நகரின் மையத்தில் அமைந்திருந்தது ஆறு மீட்டர் உயரமுள்ள ஸ்டாலினின் அந்த வெங்கலச் சிலை. ஜூன் 25ம் தேதி, வெள்ளிக்கிழமை. நடு இரவைத் தேர்ந்தெடுத்தார்கள். காவல் துறையினர் துப்பாக்கியுடன் வட்டமாக நின்றுகொண்டிருக்க, பணியாளர்கள் சிலையை கயிறு கொண்டு இறுக்கமாகக் கட்டி, மெல்ல, மெல்ல சாய்க்க ஆரம்பித்தார்கள்.
அதற்குள் விஷயம் எப்படியோ கசிந்து உள்ளூர் தொலைக்காட்சியில் இருந்து நிருபர்கள் காமிராவுடன் வந்துவிட்டார்கள். படம் பிடிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். பளிச்சென்று வெளிச்சம் பாய்ந்த மறுகணமே, காவலர்கள் நிருபர்கள் மீது பாய்ந்துவிட்டார்கள். காமிரா கைப்பற்றப்பட்டது. நிருபர்கள் தாக்கப்பட்டனர். அதற்குள் சிலை தரையில் படுக்கவைக்கப்பட்டிருந்தது. ஸ்டாலினின் முகம் நிலத்தை நோக்கி திரும்பியிருந்தது. திறந்திருந்த கண்கள் அவர் பிறந்த மண்ணை கூர்மையாக பார்த்துக்கொண்டிருந்தன. மீண்டும் நிமிர்த்தி, தயாராக இருந்த வண்டியில் வைத்து கொண்டு சென்றுவிட்டார்கள்.
ஜார்ஜியாவில் உள்ள கோரி என்னும் பகுதியின் மையத்தில் நின்றுகொண்டிருந்த சிலை அது. சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் பிறந்த இடம். கோரியில் எஞ்சியிருந்த ஸ்டாலினின் இறுதி சிலை இதுவே என்கிறார்கள். 1952ம் ஆண்டு நிறுவப்பட்டது. இப்போது அந்த இடத்தில் போரில் (ஜார்ஜியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் 2008ல் நடைபெற்ற யுத்தம்) இறந்த ஜார்ஜியர்களின் நினைவுச் சின்னத்தை அமைக்கவிருக்கிறார்கள்.
சிலை அகற்றப்பட்டதை கைதட்டி ரசிக்கும் ஒரு கும்பலை மறு நாள் காலை தொலைக்காட்சியில் காட்டினார்கள். கண்களில் நீர் கோர்த்து உறைந்து நிற்கும் சிலரையும் காட்டினார்கள். அவர்களில் ஒருவர் பிபிசி நிருபரிடம் வெடித்தார். ‘எதற்காக இரவு நேரத்தில் சிலையை கைப்பற்றி எடுத்துச்செல்ல வேண்டும்? இதைத் திருட்டு என்றல்லாமல் வேறு எப்படி அழைப்பது?’ மற்றொரு பெண் பதிலளித்தார். ‘ஒரு வேளை பகலில் வந்திருந்தால், அவர்கள் முயற்சி தோல்வியடைந்திருக்கும். இங்குள்ள மக்கள் இந்தச் சிலையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்று அவர்களுக்குத் தெரியும்.’
ஸ்டாலினின் இந்தச் சிலையை அகற்றவேண்டும் என்று 1950களில் முதல் முதலில் குரல் கொடுத்தவர் அப்போதைய தலைவர் நிகிதா குருஷேவ். அதற்கான பணிகளையும் அவர் ஆரம்பித்து வைத்தார். ஆனால், பலன் கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு, வெவ்வேறு அரசாங்கங்கள் வெவ்வேறு வழிகளில் முயன்றிருக்கின்றன. ஒவ்வொரு முறையும் எதிர்ப்புகள், தடங்கல்கள், போராட்டங்கள். எனவே, இந்த ரகசிய இரவு நேர ஏற்பாடு.
அவிழ்க்கப்பட்ட நெல்லிக்கனி மூட்டையாக சோவியத் யூனியன் சிதற ஆரம்பித்தபோதே அடையாள அழிப்புகளும் தொடங்கிவிட்டன. லெனின், ஸ்டாலின் இருவரது உருவச் சிலைகளும் பல இடங்களில் இருந்து அகற்றப்பட்டன. மேற்கத்திய அரசியலையும் கலாசாரத்தையும் தழுவிக்கொண்ட இன்றைய ரஷ்யாவுக்குக் கம்யூனிசத்தை நினைவூட்டும் எந்தவொரு அடையாளமும் தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால் அவை ஆபத்தானவை. எனவே, கறுப்பு கொண்டு சிவப்பை அழிக்க ஆரம்பித்தார்கள். அந்த வரிசையில், ஸ்டாலினின் இந்தச் சிலையும் அகற்றப்பட்டுள்ளது.
(கல்கியில் இந்த வாரம் வெளிவந்த என் கட்டுரை)
3 comments:
down down communism
down down Anonymous!!!
மீடியாவில் இது பற்றிய எந்த செய்தியும் இல்லையே! ஒரு சிலையை அகற்றுவதன் வாயிலாக ஸ்டாலினின் பங்களிப்பை வீழ்த்த முடியுமா?
Post a Comment