December 7, 2010

முதலாளித்துவம் நன்மை செய்திருக்கிறதா? பகுதி 2

பகுதி 1

உத்சா பட்நாயக்கின் உரை தொடர்கிறது.

1) 1700களில் கிடைத்ததைக் காட்டிலும் 1850களில் பிரிட்டிஷ் மக்களுக்குக் கிடைத்த உணவின் அளவு குறைவு. நாட்டின் உணவுத் தேவையைத் தீர்க்க பிரிட்டன் அயர்லாந்தைக் கடுமையாகச் சுரண்டியது. விளைவு, 1846-47 ஆண்டுகளில் அயர்லாந்து மிகத் தீவிரமான பஞ்சத்தைச் சநதித்தது. எட்டில் ஒரு பங்கு அயர்லாந்து மக்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்காவும் மிகப் பெரிய இழப்பைச் சந்தித்தது. மத்திய அமெரிக்க நாகரிகத்தைச் சேர்ந்த பத்தில் ஒன்பது பங்கு ஆதிவாசிகள் ஸ்பானிஷ் மற்றும் ஹிஸ்பானிய குடியேற்றங்களால் கொல்லப்பட்டனர்.

2) விவசாயத்தில் அல்ல, தொழில் வளர்ச்சியில்தான் மேற்கத்திய நாடுகள் அதிக அக்கறை செலுத்தின. உணவுத் தேவைகளுக்கு, காலனி நாடுகள். இறக்குமதி சுரண்டல் மூலம் மேற்கு நாடுகளின் உணவுத் தேவை பூர்த்தியான அதே சமயம், மூன்றாமுலக நாடுகள் கடும் பசியால் அவதிப்பட்டன. ஊட்டச்சத்து குறைந்தது. பஞ்சம் படர்ந்தது.

3) அனைத்துக்கும் அடிப்படை நிலம். நிலம் என்பது உழைப்பின் மூலம் கிடைத்த பொருள் அல்ல என்றார் மார்க்ஸ். உணவுப் பொருள்களைப் போல் நிலத்தை நம் தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்யமுடியாது. எனவே வளமான நிலங்களைத் தேடி வளர்ந்த நாடுகள் மூன்றாமுலக நாடுகளை சூழ்கின்றன. மூன்றாமுலக நாடுகளின் அரசுகள் வளர்ந்த நாடுகளை வரவேற்கின்றன. அவர்களுக்கு நிலத்தை விற்கின்றன. உள்ளூர் மக்கள் வாங்கவியலாதபடி விலையை உயர்த்தி, கடுமையான வரிகள் விதித்து, அவர்களுக்கு நிலம் கிடைக்காமல் செய்கின்றன. இந்தியா போன்ற நாடுகள் மேற்கு நாடுகளின் சூப்பர் மார்க்கெட்டுகளை நிரப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றன.

4) முதலாளித்துவ அமைப்பில் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படுவது சகஜம். இந்தப் பிரச்னையை அனைத்து மேற்கு நாடுகளும் எதிர்கொண்டன. பிரச்னையைத் தீர்க்க இந்நாடுகள், தொடக்க காலம் தொட்டு ஓர் உபாயத்தைக் கடைபிடிக்கின்றன. மிக எளிமையான வழி. வேலையில்லாத பெருங்கூட்டத்தை இந்நாடுகள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தன. காலனியாதிக்கம் மூலம் இது சாத்தியமானது. இந்தியா போன்ற நாடுகளை ஆக்கிரமித்த பிரிட்டன் தன் நாட்டில் உள்ள வேலையற்றவர்களை அங்கே ஏற்றுமதி செய்தது.

5) ஏற்றுமதி செய்யப்பட்டவர்களைக் குடியமர்த்தவும் அவர்களுக்கு வேலை வழங்கவும் மேற்கு நாடுகள் காலனி நாடுகளின் நிலத்தைப் பயன்படுத்திக்கொண்டன. முன்னதாக, நிலத்தில் குடியிருந்த ஆதிவாசிகள் அகற்றப்பட்டனர். அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரிரேலியா ஆகிய நாடுகளுக்கு ஏற்பட்ட நிலைமையை ஆராய்ந்தால் இந்த உண்மை விளங்கும்.19ம் நூற்றாண்டு மத்தியில், பிரிட்டனில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 2 சதவீத மக்கள் வெளிநாடுகளுக்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்தனர். கிரிமினல் குற்றவாளிகளும், அடித்தள வகுப்பைச் சேர்ந்தவர்களும் ஆஸ்திரேலியாவுக்குத் துரத்தப்பட்டனர்.

(தொடரும்)

No comments: