December 6, 2010

முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டங்கள் - 3

உழைப்புக்கு ஏற்ற கூலி வேண்டும் என்பது தொழிலாளர்களின் முக்கியக் கோரிக்கை. அதே சமயம், முதன்மையான அடிப்படை கோரிக்கை, வேலை நேரத்தைக் குறைக்கவேண்டும் என்பதுதான். தொழிற்சாலைகள் நிர்மாணிக்கப்பட்ட காலம் தொடங்கி முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கை இது. சூரிய உதயம் தொடங்கி சூரிய மறைவு வரை வேலை செய்வது சாத்தியமில்லை என்று அமெரிக்கத் தொழிலாளர்கள் தங்கள் வருத்தங்களைப் பதிவு செய்தனர். ஒரு நாளைக்கு பதினான்கு, பதினாறு, பதினெட்டு மணி நேரங்கள் வேலை செய்யுமாறு தொழிலாளர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். சில சமயம், இருபது மணி நேரங்கள்கூட தொழிற்சாலையில் கழிக்கவேண்டியிருந்தது.

உலகின் முதல் தொழிற்சங்கமாக அறியப்படும் மெக்கானிக்ஸ் யூனியன் ஆஃப் பிலடெல்ஃபியா 1827ம் ஆண்டு, எட்டு மணி நேர வேலை வேண்டி போராட்டத்தைத் தொடங்கியது. 1834ம் ஆண்டு, நியூ யார்க்கில் ரொட்டி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் இதே போராட்டத்தைத் தங்கள் பகுதியில் தொடங்கினார்கள். எகிப்திய அடிமைகளைக் காட்டிலும் இவர்கள் கடுமையாக வேலை வாங்கப்பட்டனர். தினமும் பதினெட்டு முதல் இருபது மணி நேரங்கள் இவர்கள் பணியாற்றவேண்டியிருந்தது. பத்து மணி நேரப் போராட்டம் என்பது உயிர் வாழ்வதற்கான குறைந்தபட்ச அடிப்படைத் தேவை என்பதை ரொட்டித் தொழிலாளர்கள் மிகத் தாமதமாகத்தான் கண்டுகொண்டார்கள்.

பத்து மணி நேர வேலை போராட்டம் பிற பகுதிகளுக்கும் பரவியதால் தொழிற்சாலைகளில் நெருக்கடி ஏற்பட்டது. 1837ம் ஆண்டு, அமெரிக்க அதிபர் மார்டின் வான் புரேன், அரசாங்கத் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு பத்து மணி நேர வேலையை அமல்படுத்தப்படுவது தொடர்பான உத்தரவைச் சட்டப்பூர்வமாகப் பிறப்பித்தார். ஆனால், இது ஒரு பிரிவினரை மட்டுமே சமாதானப்படுத்தியது. தனியார் ஆலைகளில் பணியாற்றி வந்த பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நிலை அப்படியே தொடர்ந்தது. எட்டு மணி நேர பணி போராட்டத்தை இவர்கள் விடாமல் தொடர்ந்துகொண்டிருந்தனர்.

எங்கெல்லாம் தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்பட்டார்களோ அங்கெல்லாம் போராட்டத்தீ பரவியது. ஆஸ்திரேலியாவில் கட்டுமானத் தொழிலாளர்கள் இந்தக் கோரிக்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தனர். பத்து மணி நேரம் என்பதற்குப் பதிலாக, எட்டு மணி நேரத்தை இவர்கள் முன்வைத்தனர். ‘எட்டு மணி நேரம் வேலை. எட்டு மணி நேரம் பொழுதுபோக்கு. எட்டு மணி நேரம் ஓய்வு.’ 1856ம் ஆண்டு இந்தக கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அமெரிக்காவில், நேஷனல் லேபர் யூனியன் என்னும் அமைப்பு 1866ம் ஆண்டு தொடங்கப்பட்டபோது, கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘நமது முதன்மையான மற்றும் முக்கியமான தேவை, முதலாளித்துவ அடிமைத்தனத்தில் இருந்து நம் தொழிலாளர்களை மீட்டெடுப்பது. அதற்கு எட்டு மணி நேர வேலை நேரம் அத்தியாவசியம். அமெரிக்க ஐக்கியத்தில் உள்ள அத்தனை மாநிலங்களிலும் இதனை கட்டாய சட்டமாகக் கொண்டுவரவேண்டும். இந்த பெருமைமிகு சாதனையை அடையும்வரை நாம் அதற்காக உழைக்கவேண்டும்.’ இந்தக் கோரிக்கை அமெரிக்கா முழுவதும் பரவ ஆரம்பித்தது.

1881 முதல் 1884 வரை, ஐந்நூறுக்கும் குறைவான வேலைநிறுத்தங்கள் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டன. ஒரு ஆண்டுக்கு 1,50,000 தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தங்களில் கலந்துகொண்டனர். 1885ம் ஆண்டு, 2,50,000 தொழிலாளர்கள் 700 வேலைநிறுத்தங்களில் பங்கேற்றனர். அடுத்த ஆண்டு, 1,572 வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன. ஆறு லட்சம் கலந்துகொண்டனர். 1885ம் ஆண்டு 2467 தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டன. 1886ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 11,562 ஆக உயர்ந்தது

1886, மே 1 அன்று சிகாகோ வரலாறு காணாத பெரும் கூட்டத்தைக் கண்டது. வெவ்வேறு ஆலைகளில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் ஓர் அமைப்பாக திரண்டு வந்த தருணம் அது. எட்டு மணி நேர கோரிக்கையை முன்வைத்து வேறு பல போராட்டங்களும் முன்னர் நடந்திருக்கின்றன என்றாலும் மே 1 பல புதிய செய்திகளை பகிர்ந்துகொண்டது. தொழிலாளர்கள் என்பவர்கள் உதிரிகள் அல்லர். அவர்கள் ஒரு வர்க்கம். அந்த வர்க்கத்தின் பலம், அலாதியானது. அமெரிக்க உழைக்கும் மக்களின் வாழ்வில் மே 1 கம்பீரமான ஓர் அடையாளமாக மாறிப்போனது. சிகாகோவில் இருந்து நியூ யார்க், பால்டிமோர், வாஷிங்டன், மில்வாக்கி, பிட்ஸ்பர்க், சின்சினாட்டி, டெட்ராய்ட் ஆகிய பகுதிகளுக்கும் போராட்டம் பரவியது. தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்துக்கு அவர்கள் குடும்பத்தினரும் பொது மக்களும், வேலையில்லாத இளைஞர்களும் கைகொடுத்தனர். மொத்தத்தில், 3,50,000 பேர் முதலாளித்துவத்துக்கு எதிராகத் திரண்டு ஒரு குரலில் பேசினர். 1200 தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அவர்கள். அமெரிக்க நிலை தடுமாறியது. ஆலைகள் மூடப்பட்டன. சாலைகளில் போக்குவரத்து பாதிப்படைந்தது. ரயில் வண்டிகள் நின்றுபோயின.

இரு தினங்கள் கழித்து மே 3 அன்று மெக்கார்மிக் ரீப்பர் வொர்க்ஸ் (McCormick Reaper Works) என்னும் நிறுவனத்தின் நுழைவாயிலில் மூவாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் ஒன்று திரண்டு கோஷமிட்டனர். இதனை சகித்துக்கொள்ள இயலாத காவல்துறை, தாக்குதலில் இறங்கி, ஆறு தொழிலாளர்களைக் கொன்றது. இந்தச் செயலைக் கண்டித்து சிகாகோவில் உள்ள ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4, 1886 அன்று, ஓர் ஊர்வலம் கோஷமிட்டபடி முன்னேறிக்கொண்டிருந்தது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊர்வலம் அது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவலர்கள் திரண்டு வந்தனர். அப்போது திடீரென்று கூட்டத்தில் இருந்து ஒருவர் கையெறி குண்டை எடுத்து எறிந்தார். கண்ணீர் புகை, தாக்குதல் என்று அந்த இடம் வன்முறை களமாக மாறிப்போனது. நான்கு தொழிலாளர்களும் எட்டு காவலர்களும் இறந்துபோயினர். காயமடைந்த பொது மக்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

இந்தச் சம்பவத்துக்கு அரசாங்கத்தை எதிர்த்து கிளர்ச்சி செய்த அராஜகவாதிகள்தான் (Anarchists) காரணம் என்று முடிவு செய்த காவல்துறை, அமைப்பைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தி நீதிமன்றத்தில் நிறுத்தியது. அவர்களுள் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள், ஆகஸ்ட் ஸ்பைஸ் (August Spies), ஆல்பர்ட் பார்சன்ஸ், (Albert Parsons), அடால்ஃப் ஃபிஷர் (Adolph Fischer) மற்றும் ஜார்ஜ் எங்கெல் (George Engel). முதலாளிகளுக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் குரல் கொடுத்த இந்த நால்வரும் தொழிலாளர் இயக்கத் தலைவர்கள். இறப்பதற்கு முன்பு ஆகஸ்ட் ஸ்பைஸ், அதிகார வர்க்கத்துக்கு ஓர் எச்சரிக்கை செய்தியை பதிவு செய்தார். ‘எங்களை அமைதிபடுத்திவிட்டோம் என்று நினைக்கவேண்டாம். ஒரு காலத்தில், எங்கள் அமைதியே மாபெரும் சக்தியாகத் திரண்டு வரும்.’

மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு தலைவர்களுக்கும் வெடிகுண்டு வீச்சுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெரியவந்தது. இவர்களுக்கும், கைது செய்யப்பட்ட பிற அராஜகவாதிகளுக்கும் எதிரான எந்தவிதமான சாட்சியத்தையும் அரசால் முன்வைக்கமுடியவில்லை. இன்று வரை அமெரிக்க வரலாற்றில், ஹேமார்க்கெட் வழக்கு ஒரு கரும்புள்ளியாகவே நீடிக்கிறது. அடக்குமுறையின் அடையாளமாகவும்.

நவம்பர் 13, 1887 அன்று நான்கு தலைவர்களின் இறுதி ஊர்வலம் நடைபெற்றபோது, ஐந்து லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கர்கள் திரண்டு வந்து தங்கள் ஆதரவைப் பதிவு செய்தனர். அமெரிக்கர்கள் அதை கறுப்பு தினமாகக் கொண்டனர். ஜூலை 14 1889 அன்று பாரீஸில் கூடிய இரண்டாவது அகில மாநாட்டில் 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் வந்திருந்தனர். இதில் கலந்துகொண்ட பிரெட்ரிக் எங்கெல்ஸ், தொழிலாளர்களின் எட்டு மணி நேரப் பணி கோரிக்கையை முன்மொழிந்து தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். சிகாகோ சம்பவத்தை இந்த மாநாடு கண்டித்தது. 1890 மே 1ம் தேதி, அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள் தங்கள் இயக்கங்களை முன்னெடுத்துச் சென்று நடத்தவேண்டும் என்றும் இந்த மாநாடு கேட்டுக்கொண்டது. மே 1 சர்வதேச தொழிலாளர் தினமாக உருவெடுத்தது.

பகுதி 1 | பகுதி 2

(தொடரும்)

2 comments:

ஆனந்தகுமார் said...

கம்யூனிசத்துக்கு எதிரான போராட்டங்கள் பற்றியும் எழுதுவிர்களா மருதன்?

Anonymous said...

good post! nice