June 10, 2010

சந்திரகிரி ஆற்றங்கரை உங்களை வரவேற்கிறது!


சாரா அபுபக்கர் எழுதி தி.சு. சதாசிவம் மொழிபெயர்த்திருக்கும் சந்திரகிரி ஆற்றங்கரையில் நாவலின் முன்னரையில், தோப்பில் முஹமதுமீரான் அதன் முழுக் கதையையும் சொல்லாமல் இருந்திருக்கலாம். 128 பக்கங்களே கொண்ட சிறிய கிரவுன் சைஸ் புத்தகம் அது. அதையும் சாறு பிழிந்து ஓரிரு பக்கங்களில் கொடுத்திருக்கவேண்டுமா? பிரச்னை என்னவென்றால், முன்னுரையை முதலில் படிப்பவர்கள், ஒர் அபலைப்பெண்ணின் மற்றுமொரு துயரக் கதை என்று முடிவுசெய்துகொண்டு, புத்தகத்தை மூடிவிடுவதற்கோ அல்லது அசிரத்தையாக அணுகிவிடுவதற்கோ வாய்ப்பு உண்டு. எனவே, முதல் கோரிக்கை, முன்னுரையை முதலில் படிக்கவேண்டாம்.

ஓர் இஸ்லாமிய குடும்பத்தின் கதையை விவரிக்கும் இந்நாவல் முதல் முதலில் கன்னடத்தில் எப்போது வெளிவந்தது என்று தெரியவில்லை. (சிறந்த மொழிபெயர்ப்புக்காக தி.சு. சதாசிவத்துக்கு 2000ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டிருக்கிறது). இஸ்லாமிய சமூகத்தில் இருக்கும் தவறுகளைத் தேடிப்பிடித்து, பெரிதாக்கி எழுதியிருக்கிறார் என்னும் குற்றச்சாட்டை அபுபக்கர் இந்நாவலின் மூலம் சந்தித்துள்ளார். நாதிரா என்னும் எளிய பெண்ணை, இஸ்லாமிய மதவாதம் எப்படி அலைகழித்து, சின்னாபின்னமாக்குகிறது என்பதுதான் நாவலின் அடிநாதம்.

திருமணம் குறித்தும், மணவிலக்கு குறித்தும் (தலாக் முறை), மறுமணம் குறித்தும் குர்ஆன் சொல்லியிருக்கும் சில கருத்துகளை அபுபக்கர் வெளிச்சம் போட்டு காட்டி, அவற்றை பரிகசித்திருக்கிறார் என்பதுதான் அவர் மீதான பிரதான குற்றச்சாட்டு. இஸ்லாத்தை விமரிசிக்கும் பலர் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஒரு முஸ்லிமாக இருந்துகொண்டு நம் மதத்தைப் பழிக்கலாமா என்று மதவாதிகள் வருத்தம் அடைந்திருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, திருக்குர்ஆனின் வாசகங்கள் இறுதியானவை. எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியவை. மாறுபடுவதற்கோ முரண்படுவதற்கோ அவசியமில்லை.

ஆனால், இது இஸ்லாத்துக்கு மட்டுமேயான குறைபாடு அல்ல என்பதை நாம் கவனிக்கவேண்டும். எந்த மதமும் சகிப்புத்தன்மைக்கு இடம் அளித்ததில்லை. அனைத்து மதங்களும் தங்கள் மறைநூல்களை வானத்தில் உயர்த்திப்பிடிக்கின்றன. மறைநூல் போதிக்கும் சட்டங்களில் இருந்து மாறுபடுபவர்கள், வெவ்வேறு வகையில் தண்டிக்கப்படுகிறார்கள். இதில் இஸ்லாத்தை மட்டும் தனிமைப்படுத்தி, படு பயங்கரமான, காட்டுமிராண்டித்தனமான மதமாக சித்தரிக்க முயல்வதில் ஓர் அரசியல் இருக்கிறது.

கிறிஸ்தவத்தின் குறைபாடுகளையும் இந்து மதத்தின் குறைபாடுகளையும் விமரிசத்தவர்களும்கூட அபுபக்கரைப் போலத்தான் விமரிசிக்கப்பட்டார்கள். உள்ளுக்குள் இருந்து காட்டிக்கொடுப்பவர்கள் துரோகிகள். வெளியில் இருந்துகொண்டு விமரிசிப்பவர்கள் எதிரிகள். மாற்று கருத்துள்ளவர்களை மதவாதிகள் இப்படித்தான் வகைப்படுத்துகிறார்கள்.

சந்திரகிரி ஆற்றங்கரையில் வேறு சில உண்மைகளையும் தரிசிக்கலாம். மதவாதம் ஆதிக்கம் செலுத்தும் இடத்தில், ஆணாதிக்கம் இருந்தே தீரும். ஆண்களுக்காக, ஆண்களால் படைக்கப்பட்ட ஒரு சித்தாந்தம், மதம். கடவுள்கள் ஆண்களால் உருவாக்கப்பட்டவர்கள். மறைநூல்களை கற்று, பரப்புபவர்கள் ஆண்கள். காரணம், மதம் ஆண்களுக்கு அனுகூலமாக இருக்கிறது. ஆண்களுக்கு மட்டுமே அனுகூலமாக இருக்கும்படியாக வளைக்கப்பட்டிருக்கிறது. பெண்கள் ஆண்களின் அடிமைகள் என்பதால் மதமும் பெண்களை அடிமைகளாகவே நடத்துகிறது.

தன் நாவலின் நோக்கம் என்று அபுபக்கர் குறிப்பிடுவது இதைத்தான். 'குர்ஆனைத் திருத்தி அமைப்பது என் நோக்கமல்ல. மறைநூல்களில் இருப்பதை அன்றாட வாழ்க்கையில் நடைமுறைக்குக் கொண்டுவரும்போது பெண் எப்படிப்பட்ட மனோரீதியான வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறள் என்று எடுத்துக்காட்டுவதே என் நோக்கம்.'

அபுபக்கர் இஸ்லாத்தில் காணப்படும் குறைபாடுகளை மட்டுமே எதிர்க்கிறார், இஸ்லாத்தை அல்ல. பகவத் கீதையாக இருந்தாலும் சரி, பைபிளாக இருந்தாலும் சரி, குர்ஆனாக இருந்தாலும் சரி. மறைநூல்களின் வசனங்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பொருள் கொள்கிறார்கள். இதில் யார் சொல்வதை சரி என்று ஏற்பது? 'குர்ஆனின் மொழிகளுக்குப் பொருளூரை புரிந்தால் மட்டும் போதாது. அதன் அடிப்படையான நோக்கங்களையும் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும்' என்கிறார் அபுபக்கர்.

ஓர் உதாரணத்தையும் அவர் அளிக்கிறார். மூன்று முறை தலாக் சொல்லிவிட்டு கணவன் தன் மனைவியை விலக்கி வைக்கலாம் என்று குர்ஆன் சொல்கிறது. ஆனால், மூன்றையும் ஒரே சமயத்தில் சொல்லவேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஒரு முறை தலாக் சொன்னபிறகு, ஒரு திங்கள் கழிந்த பிறகே அடுத்த தலாக் சொல்லவேண்டும். பிறகு, இடைவெளிவிட்டு மூன்றாவது முறை. அதுவரை, மனைவி கணவனுடன் சேர்ந்துவாழவேண்டும். இந்த இடைவெளி கொடுக்கப்பட்டதன் நோக்கம், கணவனுக்கு மனமாற்றம் நிகழவேண்டும் என்பதுதான்.

'குர்ஆனின் விளக்கங்களை ஆழமாகப் படிக்கப்படிக்க நம்மை வியப்பிலாழ்த்தும் வகையில் பல செய்திகள் அதில் புதைந்து கிடக்கின்றன... மறை நூல்களை கண் திறந்து மனம் திறந்து பயில வேண்டும். அறிவும் ஆய்வுத்திறனும் கொண்டு அதன் திருமொழிகளின் உண்மைப் பொருளையும் நோக்கத்தையும் புரிந்துகொண்டால் எல்லோருக்கும் மேன்மை கிட்டும்.'

புரியவில்லை. மறைநூல்களில் இருந்து எப்படிப்பட்ட உண்மைப் பொருளை தேடி எடுக்கவேண்டும் என்கிறார் அபுபக்கர்? அனைவருக்கும் பொதுவான ஓர் உண்மையை மத நூல்களில் இருந்து கண்டெடுப்பது சாத்தியமா? அல்லது அப்படி ஒன்று இருக்கிறதா? நாதிரா அனுபவித்த துயரங்களை இன்னொரு பெண் அனுபவிக்காமல் இருக்க நாம் என்ன செய்யவேண்டும்? மதத்தைச் சீர்திருத்தினால் போதும், மறைநூல்களின் உள்ளார்ந்த உண்மையைப் புரிந்துகொண்டால் போதும் என்கிறார் அபுபக்கர்.

இந்து மதம், கிறிஸ்தவம், இஸ்லாம் அனைத்தும் வெவ்வேறு அடுக்குகளில் பல்வேறு சீர்திருத்தங்களைச் சந்தித்துள்ளன. ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை. மாறாக, மோசமான விளைவுகளே வெளிப்படையாகவே காணக்கிடைக்கின்றன. இனியும் சீர்திருத்தங்கள் செய்துகொண்டிருக்கமுடியாது. இனியும் உண்மைப் பொருளை மறை நூல்களில் தேடிக்கொண்டிருக்கமுடியாது. துயரங்களைத் தவிர அளிக்க ஒன்றுமில்லை என்று மறைநூல்கள் பலமுறை நிரூபித்துவிட்டபிறகும் எதற்காக அவற்றை நாம் துரத்திக்கொண்டிருக்கவேண்டும்? இடிந்துபோன, உளுத்துப்போன மதக்கட்டுமானங்களுக்கு எதற்கு வீணாக வண்ணப்பூச்சு?

பல கோடி நாதிராக்கள் தொடர்ந்து மதங்களால் அலைகழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். சந்திரகிரி ஆற்றங்கரையில் கழுகுகள் வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன.

(சந்திரகிரி ஆற்றங்கரையில், சாரா அபுபக்கர், தமிழில்: தி.சு. சதாசிவம், ஸ்நேகா)

8 comments:

சுதிர் said...

நினைவுகள் அழிவதில்லை படித்திருக்கிறீர்களா? அதுவும் கன்னட நாவல் தான். அருமையான கதை

ஆர்.கே said...

நிச்சயம் வாங்கி படிக்கிறேன். இது போன்ற பல நல்ல புத்தகத்தை அறிமுகம் செய்யுங்கள் மருதன்

Anisha Yunus said...

மருதன்,

ஓர் இஸ்லாமிய கதையை அறிமுகப்படுத்தியதற்கு மிக மிக சந்தோஷம். ஆசிரியரின் உண்ர்வுகளோடு சிறிது விலகினாலும், சிறிதே ஒத்துப் போகின்றேன். நீங்கள் கேட்கும் கேள்வி புதிது அல்ல. எப்படி மறை நூல்களிலிருந்து சரியான, தெளிவான உண்மையை எடுத்துக் கொள்வது என்னும் கேள்வி. உதாரணத்திற்கு குர்'ஆனில் அதன் வாசகங்களை ஆராயும்போது 'அஸ்பாபுன் நுஸூல்' என்னும் படிப்பைக் கொண்டே ஆராய முயற்சிப்பார்கள். ஏனெனில், ஒவ்வொரு வசனமும் எவ்விடத்தில், எந்த நேரத்தில், எதற்காக, எந்த சம்பவத்தின்பொழுது இறக்கப்பட்டது என்பதற்கான வரலாறே 'அஸ்பாபுன் நுஸூல்' என்பதாகும். அது மட்டுமன்றி வசனத்தின் கொள்கையையும் (அது உபதேசமா, கட்டளையா, முன்னோர்களின் கதையா) என்பதும் இந்த படிப்பை கொண்டே விளங்க முடியும். அதில்லாமல், குர்'ஆனின் மொழிபெயர்ப்புக்களை கொண்டு 10%கூட உண்மையான அர்த்தத்தை விளங்க முடியாது.

ஆசிரியரின் உதாரணத்துக்கே வருவோம். தலாக் சொல்லும் முறையை எப்படி இஸ்லாம் போதிக்கின்றது என்று கூறுகிறார். அதே வேளையில் கருத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், தலாக் ஒரு தடவை கூறிய பின் அவ்வீட்டிலிருந்து அப்பெண்ணிற்கு வெளியே செல்ல அனுமதியில்லை. அந்த கணவனும் மனைவியும் சிறிது தனிமை கிடைத்தாலோ சில பல நேரங்களுக்கு பிறகோ மறுபடியும் மனமொத்து வாழக்க்கூடும் என்று எண்ணியே அப்பெண்ணை அதன் பின்பும் கணவனோடே இருக்க அறிவுரைக்கிறது. 40 நாட்களின் முடிவிலே கணவன் மறுபடி முடிவெடுக்கலாம். ஆனால் இந்த உண்மை இப்படியிருக்க மீடீயாக்களும், சினிமாவும் இன்னும் பல உண்மையில் ஆணாதிக்கத்தாலும், தான் பின்பற்றும் மதத்தையே சரியாக விளங்காததாலும் சிலர் செய்யும் தப்பினால் மூன்று தலாக் என்பது பெண்ணுக்கு விலங்கு என்பது போல ஆகிவிட்டது. இன்னும் இறைவனுக்கு பிரியமில்லாத ஆனாலும் மனிதனின் பலவீனம் கருதி அனுமதிக்கப்பட்ட காரியமே தலாக் ஆகும். இன்னும் அதன்மேல் நிறைய விஷயங்கள் இருக்கின்றது. இஸ்லாத்தில் உண்மையில் குறைகள் கிடையாது. ஜார்ஜ் பெர்னாட்ஷா ஒரு தடவை கூறியது போல மிக அற்புதமான சரியான, தெளிவான ஒரு வாழ்க்கை முறையே இஸ்லாமாகும், ஆனால் மிக முரண்பட்ட, முட்டாளான பிந்தொடர்பவனாகவே ஒரு முஸ்லிம் இருக்கிறான். சில பல முஸ்லிம்களை பார்த்து இஸ்லாத்தை எடை போட வேண்டாம் எபதே என் வேண்டுகோள். நன்றி.

Anonymous said...

i read this book once...at that time i liked...but not now... (ungalukku pengalai paththi onnum theriyalaiyo?)

Jagan said...

Ungalal mattum eppadi azhagaga eludha mudigiradhu!!!!!!!!!!!!

Anonymous said...

marudhan,

Important subject: just show only post titles instead of showing both post title and its content.

Bloggers don't know the mentality of readers. They are showing both post title and its content. It must be avoided. Surely. Bloggers must show only post titles as like s.ramakrishnan has in his blog.

Please not these 3 things:

1. மக்களுக்கு பொறுமை கிடையாது. உங்கள் பிளாகின் முதல் பக்கத்தில் உள்ள போஸ்ட்டுகளை மட்டுமே பார்த்து விட்டு அவர்கள் வெளியேறி விடுவார்கள். அதிலும் 2 பிரச்சனை உண்டு. பலருடைய கட்டுரைகள் மிகவும் நீளமாக இருக்கின்றன. அதனால் முதல் பக்கத்தில் பத்து போஸ்ட்டுகள் மட்டுமே இருந்தால் கூட ஒருவித அலுப்பை அவை ஏற்படுத்திவிடும். Scroll barஐ கீழே fast ஆக‌ இழுக்கும் போது முதல் பக்கத்தில் உள்ள கட்டுரைகளின் தலைப்புகளைக் கூட தவறிவிடுவார்கள்.

2. பல பொது மக்களுக்கு ஒரு blogஐ எப்படி use செய்வது என்பதே கூட தெரியாது. முதல் பக்கத்திலேயே Blog archive sideல் உள்ளது. அதை திறந்து பார்த்தால் இதுவரை எழுதப்பட்டுள்ள அத்தனை கட்டுரை தலைப்புகளையும் பார்க்க முடியும். ஆனால் இது கூட பலருக்கும் தெரியாது என்பது உண்மை.

3. மருதன், முகில், பா.ராகவன் போன்ற சில கிழக்கு எழுத்தாளர்கள் கிட்னி பிரச்சனையால் அவதிப்ப‌டும் முத்துக்குமார் என்பவருக்கு உதவுமாறு ஒரு கட்டுரை எழுதினார்கள். அவர்கள் புதிதாக அடுத்த கட்டுரைகளை எழுதிய போது அந்த உதவி தேவை என்ற கட்டுரை கீழே இறங்கிப் போய் விட்டது அல்லது அடுத்த பக்கத்திற்கு போய் விட்டது. அதனால் அந்த முக்கிய கட்டுரை புதிய வாசகர்கள் கண்ணில் உடனடியாக படாமல் போய்விட்டது. எந்த வாசகரும் post titleகளுக்காக blog archiveஐ பொறுமையாக திறந்து பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை. மேலும் next page என்பதை திறந்து திறந்து பார்ப்பார்கள் என்று சொல்வதும் முடியாது. அவர்களுக்கு பொறுமையும் இல்லை. நேரமும் இல்லை. இந்த கிழக்கு எழுத்தாளர்கள் மட்டும் போஸ்ட் டைட்டில்கள் மட்டும் தெரியுமாறு செட் செய்திருந்தால் அந்த முக்கிய கட்டுரை இன்னும் பலர் கண்ணில் எளிதாய் பட்டிருக்கும். இன்னும் நிறைய பேரின் உதவி கிடைத்திருக்கும்.

So, Please set your blog to show just post titles only instead of showing both title and its content as in my blog http://blufflink.blogspot.com/

A blogger followed my tips and she has changed her blog to show only post title. Watche her blog http://livingsmile.blogspot.com/

For showing only post title instead of showing both title and its content visit and follow steps mentioned here

http://www.anshuldudeja.com/2009/03/show-only-post-title-in-blogger-label.html

(If you decide to show only post title in your blog after changing it so set you blog to show 50 post titles per page. It will enable the reader to have very quick glance of your posts.)

Anonymous said...

introduce more such books maruthan.

Anonymous said...

இஸ்லாத்தை விமர்சிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த் புத்தகத்தை எழுதியிருப்பார் போலும்