January 3, 2011

கிழக்கில் இடதுசாரி புத்தகங்கள்

கிழக்கு பதிப்பகத்தில் முதல் முதலாக இடதுசாரி புத்தகங்கள் என். ராமகிருஷ்ணனிடம் இருந்து வெளிவர ஆரம்பித்தன. கிழக்குக்கு அவர் முதலில் அளித்த நூல், மார்க்ஸ் என்னும் மனிதர். எளிமையான, அறிமுக நூல். அடுத்து, ரஷ்யப் புரட்சி குறித்து ஒரு மீள் பார்வை. சமீபத்திய நூல், ஜோதி பாசு. தமிழில் என்.ஆர் எழுதி இதுவரை 68 புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில், ஆறு. பாரதி புத்தகாலயத்தில் வெளியான இவரது சமீபத்திய பிரசுரம், 'ஒரு கம்யூனிஸ்டாக இருப்பதன் நன்மைகள் என்ன?'

சென்ற வாரம் அவரிடம் பேசியபோது, இரு நூல்கள் எழுதிக்கொண்டிருப்பதாகச் சொன்னார். மாக்ஸிம் கார்க்கி, ரவீந்திரநாத் தாகூர். 'இன்னமும் எழுதவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. நேரம்தான் போதவில்லை.' கம்யூனிஸ்ட் இயக்கத்துக்காக உழைத்தவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், அதிகம் அறியப்படாத போராளிகள் என்று பலரையும் இவர் வாசகர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறார்.

இடதுசாரி எழுத்துகள் புரியாது என்னும் பொதுவான குற்றச்சாட்டு இவருக்குப் பொருந்தாது. என்.ஆரின் பலம், எளிமை. ஒரு புரியாத வரியைக்கூட இவர் புத்தகத்தில் இருந்து எடுத்துக் காட்ட முடியாது. ரஷ்யப் புரட்சி, அயர்லாந்து அரசியல் வரலாறு இரண்டும் சிறந்த உதாரணங்கள். இரண்டாவது பலம், சுருங்கச் சொல்லும் திறன். ஒருசில நூல்கள் தவிர, என்.ஆர் எழுதிய எதுவும் இருநூறு பக்கங்களைத் தாண்டியதில்லை (என்று நினைக்கிறேன்). அடர்த்தியான செய்திகளையும்கூட ஒரு சில பக்கங்களில் சுருக்கிவிடக்கூடியவர்.

என்.ஆர் மதுரையில் வசிக்கிறார். ஒற்றை அறை குடியிருப்பு. புத்தகங்களோடு ஒண்டிக்கொண்டு வாழ்கிறார். அடுத்தமுறை மதுரை செல்லும்போது, சந்திக்கவேண்டும்.

டிசம்பர் 2010ல், என்.ஆரின் மா சே துங் நூல் சவுத் விஷனில் வெளியானது. அப்போது நடந்த வெளியீட்டு விழா பற்றிய செய்தி இங்கே.


கிழக்கில் இதுவரை வெளியான என்.ராமகிருஷ்ணனின் புத்தகங்கள்.

1) மார்க்ஸ் எனும் மனிதர்
2) ரஷ்யப் புரட்சி
3) புயலின் பெயர் சூ கி
4) ஹோ சி மின்
5) அயர்லாந்து அரசியல் வரலாறு
6) ஜோதிபாசு : அணையாத ஜோதி

3 comments:

ahamed5zal said...

Hai marudhan sir,
Thanks for given intro about the writer N.Ramakrishnan. Thanks to publish the book about biography of "Jothi basu".And also, i request to u sir.."Till now, i did not found any good book about thozar Nalla kannu and Barnala". If u have time, please write about these two personalities.if it is not able to do at least u can translate the book from other languages.. i m expecting positive answer from you sir...

மருதன் said...

அன்புள்ள அஹமத், நல்லகண்ணு குறித்து ஒரு புத்தகம் கொண்டுவர விரும்பிகிறோம். 2011ல் இது சாத்தியமாகலாம். சுர்ஜித் பற்றி என்.ஆரிடம் கேட்டுச் சொல்கிறேன். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் குறித்தும் அடுத்த ஆண்டு ஒரு நூல் வெளிவரும்.

விடுதலை said...

தோழர் என்.ஆர் போன்ற எழுத்துபோராளிகள் சதா எழுதிக்கொண்டே இருப்பது மக்களுக்காக என்று நினைக்கும்போது மிகவும் பெரிமையாக இருக்கிறது.