February 12, 2010

எழுத்தாளர்களின் அரசியல்

அரசியல்வாதிகளில் சிலர் எழுத்தாளர்களாகவும் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட எழுத்தாளர்கள் அனைவரும் அரசியல்வாதிகளாக இருக்கிறார்கள். அரசியல்வாதிகளின் எழுத்துகள் நமக்குத் தெரியும். எழுத்தாளர்களின் அரசியல்? தெரிவதில்லை. அல்லது கண்டுபிடிக்கமுடியவில்லை. சல்மான் ருஷ்டியின் எழுத்துகள் நமக்குத் தெரியும். அவர் முன்வைக்கும் அரசியல் என்ன? ஓரான் பாமுக் தெரியும். அவர் அரசியல்? ஜார்ஜ் ஆர்வெலின் விலங்குப் பண்ணையை பள்ளி வகுப்புகளிலேயே வாசித்திருப்போம். அவர் வெளிப்படுத்திய அரசியல் என்ன?

புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர்களின் அரசியலைப் புரிந்துகொள்ள எட்வர்ட் செய்டின் (Edward Said) Culture and Imperialism உபயோகமாக இருக்கும். ஜிம் கார்பெட், மார்க் ட்வைன், ஜார்ஜ் ஆர்வெல், ஜோசப் கான்ராட், ருட்யார்ட் கிப்ளிங், ஜேன் ஆஸ்டன் போன்ற உலக இலக்கிய மேதைகளின் படைப்புகளை செய்ட் ரம்பம் போட்டு அறுத்து அவர்கள் அரசியலை கண்டறிந்து வெளிப்படுத்துகிறார்.

ஒரு கதையை கதையாக மட்டும் பார்க்கமுடியாது. ஒரு கவிதையை, அதன் அழகியலுக்காக மட்டும் ரசிக்கமுடியாது. திரைப்படங்களுக்கும் பாடல்களுக்கும் ஓவியங்களுக்கும்கூட இது பொருந்தும்.

பெர்ட்ரண்ட் ரஸலின் சுயசரிதையை வாசித்துக்கொண்டிருந்தேன். கணிதம், தர்க்கம், தத்துவம் ஆகிய மூன்று துறைகளிலும் இயங்கியவர் ரஸல். வொயிட்ஹெட், ஜார்ஜ் சந்தயானா, டி.எஸ். எலியட், ஜோசப் கான்ராட் என்று தான் நேரடியாக பழகிய பலரையும் பற்றி தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார் ரஸல். டி.ஹெச். லாரன்ஸ் பற்றி அவர் எழுதியுள்ளதை மட்டும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன். Sons and Lovers, Women in Love, Lady Chatterley's Lover ஆகிய புகழ்பெற்ற நாவல்களைப் படைத்தவர் லாரன்ஸ். உலக இலக்கிய பட்டியலில் அவரது சன்ஸ் அண்ட் லவர்ஸ் நிச்சயம் இடம்பெறும். காதலையும் சுதந்தரத்தையும் சுதந்தர காதலையும் உயர்த்திப் பிடித்த படைப்பு அது.

முதல் உலகப் போர் நடந்துகொண்டிருந்த சமயம் அது. ரஸல், லாரன்ஸ் இருவரும் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள். போரில் ரஸல் பிரிட்டன் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்தார். ஆனால், லாரன்ஸால் பிரிட்டனை ஆதரிக்கமுடியவில்லையாம். காரணம், அவர் மனைவி ஒரு ஜெர்மானியர். எனில், அவர் ஜெர்மனியை ஆதரித்தாரா என்றால் அதுவும் இல்லை. இப்படி எழுதுகிறார் ரஸல். 'லாரன்ஸ் மனித குலத்தை முழுமையாக வெறுத்தவர். இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் வெறுத்துக்கொள்ளும்வரை அவர் இருவரையும் ஆதரிப்பார். இருவர் செய்வதும் சரி என்பார்.'

'நான் ஜனநாயகத்தை நம்புகிறேன், லாரன்ஸ் ஃபாசிஸத்தை நம்புகிறார்' என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறார் ரஸல். வாழ்க்கை மோசமாக இருக்கிறது, மக்கள் மோசமாக இருக்கிறார்கள் ஆனால் நம்மால் எதுவும் செய்யமுடியாது என்னும் முடிவுக்கு வந்து சேர்ந்திருக்கிறார் லாரன்ஸ். ஓர் அரசரால் மட்டுமே ஒரு நாட்டை நிர்வகிக்கமுடியும் என்பது லாரன்ஸின் நம்பிக்கை. அவருக்குப் பிடித்த கதாநாயகன், ஜூலியஸ் சீஸர். யுத்தங்களையும் ரத்தத்தையும் லாரன்ஸ் விரும்பியதற்குக் காரணம் சகமனிதர்கள் மீதான அவர் வெறுப்பு.

லாரன்ஸுக்கு ஹிட்லரைத் தெரியாது. ஹிட்லர் லாரன்ஸை அறிந்திருந்தாலும் அவர் சிந்தனைகளை அறிநதுகொண்டிருக்கமாட்டார். ஆனால், இருவரும் ஒத்த சிந்தனை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்.

இப்போது பிரச்னை, லாரன்ஸை எப்படி நாம் அணுகுவது என்பதுதான். மனிதகுலத்தை வெறுத்த, போரை ஆதரித்த ஒரு படைப்பாளியின் எழுத்துகளை நாம் எப்படி எடைபோடுவது? லாரன்ஸின் புகழ்பெற்ற படைப்புகள் எதிலும் (நான் அறிந்தவரை) அவரது ஃபாசிஸ சிந்தனைகள் வெளிப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக, அழகியலும் மயக்கமும் ரசிக்க வைக்கும் வார்த்தை அடுக்குகளும்தான் காணப்படுகின்றன. ('காதல் புனிதமானது, அது நம் கால்களைக் கட்டிப்போடக்கூடாது. சுதந்தரமாகப் பறக்க நம்மை அனுமதிக்கவேண்டும். அப்படி அனுமதிக்காத காதல், காதலே அல்ல!')

இப்படிப் பார்க்கலாம். ஹிட்லரின் Mein Kampf-ஐ நம்மால் அதன் இலக்கியத் தரத்துக்காக (அப்படி ஒன்று இருக்கும் பட்சத்தில்) ஏற்றுக்கொள்ளமுடியுமா? கொடூர யூத எதிர்ப்பு சிந்தனைகளை ஒதுக்கித்தள்ளிவிட்டு, எழுத்துத்திறனை கொண்டாடமுடியுமா?

எட்வர்ட் செய்டின் ரம்பத்தை பக்கத்தில் வைத்துக்கொண்டு முடிவு செய்யவேண்டும்.

5 comments:

ஆர்வா said...

ளெனக்கு இந்த அளவிற்கு வரலாறு தெரியாது. வியக்கிறேன்.

Unknown said...

ஆனந்த விகடனில் வெளியான உங்களது ”பாஸ்போர்ட்”டின் மூலமாகவும்,கிழக்கு பதிப்பகத்தின் வாயிலாகவும் உங்களது எழுத்துக்களை வாசித்து வருகிறேன்... வாழ்த்துக்கள் மருதன்...உங்கள் பணி தொடரட்டும்.

மருதன் said...

ANTO : நன்றி. தங்கள் வலைப்பதிவை இப்போதுதான் பார்த்தேன். படிக்கும் ஆவலைத் தூண்டும் விதத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து எழுதியிருக்கிறீர்கள். வாசித்துப் பார்க்கிறேன்.

வன்பாக்கம் விஜயராகவன் said...

"முதல் உலகப் போர் .... போரில் ரஸல் பிரிட்டன் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்தார்"

Wrong. Russell was a pacifist during WW1 and was sent to prison becuase of that. During WW2, Russell wholeheartedly supported the Allies

Vijayaraghavan

யாநிலாவின் தந்தை said...

உங்களின் எழுத்து மட்டுமல்ல, தங்கள் புகைப்படமும் அந்த மீசையும்கூட அழகாக இருக்கிறது :-)