முதலாளித்துவம் வளர்ச்சியை நோக்கி அல்ல, மாபெரும் வீழ்ச்சியை நோக்கியே முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பதை கண்முன் ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டியது முதல் உலகப் போர். முதலாளித்துவத்தின் கோர முகம் வெளிப்பட்ட தருணம் அது.
லெனின், போரை எதிர்த்தார். நடந்து கொண்டிருப்பது ஏகாதிபத்திய நாடுகள் நடத்தும் போர். இந்தப் போருக்கு அழைப்பு விடுத்திருப்பவர்கள் ஏகாதிபத்தியவாதிகள். இதில் நாம் பங்கேற்கவேண்டிய அவசியம் இல்லை என்றார் லெனின். முதலாளித்துவம் ஏற்படுத்திய சமமற்ற வளர்ச்சியின் காரணமாக அல்லது விளைவாக இந்தப் போர் மூண்டுள்ளது. ஏகாதிபத்திய நாடுகளின் பலம் ஏற்ற இறக்கமாக அமைந்திருப்பதால், அவர்களுடைய சந்தை வாய்ப்புகள் முடக்கப்பட்டதால், இந்தப் போர் மூண்டுள்ளது என்று தெளிவுபடுத்தினார்.
லெனின் ஜெர்மனியை விமரிசித்தார். ஜெர்மானிய பேரரசர் கெய்ஸர் வில்லியமின் நோக்கங்களை மட்டுமல்ல, கெய்ஸருக்கு ஆதரவு அளித்த சமூக, ஜனநாயக மற்றும் சோஷலிச அமைப்புகளையும் லெனின் கண்டித்தார். கெய்ஸரின் போர் முயற்சிக்கு ரீச்ஸ்டாக் அளித்த ஒப்புதலை விமரிசித்தார். ஏகாதிபத்தியப் போர் ஒன்றை ஆதரித்ததன் மூலம், இந்த அமைப்புகள் புரட்சிகர மார்க்சியத்துக்கும் சோஷலிச நோக்கங்களுக்கும் ஊறு விளைவித்துவிட்டன என்றார். ஜெர்மனி மட்டுமல்ல, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் சோஷலிச கட்சிகள் போருக்கு ஆதரவு அளித்திருந்ததை அவர் கண்டித்தார். பெல்ஜியன் சோஷலிஸ்டுகள், சர்வதேச சோஷலிச அமைப்பினர் (International Socialist Bureau), பிரெஞ்சு சோஷலிஸ்டுகள், ரஷ்யாவில் பிளேக்கனோவ் ஆகியோரின் போர் மனப்பான்மையை லெனின் சுட்டிக்காட்டி கண்டித்தார். சர்வதேச சோஷலிச அமைப்புகளிலும், தொழிலாளர் இயக்கங்களிலும் பரவியிருந்த தவறான, ஆபத்தான கண்ணோட்டத்தை இந்தப் போர் வெளிப்படுத்தியுள்ளது என்றார்.
போர்வெறிக்கு இறையாகாத இத்தாலிய சோஷலிச கட்சியை லெனின் பாராட்டினார். பல்கேரியாவிலுள்ள புரட்சிகர சோஷலிஸ்டுகள் இந்தப் போரை எதிர்த்திருப்பதை வரவேற்றார். செர்பியாவிலுள்ள சமூக ஜனநாயகவாதிகள், போருக்கு எதிராக வாக்களித்திருப்பதை அறிந்து மகிழ்ந்தார். ‘பாட்டாளி வர்க்க கடமைகளை’ செர்பியர்கள் சரிவர நிறைவேற்றிவிட்டனர் என்று மனம் திறந்து பாராட்டினார். பல்கேரிய, செர்பிய சோஷலிச அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு, அவர்களுக்கு வழிகாட்டும் பணிகளில் இறங்கினார்.
‘இந்த ஏகாதிபத்தியப் போரை, சிவில் போராக மாற்றவேண்டும்’ என்று லெனின் அறைகூவல் விடுத்தார். போரில் ரஷ்யா கலந்துகொண்டிருப்பது புதிய காலனிகளைக் கைகொள்வதற்காகத்தானே தவிர, ஜனநாயகத்தைக் கொண்டுவருவதற்காக அல்ல. போருக்கு அழைப்பு வந்தவுடன், என் தந்தை நாடு, தாய் நாடு என்று உணர்ச்சிவசப்பட்டு திரண்டுவிடுவது புத்திசாலித்தனமல்ல. ‘அழைப்பு யாரிடமிருந்து வருகிறது என்பதை நாம் கவனிக்கவேண்டும்.’ ஜார் மன்னரின் போர் அழைப்பு, ஏகாதிபத்தியத்தின் அழைப்பு. அதை நாம் பொருட்படுத்தவேண்டியதில்லை.
அதே சமயம், ரஷ்யாவில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஜார் ஆட்சியை முறியடிக்கவேண்டியது அவசியம் என்பதையும் லெனின் சுட்டிக்காட்டினார். ‘நடந்துகொண்டிருக்கும் போரை நாம் நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்’. முதலாளித்துவத்தின் பிடியில் இருந்தும் ஏகாதிபத்திய யுத்தத்தின் பிடியில் இருந்தும் தங்களை விடுவித்துக்கொள்ள மக்கள் புரட்சியில் ஒன்றிணையவேண்டும் என்றார் லெனின். இதன் பொருள், ஜாரை வீழ்த்திவிட்டு, ரஷ்யாவைத் தொழிலாளர்கள் கைப்பற்றிக்கொள்ளவேண்டும் என்பது. லெனின் இதை அடுத்தக்கட்டத்துக்குக் கொண்டு சென்றபோது, இந்த வாதத்துக்குப் புதிய பரிமாமணம் கிடைத்தது. ‘ரஷ்யா மட்டுமல்ல, அனைத்து மக்களும் போரில் ஈடுபட்டுள்ள தங்கள் ஏகாதிபத்திய அரசாங்கத்தைத் தூக்கியெறியவேண்டும்.’ புரட்சிகர மார்க்சியவாதிகள் இதற்கு மக்களைத் தயார்செய்யவேண்டும் என்று லெனின் பிரகடனம் செய்தார்.
உழைக்கும் மக்களுக்கு நாடு என்று எதுவும் இல்லை என்று சொல்லி போரை நிராகரிக்க சொல்பவர்களுக்கு லெனின் விளக்கமளித்தார். ஜார் மன்னர் வழிநடத்தும் போருக்கும் தொழிலாளர்களின் விடுதலைப் போராட்டப் போருக்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்துக்காட்டினார். ‘விடுதலைக்கான போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கம் ஈடுபடும்போது, நாட்டை பாதுகாப்பதே நோக்கமாக இருக்கிறது. நாடு சுதந்தரம் அடைவதற்காக நடத்தப்படும் போரில் உழைக்கும் வர்க்கம் ஈடுபடவேண்டும். ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டத்தின்போது தந்தையர் நாட்டை பாதுகாப்பது மக்களின் கடமை.’
போர் ஆளும் வர்க்கத்தினரால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்படுகிறது. போர் என்பது அரசியலின் இன்னொரு வடிவம் அல்லது தொடர்ச்சி என்றார் லெனின். இரு வகையான போர்களை அவர் சுட்டிக்காட்டினார்.
1. அநீதியான, ஏகாதிபத்தியப் போர்
பிற நாடுகளை ஆக்கிரமிப்பதற்காகவும், மக்களை அடிமைப்படுத்துவதற்காகவும் நடத்தப்படும் போர். சோஷலிச, ஜனநாயக, தேசிய விடுதலை சிந்தனைகளை நசுக்குவதற்காகவும், சோஷலிச சமூகங்களையும் அழித்தொழிப்பதற்காகவும் நடத்தப்படும் போர். இப்படிப்பட்ட போர்களை சாத்திமுள்ள அனைத்து வழிகளிலும் நாம் எதிர்க்கவேண்டும். போரை நிறுத்துவதற்காக, ஒருவர் தன்னுடைய ஏகாதிபத்திய அரசாங்கத்தைத் தூக்கியெறியவேண்டிய நிலை வந்தாலும் தயங்கக்கூடாது.
2. விடுதலைப் போர்
நிலப்பிரபுத்துவ, முதலாளித்தவ அடிமைத்தனத்தில் இருந்து தொழிலாளர்களை விடுபடுவதற்காக நடத்தப்படும் போர். ஏகாதிபத்திய நாடுகளின் பிடியில் இருந்து விடுதலை பெறுவதற்காக காலனி நாடுகள் மேற்கொள்ளும் போர். ஏகாதிபத்திய ஆதிக்கத்தைத் தடுப்பதற்காக நடத்தப்படும் பாதுகாப்பு போர். சோஷலிச சமூகத்தைக் காப்பதற்காக ஏகாதிபத்திய நாடுகள் மீது நடத்தப்படும் போர். உழைக்கும் மக்கள் இந்த வகை போருக்கு அனைத்து வழிகளிலும் உதவி செய்ய முன்வரவேண்டும்.
முதலாளித்துவம் குறித்தும் ஏகாதிபத்தியம் குறித்தும் லெனின் மேற்கொண்ட ஆய்வுகள் சில விஷயங்களைத் தெளிவுபடுத்தின.
போரின் ஊற்றுவாய் ஏகாதிபத்தியம். ஒன்று இருக்கும் இடத்தில் இன்னொன்றும் இருக்கும். தவிர்க்கமுடியாது.
ஏகாதிபத்தியம் நீடிக்கும் வரை, ஆக்கிரமிப்பு போருக்கான தேவை நீடிக்கவே செய்யும்.
போரா அமைதியா என்பதை ஏகாதிபத்தியவாதிகள் முடிவு செய்கிறார்கள். அமைதியை விரும்புபவர்கள் ஒரு அணியில் திரளாமல் இருப்பதால் அவர்களால் வலிமையான போர் இயந்திரத்தைத் தடுக்கவோ தவிர்க்கவோ முடியவில்லை.
சோஷலிச சமூகத்தில், போருக்கான அவசியம் இருக்காது. எனவே, ஆயுதங்களுக்கான அவசியமும் இருக்காது. ஆனால், இப்போதைய சூழலில், ஆயுதங்களைக் கீழே போடுங்கள் என்னும் அழைப்பு பயனளிக்காது. ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உழைக்கும் மக்கள் ஆயுதந்தாங்கவேண்டும் என்பதே சரியான அறைகூவலாக இருக்கும். ஏகாதிபத்திய போர், விடுதலைக்கான ஆயுதப் போராட்டமாக, சிவில் யுத்தமாக மாறவேண்டும்.
முதலாளித்துவத்தின் பொருளாதார வளர்ச்சியில், ஏகாதிபத்தியம் என்பது தனிச்சிறப்பான ஒரு நிலை.
ஏகாதிபத்தியத்தின் ஐந்து சிறப்பு அம்சங்கள் இவை.
1. மூலதனமும் உற்பத்தியும் அபரிமிதமாக வளர்ந்து, ஏகபோக நிலை ஏற்பட்டுள்ளது.
2. வங்கிகளின் மூலதனமும் தொழில் மூலதனமும் ஒன்று சேர்ந்துள்ளன. நிதி மூலனம் என்னும் புதிய வடிவம் பிறந்துள்ளது.
3. பண்டங்களை ஏற்றுமதி செய்வதற்குப் பதிலாக மூலதனம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
4. சர்வதேச ஏகபோக முதலாளித்துவ அமைப்புகள் உருவாகியுள்ளன. இவை, உலகைத் தங்களுக்குள் பங்குபோட்டுக்கொள்கின்றன
5. மொத்த உலக நிலப்பரப்பையும் பெரு முதலாளித்துவ சக்திகள் கூறுபோட்டு பிரித்துள்ளன. இந்தப் பணி முற்றுபெற்றுவிட்டது.
முதலாளித்துவம், வளர்ந்து முதிர்ச்சியடைந்த நிலையில், ஏகாதிபத்தியமாக மாறுகிறது.
சுதந்தர (சந்தைப்) போட்டிகளை ஏகபோகம் தடுக்கவில்லை. இந்தப் போட்டிகளுக்கு மேலாக தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது. சுருக்கமாக சொல்வதானால், ஏகாதிபத்தியம் என்பது ஏகபோக முதலாளித்துவம்.
ஏகபோக மூலதனம் உலகளவில் ஒன்றிணைந்து செயல்படும் என்று லெனின் கணித்தார். நாடுகள் தங்களுக்குள் இதன் அடிப்படையில் ஒப்பந்தங்கள் போட்டுக்கொள்ளும் என்றார். ‘அதாவது, (அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் போல்) ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் உருவாகும் நிலை வரலாம். ஐரோப்பாவில் சோஷலிஸத்தை ஒடுக்குவதற்கும், காலனிய சொத்துகளை தங்களுக்குள் பாதுகாத்துக்கொள்ளவும் இந்த அமைப்பு உதவிகரமாக இருக்கும்.’ தன் ஆய்வின் முடிவில், முதலாளித்துவம் அதன் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக லெனின் அறிவித்தார்.
1 comment:
அதிகார வர்க்கத்தின் சுரண்டலைப் பற்றி மலேசிய எழுத்தாளர் சு.யுவராஜனின் எழுத்து:
http://syuvarajan.com/?p=158
Post a Comment