தகக் கண்காட்சி உள் அரங்கைப் போலவே நடைபாதை அரங்கும் சுவாரஸ்யமானதுதான். பொறுமையாக உட்கார்ந்து தேடினால் பல நல்ல புத்தகங்கள் கிடைக்கும். ஐந்து ரூபாயில் தொடங்கி ஐம்பது ரூபாய்க்குள் பெரும்பாலான புத்தகங்கள் அடங்கிவிடுகின்றன. விதிவிலக்காகச் சிலவற்றுக்கு நூறு தரவேண்டியிருக்கும். அதிகபட்சம், இருநூறு.
புத்தகங்களைப் பற்றி தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் இருவருமே நடைபாதையில் கடை பரப்பியிருக்கிறார்கள். சிலருக்கு மேலோட்டமாகச் சில புத்தகங்கள் பற்றியும் சில எழுத்தாளர்கள் பற்றியும் மட்டும தெரிந்திருக்கிறது. அப்துல் கலாம், சல்மான் ருஷ்டி, விக்ரம் சேத், அருந்ததி ராய் போன்றவர்களின் நூல்களை தனியே பிரித்து வைத்திருக்கிறார்கள். அதிகம் பேர் தேடி வாங்கும் நூல்கள் என்பதால் இவர்களுக்குக் கூடுதல் மதிப்பு. The Monk who Sold His Ferrari, The Diet Revolution, Ayn Rand, Orhan Pamuk, Chetan Bhagat, Amartya Sen என்று கலவையாக பல பெஸ்ட்செல்லர்கள் மற்ற புத்தகங்களைக் காட்டிலும் சற்றே கூடுதல் விலைக்குக் கிடைக்கின்றன. கிட்டத்தட்ட அனைத்தும் பைரேட்டட் பிரதிகள். வண்ண அட்டை, மோசமான தாள், அச்சு. என்றாலும், பலர் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
பாடப் புத்தகங்களுக்குத் தனியொரு வரிசை. ஐந்தாவது வகுப்பு முதல் ஐ.ஐ.டி வரை பல புத்தகங்கள் குவிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது ஆண்டு, எம்.பி.ஏ. புத்தகம் இருக்கிறதா, எட்டாவது வகுப்பு கோனார் இருக்கிறதா என்று தேடிக் கேட்டு வாங்கிச் செல்கிறார்கள். கணிப்பொறி நூல்களை யாரும் வாங்கியதாக தெரியவில்லை. சில நல்ல, பெரிய மருத்துவ நூல்கள் காணக்கிடைக்கின்றன. ஜர்னல்களின் தொகுப்பும் கிடைக்கிறது. துறை சார்ந்தவர்களுக்கு உபயோகப்படும் .
பாடப் புத்தக பிரிவில் இருந்து இரு புத்தகங்கள் எனக்குக் கிடைத்தன. Human Society, Kingsley Davis, Macmillan, 656 பக்கங்கள். Sociology, Anthony Giddens, Polity Press, 816 பக்கங்கள். முதல் புத்தகம் ஐம்பது ரூபாய். இரண்டாவது இருபது ரூபாய். நீரில் நனைந்து, சற்றே ஈரமாக, நிறைய அழுக்குடன், சற்றே கசங்கி இருந்ததால், கையில் தொடாமல், நீங்களே எடுத்துக்கோங்க என்று சொல்லி ஒதுங்கிக்கொண்டுவிட்டார் கடைக்காரர். வீட்டுக்குக் கொண்டு சென்று, ஒவ்வொரு பக்கமாக துடைத்து எடுத்து, அட்டையை நீவிவிட்டு, ஓரங்களை ஒழுங்குபடுத்தி எடுத்து வைத்திருக்கிறேன்.
Gender and Sexuality என்னும் அத்தியாயத்தில் இருந்து ஒரு பகுதி இங்கே தமிழில். மற்ற புத்தகங்கள் குறித்து அடுத்தடுத்து எழுதுகிறேன்.
0
சில மணி நேர வித்தியாசத்தில் இரு குழந்தைகள் புதிதாகப் பிறக்கின்றன. ஒன்று, ஆண். மற்றொன்று பெண். ஆண் குழந்தையைப் பார்க்க முதல் முறையாக தாத்தாவும் பாட்டியும் அறைக்குள் நுழைகிறார்கள்.
பாட்டி : ஆ, அங்கே பாருங்கள். நம் முதல் பேரப் பிள்ளை.
தாத்தா: எத்தனை அழகாக இருக்கிறான்! என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது. இதோ, அவன் கையைப் பார். எத்தனை வலிமையாக கைகளை அசைக்கிறான். பெரிய சண்டைக்காரனாக இருப்பான் போலிருக்கிறது.
பாட்டி: அவன் உங்களைப் போலவே இருக்கிறான். உங்களைப் போலவே வலிமையான கன்னங்கள், மோவாய். ஆ, அழ ஆரம்பித்துவிட்டானே!
தாத்தா : பார்த்தாயா, அவன் நுரையீரல் எத்தனை வலிமையாக இருக்கிறது.
பாட்டி: அழுதுக்கொண்டே இருக்கிறானே!
தாத்தா: பரவாயில்லை. அவனுக்கு நல்லதுதான். சத்தம் போட்டு அழுவது உடலுக்கு நல்லது. அழுவதும் ஒரு வகை உடற்பயிற்சிதான்.
பாட்டி: வாருங்கள், குழந்தையின் பெற்றோருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு வரலாம். குட்டிப் பையன் பிறந்ததைக் கேள்விப்பட்டால் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
தாத்தா: ஆம், வா போகலாம். எனக்கு முன்பே தெரியும். அம்மாவை அவன் வலிமையாக எட்டி உதைத்துக்கொண்டிருக்கும்போதே நினைத்தேன். பையன்தான் என்று.
அவர்கள் வெளியேறியபிறகு, இன்னொரு ஜோடி தாத்தா, பாட்டி உள்ளே நுழைகிறார்கள்.
பாட்டி : ஆ, அழகிய பெண் குழந்தை.
தாத்தா : எத்தனை சிறிய குழந்தை. கைவிரல்களைப் பார். எத்தனை சிறியதாக இருக்கிறது.
பாட்டி : அழகாக இருக்கிறது. என் ஜாடையில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
தாத்தா : ஆம், உன்னைப் போல்தான் இருக்கிறது.
பாட்டி : ஓ, குழந்தை அழ ஆரம்பித்துவிட்டதே.
தாத்தா : உடனே நர்ஸை கூப்பிடவேண்டும். படுக்கையை நனைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.
பாட்டி : ஆம், அப்படித்தான் இருக்கும். (குழந்தையிடம்) அழாதே, பெண்ணே. உனக்கு உதவி செய்யத்தான் முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்.
தாத்தா : இப்படி அழுதுகொண்டே இருப்பது நல்லதல்ல. உடனே நர்ஸைக் கூப்பிடு.
பாட்டி : ம். இவர்களுக்கு அடுத்த குழந்தை எப்போது பிறக்கும் என்று தெரியவில்லை.
தாத்தா : அவர்களுக்கு இன்னும் வயது இருக்கிறது. கவலைப்படாதே.
2 comments:
எல்லாரும் புத்தகக் காட்சிக்குப் போனது பற்றித்தான் பதிவு போடுவார்கள்; நீங்கள் ஒரு படி மேலே போய், காட்சியில் வாங்கி வந்திருந்த புத்தகத்திலிருந்தும் ஒரு பதிவு போட்டுவிட்டீர்கள். பலே!
ரவிபிரகாஷ், உங்களை கண்காட்சியில் காண முடியவில்லையே. வரவில்லையா?
Post a Comment