December 27, 2010

புத்தகங்கள், பூச்சிகள், மனிதர்கள்

படிக்காத சமயங்களில் எழுதிக்கொண்டிருப்பார். அல்லது, புத்தகங்களைச் சரிசெய்து கொண்டிருப்பார். கழுத்து வரை குவிந்திருக்கும் புத்தகங்களைத் துறை வாரியாகப் பிரித்து அலமாரிகளில் அடுக்கி வைப்பது எளிதான வேலை அல்ல. அடுக்குவது ஒரு வேலை, எந்த இடத்தில் எது இருக்கிறது என்று நினைவில் வைத்துக்கொள்வது அதைவிட சிரமமான வேலை. உதவிக்கு ஓரிருவரை மூர்த்தி வைத்திருக்கிறார் என்றாலும், புத்தகங்களைக் கையாள்வதற்கு அவர்களை அவர் அதிகம் பயன்படுத்துவதில்லை.

அநேகமாக K.K.S. மூர்த்தியை நான் கோட், சூட்டில்தான் பார்த்திருக்கிறேன். பெங்களூரு குளிருக்கு ஏற்ற உடை. வயது நிச்சயம் எழுபதைத் தொட்டிருக்கும். பழங்காலக் கூடை நாற்காலியில் ஒரு பேராசிரியரைப் போல் அமர்ந்திருப்பார். அவருக்குப் பின்னால், அரச மரம் போல் ஒரு பிரமாண்டமான அலமாரி நின்றுகொண்டிருக்கும். தலையைக் குனிந்து ஏதேனும் வாசித்துக்கொண்டிருப்பார். அந்தச் சமயத்தில் மூர்த்தியைப் பார்க்கும் பழம்பொருள் ஆர்வலர்கள், அரியதொரு சிலை என்று நினைத்து அவரை வாங்கிக்கொண்டு சென்றுவிடக்கூடும்.

உண்மையில், மூர்த்தி அரிதானவர்தான். எடை போட்டும், முன் பின் அட்டைகளைத் திருப்பிப் பார்த்தும் விலையைச் சொல்லி, பத்தோ இருபதோ குறைத்து, தள்ளிவிடும் பழையப் புத்தகக் கடைக்காரர்கள் (இவர்களும் முக்கியமானவர்களே) மத்தியில் அவர் அரிதானவர். புத்தக விற்பனையாளர் என்பதைவிட புத்தகச் சேகரிப்பாளர் என்று தன்னை அறிமுகம் செய்து கொள்வதையே அவர் விரும்புகிறார்.

பெங்களூருவில் உள்ள எம்.ஜி ரோடில் உள்ளது இவரது புத்தக நிலையம். பெயர், செலக்ட். இரு தளங்கள் கொண்ட பழைய கட்டடம் அது. கீழே, மூர்த்தியின் மகன், அமர்ந்திருப்பார். அங்கும் சில புத்தகங்கள். மேல் தளத்தில், மூர்த்தியின் புத்தக உலகம் விரிந்திருக்கிறது.

உங்களுக்கு என்ன புத்தகம் வேண்டும் என்று மட்டுமல்ல, நீங்கள் வாசிப்பது எதற்காக என்பதையும் அவரிடம் முன்கூட்டியே சொல்லிவிடுவது நலம். சீனாவைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறேன், உதவ முடியுமா? என்று கேட்டால், அமர வைத்து பேசுவார். 'பண்டைய சீனாவா? மாவோவின் காலகட்டமா? நீங்கள் சீனாவைப் பற்றிய அறிமுகப் புத்தகங்களை நாடுகிறீர்கள் என்றால், பயண நூல்களில் இருந்து தொடங்குவது சரியாக இருக்கும். உதாரணத்துக்கு...' வயிற்று வலிக்கு மாத்திரை தரும் மருத்துவரைப் போல் உடனுக்குடன் நான்கைந்து புத்தகங்களை பரிந்துரைப்பார்.

அமெரிக்க அதிபர்களின் வாழ்க்கை, அரசியல் வரலாறு, இலக்கியம், நோபல் பரிசு பெற்ற படைப்புகள், கவிதைகள், பைண்ட் செய்யப்பட்ட மருத்துவ இதழ்கள், காமிக்ஸ், சமூகவியல், தொழில்நுட்பம், தொன்மம் என்று சூரியனுக்குக் கீழுள்ள அனைத்தையும் குறித்து இவரிடம் உரையாட முடியும். புத்தகத்தின் பெயர், ஆசிரியர், வெளியான ஆண்டு தொடங்கி (If I am not mistaken... என்று தொடங்குவார். ஆனால், தவறிருக்காது) கவனமாகச் சொல்வார்.

நன்றி, நீ்ங்கள் குறிப்பிட்ட புத்தகங்களைத் தரமுடியுமா என்று கேட்டால், உங்களையும் உடன் அழைத்துச் செல்வார். கண்ணாடியைச் சரிசெய்து கொண்டே, அலமாரிகளை ஆராய்வார். குனிந்து, எட்டி, கால் மடக்கி அமர்ந்து ஒவ்வொன்றாக எடுத்து தருவார். அலமாரிக்கு அருகே ஒரு கந்தல் துணி இருக்கும். துடைத்துக்கொண்டு, கூடை நாற்காலியில் அமர்வார். தேர்ந்தெடுத்த புத்தகங்களை மேஜை மீது வைத்து, ஒரு துண்டு காகிதத்தை உருவி, ஒவ்வொரு புத்தகத்தின் தலைப்பையும் எழுதுவார். புத்தகத்தின் உள்ளே, பென்சிலில் விலை எழுதப்பட்டிருக்கும். கால்குலேட்டர் தட்டி, வரும் தொகையை முழுமையாக்கி ரசீதை நீட்டுவார்.

மூர்த்தியின் தந்தை, K.B.K. ராவ், 1945ல் செலக்ட் புத்தகக் கடையை ஆரம்பித்தார். தந்தையிடம் இருந்து மூர்த்திக்கு புத்தக ஆர்வம் தொற்றியிருக்கிறது. தன் மகனுக்கும் அந்த ஆர்வத்தை அவர் நீட்டித்திருக்கிறார். அதன் விளைவு, அரிதான, முக்கியமான, தற்போது பதிப்பில் இல்லாத ஆயிரக்கணக்கான பல புத்தகங்களை உள்ளடக்கிய ஓர் அற்புதமான புத்தகக் கடை.

தி ஹிந்துவில், மூர்த்தி அவ்வப்போது கட்டுரைகள் எழுதி வருகிறார். புத்தகங்கள் சேகரிப்பது குறித்தும், புத்தகங்களைப் பாதுகாப்பது குறித்தும். 'மனிதர்களிடம் இருந்து மட்டுமல்ல, பூச்சிகளிடம் இருந்தும் புத்தகங்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. மிகவும் சவாலான வேலை. பல அரிய புத்தகங்களை, பூச்சிகள் அரித்துவிடுகின்றன.'

நான் பெங்களூரு செல்லும் சமயங்களில் முன்கூட்டியே அவரிடம் பேசிவிடுவேன். கடையில் உள்ளவை போக, வீட்டிலிருந்தும் பல புத்தகங்கள் கொண்டு வந்து தருவார். ஏராளமான China Quarterly இதழ்களை இவரிடம் இருந்து நான் பெற்றுக்கொண்டிருக்கிறேன். பல கம்யூனிஸ்ட் இயக்கப் பிரசுரங்களும்கூட. உங்களுக்கு இவை பிடிக்கும் என்று நினைத்தேன் என்று சொல்லி எப்போதும் ஒரு பை தயாராக வைத்திருப்பார்.

ராமச்சந்திர குஹா, ரஸ்கின் பாண்ட் என்று இவருக்குப் பல நண்பர்கள். அவர்களுக்குப் புத்தகங்களும் குறிப்புகளும் கொடுத்து உதவியதை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார். (குஹா, மூர்த்தியைப் பற்றி தி ஹிந்துவில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்). பல வித்தியாசமான வாடிக்கையாளர்கள் குறித்த அனுபவங்களும் பகிர்ந்துகொண்டார். சில மாதங்களுக்கு முன்பு, பழைய ஷேக்ஸ்பியர் தொகுப்பு ஒன்றை சில ஆயிரம் ரூபாய்க்கு விற்றாராம். 'எப்படியும் அவர்கள் அதைப் படிக்கப் போவதில்லை. அழகுக்காக வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். இவர்களிடம் இருந்து கூடுதல் பணம் பெறுவது தவறல்ல.' அதே புத்தகத்தை, வாசிக்கும் ஆர்வம் கொண்ட ஒருவருக்கு நூறு ரூபாய்க்குக் கொடுத்திருப்பார்.

பத்து தினங்கள் இவருடன் கழித்தால், ஒரு நல்ல புத்தகமும் பல நல்ல கதைகளும் வெளிவரும்.

7 comments:

Anonymous said...

நல்ல கட்டுரை

Akash said...

Have you been to Blossoms on the same road? Its a very good point for good old books

மருதன் said...

Akash : ப்ளாஸம்ஸ் பார்த்திருக்கிறேன். நல்ல கடை.

Manikandan AV said...

hi maruthan! its amazing... could you please give a landmark for this shop?

மருதன் said...

மணிகண்டன், எம்.ஜி ரோடில் உள்ளது. பெரிய, நீண்ட கடைத்தெரு அது. எனக்கு பெங்களூரு அதிகம் பழக்கமில்லை என்பதால் குறிப்பாக லாண்ட்மார்க் சொல்ல முடியவில்லை. ஒரு முட்டுச்சந்தில, எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடிதான் கடை அமைந்துள்ளது. மூன்று முறை சென்றுள்ளேன். மூன்று முறையும் தேட வேண்டியிருந்தது.

Manikadan AV said...

Thanks marudan!
i got the address and phone number from ask laila...would like to share it here...

http://www.asklaila.com/listing/Bangalore/Brigade+Road/Select+Book+Shop/sksyicFq/

thanks again for sharing it...

மருதன் said...

Thanks for the efforts Manikandan AV. This information will be useful to many.