April 8, 2010

அங்காடித் தெருவில் என்ன இருக்கிறது?

அங்காடித் தெரு திரைப்படத்தில் சொல்லப்பட்ட விஷயங்கள் குறித்தும் சொல்லப்படாத விஷயங்கள் குறித்தும் பலர் எழுதிவிட்ட நிலையில், புதிதாக அந்தப் படத்தைப் பற்றி எழுத என்ன இருக்கிறது?

அருமை, அழுகை, குப்பை என்பதில் தொடங்கி காமிரா கோணம் சரியில்லை, இசை ஒட்டவில்லை, நாயகனின் முகம் உணர்வுகளை வெளிப்படுததவில்லை என்பது வரை பல விமரிசனங்கள் வெளிவந்துவிட்டன. படம் முன்வைக்கும் அரசியல் மற்றும் சாதீயப் பார்வை குறித்த விவாதங்கள் இணையத்தில் பரவலாகக் காணக்கிடைக்கின்றன.

உண்மை. அங்காடித் தெருவில் குறைகளே இல்லை என்று சொல்லமுடியாது. சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் நிலை குறித்த சித்தரிப்புகள் மிகையானதாக இருக்கலாம். பார்வையாளர்களுக்குப் பரிதாப உணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும், மனிதாபிமானத்தைத் தூண்டிவிடுவதற்காகவும் ஏழைமையை அவர்கள் தூக்கலாகப் பயன்படுத்தியிருக்கலாம். வணிக நோக்கத்துக்காக வெள்ளை நாயகியையும், பாடல்களையும், சில நகைச்சுவைக் காட்சிகளையும், காதலையும் அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம். வழக்கமாக எல்லாப் படங்களிலும் வருபவைதானே என்று இவற்றை சுட்டிக்காட்டாமல் இருப்பது சரியல்ல என்பதும் உண்மைதான். ஆனால், இந்தக் குறைகளையும் தாண்டி அங்காடித் தெரு சில உண்மைகளை அழுத்தமாகப் பதிவுசெய்துள்ளது என்பதை ஏற்கத்தான் வேண்டும்.

முதலாளித்துவத்தின் சில அம்சங்களை இந்தப் படம் அழுத்தமாக வெளிச்சமிட்டு காட்டியுள்ளதை மறுப்பதற்கில்லை. எங்கோ ஓரிடத்தில் வாழும் ஏதோ ஒரு முதலாளி என்று சொல்லாமல் இன்ன தெருவில் இன்ன பெயரில் இயங்கி வரும் நிறுவனம் என்று தெளிவாக சுட்டிக்காட்டியதன் மூலம், பார்வையாளர்களின் கவனத்தை ஒரு புள்ளியில் குவிக்கிறது அங்காடித் தெரு.

கறுப்புப் பணத்துக்கு எதிரான படம், லஞ்சத்துக்கு எதிரான படம், தீவிரவாதத்துக்கு எதிரான படம், பெண் சிசுக்கொலைக்கு எதிரான படம் என்று பொதுவாக இல்லாமல், குறிப்பிட்ட ஒரு முதலாளிக்கு எதிரான படமாக இது அமைந்திருக்கிறது. விளைவு? இருவேறு உணர்ச்சி அலைகளை இப்படம் சட்டென்று பார்வையாளர்களிடம் ஏற்படுத்துகிறது. ஊழியர்கள் மீது பரிதாப அலை. குறிப்பிட்ட அந்த முதலாளி மீது கோபம் அலை.

பரிதாப உணர்ச்சியால் எந்தப் பயனும் இல்லை. இதைக் காட்டிலும் சோகமான பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அழுது முடித்து மறந்துவிட்டு வெளியேறியிருக்கிறோம். ஆனால், இந்தப் படம் ஏற்படுத்திய கோப உணர்ச்சியை தக்க வகையில் பயன்படுத்திக்கொள்வது சாத்தியமே. காரணம், கோபத்தைத் தூண்டும் படங்கள் அரிதாகவே வெளிவந்துள்ளன. அப்படியே வெளிவந்திருந்தாலும், யார் மீது கோபப்படுவது என்று தெரியாமல் பார்வையாளர்கள் திகைக்கும் நிலைதான் ஏற்பட்டுள்ளது. பெண் சிசுக்கொலை கொடுமையானது. ஆனால், அதற்காக யார் மீது கோபப்படுவது? சாதி கொடுமையானது. ஆனால், அதற்காக குறிப்பாக யாரை கடிந்துகொள்வது? தீவிரவாதம் ஆபத்தானது என்கிறார்கள். எது உண்மையில் தீவிரவாதம்?

காவல்துறையினரையும் அரசியல்வாதிகளையும் பல திரைப்படங்கள் வில்லன்களாக காட்டியுள்ளன. ஆனால், குறிப்பாக ஒரு வில்லனின் முகத்தைத் தனிமைப்படுத்தி பளிச்சென்று அடையாளம் காட்டியதில்லை (என்று நினைக்கிறேன்). எனவே படம் பார்ப்பவர்கள் கோபத்தை யார் மீது குறிப்பாக குவிக்கவேண்டும் என்று தெரியாமலேயே குழப்பத்துடன் கலைந்து சென்றுவிடுகிறார்கள். அங்காடித் தெருவில் இந்தக் குழப்பங்கள் இல்லை. இவன்தான் வில்லன் என்று நாம் அறிந்த ஒருவரின் முகத்துக்கு நேராக விரலை உயர்த்துகிறது இப்படம்.

இங்கிருந்துகொண்டு மெல்ல மெல்ல அரசியல் வகுப்புகளைத் தொடங்கலாம். வில்லன், அண்ணாச்சி உருவில் மட்டுமல்ல பல்வேறு வடிவங்களில் பரவியிருக்கிறான். ஊழியர்கள் அவதிப்படுவது இந்த ஒரு வீதியில் மட்டுமல்ல. பல இடங்களில் அவர்கள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். முதலாளித்துவத்தின் முகம் எப்போதும் இத்தனை கோரமாக இருக்காது. ஏழைமையைப் புரிந்துகொள்ள, சுரண்டலைப் புரிந்துகொள்ள மிகை தேவையில்லை, உண்மையே போதும். இவ்வாறு தொடங்கி முதலாளித்துவத்தின் வடிவங்கள், உலகமயமாக்கல், ஏகாதிபத்தியம், தொழிற்சங்கங்கள், தொழிலாளர் உரிமை, சமூக ஏற்றத்தாழ்வுக்கான காரணங்கள் என்று நிறைய விவாதிக்க முடியும்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றவர்கள் திரையுலகை ஆண்டுகொண்டிருந்த சமயங்களில் பண்ணையார்களையும் நிலச்சுவான்தார்களையும் ஆராதித்துப் போற்றும் பல படங்கள் வெளிவந்தன. அடிமையாக இருந்தாலும் நேர்மையாக இருக்கவேண்டும், படியளப்பவர்களை அனுசரித்துப் போகவேண்டும், அவர்களிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்று அவை போதித்தன.

தொழிலாளர்களைச் சுரண்டி கொழுக்கும் முதலாளிகளை கருணையாளர்களாகத்தான் இந்தப் படங்கள் முன்னிறுத்தின. 'எஜமான் என் பொண்ணுக்குக் கல்யாணம் வச்சிருக்கேன்' என்று வளைந்து, குழைந்து நிற்கும் ஒரு தொழிலாளருக்கு அந்த எஜமான் சில நூறு ரூபாய்களும், தாலியும், புது உடுப்புகளும் சில படி நெல்லும் தந்து திருப்திபடுத்துகிறார். வாழ்த்தி வணங்கிவிட்டு விடைபெறுகிறார் தொழிலாளி. ரஜினி, கமல் போன்றவர்கள் எஜமான் காலடி மண்ணைத் தொட்டு நெற்றியில் வைத்துக்கொண்டு கொண்டாடச் சொல்லிக்கொடுத்தார்கள். இப்படி, ஆண்டான் அடிமை மனோபாவத்தை வளர்த்தெடுக்கும் படங்கள் பற்பல. அங்காடித் தெரு இந்தப் படங்களில் இருந்து மாறுபட்டு, முதலாளித்துவச் சரண்டலை யதார்த்தமாக கண்முன் நிறுத்துகிறது.

படத்தின் இறுதியில், அந்த அண்ணாச்சியை கதாநாயகன் அடித்துத் துவைத்து காயபோடவில்லை என்பது ஆறுதலளிக்கும் விஷயம். நிஜத்தில் அது சாத்தியமும் இல்லை. சுரண்டப்படுபவர்கள் ஒன்றுசேர்ந்து போராடித்தான் வில்லன்களை எதிர்கொள்ளவேண்டும். இதை அங்காடித் தெரு சொல்லவில்லை. நாம் சொல்லலாம்.

தொடர்புடைய மற்றொரு பதிவு.

10 comments:

sathiyabal said...

Very Good Review Maruthan.

Dr.Rudhran said...

well written. good perspective

சுதிர் said...

படம் பார்த்தேன். உஙக்ள் கருத்துக்களோடு ஒத்துப்போகிறேன்.

Anonymous said...

friend. very few tamil films has registered the human emotions in the screen very strongly, this movie is one among them.yes,i accept with ur review at some point,even the low budget films (compared to tamil films)which are made across the globe are getting noticed for their story and for the way they explore the human feelings.according to me this movie is such an effort.lets we expect more such films from tamil industry. your review is good........

Anonymous said...

இசை நிச்சயம் மோசம் தான். ஆனால் படம் எல்லாவற்றையும் மறக்க செய்து விட்டது

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Anjali said...

தம்பி வெட்டோத்தி சுந்தரம்

முதன் முதலாக கரண்-சரவணன் கூட்டணி

அஞ்சலியின் கண்கள் படமுழுக்க காதல் கொடுÅ¡Ç¡¸ பயன் படுத்தப்பட்டிருக்கிறது

படத்தை பலப்படுத்த கரண், சரவணன், அஞ்சலி, கஞ்சாகருப்பு, சண்முகராஜ், காதல் தண்டபாணி, சரவணசுப்பையா, நந்தாசரவணன், பாலாசிங் என ஒரு ஆர்ட்டீஸ்ட் பட்டாளமே இருக்கு

http://www.vettothi.com/

பாஸ்கர் said...

அட நீங்க சினிமா பத்தி எல்லாம் எழுதுவீங்களா?

சுப. முத்துக்குமார் said...

Dear Mr. Maruthan,
I've read many reviews on this movie. But yours is thrown light from different angle. It reflects your usual perspective (for which you are known for) on a movie. Nice one.

padmanabhan said...

ஷாப்பிங் என்பது ஒரு சுகமான அனுபவம்.
அதையே அங்காடித் தெரு மாதிரியான கடைகள் வாடிக்கையாளர்களுக்குத் தருவதில்லை.
வேறு என்ன இவர்களிடம் எதிர்பார்கக முடியும்.
நான் இந்த மாதிரிக் கடைகளைப் புறக்கணித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது.